தமிழ்நாட்டை விற்றுத் திண்ணும் எடப்பாடி அரசு


செம்மஞ்சேரியில் இருந்து கீழ்பாக்கத்துக்கு வீட்டுவேலை செய்யவரும் வசந்தா, தினமும் இரண்டு பேருந்துகள் மாறி வர வேண்டும். போகும்போது இரண்டு பேருந்து. போக வர மொத்தம் 40 ரூபாய். இது கடந்த வாரம் வரை. இப்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணத்தின்படி அவர் 80 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு பஸ் கட்டணத்துக்கு இதுவரை 1,000 ரூபாய் செலவழித்திருந்தால், இப்போது 2,000 ரூபாய். கொடைரோடு அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள தன்னுடைய சாமந்திப்பூ அறுவடையை தினசரி அதிகாலையில் பேருந்து பிடித்து திண்டுக்கல் பூ சந்தைக்கு கொண்டு வருகிறார் வேலாயுதம். பேருந்துக்கும், பூ கூடைக்கும் அவர் மாதம் ஒன்றுக்கு செலவழித்த 1,500 ரூபாய் இப்போது இரு மடங்காகிவிட்டது.

திருச்செந்தூர் சூரசம்காரத்துக்கும், குலசேகரபட்டிணம் தசராவுக்கும் குடும்பத்துடன் சென்றுவரும் ஒருவர் இனி சுளையாக 2,000 ரூபாயை தனியே எடுத்து வைக்க வேண்டும். பேருந்தில் தினசரி சரக்கு எடுத்து வந்து மளிகை கடை நடத்தும் ஒரு கிராமத்து சிறுகடை உரிமையாளர், அந்த கூடுதல் செலவை பொருட்களின் மீது வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பேருந்து கட்டண உயர்வு என்பது வெறுமனே மற்றுமொரு விலை உயர்வு அல்ல. அது சமூகத்தின் சகல இயக்கத்துடனும் பின்னி பிணைந்திருக்கிறது.  தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் நடை, பிறகு ஒரு பேருந்து, அதில் இறங்கி இன்னொரு பேருந்து.. என ஒருவர் குறைந்தது இரண்டு பேருந்துகளையேனும் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு ஒருவர் வேலைக்கு சென்றுவர நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் செலவழித்தார் என்றால் இப்போது அது 100 ரூபாய் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. அவர்களின் ஊதியம் நேற்று என்னவோ, அதுதான் இன்றைக்கும். செலவு மட்டும் திடீரென உயரும்போது எப்படி எதிர்கொள்ள முடியும்? வீட்டு வேலை, அலுவலக வேலை, கட்டட வேலை.. என தினக்கூலி தொழிலாளர்கள் இதன் பாதிப்பை நேரடியாக சுமக்கின்றனர். மாதம் 10 ஆயிரம் சம்பளம் பெற்று, அதில் பஸ்ஸுக்கு இவ்வளவு, பருப்புக்கு இவ்வளவு கணக்குப் போட்டு வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை இந்த விலை உயர்வு நிலைகுலைய வைத்துள்ளது. 

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ‘லேபர் மார்க்கெட்’ இருக்கிறது. தினசரி காலை 6 மணியில் இருந்தே இங்கு தொழிலாளர் கூட்டம் குவிந்து நிற்பதைக் காணலாம். அன்றாட வேலைக்கு ஆள் தேவைப்படுவோர் இவர்களை வந்து அழைத்துச் செல்வார்கள். அன்றைய நாளில் எந்த இடத்துக்கு என்ன வேலைக்குப் போகிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. நிச்சயமற்ற வாழ்வில் ஒவ்வொரு நாளும் போராட்டமாக கழியும் வாழ்க்கை. இவர்கள் அனைவருக்கும் இந்த பேருந்து கட்டண உயர்வு மிகப்பெரிய இடி. குறைந்தது 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையிலான கட்டண உயர்வு.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிவருவதாகவும், இதை சமாளிக்க இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றும் சொல்லப்படும் காரணம், பச்சையான பொய் மற்றும் தவறான பார்வை. பலரும் சொல்வதைப் போல, அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதை வெறுமனே ஆதாயம் ஈட்டும் ஒரு துறையாக பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 2 கோடிக்கும் அதிகமானோர் பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர். இந்திய மாநிலங்களின் பேருந்து சேவையிலேயே இது மிகப்பெரியது. ரத்த நாளங்களைப் போல மாநிலம் எங்கும் குறுக்கும், நெடுக்குமாக பயணிக்கும் பேருந்துகள் மக்களின் தினவாழ்வின் பிரிக்க முடியாத அங்கம். அவர்களுக்கு மேலும் தடையற்ற, மேலும் சிறப்பான பேருந்து சேவையை வழங்குவது குறித்துதான் அரசு முன்னோக்கி சிந்திக்க வேண்டும். மாறாக, ‘முதலீட்டுக்கு ஏற்ற ஆதாயம் வரவில்லை’ என அரசு, ஒரு நிறுவனம் போல செயல்பட முடியாது.

