தாமரையின் ஊழல் முகம்
மக்களின் அவநம்பிக்கையைப் பெறுவதற்கு காங்கிரஸுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுத்ததற்கும், அந்த வெறுப்பின் அறுவடையை பா.ஜ.க. பெற்றதற்கும் ஒரே காரணம்தான்... ஊழல். ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம், ராணுவ ஹெலிகாப்டர் கொள்முதல் என, காங்கிரஸ் ஆட்சியில் எங்கெங்கும் ஊழல்; எண்ணிடலங்கா ஊழல். அந்த நிலையை மாற்றுவோம் என்ற நம்பிக்கையை விதைத்துதான் மக்களின் வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை என்ற பிரமாண்ட வெற்றியைப் பெற்றது; மோடி சர்க்கார் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது நடப்பது என்ன?
ஒவ்வொரு நாளும் ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும், சர்ச்சைகளும் சந்தி சிரிக்கின்றன. லலித் மோடி என்ற ஊழலின் நாயகனுக்கு உதவியது முதல், ஊழலோடு சேர்த்து உயிர்களையும் பலிவாங்கும் மத்தியபிரதேச மாநிலத்தின் ‘வியாபம்’ ஊழல் வரைக்கும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ச்சை. எதற்கும் பிரதமர் மோடி வாய் திறப்பது இல்லை. ‘யோகா செய்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்’ என்று பிரதமரின் பெயரால் எஸ்.எம்.எஸ். வருகிறது. ஆனால் எதை செய்தால் நாட்டின் நலம் நன்றாக இருக்குமோ அந்த விஷயங்களில் எதிர்வினையாற்றாமல் மௌன சாமியாராக இருக்கிறார் மோடி. இதில் உள்ள நகைமுரண் என்னவெனில், இவரும் இவரது கட்சியினரும்தான் மன்மோகன்சிங்கை பேசாத பொம்மை என்றார்கள்; கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவர் என்றார்கள். இன்று அந்தக் கேள்விகள் இவர்களை நோக்கியேத் திரும்பி நிற்கின்றன.
கேள்வி 1: லலித் மோடிக்கு உதவியது ஏன்?
லலித் மோடியின் வரலாறு என்ன? மிகப்பெரிய தரகு முதலாளியான கே.கே.மோடியின் மகனான லலித் மோடி, படிக்க அமெரிக்கா சென்று, அங்கு போதைப்பொருள் வழக்கில் சிக்கியவர். இந்தியா திரும்பி ஓர் உறுதியான அடையாளம் இல்லாமல் தடுமாறியவரை, ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக்கினார், அப்போதைய ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே. பா.ஜ.க.வின் தூண்களில் ஒருவரான வசுந்தரா போட்டுக்கொடுத்தப் பாதையில் விறுவிறுவென முன்னேறிய லலித் மோடி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்வாக்குப் புள்ளியாக மாறினார். அந்த நேரத்தில்தான் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாக... கிரிக்கெட் என்ற பொன் முட்டையிடும் வாத்து தன் கையில் இருப்பதை கண்டுகொண்ட லலித் மோடி, ஐ.பி.எல். போட்டிகளை மிக பிரமாண்டமான கேளிக்கையாக மாற்றினார். இதன்மூலம் தன்னை அசைக்க முடியாத நபராக நிலைநிறுத்திக்கொண்டார்.
ஆனால் ஐ.பி.எல். என்ற சூதாட்டத்தின் ஒவ்வொரு அங்குலமும் ஊழல்களால் பின்னப்பட்டிருப்பது அம்பலமானது. லலித் மோடி மீது சுமார் `1,700 கோடி ரூபாய் அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மொத்தம் 16 பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் பதிவாயின. இதைத் தொடர்ந்து 2010 மே மாதம் லண்டனுக்கு தப்பி ஓடி தலைமறைவானார் லலித்மோடி. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதுவரை அவர் தேடப்படும் குற்றவாளிதான்.
