ஆண்களின் உலகம்
அ ண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டு இருக்கிறது. இது முழுப் பொய் இல்லை. ஆனால், முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ-யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையோ பேர்! படித்தவர்கள்தான் என்றாலும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறையில் கல்வி பெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள், நகரங்களில் ...