ஒக்கி புயல்... மீனவர் மரணங்கள்... - இயற்கையின் பெயரால் நடந்த இனப்படுகொலை!




க்கி புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால் தென் தமிழக கடலோரத்தின் ஓலம் நெஞ்சை அறுக்கிறது. முட்டம் தொடங்கி நீரோடி வரையிலும் எந்த மீனவ கிராமத்திற்குள் நுழைந்தாலும் ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் மீனவப் பெண்களின் கதறல் காற்றை கிழிக்கிறது.

’’மூணு கொமருகளை விட்டுட்டு கடலுக்குப் போன அப்பனையும், மகனையும் இதுவரைக்கும் காணல்ல... 45 நாளாச்சு ஒரு சேதியும் தெரியல்ல... நாங்க எப்படியய்யா வாழுவோம்?’’ என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘’அப்பா... எப்பப்பா வருவ? கிறிஸ்துமஸுக்கு டிரஸ் வாங்கிட்டியா?’’ என கேட்கும் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையின் மழலைக் குரல் இதயத்தை உலுக்குகிறது.

சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, இரையுமன்துறை, புத்தன்துறை, நீரோடி... என தமிழக - கேரள எல்லையில் இருக்கும் இந்த கடலோர மீனவ கிராமங்கள் நூற்றாண்டு காணாத மாபெரும் அழிவை சந்தித்திருக்கின்றன. ஒக்கி புயல் அவர்களை நிலைகுலைய வைத்திருக்கின்றது.

வள்ளவிளை என்ற ஒரு ஊரில் மட்டும் 23 விசைப் படகுகளில் 300-க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனர். இவர்களில் ஒக்கி புயலுக்குப் பிறகு கரை திரும்பியோர் ஒரு சிலர் மட்டுமே. 300 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. தூத்தூரில் நான் சந்தித்த இரண்டு மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மூன்று நாட்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தவர்கள். அவர்கள் விவரிக்கும் காட்சிகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

‘’எங்க போட்டுல நான், என் அண்ணன் உள்பட நாலு பேர் இருந்தோம். புயல் அடிச்ச அன்னைக்கு நைட் 11 மணிக்கு எங்க போட் கவிழ்ந்துச்சு. கையில கிடைச்ச எதையோ ஒரு பொருளை பிடிச்சுக்கிட்டு காலையில வரைக்கும் மிதந்துகிட்டே கெடந்தோம். யாராவது காப்பாத்த வருவாங்களான்னு பார்த்தோம். கொஞ்சம், கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சுகிட்டே வந்துச்சு.

என் அண்ணன், ‘என்னால முடியல்ல’ன்னு மிதவையில இருந்து கையை எடுக்கப் போனார். நான் இழுத்துப் பிடிச்சுக்கிட்டேன். கொஞ்சம், கொஞ்சமா அவர் மயங்கி சரிஞ்சார். உடல் விறைச்சுப் போச்சு. உயிர் இல்லை. உடலையாவது பிடிப்போம்னு இழுத்துப் பிடிச்சுப் பார்த்தேன். அண்ணன் உடலை பிடிச்சிருந்தா நானும் உள்ளேப் போகனும்ங்கிற நிலைமை. அப்படியே அவரை விட்டுட்டேன்.

பிறகுதான், ‘இனிமே யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். கரை இருக்கிற திசையைப் பார்த்து நீந்துவோம்; ஆண்டன் விட்ட வழி’ன்னு நீந்த ஆரம்பிச்சோம். உடம்புல தெம்பு இல்ல... மெதுவா நகர்ந்து வந்தோம். எங்க மூணு பேர்ல ஒருத்தர், ‘இதுக்கு மேல முடியலை’ன்னு நீந்துறதை விட்டுட்டார். எதுவும் செய்யுறதுக்கு இல்லை. மிச்சம் இருந்த ரெண்டு பேர் நீந்த ஆரம்பிச்சோம்.

