ராமதாஸ்... தமிழ்நாட்டின் நரேந்திர மோடி! - திருமாவளவன் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், புதிய அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. ஒருபுறம், முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்னொருபுறம், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நிலமும் பணமும் தந்த ம.நடராசன், 'இந்த விழாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என்று முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.
இந்த நிலையில், 'ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக’க் குற்றம் சாட்டப்பட்டு, இந்த முற்றம் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்ன சொல்கிறார்?
''முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு நீங்கள் அழைக்கப்படவில்லை. உங்களுக்குள் என்ன உரசல்?''
''அவர்கள் அழைக்காதது குறித்து எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை. அழைக்கப்பட்டவர்கள் யார், யார் என்பதையும், எத்தகைய பின்னணியைக் கொண்டவர்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள். மொத்தத்தில் அந்த 'முற்றம் திறப்பு விழா’ என்ற நிகழ்ச்சியே, அம்மாவின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது; அம்மாவுக்கு வலு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நடந்துள்ளது. தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடுவது அவர்களின் மறைமுக அஜெண்டா.
முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்திருக்கும் நெடுமாறன் தலைமையிலான குழுவினருக்கு, காங்கிரஸ் எதிர்ப்பு, சிங்கள எதிர்ப்பு என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அவர்களின் முதன்மையான நோக்கம், கருணாநிதி எதிர்ப்பு. ராஜபக்ஷேவை எதிர்ப்பதைவிட... சிங்கள அரசை எதிர்ப்பதைவிட... நெடுமாறனுக்கு, கருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம்.
ஆனால், அவர்கள் யார் நலனுக்காக அந்த விழாவை ஏற்பாடு செய்தார்களோ, அதே ஜெயலலிதாதான் முற்றம் நிகழ்ச்சியைத் தடை செய்ய முயன்றார். கொளத்தூர் மணி போன்றவர்களை முன்கூட்டியே கைது செய்தார். நிகழ்ச்சி முடிந்த உடனேயே 'காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா போகக் கூடாது’ என்று ஒரு பக்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டே, அந்தப் பக்கம் போலீஸை ஏவிவிட்டு முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துத் தள்ள உத்தரவிட்டார். நெடுமாறனைக் கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறார். இத்தனை நடந்தும், ஜெயலலிதாவின் இந்த அராஜகப் போக்கைக் கண்டிக்கும் அரசியல் துணிவு இவர்கள் யாருக்கும் வரவில்லை. மாறாக, மிகவும் மென்மையான குரலில் வேண்டுகோள் விடுக்கின்றனர். இதையே கருணாநிதி செய்திருந்தால், 'தமிழினத் துரோகி’ என்று மிகவும் இழிவாக வசைபாடியிருப்பார்கள்.
இத்தனைக்கும், ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிரானவர் ஜெயலலிதா. காங்கிரஸைக் காட்டிலும் அதிதீவிர புலி எதிர்ப்பு மனநிலை கொண்டவர். 'பிரபாகரனைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர். 'நான்தான் புலிகளுக்குத் தடை வாங்கினேன்’ என்று அதை ஒரு பெருமையாகச் சொல்லிக்கொள்பவர். நெடுமாறனையும் வைகோவையும் பொடாவில் சிறையில் தள்ளியவர். அத்தகைய ஜெயலலிதாவை, இதுவரை ஒரே ஒருமுறைகூட 'ஜெயலலிதா, தமிழ் இனத்துக்கு விரோதி’ என்று ஐயா நெடுமாறனோ, அண்ணன் வைகோவோ சொன்னதே இல்லை. அப்படி விமர்சிக்காமல் இருப்பதன் பின்னால், ஓர் அரசியல் கணக்கு இருப்பதாக நினைக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு, ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவும்தான் நன்மை செய்ய முடியும் என்ற கருத்தை இவர்கள் பரப்புவதன் பின்னால், ஆர்.எஸ்.எஸ்-ஸின் வியூகம் இருப்பதாக யூகிக்கிறேன்!''
'' 'உருவாகாத இந்தியத் தேசியமும், உருவான இந்து பாசிஸமும்’ என்று புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். திராவிடக் கொள்கைகளின் மிச்சம் இருக்கும் வாரிசுகளில் ஒருவராக அறியப்படுபவர் வைகோ. இவர்களை, இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்-ஸின் அஜெண்டாவுடன் எதன் அடிப்படையில் ஒப்பிடுவீர்கள்?''
''முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு பாரதிய ஜனதாவை எதன் அடிப்படையில் இவர்கள் அழைத்தார்களோ, அதே அடிப்படையில்தான் ஒப்பிடுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு, பாரதிய ஜனதா நன்மை செய்தது என்று இவர்கள் கூறி வருவது பச்சைப் பொய். பா.ஜ.க. ஆட்சியிலும், ஈழத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன; இந்துத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்; இந்து இனப்படுகொலை நிகழ்ந்தது. இந்துக்களுக்கான பா.ஜ.க., சிங்களர்களுக்குத்தான் துணை நின்றது. இப்போதும் அவர்கள் வெளிப்படையான சிங்களப் பேரினவாத ஆதரவாளர்கள்தான். அப்படிப்பட்ட பா.ஜ.க-வுடன் உறவாடி மகிழ்கிறார்கள் என்றால், ஈழத்தின் பெயரில் இந்து பாசிஸத்துக்குத் துணை போகிறார்கள் என்பதுதான் அர்த்தம்.