இந்த குற்றவாளிக்குதான் போட்டிப்போட்டுக்கொண்டு உதவியிருக்கின்றனர் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும், மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜும். 2011&ம் ஆண்டு லலித்மோடியின் லண்டன் குடியேற்ற ஆவணங்களில், ‘இந்திய அரசுக்கு தெரியக்கூடாது என்ற நிபந்தணையின் பெயரில் இந்த குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரிக்கிறேன்’ என்று கையெழுத்திட்டிருக்கிறார் வசுந்தரா. இதேபோல லலித்மோடியின் லண்டன் குடியேற்றத்துக்காக பிரிட்டீஷ் அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார் சுஸ்மா சுவராஜ்.
விவகாரம் வெடித்து வெளியில் வந்து, இதற்கு மேலும் இதை ஒளித்துவைக்க முடியாத நிலையில், ‘லலித் மோடியின் மனைவிக்கு புற்றுநோய். அவர் போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்கு கணவரின் கையெழுத்து வேண்டும். அதனால்தான் மனிதாபிமான அடிப்படையில் உதவினேன்’ என்று சமாளிப்பு விளக்கம் கொடுத்தார் சுஸ்மா. ஆனால், போர்ச்சுக்கல் நாட்டு சட்டத்தின்படி மனைவி சிகிச்சை பெற கணவரின் கையெழுத்து அவசியம் இல்லை என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்திய பிறகு வாயை மூடிக்கொண்டார். இப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மத்திய அமைச்சர் என அதிகார வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் தனக்காக பேசவும், செயல்படவும், குறைந்தப்பட்சம் மௌனம் காக்கவும் வைத்திருக்கிறார் லலித் மோடி.
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு சில நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு. அதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் அரசுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் இழப்புத் தொகை வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால் குற்றத்தின் தன்மை என்ற வகையில், ஆ.ராசா செய்ததைவிட, சுஸ்மாவும், வசுந்தராவும் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம். இந்திய சட்டப்படியே அதைவிட இதற்கு அதிக தண்டனை வழங்க முடியும்.
கேள்வி 2: வியாபம்... நடவடிக்கை என்ன?
மத்தியபிரதேச மாநில அரசு ஊழியர்கள் தேர்வு வாரியமான ‘வியாபம்’ ஊழல் குறித்து இன்று நாடே பேசுகிறது. பணம் வாங்கிக்கொண்டு அரசுப் பணியிடங்களை நிரப்பிய வகையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்படி முறைகேடான வழிகளில் அரசுப்பணியில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வியாபம் ஊழல் வெடித்து வெளியில் வர... இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் மர்மமாக மரணம் அடையத் துவங்கினார்கள். மருத்துவக்கல்லூரி டீன், முன்னாள் ஆளுனரின் மகன், போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர், கல்லூரி மாணவி, பத்திரிகை நிருபர்... என உயிரிழந்தோரில் பல தரப்பினரும் அடக்கம். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ‘வியாபம்’ வழக்கில் தொடர்பு உடையவர்கள்.
விசாரணைக் குழுவிடம் உண்மையை சொல்ல முயன்றால், ஆதாரங்களை வழங்க முயன்றால் அடுத்து வரும் நாட்களில் மரணம் நிச்சயம் என்ற சினிமாவை மிஞ்சும் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வர... அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது மத்தியபிரதேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசு. கடந்த 13 ஆண்டுகளாக அங்கு பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெறுகிறது. எனில், வியாபம் ஊழலுக்கான முழு பொறுப்பும் பா.ஜ.க.வையே சேரும். ஆனால் மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான், எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டங்கள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் காரணமாக இப்போதுதான் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த சிவ்ராஜ்சிங் சௌகானைதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழிந்தார் அத்வானி.