வட மாநிலங்களை ஒப்பிடும்போது இன்று தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு தரமான சாலைகளும், சிறப்பான பேருந்து வசதிகளும் முக்கியமான காரணம். வறிய; சாதிய கொடுமைகள் நிறைந்த கிராமப்புறங்களில் இருந்து தொழில் வாய்ப்புகளைத் தேடி வேறு ஊர்களுக்குச் செல்வதை அது சாத்தியப்படுத்தியது. கல்வி நிலையங்களுக்குச் செல்வதை எளிமைப்படுத்தியது. சமூகத்தின் பொருளாதார வளமும், அறிவு வளமும் உயர்வதற்கு பேருந்து பயணங்களின் பங்களிப்பு முதன்மையானது. கிராமத்தின் புழுதிபடிந்த சாலையில் வந்து செல்லும் பேருந்து, அந்த சின்னஞ்சிறு ஊரின் புதிய சிந்தனையை; அறிவுத் தேடலை இந்த பிரமாண்ட உலகத்துடன் இணைத்து வைக்கிறது. இந்தக் கண்ணோட்டம் முக்கியமானது. ஆனால் எடப்பாடி அரசோ கல்லாபெட்டியில் உட்கார்ந்து கால்குலேட்டரில் கணக்குப் போடுவதைப்போல எல்லாவற்றிலும் லாபம், நஷ்டம் பார்க்கிறது.

தீயணைப்பு நிலையத்தில் என்ன வருமானம்? எதற்காக அரசு அதை நடத்த வேண்டும்? போலீஸ் ஸ்டேஷனில் என்ன ஆதாயம்? எதற்காக அரசு அதை நடத்துகிறது? அவை எல்லாம் ஓர் அரசு செய்ய வேண்டிய அடிப்படையான வேலைகள். இதில் மக்கள் நலன் தான் முதன்மை; வருமானம் அல்ல.  ஆனால், லாபக்கணக்குப் பார்த்து செய்ய வேண்டிய தொழில்களுக்கோ சலுகைகளை வாரி வழங்குகின்றனர். ஒவ்வொரு சிறப்புப் பொருளாதார மண்டலமும் இதற்கு உதாரணம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சலுகைகளை வாரித் தருகின்றன. இலவச நிலம், தடையில்லா மின்சாரம், பல்வேறு வரிகளில் இருந்து விலக்கு அல்லது சலுகை என ஒவ்வொரு சிறப்புப் பொருளாதார மண்டலமும், அரசின் சலுகைகள் வாயிலாகவே பல்லாயிரம் கோடி லாபத்தை, ஈட்டுகின்றன. சலுகைகளை பெற்றுக்கொண்டு அந்த ‘ஹனிமூன் காலம்’ முடிந்தபின்னர் ஓட்டம் எடுத்துவிடுகிறார்கள். பெருந்த ஆரவாரத்துடன் கொண்டு வரப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனம் ஏறக்குறைய 2,500 கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துவிட்டு ஆலையை மூடியது. இப்போது ‘நிஸ்ஸான்’ கார் தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு அரசு தனக்கு தருவதாக சொன்ன 5,000 கோடி ரூபாய் சலுகையை தரவில்லை என்று வழக்குப் போட்டிருக்கிறது. ‘சலுகைத் தொகையை மொத்தமாக இப்போதே கொடுத்தால் கம்பெனியை மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்’ என இதற்கு நீதிமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

கம்பெனிகள் ஓடிவிடலாம். மக்கள் எங்கே ஓடுவது? அதனால்தான் விலை உயர்வு, வரி உயர்வு என நாலு பக்கமும் இருந்து நெருக்குகின்றனர். பேருந்து கட்டணம் உயர்வு மட்டுமா? அடுத்தது மின்சார கட்டணத்தை உயர்த்தப் போவதாக செய்தி வருகிறது. ஏற்கெனவே கேஸ் சிலிண்டர் விலை 130 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. ‘மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம்’ என்கிறார்களே... அந்தத் தொகை சரியாகவும் சரியான நேரத்திலும் நம் வங்கிக் கணக்கில் வந்து சேர்கிறதா? அந்த 150 ரூபாய் வந்ததை கண்காணித்துக்கொண்டிருக்க முடியுமா?