ஆனால், பிரபாகரன் ஒருபோதும் இந்துத்துவத்தை ஆதரித்தவர் இல்லை. தனது மாவீரர் தின உரைகள் ஒவ்வொன்றிலும், 'சிங்களபௌத்தப் பேரினவாதம்’ என்ற சொல்லைத்தான் பிரபாகரன் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறார். இனம், மதம், பெரும்பான்மைவாதம் என்ற மூன்றையும் அதில் அடக்குகிறார். ஆனால், தமிழர்களை 'தமிழ் இந்து சிறுபான்மையினர்’ என்று ஓர் இடத்தில்கூட சொல்லவில்லை. அப்படிப்பட்ட பிரபாகரனின் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் வைகோவும் நெடுமாறனும், அதே ஈழத் தமிழர் பிரச்னையை இந்துத்துவவாதிகளின் காலடியில் சமர்ப்பிப்பது வருத்தமாக இருக்கிறது!
இன்னொரு பக்கம், முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது வரலாற்று நிகழ்வு. அதை எந்த வகையில் விமர்சனம் செய்தாலும் அது தவறு என்பதே எங்கள் கருத்து. அதை யார் செய்தபோதிலும், யாருடைய பணத்தில் செய்தபோதிலும் அதை நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அத்தகைய முற்றத்தில் விடுதலைப் போராட்டத்தின் நாயகனான பிரபாகரன் படத்தை வைக்கவில்லை; தமிழர் தலைவர் பெரியாரின் படத்தை வைக்கவில்லை என்றால், அவர்கள் முற்றம் அமைக்கும் நோக்கமே அடிபட்டுப்போகிறது. பிரபாகரனை நிராகரித்தால், இவர்கள் தமிழ்த் தேசியம் பேசுவதில் பொருள் இல்லை. பெரியாரை நிராகரித்தால், இந்து பாசிஸம் மறுபடியும் தலைதூக்குகிறது என்றுதான் பொருள்!''
''2009-ம் ஆண்டு இறுதி யுத்த சமயத்தில், 'அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான். அது ஆட்சிக்கு வந்துவிட்டால் போரை நிறுத்திவிடலாம்’ என்று புலிகளுக்குத் தவறான நம்பிக்கை கொடுத்ததில் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்று சொல்லப்படும் வாதம் பற்றி?''
''அப்படி ஒரு வாதம் தீவிரமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு விஷயம் என்னவெனில்... இவர்கள் தமிழ்நாட்டு அரசியலிலேயே வெற்றிபெற முடியாதவர்கள். இவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்றுத்தான் விடுதலைப் புலிகள் செயல்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது. அந்த அளவுக்கு புலிகளின் சிந்தனைத் தெளிவு பலவீனமாக இல்லை. 2002-ம் ஆண்டு போர் நிறுத்த சமயத்தில் விடுதலைப் புலிகளிடம் பேசிய பிரபாகரன், 'இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகள் நமக்கு எதிராக அணி திரளும்’ என்றார். இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு, 'இனிமேல் ஆயுதம் தாங்கிய இயக்கங்களை உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒழித்துக்கட்டும்’ என்று ஆண்டன் பாலசிங்கம் கூறினார். ஆகவே, உலக அரசியலையே நன்கு அறிந்திருந்த புலிகள், இவர்களின் வார்த்தைகளை நம்பியிருக்க மாட்டார்கள் என்பதே என் நம்பிக்கை!''
''நீங்கள் இவ்வளவு தூரம் இந்துத்துவக் கொள்கைகளை விமர்சிக்கிறீர்கள். ஆனால், தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பா.ஜ.க-வுடனும் பேசிக்கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒருவேளை, தி.மு.க. அந்தப் பக்கம் சாய்ந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?''
''ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ், பா.ஜ.க. இரு தரப்பினருக்கும் கடிதம் எழுதினார் கலைஞர். ஆகவே, தி.மு.க-வின் சாய்வை நாங்கள் அறிந்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்துத்துவ பாசிஸ சக்திகளை எதிர்ப்பது முக்கியம். அதனால், பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். தி.மு.க. அந்தப் பக்கம் போனால் நாங்கள் வேறு முடிவுகளை எடுப்போம்!''
''பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கியுள்ள 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கத்தை’ எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''பா.ஜ.க. என்பது கங்காரு என்றால், 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ என்பது அதன் வயிற்றுக்குள் அமர்ந்திருக்கும் கங்காருக் குட்டி. நரேந்திர மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்து, இஸ்லாமிய வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்துவெறியைத் தூண்டிவிட்டு இந்து வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். அதேபோல இவர் தலித் மக்களைக் குறிவைத்து, தலித் வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்து ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டு, அதை வாக்குகளாக மாற்ற முனைகிறார். ஆகவே, சாதியவாதமும் மதவாதமும் ஒன்றுதான். அவர், குஜராத்தின் ராமதாஸ்; இவர், தமிழ்நாட்டின் நரேந்திர மோடி!''
- Thanks, Vikatan, 2013
- Thanks, Vikatan, 2013
கருத்துகள்