நடுக்குப்பமாக மாற்றப்படுமா நெடுவாசல்?
ஜ ல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றதைப் போல நெடுவாசல் போராட்டத்தில் வெல்ல முடியுமா? கூட்டம் கூடுவதை வைத்து; ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மட்டும் இதை எடைபோடக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது அதிக ஆபத்து இல்லாத ஒரு பண்பாட்டு கோரிக்கை. எனவே ஒரு வாரத்தில் புதிய சட்டம் இயற்ற வைப்பது அதில் சாத்தியமானது. ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் எதிர்ப்பக்கம் நிற்பது கார்ப்பரேட்டுகள். கௌதம் அதானியின் நிறுவனமும், பா.ஜ.க எம்பி சித்தேஸ்வராவின் நிறுவனமும் ஹைட்ரோகார்பன் அகழ்வுப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன. எனவே மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து அரசு பின்வாங்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. அல்லது ’ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழ்நாடு வீரியத்துடன் போராடியது. எனவே நெடுவாசல் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முயன்றால் அதேபோல வீரியமான போராட்டத்தைத் தொடங்கிவிடுவார்கள்’ என அஞ்சி அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப்பெறப்போவதும் இல்லை. மேற்கு வங்கத்தில் கார்ப்பரேட் நலன்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த சி.பி.எம் போன்ற ஓர் இடதுசாரி கட்சி...