தூரத்துல ஒரு கப்பல் வெளிச்சம் தெரிஞ்சது. அதை நோக்கி நீந்தினோம். அது ஒரு ஜப்பான் சரக்கு கப்பல். அவங்க காப்பாத்தி உள்ளே தூக்கினாங்க. அப்புறம் அவங்க மூலமா கோஸ்ட் கார்டுக்கு தகவல் கிடைச்சு ஹெலிகாப்டர்ல வந்து அழைச்சுக்கிட்டு வந்தாங்க. அந்த கப்பல் மட்டும் இன்னும் அரை மணி நேரம் தாமதமா கண்ணுல பட்டிருந்தா நாங்க ரெண்டு பேரும் உள்ளேப் போயிருப்போம்.’’ என மரணத்தின் கணங்களை நினைவு கூர்கிறார் தூத்தூரில் நாம் சந்தித்த ஒரு மீனவர். இப்படி தப்பி வந்தோர் சொல்லும் ஒவ்வொரு கதையும் இதயத்தை அறுக்கிறது.

வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் ஒரு வீட்டில் நான்கு சகோதரிகள். நான்கு பேரின் கணவர்களும், அவர்களின் அப்பாவும், இரண்டு தம்பிகளும், இன்னொரு உறவினர் பையனுமாக எட்டு பேர் ஒரு படகில் கடலுக்குச் சென்றனர். எட்டு பேரும் இதுவரை வீடு திரும்பவில்லை. நான்கு சகோதரிகளும் கை குழந்தையுடன் கடலைப் பார்த்து கதறி வெடிக்கிறார்கள். இப்படி வீட்டுக்கு ஒரு கண்ணீர் கதை. மீனவ கிராமங்களில் ஆண்கள் மிக முக்கியமானவர்கள். ஆண்கள் இல்லாத மீனவ குடும்பம் முதுகெலும்பு ஒடிந்தது போல் ஆகிவிடுகிறது.

மக்களின் இந்த துன்பத்தை துடைக்க வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசோ, மாநில அ.தி.மு.க. அரசோ, நிலைமையின் தீவிரத்தை ஒரு சதவிகிதம் கூட உணரவில்லை. புயல் வரப்போவதை முன்கூட்டியே அறிவிக்க வக்கற்ற இவர்கள், வந்தபிறகு மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாதது மட்டுமல்ல... இறந்தவர் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் ஆபாசமான வேலையிடும் ஈடுபட்டு வருகின்றனர்.

’’இப்போது அதைவிட கேவலமான ஒரு வேலையில் கோஸ்ட் கார்டு ஈடுபட்டுள்ளது’’ என்று சொல்லும் மீனவர்கள், புயலுக்கு தப்பி தங்கள் படகுகளில் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் மீனவர்களை தங்கள் கப்பல்களில் கட்டாயமாக ஏற்றி, அவர்களையும் மீட்கப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக கூறுகின்றனர். இதை நம்மிடம் தெரிவித்த சின்னத்துறை கிராம மீனவர்கள், ‘’நாங்களா கரை வந்து சேர்ந்தா படகாவது மிஞ்சும். ஆனா இவங்க எங்களை கட்டாயப்படுத்தி கப்பல்ல ஏத்தி படகை நடுக்கடல்ல விட்டுட்டு வந்திடுறாங்க. ஒவ்வொரு ஆளுக்கும் 5 லட்சம், 10 லட்சம் நஷ்டம்” என்கிறார்கள்.

இந்த 5 லட்சம், 10 லட்சம் என்பது கரையோரத்தில் மீன் பிடிக்கும் சிறிய படகுகளின் விலை. ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்லும் ஒரு விசைப் படகின் விலை குறைந்தது 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை. புயலில் மூழ்கிய ஒவ்வொரு படகின் பொருளாதார இழப்பும் மிகப்பெரியது. 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் லிட்டர் டீசல் பிடித்துக்கொண்டு 10 டன்னுக்கும் மேல் ஐஸ் பாறைகள் ஏற்றிக்கொண்டு, பெரிய ட்ரம்களில் குடிக்க; குளிக்க தண்ணீர் நிரப்பிக்கொண்டு இவர்கள் ஒருமுறை கடலுக்குக் கிளம்பினால் கரை திரும்ப 40 நாட்கள், 50 நாட்கள் ஆகும்.

