’’உங்களுக்கு நான் சொல்றது விளங்குதுன்னு நினைக்கிறேன்’’- சீமான் பேட்டி
‘‘450 கோடி
ஆண்டுகளுக்கு முன்னால சூரியனில் ஏற்பட்ட
பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்னு
அறிவியல் சொல்லுது. அதைத்தான் என் பாட்டன் ‘அகர
முதல எழுத்தெல்லாம்’னு சொன்னான். ஹைட்ரஜன்
ஒரு விழுக்காடும் ஆக்ஸிஜன் ரெண்டு விழுக்காடும் இருந்தா
நீர் உருவாகுது. இதைத்தான் என் முப்பாட்டன் ‘நீரின்றி
அமையாது உலகு’னு சொன்னான். அந்த
தண்ணியை; இயற்கையை வழிபட்டவங்கதான் நம்ம அப்பத்தாவும், முப்பாட்டனும்.
அந்த மரபை இடையில் கைவிட்டதன்
விளைவுதான், ஓசோன் மண்டலத்துல ஒட்டை.
எல்லாத்தையும் மீட்கணும். மொழியை, பண்பாட்டை, இயற்கையை
எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம். நான்
போய் தண்ணீரை காசு கொடுத்து
வாங்கிக் குடிச்சுக்குவேன். ஆனா காட்டுல வாழ்ற
மானும், மயிலும், சிங்கமும், புலியும் எங்கிட்டு போய் தண்ணி வாங்கிக்
குடிக்கும்? உங்களுக்கு நான் சொல்றது விளங்குதுன்னு
நினைக்கிறேன்’’
- இப்படித்தான்
ஆரம்பித்தார் சீமான். ‘நாம் தமிழர் கட்சி’
தலைவர் என்பது சீமான் பற்றி
இதுவரை நாம் அறிந்துள்ள அடையாளம்.
இப்போது நாம் தமிழர் சார்பாக
‘வீரத் தமிழர் முன்னணி’ ஒன்று
துவங்கப்பட்டுள்ளது. பச்சை சீருடை அணிந்துகொண்டு
கையில் வேலுடன் ‘முருகன் என் முப்பாட்டன்’
என்று அறிவித்துள்ள சீமான், ‘தமிழம்’
என்ற புத்தம் புதிய மதத்தை
தொடங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த மதத்தின் கடவுள்
முருகன். மறைநூல் திருக்குறள். ‘பண்பாட்டு
புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி சாத்தியம்
இல்லை’
என்று முழங்குகிறார். ‘என்ன இது? ஏன்
திடீரென இப்படி?’ என்று கேட்பதற்காகப் போயிருந்தேன்.
ஆரம்பத்தில்
பெரியாரையும் அம்பேத்கரையும் பேசிய கடவுள்
மறுப்பாளரான நீங்கள், திடீரென ஆன்மிகவாதி போல
பச்சை ஆடை உடுத்தி கையில்
வேலோடு பழனியில் காவடி தூக்குகிறீர்களே.. ஏன்
இந்த மாற்றம்?
‘‘என்ன
சீமான் திடீர்னு ஆன்மிகவாதி மாதிரி கிளம்பிட்டானு சிலர்
கேட்குறாங்க. இன்னைக்கு நேத்தா செய்றேன். பெரியாரிய,
மார்க்சிய மேடைகள்ல பேசும்போது கூட ‘முப்பாட்டன் முருகன்.