சுதந்திர இந்தியாவில் இதுவரை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை அனைத்தில் இருந்தும் வேறுபட்டு, உயிர்களை காவு வாங்கும் கொடூர ஊழலாக உருவெடுத்துள்ளது ‘வியாபம்’. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50&க்கும் மேல் இருக்கும் என செய்திகள் வருகின்றன. என்றால் இந்த ஊழலை நிகழ்த்தியவர்கள் வெறுமனே பணம் பார்க்கும் அதிகார வர்க்கக் கூட்டம் அல்ல. தொழில்முறை கிரிமினல்களும், கொலைகாரர்களும் இதில் இணைந்துள்ளனர்.
கேள்வி 3: அதானிக்கு யாரால் ஆதாயம்?
அதானிக்கும், மோடிக்கும் உள்ள தொடர்பை நாடே அறியும். மோடியின் தேர்தல் பிரசாரம் கூட அதானி பரிசளித்த சிறப்பு விமானத்தில்தான் நடந்தது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் கார் மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுத்திருக்கிறது அதானி குழுமம். (அந்த சுரங்கம், தங்களது பூர்வீக வாழ்விடங்களையும், இயற்கையையும் அழிப்பதாக ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள் அப்ராஜின்கள், அங்கு கடும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.) இந்த சுரங்கத்தை வாங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி 6,200 கோடி ரூபாய் கடன் வழங்கியிருக்கிறது.
ஒரு தனியார் நிறுவனம் வெளிநாட்டில் தொடங்கும் தொழிலுக்காக, ஒரு பொதுத்துறை வங்கி இத்தனை பெரியத் தொகையை இதுவரை கடனாக தந்தது இல்லை. பல தனியார் வங்கிகள் அதானிக்கு கடன் தர மறுத்த நிலையில்தான் பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அறிவிப்பு வெளியானது. அதானிக்கு 6,200 கோடி ரூபாய் கடன் வழங்கியபோது, அந்த நிறுவனத்தின் மொத்தக் கடன் 81,122 கோடி ரூபாய். ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கும் ஓர் ஊதாரிக்கு நீங்கள் கடன் தருவீர்களா? ஆனால் மோடி அரசு தருகிறது. காரணம், அதானி மோடியின் நண்பர். 2002&ல் மோடி குஜராத் முதல்வர் ஆனபோது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 3,741 கோடி ரூபாய். 2014&ல் சொத்து மதிப்பு 75,659 கோடி ரூபாய்.
‘‘பா.ஜ.க., தனது தேர்தல் பிரசாரத்தில் மோடியை ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஷ் புரூஷ்) என்றது. ஊழலை சகித்துக்கொள்ளாதவர், முஸ்லிம்களின் மீதான குஜராத் வன்முறை என்ற ‘பழையகதை’யைத் தாண்டி சிந்திப்பவர் என்றெல்லாம் சொன்னார்கள். அதை நம்பிதான் 32 சதவிகிதம் இந்தியர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். ஆனால் ‘வளர்ச்சியின் நாயகனாக’ இருப்பது அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மட்டும்தான். மக்களுக்கான வளர்ச்சி எங்கே இருக்கிறது? சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைக் குழு அறிக்கையிலேயே, ‘ரிலையன்ஸ், எஸ்ஸார், அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு குஜராத்தின் மோடி அரசு தேவைக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியிருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
2012-ல் குஜராத்தில் முந்த்ரா துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்துக்கு ஒரு சதுர மீட்டர் 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை, என்ற மிகக் குறைந்த விலையில் மொத்தம் 14,305 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகைகள், மோடி பிரதமரான பிறகும் தொடர்கிறது. இதுபோன்ற உண்மைகள் வெளிவரும்போது பா.ஜ.க.வால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. உடனே காங்கிரசின் ஊழல்களையும், தவறுகளையும் மீண்டும் கிளறிவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். காங்கிரஸ் ஊழல் கட்சி என்றுதானே மக்கள் உங்களைத் தேர்வு செய்தார்கள்? நீங்களும் அதையே செய்தால் மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் ‘ஃப்ரெண்ட் லைன்’ பத்திரிகை ஆசிரியர் விஜய்சங்கர்.