குமரி கரை மீனவ கிராமங்கள் நூற்றுக்கு நூறு கிறிஸ்தவர்களால் நிரம்பியவை. ஆண்டின் முக்கால்வாசி நாட்களில் கடலில் இருக்கும் இவர்கள், எது எப்படியிருந்தாலும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸுக்கு முன்பாக கரை சேர்ந்துவிடுவார்கள். இப்போது கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில் கரை எங்கும் சோகக் குரல்கள் நிரம்பியுள்ளன.

புயல் முடிந்து 10 நாட்களாகியும் காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த தூத்தூர் பகுதி மீனவர்கள் சிலர், 3 படகுகளில் மீனவர்களைத் தேடிச் சென்றனர். இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவர்கள் நடத்திய தேடுதலில் 160 நாட்டிக்கல் மைல் தொலைவில் சில உடல்கள் மிதந்துள்ளன. அவர்கள் படம் பிடித்த அந்தக் காட்சிகளில், சில மிதவைப் பொருட்களை உடலில் கட்டிக்கொண்டு செத்து மிதக்கும் மீனவர்களின் உடல்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. இந்த பிரமாண்ட சமுத்திரத்துடன் காலமெல்லாம் போராடி, உறவாடி வாழ்ந்த ஒரு மீனவன் அதே கடலில் காப்பாற்ற யாருமற்று சடலமாக மிதக்கிறான்.

’’எப்படியாவது காப்பாத்த ஆள் வந்திருவாங்கன்னு நம்பி எல்லாரும் ஒரே இடத்துல கையை கோர்த்துக்கிட்டு மிதந்திருக்காங்க. பசியாலதான் ஒவ்வொருத்தரா செத்திருக்காங்க. ஆரம்பத்துலயே போயிருந்தா நிச்சயமா உயிரோட காப்பாத்தியிருக்கலாம். உடல்களை எடுத்துட்டு வரலாம்னு முயற்சி செஞ்சோம். ஆனா, தண்ணியில ஊறி உப்பிப்போய், கையை தொட்டா கை வருது, காலை தொட்டா கால் வருது. ஒண்ணும் பண்ண முடியலை.” என்று வேதனையுடன் விவரிக்கும் இவர்கள் அடுத்து சொன்னதுதான் நெஞ்சை உறைய வைத்தது.

‘’நாங்க தேடப் போகும்போது, எங்க வயர்லெஸ்ல ஒரு குரல் கேட்டுச்சு.. ‘காப்பாத்துங்க.. காப்பாத்துங்க’னு கேட்கிற தமிழ் குரல் அது. நிச்சயமா எங்க மீனவர்கள்தான். எங்கேயோ சிக்கியிருக்காங்க. அவங்களை ஏதோ ஒரு கப்பல் கிராஸ் பண்ணிப் போகுது. அப்போ காப்பாத்த சொல்லி கத்தியிருக்காங்க. அது எங்க வயர்லெஸ் வழியா கேட்குது. கோஸ்ட் கார்டுகிட்டே சொன்னோம். ‘நாங்க பார்த்துக்குறோம்’னு சொன்னாங்க. ஒண்ணும் நடக்கலை. எங்க வயர்லஸ் ரேஞ்ச்சில் இருந்து ஒரு 50 நாட்டிக்கல் மைல் சுற்றளவுல தேடினா அவங்க கிடைச்சிருவாங்க. ஆனால், இவங்களுக்கு அக்கறை இல்லை.’’ என்கிறார்கள் வேதனையுடன்.

மலேசிய விமானம் MH 370 கடலுக்குள் வீழ்ந்தபோது அது உலகத்தின் தலைப்பு செய்தி. உலகின் பல நாடுகள் ஒன்றிணைந்து, நவீன கருவிகளின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி, கடல் பரப்பின் ஒரு சதுர அடி விடாமல் தேடினார்கள். இங்கு ஏன் அப்படி தேடவில்லை? இவர்கள், கரையின் விளிம்பில் சிதறி வாழும் வெறும் மீனவர்கள்; அவர்கள் ‘விமானத்தில் பறக்கும் அளவுக்கான கௌரவம் மிக்க உயிர்கள்’ என்பதாலா?

மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 239 பேர். நிர்மலா சீத்தாராமனின் மொழியில் சொல்வதானால், அந்த ‘நம்பர்ஸை’ விட, ஒக்கி புயலில் காணாமல் போனவர்களின் ‘நம்பர்ஸ்’ அதிகம்தானே? ஏன் உலக நாடுகளை துணைக்கு அழைத்துத் தேடவில்லை? இந்தியாவின் விமானப் படையும், கப்பல் படையும் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் குறுக்கும், நெடுக்குமாக பறந்து சர்க்கஸ் காட்டுவதற்கு மட்டும்தானா? மீனவர் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இல்லையா? இந்தக் கேள்விகளை குமரிக் கடலோர மீனவன் ஒவ்வொருவனும் கேட்கிறான்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பதாக அறிவிக்கிறார். அரசு வேலை தருவதாக சொல்கிறார். நேரில் சென்று மக்களை சந்திக்கிறார். ஒக்கி புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கோருகிறார். பிரதமரை சந்திக்கிறார். ஆனால் இங்கே மீனவர்கள் செத்து மிதக்கும்போது ’மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் மீண்டும், மீண்டும் இவர்களிடமே, ‘ஐயா... ஏதாவது செய்யுங்கள்’ என முறையிட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ஆற்றாமையாக இருக்கிறது.

மீ
னவர்கள் உடல் வலுவும், மன உறுதியும் மிக்கவர்கள். கையில் கிடைத்த ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டு, யாரேனும் காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கேனும் சிலர் இன்னமும் கூட உயிருடன் மிதந்துகொண்டிருக்கலாம். படகுகளில் மயங்கி கிடக்கலாம். ஒரு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினால் நிச்சயமாக சில உயிர்களையேனும் காப்பாற்ற முடியும்.

‘’தேடுதல் பணியில் எங்களையும் ஈடுபடுத்துங்கள். எங்கள் மீனவர்கள் எங்கே சிக்கியுள்ளனர் என நாங்கள் காட்டுகிறோம்” என்ற மீனவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில மீனவர்களை அழைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றது கோஸ்ட் கார்டு. ‘’ஆனா அவங்க நாங்க சொல்ற இடத்துல தேடாம 50 நாட்டிக்கல் உள்ளேயே தேடுறாங்க. புயல் அடிச்சப்போ எங்கள் மீனவர்கள் இருந்த இடம் 200 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால. அதில் இருந்து 500 நாட்டிக்கல் மைல் தாண்டிதான் பெரும்பாலான மீனவர்கள் தொழில் செய்வாங்க. நாங்க ஜி.பி.எஸ். மூலமா எந்த திசையில, எந்த இடத்துல, எத்தனை நாட்டிக்கல் தூரத்துல மீனவர்கள் சிக்கியிருக்காங்கன்னு கோஸ்ட் கார்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கோம். அவங்க கேட்கிறாங்க இல்லை. ஹெலிகாப்டரை வெச்சுக்கிட்டு எங்க கண்ணுக்கு முன்னால பீச் ஓரத்துலயும், எங்க வீட்டு மொட்டை மாடிக்கு மேலாலயும் சுத்தி, சுத்தி வர்றாங்க. இவங்களால ஒரு துரும்பைக் கூட காப்பாத்த முடியாது” என கோபத்துடன் பேசுகின்றனர் மீனவர்கள்.

நமது கோஸ்ட் கார்டு தொடர்பான இன்னொரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. 2012-ம் ஆண்டு வங்கக் கடலில் வீசிய நீலம் புயலால் MT Prathiba cauvery என்ற கப்பல் சென்னை பெசண்ட் நகர் கடல் பகுதியில் தரை தட்டியது. கரையில் இருந்து பார்த்தாலே கப்பலை பார்க்க முடிந்தது. புயல் காற்றில் சிக்கிய நிலையில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கப்பலில் இருந்து 22 ஊழியர்கள் நான்கு படகுகளில் இறங்கினார்கள். ஆனால் கொந்தளித்த காற்று நான்கு படகுகளையும் கவிழ்த்தது.

