ஒக்கி புயல்... மீனவர் மரணங்கள்... - இயற்கையின் பெயரால் நடந்த இனப்படுகொலை!
ஒ க்கி புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால் தென் தமிழக கடலோரத்தின் ஓலம் நெஞ்சை அறுக்கிறது. முட்டம் தொடங்கி நீரோடி வரையிலும் எந்த மீனவ கிராமத்திற்குள் நுழைந்தாலும் ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் மீனவப் பெண்களின் கதறல் காற்றை கிழிக்கிறது. ’’மூணு கொமருகளை விட்டுட்டு கடலுக்குப் போன அப்பனையும், மகனையும் இதுவரைக்கும் காணல்ல... 45 நாளாச்சு ஒரு சேதியும் தெரியல்ல... நாங்க எப்படியய்யா வாழுவோம்?’’ என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘’அப்பா... எப்பப்பா வருவ? கிறிஸ்துமஸுக்கு டிரஸ் வாங்கிட்டியா?’’ என கேட்கும் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையின் மழலைக் குரல் இதயத்தை உலுக்குகிறது. சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, இரையுமன்துறை, புத்தன்துறை, நீரோடி... என தமிழக - கேரள எல்லையில் இருக்கும் இந்த கடலோர மீனவ கிராமங்கள் நூற்றாண்டு காணாத மாபெரும் அழிவை சந்தித்திருக்கின்றன. ஒக்கி புயல் அவர்களை நிலைகுலைய வைத்திருக்கின்றது. வள்ளவிளை என்ற ஒரு ஊரில் மட்டும் 23 விசைப் படகுகளில் 300-க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனர். இவர்களில் ஒக்கி புயலுக்குப் பிற...