கேள்வி 4: மோடியின் மௌனம் ஏன்?
மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மீதும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மீதும் லலித் மோடி விவகாரத்தில் குற்றச்சாட்டு. அமைச்சர் ஸ்ம்ருதி இரானியின் கல்வித்தகுதி குறித்த சர்ச்சை. மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சௌகான் மீது ‘வியாபம்’ ஊழல் புகார்கள். சத்தீஸ்கர் மாநில பொது விநியோகத் திட்டத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் முதல்வர் ராமன்சிங்கின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் எழுந்திருக்கும் கிடுகிடு குற்றச்சாட்டுகள், மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் பங்கஜ் முண்டே பள்ளிக்கூடங்களுக்கு உபகரணங்கள் வாங்கியதில் 200 கோடி ரூபாய் ஊழல் செய்த புகார்... பா.ஜ.க.வை சேர்ந்த இவர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் இதுவரை மோடி வாய் திறக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் நச்சரிப்புத் தாங்க முடியாத நிலையை அடைந்தபோது, ‘சுஸ்மாவும், வசுந்தரா ராஜேவும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்ற குரல் வந்தது. குரலுக்கு சொந்தக்காரர் மோடி அல்ல. சங் பரிவார் அமைப்பின் தலைமையில் இருக்கும் கோவிந்தார்ச்சார்யாவின் குரல் அது. ‘‘இந்த அரசு தன் மதிப்பீடுகளை இழந்து கொண்டிருக்கிறது. கௌரவம் போய்க்கொண்டிருக்கிறது. இதை நரேந்திர மோடி உணர வேண்டும். சுஸ்மாவும், வசுந்தரா ராஜேவும் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார் கோவிந்தார்ச்சார்யா. இதற்கு மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வினையாற்றாமல் இருந்தால், அது பா.ஜ.க.வுக்கு எதிரான பொது எண்ணமாக உருவெடுக்கும் என்பதால் மோடியை ஒரு அதட்டு அதட்டி வைக்கிறார்.
ஆனால் மோடியோ இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘செல்ஃபி வித் செல்வமகள்’ என்று ட்விட்டரில் அழைப்புவிடுப்பதும், நாடு நாடாக பறந்துசென்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போடுவதுமாக இருக்கிறார்.
தன் கட்சியினர் குறித்த புகார்களை கண்டுகொள்ளாமல் கடப்பதன் வழியே அந்த சர்ச்சைகளில் தன் பெயர் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். ஆனால் மன்மோகன்சிங் அரசிலாவது ஊழல் புகார்கள் எழுந்ததால், சில அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டனர். அந்த அளவுக்கேனும் அப்போது ஜனநாயக நடவடிக்கை இருந்தது. அவர்களை குறைசொன்ன பா.ஜ.க. அரசோ, அதைவிட மோசமான மௌனத்தை பின்பற்றுகிறது.
வசதி உள்ளவர்கள் மானிய விலையில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவதை விட்டுத்தர வேண்டும் என்றும், அதன்மூலம் ஏழைகள் வீட்டில் அடுப்பெரியும் என்றும் மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்கிறது மத்திய அரசு. இதற்காக #ரீவீஸ்மீவீtuஜீ என்ற டேக்லைனில் பிரசாரம் நடக்கிறது. ஆனால் மோடி பதவியேற்ற முதல் ஒரு வருடத்தில், வெளிநாட்டுப் பயணத்துக்காக செலவிட்டத் தொகை 317 கோடி ரூபாய். (மன்மோகன்சிங், பத்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சென்றுவர செலவிட்டத் தொகை 650 கோடி ரூபாய்).
கேள்வி 5: காங்கிரஸுக்கு மாற்றா பா.ஜ.க?
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் இந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மதிப்பிடும் கோணம் முக்கியமானது. காங்கிரஸுக்கு மாற்று என தன்னை சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க. அதே குட்டையில் விழுவது ஏன் என்பதையும், அடிப்படை பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றாக இருக்கும்போது இவர்களால் மாற்றாக இருக்க முடியாது என்பதையும் தெளிவாக விளக்குகிறார் அவர்.