22 பேரும் கடலில் தத்தளித்தனர். கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் வானத்தை வட்டமிட்டு சுற்றிக்கொண்டே இருந்தது. பொறுத்துப் பார்த்த மீனவர்கள் வடிவேலு, மதன், கலைமணி, உதயமூர்த்தி என்ற நான்கு பேரும் மிகுந்த தீரத்துடன் கடலில் குதித்தார்கள். புயல் காற்றுடன் போராடி மரணத்தின் விளிம்பில் இருந்து 17 கப்பல் ஊழியர்களைக் காப்பாற்றினார்கள்.

இப்போது குமரிக் கரை மீனவர்களும் கூட இப்படி கடலோர காவல்படையை நம்பாமல் தாங்களே களம் இறங்க தயார்தான். ஆனால் இவர்கள் செல்ல வேண்டியது ஆழ்கடலுக்கு. மீனவர்கள் வைத்திருப்பதோ மீன்பிடி படகுகள். இவை மிக மெதுவாக செல்லக்கூடியவை. இவற்றை வைத்து பிரமாண்ட ஆழ்கடலில் தேடுவது சாத்தியமற்றது. அதற்கு கடற்படை மற்றும் கடலோர காவல்படையிடம் உள்ள அதிவேக படகுகள் வேண்டும். அதேபோல, கடலோர காவல்படை ஹெலிகாப்டரில் தேடுகிறது என்றாலும், அதனால் அதிக பயன் இல்லை. ஒரு ஹெலிகாப்டர், அதிகபட்சம் 1.30 மணி நேரம் அல்லது 2 மணி நேரம்தான் பறக்க முடியும். அதன் எரிபொருள் கொள்ளளவு அவ்வளவுதான். விமானம் தாங்கி கப்பல்களை கொண்டுசென்று ஆழ்கடலில் நிறுத்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று தேடினால் பலன் கிடைக்கும். இந்த கோரிக்கையை முதல் நாளில் இருந்து மீனவர்கள் எழுப்பியும் கேட்க செவிகள் இல்லை.

அதேபோல, தங்கள் நாட்டு மீனவர்கள் சாட்டிலைட் போன் பயன்படுத்திக்கொள்ள இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகள் அனுமதித்துள்ளன. சாட்டிலைட் போன் இருந்தால் ஆழ்கடலில் இருந்து கூட பேசிக்கொள்ள முடியும். ஆனால் நம் மீனவர்களுக்கு அரசு அனுமதித்துள்ள வயர்லஸ்ஸை பயன்படுத்தி கரையில் இருந்து அதிகபட்சம் 15 கி.மீ தூரம்தான் பேசிக்கொள்ள முடியும். இத்தகைய கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் பணியில் அரசு சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது.

குமரியில் காணாமல் போனதில் நாகை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் அடக்கம். அதேபோல, தமிழக மீன் பிடித் தொழிலில் வட மாநிலத் தொழிலாளர்கள் கணிசமானோர் உள்ளனர். இவர்கள் எத்தனை பேர் உள்ளே சென்றார்கள் என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை. படகு உரிமையாளர்களுக்கு இவர்களின் பெயரைத் தவிர வேறெதுவும் தெரியாது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு இந்திய அளவில் புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 500 நாட்டிக்கல் மைல், 1000 நாட்டிக்கல் மைல் என ஏமன், பாகிஸ்தான் வரை சென்று மீன் பிடிப்பவர்கள். வெறும் விசைப் படகுகளை வைத்துக்கொண்டு பிரமாண்டமான சர்வதேச கப்பல்களுடன் போட்டிப் போடும் திறன் மிக்கவர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருப்பது தென்முனை கடற்புரத்துக்கு மிகப்பெரும் இழப்பு.