முன்பு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டதாக இருந்தது. பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற ஓரிரு ஆண்டுகளில், பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் என மாற்றப்பட்டது. பங்குச்சந்தை நிலவரம் போல; தங்கத்தின் இன்றைய விலை போல... ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசலின் விலையும் இப்போது கணக்கிடப்படுகிறது. இதன் விளைவு நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒவ்வொரு நாளும் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய். ஆறு மாதங்களுக்கு முன்பு இது 65 ரூபாயாகவும், அதற்குக் குறைவாகவும் இருந்தது. நம் கண்ணெதிரே நம் அனுமதியுடன் நம் பங்கேற்புடன் நடைபெறும் இந்த விலை உயர்வுக்கு நாம் தரும் விலை அதிகம்.

‘தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் கடைசியாக 2011-ம் ஆண்டில்தான் உயர்த்தப்பட்டன. கடந்த 7 ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லை. படிப்படியாக ஏற்றி இருந்தால் இது தெரிந்திருக்காது. திடீரென இவ்வளவு அதிகமாக விலை ஏற்றியதுதான் பிரச்னை’ என்று சொல்வோர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பதில் சொல்ல வேண்டும். ஒரே போடாக போடுவதை விட, கொஞ்சம் கொஞ்சமாக வதைத்து; சித்திரவதை செய்தால் மக்களுக்கு ஒன்றும் தெரியாது; பழகிவிடுவார்கள் என்ற இந்த வாதம் மக்கள் விரோதமானது.  

’20 ரூபாய், 30 ரூபாய் எல்லாம் இந்த காலத்துல ஒரு மேட்டரா பாஸ்?’ என்று பலர் நினைக்கலாம்; கேட்கலாம். ‘ஓலா’வும், ‘ஊபர்’-ம் மட்டுமே உலகம் இல்லை. வரம்புக்கு உட்பட்ட வருமானம், அதில் வாய்க்கும், வயிற்றுக்குமான வாழ்க்கை என கோடிக்கணக்கான மக்கள் நம்மை சுற்றி நிறைந்துள்ளனர். அவர்களுக்கு சுற்றிலும் உள்ள தொழில்வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் பறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறிவருகிறது.

யதார்த்தம் அறிந்துகொள்ள ஓசூர், திருப்பூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களை ஒருமுறை எட்டிப் பார்க்க வேண்டும். அங்கு இத்தனை ஆண்டு காலமாக நடைபெற்று வந்த தொழில்கள் எல்லாம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வீழ்ச்சியை நோக்கி சரியத் தொடங்கியுள்ளன. திருப்பூர் ஒரு வாழ்ந்து கெட்ட நகரத்தைப் போல இருப்பதாக பலர் குறிப்பிடுகின்றனர். சிவகாசியில் இப்போது வீதிக்கு வீதி பசித்த வயிறுகளின் அலறல் கேட்கிறது. கடந்தவாரம் கஞ்சித்தொட்டி கூட திறந்தார்கள்.

ஐ.டி. வேலைகள் படிப்படியாக குறைகின்றன. ‘ஆட்டோமேஷன்’ வந்துவிட்டது. ‘45 வயதாகிவிட்டது. உங்கள் வேலை திறன் குறைந்துவிட்டது’ என்பது இன்னொரு பிரிவினருக்கு சொல்லப்படும் காரணம். பெரும்பான்மை அரசு வேலைகள், ‘தொகுப்பூதியம்’ என வகைப்படுத்தப்பட்டு, ஏழாயிரத்துக்கும், எட்டாயிரத்துக்கும் ஆள் பிடிக்கப்படுகிறது. ஆனால், கல்வி கட்டணம், வீட்டுவாசகை, அரிசி, காய்கறி, கேஸ் லிண்டர், செல்போன், ரீசார்ஜ், பெட்ரோல், துணிமணி, டாக்டர் ஃபீஸ், மருந்து மாத்திரை.. என செலவு செய்வதற்கான காரணங்கள் எதுவும் குறையவில்லை. ரேசன் கடையில் அரிசி, பருப்பு வாங்கி பசியாற்றலாம் என்றால், அங்கே எண்ணெய் இல்லை; பருப்பு இல்லை; ’இன்னும் கொஞ்ச நாளில் ரேசன் கடையே இல்லை’ என்கிறார்கள். மொத்தத்தில் ஆளும்பேருமாக சேர்ந்து நம்மை வாழவிடாமல் சுற்றிலும் சூழ்ந்து நின்று சாட்டையால் அடிப்பதைப் போல இருக்கிறது.

’பேருந்து கட்டணம்தான் இப்படி உயர்ந்துவிட்டதே... சரி ரயிலில் போகலாம்’ என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? விலை உயர்ந்த செல்போனும் அதில் வேகமான இணைய இணைப்பும், நெட் பேங்கிங் வசதியும், அந்த வங்கிக் கணக்கில் எப்போதும் இருப்பும் வைத்திருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்தே சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளையும் எடுத்துவிடுகின்றனர். சாதாரண பொதுமக்கள் விண்ணப்பத்தை நிரப்பி வரிசையில் நின்று டிக்கெட் கவுண்டரை அடையும் முன்பே அனைத்தும் தீர்ந்துவிடுகிறது.

சரி, முன்பதிவு செய்யாமல் ரயிலில் போகலாம் என்றால், அந்தப் பெட்டிகளில் எல்லாம் தாறுமாறான கூட்டம். கால் வைக்க இடம் இல்லை. அத்தனை பெட்டிகளை கொண்ட நீளமான ரயிலில் வெறும் இரண்டு அல்லது மூன்று அன்ரிசர்வ்டு பெட்டிகளை மட்டுமே இணைத்துள்ளனர். தட்கல், ப்ரீமியம் தட்கல் என காசு பிடுங்கும் வகைக்கு மட்டும் தேவைக்கு ஏற்ப அதிக பெட்டிகளை சேர்க்கும் இவர்கள், எந்த ரயிலிலும் அன் ரிசர்வ்டு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இல்லை. ஒரு பக்கம் சொகுசான கூபே, 2 டயர் ஏ.சி., 3 டயர் ஏ.சி., இந்தப் பக்கம் செகண்ட் ஸ்லீப்பர், கடைசியில் அன் ரிசர்வ்டு... என இந்திய வர்க்க மற்றும் வர்ணப் பிரிவின் வகைமாதிரியாகவே ஒவ்வொரு ரயிலும் திகழ்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து இப்படி விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் மனம் இதை ஏற்றுக்கொள்ளும் என தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார்கள். ஆனால், மக்களோ ஒவ்வொரு நாளும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தீவிர போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். தேனி, மதுரை, திருவண்ணாமலை, சென்னை என மாநிலத்தின் அனைத்துத் திசைகளிலும் இந்த கட்டண உயர்வு மக்களை வதைக்கிறது. குறிப்பாக மாணவர்கள் பல ஊர்களில் பேருந்துகளை முடக்கிப் போராடுகின்றனர்.

2011-ல் இப்படி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது, அதை எதிர்த்து ’கட்டணம் இல்லாமல் பயணம் செய்வோம்’ என அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் மாணவர் இயக்கங்கள் ஒரு பிரசாரம் மேற்கொண்டு அதை செயல்படுத்தவும் செய்தன. இப்போதும் பல இடங்கலில் ‘டிக்கெட் எடுக்க முடியாது’ என மக்கள் மறுக்கும் செய்திகள் வருகின்றன. அந்த மறுப்பு, அரசுக்கு எதிரான எதிர்ப்பின் எளிய வடிவம்.

அரசைப் பொருத்தவரை அரசுப் போக்குவரத்துக் கழகங்களை திட்டமிட்டு கைவிடுகிறது. அவை நலிவடைவதை விரும்புகிறது. அரசுப் பேருந்துகள் மீதான அவ நம்பிக்கை அதிகரிப்பதை ஆதரிக்கிறது. அப்போதுதான், ‘பிரைவேட்காரனே தேவலாம்’ என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கி, மொத்த போக்குவரத்தையும் தனியாருக்கு மாற்றிவிடுவதற்குத் தோதான மனநிலையை உருவாக்க முடியும். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் உள்ளிட்டவை 2,453 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எப்போது மூழ்கும், எப்போது மொத்தமும் ஜப்தி செய்யப்படும் என்று தெரியவில்லை.

இருக்கும் சொத்துகள் ஒவ்வொன்றாக விற்றுத் திண்ணும் ஊதாரியைப் போல, அரசின் சொத்துகளை அடமானம் வைத்து நிர்வாகம் செய்கிறார்கள். ஊர், ஊருக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதும், டாஸ்மாக் சரக்கு டோர் டெலிவரிக்கு ஆண்ட்ராய்டு ஆப் தயாரிப்பதும் மட்டும்தான் அரசின் வேலை என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. இவர்கள் அடகு வைத்த பொருட்கள் ஒருபக்கம் இருக்கட்டும்... இவர்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்பது எப்போது? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!