‘‘பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இருவருக்கும் ஒரே கொள்கைதான். சொல்லப்போனால், காங்கிரஸ் ஒரு கூட்டணி அரசாக இருந்ததால், மக்கள் நலத் திட்டங்களையும் அமல்படுத்தியாக வேண்டிய நெருக்கடி இருந்தது. பா.ஜ.க. அரசுக்கு இந்த கட்டாயம் எதுவும் இல்லை. அதனால்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பா.ஜ.க. அரசு கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டது. மற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறது.
காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க.வாக இருந்தாலும் நாட்டில் தனியார்த்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பு பெருகும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தனியாருக்கு எவ்வளவு பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அதன்மூலம் நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்குமேத் தவிர, அது தொழில் முதலீடாக மாறி வேலைவாய்ப்பு பெருகாது.
ஒரு ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. ‘எம்ப்ளாய்மெண்ட் எலாஸ்டிசிட்டி’ என்று இதற்குப் பெயர். இந்திய தொழிற்துறையில் இது, வரலாறு காணாத அளவில் மிகவும் குறைவாக இருக்கிறது. 1,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு 300 வேலைவாய்ப்புகளை கூட உருவாக்க முடியவில்லை. நிலத்தின் மதிப்பு, இயந்திர செலவு இவையே பெரும்பகுதி முதலீட்டை தின்றுவிடுகிறது. தமிழ் திரைப்படம் ஒன்றின் தயாரிப்பு மதிப்பு 50 கோடி ரூபாய் என்றால் 30 கோடி ரூபாய் கதாநாயகனின் சம்பளத்துக்கேப் போய்விடுவதை போன்றது இது. மேலும், உற்பத்தியை பெருக்க ஏராளமான இயந்திரங்கள் வந்துவிட்டன. சுமார் 500 தொழிலாளர்களை மட்டுமே வைத்து ஒரு கார் தொழிற்சாலையை இயக்க முடியும். டாடா நானோ கார் தொழிற்சாலை இப்படித்தான் இயங்குகிறது. அதாவது முதலீடுகள் ஆயிரம் ஆயிரம் கோடிகளாய் உள்ளே வந்தாலும் அவை வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.
அப்படியே உருவாகும் வேலைவாய்ப்புகளிலும் சம்பளம் மிக மிகக் குறைவு. 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான் சம்பளம். இன்று, சென்னை, டெல்லி, மும்பை என எல்லா பெருநகரங்களிலும் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் இவ்வளவுதான். இது ஏதோ சின்னச் சின்ன நிறுவனங்களின் நிலை மட்டுமல்ல. பிரமாண்ட நிறுவனங்களாக இருந்தாலும் இதே நிலைதான். அவர்கள் ஊழியர்களை ஒப்பந்தக் கூலிகளாக எடுத்துக்கொள்கிறார்கள். 10 ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலையில் வெறும் 1,000 பேர்தான் நிரந்தர தொழிலாளர்கள். மீதம் இருக்கும் 9 ஆயிரம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்களுக்கும் சம்பளம் அதே 10 ஆயிரத்தை ஒட்டிதான் இருக்கும். இதை மாற்றி அமைத்து தொழிலாளர் நலன்களை உறுதிப்படுத்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும். மாறாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை மேலும் பலவீனப்படுத்தும் வேலையைதான் இத அரசு செய்கிறது.
அடிப்படை பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைப்பது ஒன்றுதான் இதற்கான தீர்வு. சிறுதொழில்களை ஊக்குவித்து வளர்த்து எடுக்காமல் ‘மேக் இன் இந்தியா’ என்று பேசுவதால் என்ன பயன்? அது, தொழிலாளர்களின் உழைப்பை இன்னும் குறைந்தக் கூலிக்கு சுரண்டுவதற்குதான் வழி வகுக்கும்.’’
- Thanks: Vikatan
கருத்துகள்