ஒக்கி புயல் வந்ததில் இருந்து யாரும் கடலுக்குச் செல்லவில்லை. பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் சர்ச் எதிரே பந்தல் அமைக்கப்பட்டு தினம்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராடுவோர் மீது வழக்குகள் பாய்கின்றன. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. மக்கள் அதிகாரம் என்ற அமைப்பைச் சேர்ந்த 6 பேரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.

முழுக்க, முழுக்க கிறிஸ்தவ பகுதியான இந்த மீனவர் கிராமங்களில் இப்போது கத்தோலிக்க ஆளுகைக்கு வெளியில் தன்னிச்சையான போராட்டக் குரல்கள் கேட்கின்றன. அரசுக்கு எதிரான கோபப் பேச்சுகளும், முழக்கங்களும் போராட்ட பந்தல்களில் ஒலிக்கிறது. கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் மீது மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். ஒக்கி புயலால் கடலோரம் சின்னாபின்னமான பிறகு இந்தப் பகுதிக்கு ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்கவில்லை. ‘’பொன்னாரு, பொன்னாரு... கடை திறக்க போனீரே... கடற்புரத்துக்கு வந்தீரா?” என முழக்கமிடுகின்றனர் இளைஞர்கள்.

காணாமல் போன மீனவர்களுக்கு ‘ஆறுதல்’ கூற வந்த மத்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘’நான் சொல்றதை நீ கேளு...” என மீனவர்களை ஒருமையில் அழைத்து ஆணவத்துடன் பேசிய பேச்சும், ‘மீனவர்கள்’ என்று சொல்லக்கூட நா கூசி, ‘நம்பர்ஸ்’ என சொன்னதும் மீனவ இளைஞர்களை கோபப்படுத்தியிருக்கிறது.

’புயல் என்பது இயற்கைப் பேரிடர். அதற்கு அரசு என்ன செய்ய முடியும்?’ என்று கேட்கலாம். இது அரசின் கையறு நிலை அல்ல; கையாலாகத்தனம். ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற பெயரில் வானிலை கணிப்புகளை ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜான் என்ற தனி நபர் நவம்பர் 29-ம் தேதி காலை 9 மணிக்கு இப்படி ஒரு புயல் வரப்போவதை அறிவிக்கிறார். ஆனால், அதில் இருந்து 36 மணி நேரத்துக்குப் பிறகுதான் அரசு அறிவிக்கிறது. சரியான நேரத்துக்கு அறிவித்திருந்தால், குறைந்த நாட்டிக்கல் தூரம் சென்று வரும் மீனவர்கள் கடலுக்குப் போவதை நிறுத்தியிருப்பார்கள்.

2004 சுனாமியில் இறந்துபோன குமரி மீனவர்கள் 800 பேர். ஆனால் இப்போது கடலுக்குள் சென்று திரும்பி வராதவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம். எனவே இது இயற்கை பேரிடர் மட்டுமல்ல. அரசின் அலட்சியம் உருவாக்கிய செயற்கைப் பேரிடரும் கூட. அந்த செயற்கைப் பேரிடருக்குப் பின்னால் ‘மீனவர்கள்தானே’ என்ற அலட்சியமும், அவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இருக்கிறது.

சுனாமியை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தி மீனவர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றியதைப் போல, ஒக்கி புயலை இன்னொரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஏன் மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்? ஏனெனில் துறைமுகம் கட்டவும், சொகுசு விடுதிகள் கட்டவும், சுற்றுலாவுக்கும், ஏற்றுமதி, இறக்குமதிக்கும், கனிம வளங்களை அள்ளவும் அவர்களுக்கு கடற்கரை வேண்டும்.

இந்த பேரிடரில் நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம் என்பதுதான் இங்குள்ள கேள்வி. மீனவர்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், மெரினா போராட்டத்தின் இறுதி நாட்களில் போலீஸின் வன்முறையை முழுமையாக சுமந்தவர்கள் அவர்கள். தமிழகத்தின் உணர்வை தனதாக்கிக்கொண்ட மீனவர்களின் துயரத்தை நமதாக்கிக்கொள்ளப் போகிறோமா? குமரி முனை கேட்கிறது. என்ன பதில் சொல்லப் போகிறோம்?




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு