லிங்காயத்... இந்தியாவின் புதிய மதம்!
''நாம் எல்லோரும்
இந்துக்கள்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் பெரும்பான்மை
மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள நிலையில், ’’நாங்கள் இந்துக்கள் அல்ல”
என்ற முழக்கத்தோடு பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக எழுந்து நிற்கிறார்கள் கர்நாடகாவின்
லிங்காயத்துகள்.
தங்களை தனி மதமாக
அங்கீகரிக்கக்கோரி லிங்காயத்துகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்தான்,
இப்போது கர்நாடகாவை ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு லிங்காயத்துகளை தனி
மதமாக அங்கீகரித்து அறிவித்துள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டிய இடத்தில்
மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது. ‘லிங்காயத்துகள் தனி மதம்’ என்ற அறிவிப்பை மத்திய
அரசு ஏற்கப் போகிறதா, நிராகரிக்கப்போகிறதா என்பது இப்போதே கர்நாடகாவின் பரபரப்பான பேசுபொருளாகிவிட்டது.
மிக விரைவில் கர்நாடக மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சித்தராமையாவின் இந்த மதிநுட்பமான
அறிவிப்பு தேர்ந்த அரசியல் காய் நகர்த்தலாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவை பொருத்தவரை லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிக்கர் பிரிவினரே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களை மையப்படுத்திதான் அம்மாநிலத்தின் தேர்தல் அரசியல் சுழல்கிறது. இந்த இரு ஜாதியினரின் ஓட்டுகளை அறுவடை செய்வோரே அதிகாரத்தில் அமர முடியும். இதுதான் 1952-ம் ஆண்டில் இருந்து நீடித்துவரும் யதார்த்தம். இந்த பின்னணியில்தான் லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கை அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதமாக இருக்கும் லிங்காயத்துகள் மாநிலம் எங்கும் பரவி வாழ்கின்றனர். இவர்கள், 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணரின் சித்தாத்தங்களைப் பின்பற்றுபவர்கள். பசவண்ணரை பொருத்தவரை இந்து மதத்தின் சாதி ஏற்றத்தாழ்வுகளை மிக் கடுமையாக எதிர்த்தவர். வர்ணாசிரம அடிப்படையிலான சாதி அடுக்குமுறையை மறுத்து பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் போன்ற இந்து மத கருத்துகளையும் நிராகரித்தார். சிவ வழிபாட்டை பசவண்ணர் வலியுறுத்தினாலும், அது இந்து மதத்தின் சிவ வழிபாட்டில் இருந்து கணிசமாக வேறுபட்டிருந்தது. தற்போது நடைமுறையில் உள்ள லிங்க வழிபாட்டை ஏற்காத பசவண்ணர், மனசாட்சியை குறிக்கும் விதமான இஷ்ட லிங்க வழிபாட்டை முன்மொழிந்தார். அவரைப் பின்பற்றி வந்த லிங்காயத்துகள் இஷ்ட லிங்க வழிபாட்டையே மேற்கொண்டனர்.
800 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு
எதிராக கலகம் செய்த பசவண்ணர் பெரும் மக்கள் திரளை ஈர்ப்பவராக இருந்தார். இந்திய பக்தி
மரபில் தமிழ்நாட்டின் வள்ளலார், கேரளாவின் நாராயண குரு போன்றோர் வலியுறுத்திய சீர்திருத்தங்களைப்
போல பசவண்ணர் கர்நாடகாவில் பகுத்தறிவு பேசிய கலகக்காரராக இருந்தார். அவர் மதம் என்ற
கருத்தை நிராகரிக்கவில்லை. பக்தியை விலக்கி வைக்கவில்லை. சிவ வழிபாட்டை பின்பற்றிய
அவர், மதம் என்பது அதைப் பின்பற்றும் அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றார்.
இதற்காக பசவண்ணர் உருவாக்கிய பசவ இயக்கம் அனைத்துச் சாதியினரும் சமமாக அமர்ந்து உண்ணும் சமபந்தி நிகழ்வுகளை
நடத்தியது. பாலின வேறுபாடுகளுக்கு எதிராகவும், குழந்தை திருமண எதிர்ப்பு;
விதவை மறுமண ஆதரவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை நடத்தியது.
இதை ஆதரித்து கர்நாடகாவில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய
மாநிலங்களிலும் லிங்காயத்துகள் உருவானார்கள். லிங்காயத்துகளுக்கு என்று தனித்த மடங்களும்,
மடாதிபதிகளும் உருவானார்கள். இன்றளவும் கர்நாடகாவிலும், கேரளாவிலும் லிங்காயத்துகளுக்கான
மடங்கள் ஏராளமாக உள்ளன. இந்த மடங்கள் ஏராளமான சொத்துகளை நிர்வகிக்கின்றன.
இப்படி லிங்காயத்துகள், தங்களின் குருவாக ஏற்றுக்கொண்டுள்ள பசவண்ணர்
வலியுறுத்திய; பின்பற்றிய பக்தி மார்க்கம் என்பது அடிப்படையிலேயே இந்து மதத்தில் இருந்து
வேறுபட்டது என்பது அவர்களின் வாதம். லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவரான சித்தராமசாமி
என்பவர், ‘’லிங்காயத்து மதம் என்பது, ஜாதி மற்றும் பாலினத்தின் அடிப்படையில் யாரையும்
தாழ்த்தாது. எங்கள் மதம் பல கடவுள்களை வழிபடுவதை ஊக்குவிக்கவில்லை. நாம் செய்யும் பாவ
புண்ணியங்களின் பலன் அடுத்த ஜென்மத்தில் நம்மை வந்து சேரும் என்பது இந்து மத நம்பிக்கை.
இந்த ஜென்மத்திலேயே வந்து சேரும் என்பது லிங்காயத்துகளின் நம்பிக்கை’’ என்று வேறுபாடுகளை
பட்டியலிடுகிறார்.
இத்தகைய காரணங்களால்
தங்களை தனித்த மதப்பிரிவாக அறிவிக்க வேண்டும் என்று லிங்காயத்துகள் கடந்த 80 ஆண்டுகளாக
கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியுள்ளனர்.
இந்து மதத்தின் அடிப்படைகளை ஏற்காமல் கலகம் செய்து உருவான சீக்கிய மதமும், புத்தம்
மற்றும் சமண மதங்களும் தனித்த அந்தஸ்தை பெற்றிருக்கும்போது, லிங்காயத்துகளை மட்டும்
ஏன் தனி மதமாக அங்கீகரிக்கக்கூடாது என்பது அவர்களின் வாதம். இதற்காக ஒவ்வொரு முறை மக்கள்
தொகை வாக்கெடுப்பு நடைபெறும்போதும், ‘லிங்காயத்து பிரிவை சேர்ந்த மக்கள், தங்களை இந்துக்கள்
என்று குறிப்பிடாமல் லிங்காயத்து எனக் குறிப்பிட வேண்டும்’ என்று லிங்காயத்து மடாதிபதிகள்
கோரிக்கை விடுப்பார்கள்.
லிங்காயத்து என்பது
பொதுப்பெயர் என்றாலும் அதில் 70-க்கும் அதிகமான உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு
பிரிவுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. கடந்த 2017 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கர்நாடக
மாநிலம் பெல்காவியிலும் இதர நகரங்களிலும் அனைத்து லிங்காயத்து சங்கங்களும் இணைந்து
பிரமாண்ட பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா,
மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் லிங்காயத்து மக்கள் இவற்றில் கலந்துகொண்டனர்.
ஒட்டுமொத்த கர்நாடகாவையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த போராட்டங்களின் ஒரே நோக்கம்,
லிங்காயத்துகளை தனி மதப்பிரிவாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
லிங்காயத்துகளின் இந்த
போராட்டங்கள் குறித்து அப்போது கருத்து சொன்ன ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன்
பகவத், ’லிங்காயத்துகள், இந்து மதத்தின் பிரிவினர்தான். அவர்கள் எழுப்பும் கோரிக்கையும்,
அதில் உள்ள பிரச்னையும் இந்து மதத்தின் உட்பிரச்னையே’ என்று சொன்னார். இதற்கு போராட்டங்களில்
கடும் எதிர்ப்பு எழுந்தது. மோகன் பகவத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஒட்டுமொத்த கர்நாடகாவையும்
திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் போராட்டங்கள் லிங்காயத்துகளின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது. லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அறிவித்த முதல்வர்
சித்தராமையா இதை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
நாகமோகனதாஸ், பேராசிரியர் ராமகிருஷ்ண மாராதே, டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் செயல்படும்
கன்னட இருக்கையின் தலைவர் புருஷோத்தமன் பிலிமன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ஆறு மாதங்களாக இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்த நிலையில்தான், இப்போது
கர்நாடக முதல்வர் சித்தராமையா லிங்காயத்துகள் தனித்த மதப்பிரிவினர் என்பதை மாநில அரசு
ஏற்பதாக அறிவித்துள்ளார்.
சித்தராமையாவின்
அறிவிப்பு அரசியல் ரீதியாக பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகிக்கப்படுகிறது. சித்தராமையா
லிங்காயத்து பிரிவை சேர்ந்தவர் இல்லை. அவர் குருபா என்ற சாதியைச் சேர்ந்தவர். ஆனால்
எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராக இருப்பவரும், அக்கட்சியின் முதல்வர்
வேட்பாளராக அறியப்படுபவருமான எடியூரப்பா, லிங்காயத்துப் பிரிவைச் சேர்ந்தவர். ஆனால்,
அவரால் லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கையை ஆதரிக்க முடியாது. ஏனெனில் அது அவர் சார்ந்துள்ள
பா.ஜ.க.வுக்கு எதிரானது. தன்னுடைய கட்சியின் நிலைபாட்டை ஆதரித்தால் உள்ளூர் லிங்காயத்துகளை
நேரடியாக பகைத்துக்கொள்ள வேண்டிவரும். உள்ளூர் லிங்காயத்துகளின் கோரிக்கையை ஆதரித்தால்
கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்படுவது போல் ஆகிவிடும். இதனால் எடியூரப்பா செய்வதறியாது
திகைத்து நிற்கிறார்.
இதுவரை காலமும்
பெரும்பான்மை லிங்காயத்துகள் பா.ஜ.க. ஆதரவாளர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என்பது
கடந்த கால தேர்தல் வரலாறு உணர்த்தும் உண்மை. ஆனால் சித்தராமையா இந்த போக்கில் ஒரு உடைப்பை
ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு லிங்காயத்துகளின் போராட்டத்துக்கு ஆதரவுக் குரல்
எழுப்பியதில் இருந்தே இதை அவர் தொடங்கிவிட்டார். இப்போதைய அறிவிப்பின் மூலம் கணிசமான
லிங்காயத்து ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை காங்கிரஸ் நோக்கி இழுக்க முடியும் என்பது
சித்தராமையாவின் கணக்கு. ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட
மக்களின் வாக்கு வங்கி காங்கிரஸுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், லிங்காயத்துகளின்
ஒருபிரிவினர் தன் பக்கம் திரும்பினால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமென்று சித்தராமையா
கணக்குப் போடுகிறார். எப்படி இருந்தாலும் சித்தராமையாவின் இந்த அறிவிப்பின் மூலம் அவருக்கு
ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு விகிதத்தில் பலன் கிடைக்கப் போகிறது என்பது தெரிகிறது.
இன்னொரு பக்கம்
லிங்காயத்து என்பவர்களும், வீர சைவம் என்பவர்களும் ஒரே வகையினரா, தனித்தனிப் பிரிவினரா
என்பது குறித்த வாதங்களும் கர்நாடகாவில் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. ’’வீர சைவர்களை
லிங்காயத்துகளாக ஏற்க முடியாது. அவர்கள் வேறு; நாங்கள் வேறு” என்பது லிங்காயத்துகளின்
வாதம். ஆனால், ‘’இப்படி பிரிப்பது பிளவுவாதம். வீர சைவர்களும், லிங்காயத்தினரும் வெவ்வேறானவர்கள்
அல்ல” என்பது மறு தரப்பின் வாதம். இதற்காக வீர சைவர்-லிங்காயத்து ஒருங்கிணப்பு குழு
எல்லாம் ஏற்படுத்தப்பட்டு இதற்காக பல கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், ‘’வீரசைவம் என்பது இந்து மதத்தின் அத்தனை கூறுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பசவண்ணர் வழிவந்த லிங்காயத்து என்பது இந்து மதத்தின் வர்ணாசிரம பாகுபாட்டை நிராகரிக்கிறது. எனவே இரண்டும் ஒன்றல்ல’’ என்று எழுதியிருக்கிறார்.
கடந்த ஆண்டு மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், ‘’வீரசைவம் என்பது இந்து மதத்தின் அத்தனை கூறுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பசவண்ணர் வழிவந்த லிங்காயத்து என்பது இந்து மதத்தின் வர்ணாசிரம பாகுபாட்டை நிராகரிக்கிறது. எனவே இரண்டும் ஒன்றல்ல’’ என்று எழுதியிருக்கிறார்.
லிங்காயத்துகள்
தனி மதமாக அறிவிக்கப்படுவதால் மக்களுக்கு என்ன லாபம் என்பது இதில் உள்ள முக்கியமான
கேள்வி. ஏனெனில், ‘’நாங்கள் இந்துக்கள் அல்ல’’ என்று இப்போது லிங்காயத்துகள் சொல்கின்றனர்.
அதற்கு அவர்கள் ஆதாரமாக அழைப்பது பசவண்ணர் முன்வைத்த கருத்துக்களை. ஆனால், ’’நடப்பில்
உள்ள லிங்காயத்துகளின் சமூக வாழ்க்கை என்பது பசவண்ணர் முன்வைத்த பகுத்தறிவு, சீர்திருத்தக்
கருத்துக்களில் இருந்து வெகுதூரம் விலகிவந்துவிட்டது. இந்து மதத்தில் இருந்து சீர்திருத்தம்
பேசி பிறிதொரு மதமாக செயல்பட முயற்சித்த பல மதங்கள், காலப்போக்கில் அதே இந்து மதத்தின்
அத்தனை அம்சங்களையும் உள்வாங்கிக்கொண்டு மாறிவிட்டதைப் போலவே, லிங்காயத்துகளும் மாறிவிட்டனர்.
இப்போது கர்நாடகாவின் சமூக வாழ்க்கையில் லிங்காயத்துகள் என்போர் தங்களை சாதி அடுக்கின்
மேலே உள்ளவர்களாக கருதிக்கொள்கின்றனர். சாதி ஒடுக்குமுறையில் முன்வரிசையில் இருக்கிறார்கள்.’’
என்பதை தனது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார், மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட
எழுத்தாளர் கல்புர்கி.
எனவே இந்து மதத்தின் சாதிப் பாகுபாடுகளை உணர்வு ரீதியிலும்,
சமூக வாழ்க்கையிலும் பின்பற்றும் லிங்காயத்துகள் ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்றும்
தனித்த மத அடையாளம் வேண்டும் என்றும் கோருவது யாருக்கு ஆதாயம் தரக்கூடியது என்பது இப்போது
எழுப்பப்படும் முக்கியமான கேள்வி.
கர்நாடகாவை பொருத்தவரை
பொதுவாக லிங்காயத்துகள் என்போர் முன்னேறிய பிரிவினராக அறியப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு
தொழில்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நூற்றுக்கணக்கான கல்வி
நிறுவனங்களை இவர்கள் நடத்தி வருகின்றனர். லிங்காயத்து தனி மதமாக அறிவிக்கப்பட்டால்,
இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படும்.
அதன்மூலம் அரசின் நிதியை ஏராளமாக பெற முடியும். இதனால் லிங்காயத்து சமூகத்தின் பெரும்
செல்வந்தர்கள் தனி மத கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கின்றனர்.
அதேநேரம், வட கர்நாடகாவில் பெரும்பான்மையாக வாழும் லிங்காயத்துகள் வறுமையில் உழல்கின்றனர். அவர்களை பொருத்தவரை தங்களுக்கு என்று ஒரு தனித்த மதம் என்ற கோரிக்கையை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஆதரிப்பதால் என்ன ஆதாயம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை. தங்களுக்கு வழங்கப்படும் புதிய மத அடையாளம் வறுமையை போக்குமா, வேலைவாய்ப்பை வழங்குமா, வீழ்ந்துபோன விவசாயத்தை மேம்படுத்துமா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. பண்பாட்டு வாழ்க்கையில் இந்து மதம் கொடுப்பதாக சொல்லும் சுமையை, புதிய மதம் நீக்குமா என்பதும் தெரியவில்லை. தற்போது இந்து மதத்தின் ஒரு பிரிவாக நீடிப்பதால் கல்வியில் கிடைத்துவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள், தனி மதமாக பிரிவதால் பாதிக்கப்படுமோ என்றும் அச்சம் கொள்கின்றனர்.
அதேநேரம், வட கர்நாடகாவில் பெரும்பான்மையாக வாழும் லிங்காயத்துகள் வறுமையில் உழல்கின்றனர். அவர்களை பொருத்தவரை தங்களுக்கு என்று ஒரு தனித்த மதம் என்ற கோரிக்கையை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஆதரிப்பதால் என்ன ஆதாயம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை. தங்களுக்கு வழங்கப்படும் புதிய மத அடையாளம் வறுமையை போக்குமா, வேலைவாய்ப்பை வழங்குமா, வீழ்ந்துபோன விவசாயத்தை மேம்படுத்துமா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. பண்பாட்டு வாழ்க்கையில் இந்து மதம் கொடுப்பதாக சொல்லும் சுமையை, புதிய மதம் நீக்குமா என்பதும் தெரியவில்லை. தற்போது இந்து மதத்தின் ஒரு பிரிவாக நீடிப்பதால் கல்வியில் கிடைத்துவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள், தனி மதமாக பிரிவதால் பாதிக்கப்படுமோ என்றும் அச்சம் கொள்கின்றனர்.
ஆனால், அரசியல் சாசன சட்டம் வழிபாட்டு சுதந்திரத்தை உறுதிபடுத்தியுள்ளது. எனவே தனி மதம் வேண்டும் என்று ஒரு மக்கள் திரள் கோரிக்கை எழுப்புவதும், அதை அரசு ஏற்பதும் சட்டப்படி நியாயமானது. லிங்காயத்து பிரிவினரை தனி மதமாக சித்தராமையா ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதை மோடி அரசு ஏற்குமா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி. அல்லது நீதிமன்றத்தின் வழியாக இதற்கு ஒரு தடை ஏற்படுத்தப்பட்டு, அந்த சட்ட சிக்கல் பல்லாண்டுகள் நீடிக்கப்போகிறதா என்பதும் தெரியவில்லை.
இந்த ஆன்மிக அரசியலில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பது கர்நாடகாவில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.
- பாரதி தம்பி
கருத்துகள்