எம்பாட்டன் சிவன்’னுதான் பேசியிருக்கேன். உலகத்துலேயே
மூத்தகுடியான இந்த தமிழ்குடியோட அழிந்துபோன
ஆன்மாவை மீட்க வேணாமா? நாலு
சுவத்த வெச்சுத்தான் கட்டடம் கட்ட முடியுமே
தவிர மூணு சுவத்த வெச்சா
கட்டுவாங்க? பண்பாட்டு புரட்சி; சமையப் புரட்சி இல்லாம
அரசியல் புரட்சி இல்லன்னு அம்பேத்கர்
சொல்றார். நம்ம அய்யா நம்மாழ்வார்
பச்சை உடுத்தினார். அது பக்தியா? பாட்டன்
காட்டில் வாழ்ந்தான். அதனால பசுமையை அடையாளப்படுத்த
பச்சை அணிகிறோம். இதை பைத்தியக்காரத்தனமா பார்க்க
தேவையில்லை. தலைவர் பிரபாகரன் வான்படைக்கு
கருமை நிறத்தையும், காவல் படைக்கு ஊதா
நிறத்தையும் வைத்தார். அதைபோல இதுவும் அடையாளப்படுத்த
செய்ற முயற்சி. காவடி என்பது என்
தொன்மக்கலை. அதை எல்லாம் இழிவு
படுத்தாதீங்க’’
பெரும்பான்மை
மக்களுக்குடைய நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசியவர் பெரியார். நீங்கள் பெரும்பான்மையான மக்களின்
கடவுள் நம்பிக்கையை அரசியல் அறுவடை செய்யப்
பார்கின்றீர்களா?
‘‘யாரை
பெரும்பான்மைன்னு சொல்றீங்க? இந்த கேள்வியே இழிவானது.
இதை மீட்டெடுக்க வேண்டியது என் கடமைனு சொல்றேன்.
இது அரசியல்னு நினைச்சா, ஆமா அரசியல். ஈழத்தைப்
பற்றி பேசுனப்பவும் இதைத்தானே சொன்னீங்க... இந்த மண்ணுல சிறுபான்மைனு
ஒண்ணு கிடையாது. எல்லோருமே பெரும்பான்மைதான். ஆரியன் மட்டும்தான் சிறுபான்மை.
மத்த எல்லோரும் பெரும்பான்மை. ஆரியன் அவனை பெரும்பான்மையாக
காட்டிக்க ‘வீ ஆல் ஆர்
ஹிண்டூஸ்’ங்கறான். இந்த மண்டூஸ் எல்லாம்
ஓடுதுங்க... பாதி வெள்ளையா இருக்குற
நீ, ‘தொட்டா தீட்டு’ன்னு
சொன்ன... முழு வெள்ளையா இருந்தவன்
தொட்டான். ஒடுக்கப்பட்டவன் அவன்கூட போயிட்டான். நீ
படிச்சா தீட்டுன்னு சொன்ன. அவன் படிச்சாதான்
முன்னேற்றம்னு சொன்னான். அதனால மக்கள் அவன்
பின்னால போனாங்க. ஆக ஒரு பண்பாட்டு
புரட்சியை இங்கே செய்ய வேண்டியிருக்கு.
அதைத்தான் செய்திட்டிருக்கோம்’’
அப்போ
தாய்மதம் திரும்பும் சடங்கு செய்யப் போகிறீர்களா?
‘‘என்னோட
தாய் மதம் சைவம். எங்க
அப்பா சொத்து பத்திரத்துல சைவம்னுதான்
இருக்கு. அதுக்கு முன்னாடி நாம்
‘ஆசீவகம்’னு ஒரு மார்க்கத்துல
இருந்தோம். நம்மோட மறை திருக்குறளா
இருக்கு. இந்து, கிறிஸ்தவம், பௌத்தம்
போல என் மதம் தமிழம்.
என்குடி தமிழ்க்குடி. அதுல கள்ளர், மறவர்,
பறையர், கோனார், செட்டியார், முதலியார்,
நாடார், கவுண்டர், உடையார் எல்லாம் இருந்துட்டு
போறோம். என் தாய் மொழியிலேயே
எனக்குன்னு மறை இருக்கும்போது நான்
எதுக்கு எதிர் வீட்டு ஆளு
கையை பிடிச்சு நடக்கணும்? இந்த தமிழ் மறையைவைத்து
தாய் மதம் திரும்புவதுதான், எங்கள்
தாய் மதம் திரும்புவது’’
முருகன் குறிஞ்சி திணையின்
கடவுள். அவரை எப்படி மொத்த
தமிழர்களுக்கும் கடவுளாக்க முடியும்?
‘‘தமிழனோட
ஐந்துதிணைக் கடவுளையும் நாங்க ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்
50 ஆயிரம் மாவீரர்களின் படங்களுக்குப் பதிலா நடுகல் வழிபாட்டை
ஒரு குறியீடா தலைவர் கொண்டு வந்ததுபோல,
நாங்க தலைநிலமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகனை முதன்மைப்படுத்துறோம்.
ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து ஏமாற்ற நினைத்த சூழ்ச்சியில்
இருந்து வெளியேறி வந்தவன் என் முப்பாட்டன்.
என் நாடு, என் மக்கள்னு
அவன் தனியா வந்தப்போ, ‘ஆத்திரப்படாத.
சூத்திரனா இருக்காதே... சாணக்கியனா இரு’ன்னு சொன்னதாதான் நாங்க
புரிஞ்சுக்குறோம். திருவிளையாடல் படத்துல தொடங்கி ‘ஜென்டில்மேன்’
படம் வரைக்கும் இதைத்தான் சொல்றாங்க. அர்ஜூன் அருவாளை தூக்கும்
போது அதை பிடுங்கிப் போட்டுட்டு
அவனுக்கு பூணூல் போட்டு என்ன
சொல்வார் நம்பியாரு... ‘சூத்திரனா இருக்காத... சாணக்கியனா இரு’ம்பாருல்ல... அதைத்தானே எங்க
பாட்டன் முருகனுக்கும் சொன்னாங்க’’
நீங்க
இராவணப் பெருவிழா கொண்டாடப் போவதாக செய்தி வருகிறதே?
‘‘என்
பாட்டன் இராவணன் கலைகள் பத்தில்
தலை சிறந்தவன். திசை எட்டும் புகழ்
அடைந்தவன். ஆனா இவங்க என்ன
பண்ணினாங்க? கலை பத்தை, தலை
பத்தா போட்டு அவனை மாற்றுத்திறனாளியாக்கி,
ஜண்டுபாம் விளம்பரத்துல கொண்டுவந்து நிப்பாட்டிட்டாங்க. ஒவ்வொரு வருஷமும் ராம்லீலா
மைதானத்துல எங்க பாட்டன் மேல
அம்பு விடுற... பாடை கட்டி தூக்கிட்டுப்போய்
எரிக்கிற... ஒரு தேசிய இனத்துக்கு
இது அவமானம் இல்லையா? இனிமேல்
நீ அம்புவிடு. நான் வில் விடுறேன்.
நீ ராமன் லீலா கொண்டாடு.
நான் இராவணப் பெருவிழா கொண்டாடுறேன்.
உனக்கு உன் அப்பன் உசத்தினா
எனக்கு என் அப்பன் உசத்தி’’
உங்கள்
அமைபைச் சேர்ந்தவர்கள் இந்துத்துவ அமைப்புகளை நோக்கி சென்றதால் அதை
தடுத்து நிறுத்தவே முருகனை கையில் எடுத்திருக்கிறீர்கள்...(கேள்வியை முடிக்கும் முன்பே)
‘‘அப்படி
யாரு சொன்னா? உங்க ஆளுங்களே
இப்படித்தான். குஷ்புவுக்கு வர்ற கூட்டம் உங்களுக்கு
வர்றது இல்லையான்னு கேப்பீங்க. அப்படின்னா நீங்க கூட்டத்தையே பாத்தது
இல்லைன்னு அர்த்தம். நான் இதழியலை மதிக்கிறவன்.
நீங்க என்னை மோசமா கேள்வி
கேட்டாலும் நான் பொறுமையா பதில்
சொல்றேன். என் கட்சில இருந்து யாரும்
வெளில போகலை. நாங்க ஒரு
தத்துவத்தை நோக்கி பயணிக்கிறோம்’’
மதம்,
கடவுளை வைத்து பா.ஜ.க. அரசியல் அதிகாரத்தை
கைப்பற்றி உள்ள நிலையில், அதேவழியில்
நீங்களும் செல்கிறீர்களா?
‘‘மதமும்
கடவுளும் இல்லாமலேயே தமிழர்களை ஒன்றுபடுத்த என்னால் முடியும். கடவுள்
நம்பிக்கையே இல்லாத பெரியார்தான் வழிபாட்டு
உரிமையை தமிழனுக்கு பெற்றுக் கொடுத்தார். இந்த அடிப்படையிலதான் நீங்க
இதை பார்க்கணும். அனைத்து உயிர்களுக்கான தேவையும்
அதை நிறைவு செய்வதற்கான சேவையும்தான்
‘நாம் தமிழர்’
அரசியல். சாதி, மத அடிப்படையில்
செய்யுற அரசியலை நாங்கள் வெறுக்கிறோம்.
என்னைப் பெற்ற தாய் கூட
எனக்கு இரண்டு மார்பகத்தில்தான் பாலூட்டியிருக்கா.
ஆனா வள்ளுவரோ அறத்துப்பால், இன்பத்துப்பால், பொருட்பால்னு மூன்று மார்பகங்கள்ல பாலூட்டியிருக்கான்.
அந்த பாட்டனுடைய வழியில் நடப்பதுதான் என்னுடைய
மார்க்கம்; மதம்’’
40 ஆண்டுகளுக்கும்
மேலான திராவிட இயக்க ஆட்சியில்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சமூக நீதி சாத்தியமாகி இருக்கிறது
என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
‘‘ஏத்துக்குறோம்.
ஆனா, சமுக நீதி பயனற்றுப்போக
காரணம் யார்? போராடிபெற்ற சமூக
நீதி பயனற்றுப்போகுது. நல்ல கல்வி இல்லை,
கனிமக்கொள்ளை நடக்குது. இயற்கை வளம் சூறையாடப்படுகிறது’’
ஆனால்
அந்த கனிமக் கொள்ளையை நடத்துவது
நீங்கள் அடிக்கடி கூறும் சில பெருந்தமிழர்கள்தானே?
‘‘எப்பவுமே
எய்தவனை விட்டுட்டு அம்பை நோகுறோம். தாது
மணல் எடுக்கவும், கிரானைட் குவாரிக்கும் அனுமதி கொடுத்தது யாரு?
இந்த நாட்டுல ஒருத்தன் தனியா
ரவுடி ஆகிட முடியுமா? உதாரணத்துக்கு
அய்யா பி.ஆர்.பி-யை எடுத்துக்குங்க. ‘காலைலதான்
கடப்பாறை மண் வெட்டியோட கிரானைட்
வெட்டி எடுக்கப்போனார். கைது பண்ணிட்டோம்’னு
சொன்னா அது கண்ணியமான அரசு.
ஏழு முறை சிறந்த குடிமகன்
விருது வாங்கின அவரை 25 வருஷமா
வெட்டி எடுக்க விட்டுட்டு; அவரிடம்
வாங்கித் தின்னுட்டு... கண்டுபிடிச்சப்புறம் அவர் மட்டும் குற்றவாளின்னா
எப்படி? எங்க அய்யா சீயான்
வீரப்பனுக்கும் இதைத்தானே செஞ்சீங்க...’’
சட்டமன்ற
தேர்தலுக்கு எப்படி தயாராகுறீங்க?
‘‘திருச்சில
மே 12-ம் தேதி மாநாடு.
முதன்முதலா தமிழ் தேசிய இனத்துக்காக
தமிழர்கள் கூடுகிறார்கள். இந்த வேலைத் திட்டத்திற்கு
‘புலிப்பாய்ச்சல்’னு பேர் வைச்சிருக்கோம்.
234 தொகுதியிலும், புதுச்சேரியிலும் போட்டி போடுறோம்’’
நீங்கதான்
முதல்வர் வேட்பாளாரா?
‘‘பின்ன
என்ன முச்சந்தில நின்னு கத்திக்கிட்டே சாகுறதுக்கா
கட்சி ஆரம்பிப்பாங்க? இப்ப என்னமோ புதுசா
‘நீங்க கட்சி ஆரம்பிச்சது முதல்வர்
ஆகறதுக்கா?’ன்னு கேட்குறாங்க. என்
மக்களுக்கு என்ன தேவை, என்ன
செய்யனும்னு ஒவ்வொண்ணுக்கும் என்கிட்ட திட்டம் இருக்கு. எனக்கு
ஒரு வாய்ப்பு கிடைச்சா அதை நிரூபிச்சுக் காட்டுவேன்’’
- நன்றி, விகடன்
கருத்துகள்