அப்போ வாடிவாசல்... இப்போ நெடுவாசல்
`வாடிவாசல்
திறக்க வேண்டும்’ எனக் கூடிய கூட்டம்,
இப்போது `நெடுவாசலை மூட வேண்டும்’ எனக்
கிளர்ந்து எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் பூமிக்கும் கீழே உள்ள `ஹைட்ரோ
கார்பன்' என்ற எரிவாயுவை எடுக்க
மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம்,
அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுவாசல் என்பது, மாவட்ட வரையறையில்
புதுக்கோட்டையைச் சேர்ந்தது என்றாலும், இங்கு தஞ்சைப் பசுமையின்
தொடர்ச்சியைக் காண முடியும். காவிரியின்
கடைமடைப் பகுதிகளில் ஒன்றான, இந்தப் பசுமையைத்தான்
பலி கேட்கிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.
கடந்த
சில ஆண்டுகளாக, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான
அனைத்து ஏற்பாடுகளும் மெள்ள மெள்ள செய்து
முடிக்கப்பட்ட நிலையில், வளர்ந்த புற்றுநோயைக் கடைசிக்
கட்டத்தில் கண்டுபிடித்ததைப்போல மக்கள் இப்போது ஒன்றுசேர்ந்துள்ளனர்.
`முற்றிய நிலையில்தான் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், முற்றுப்புள்ளி வைக்காமல்
விட மாட்டோம்' என்ற உறுதியுடன் பெரும்
கூட்டம் திரண்டு நிற்கும் நெடுவாசல்,
தமிழ்நாட்டின் புதிய போராட்டக் களமாக
மாறியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இருந்துகூட
நெடுவாசல் நோக்கி நெடும்பயணம் போகின்றனர்.
நெடுவாசல்
போராட்டக்களம், வாடிவாசலை நினைவூட்டுகிறது. இரவு பகலாகத் தொடரும்
போராட்டத்தில், பல்வேறு இயக்கங்களும் தொடர்ந்து
பங்கெடுக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி தமிழகப் போராட்டக்
களத்தில் நிகழ்ந்துள்ள புதிய பண்பு மாற்றத்தின்படி,
நெடுவாசலிலும் தி.மு.க.,
அ.தி.மு.க உள்ளிட்ட பெரிய
கட்சிகளை மக்கள் நிராகரிக்கிறார்கள்; நம்ப
மறுக்கிறார்கள். இவ்வளவு தீவிரத்துடன் எதிர்க்கவேண்டிய
அவசியம் என்ன? ஹைட்ரோ கார்பன்
திட்டம் அவ்வளவு தீங்கானதா?
ஏற்கெனவே
`மீத்தேன்' என்ற பெயருடன் கொண்டுவரப்பட்ட
அதே திட்டம்தான் இப்போது `ஹைட்ரோ கார்பன்' என்ற
பெயரில் கொண்டுவரப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் என்பது,
பொதுவான பெயர். மீத்தேன் என்பது,
ஒரு வகையான ஹைட்ரோ கார்பன்.
அதாவது ஹைட்ரோ கார்பன் திட்டமானது,
மீத்தேன் உள்ளிட்ட வேறு பல இயற்கை
எரிவாயுக்களையும் பூமியிலிருந்து எடுக்கும் செயல் திட்டத்தை உள்ளடக்கியது.
இவற்றை `Shale gas' என்றும் அழைப்பார்கள். குறிப்பாக,
ஹைட்ரோ கார்பனைப் பொறுத்தவரை, அது ஹைட்ரஜனும் கார்பனும்
இணைந்த கலவை. இதில் 14 வகையான
ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இவை அனைத்தும்
வேதியியலின்படி, ‘மீத்தேன் வகை வாயுக்கள்’ என
அழைக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள் காவிரி
டெல்டா, நெடுவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் பூமியின் அடி ஆழத்தில் பாறை
இடுக்குகளில் பெருமளவில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வாயுக்களை அகழ்ந்து
எடுத்தால், இவற்றை எரிபொருளாகப் பயன்படுத்த
முடியும்.
யாருக்கும்
பாதிப்பு இல்லாமல் அல்லது ஏற்கத்தக்க விகிதத்தில்
பாதிப்புடன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சிக்கல் இல்லை.
வளைகுடா நாடுகளில் பூமியை அகழ்ந்து எண்ணெய்
மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டாலும், அவை
பெரும்பாலும் மக்கள் வசிக்காத பிரதேசங்களாக
இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் அங்கு விவசாயம் நடைபெறவில்லை.
எனவே, பாதிப்பும் பெரிய அளவில் இல்லை
என்பதுடன், அகழ்வுப் பணியே அந்த நாட்டின்
பொருளாதார வலிமைக்கும் காரணமாக அமைகிறது.
தமிழ்நாட்டின்
நிலைமை அப்படி இல்லை. இங்கு
இவர்கள் தேர்வுசெய்யும் அனைத்துப் பகுதிகளும் மிகுந்த வளம் மிக்கவை.
காவிரி டெல்டா என்பது, ஆசியாவின்
மிக வளமான சமவெளிப் பரப்புகளில்
ஒன்று. மக்கள் அடர்த்தி அதிகம்.
இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், பாதிப்பு
பாரதூரமானதாக இருக்கும்.
பூமிக்கும்
கீழே சுமார் இரண்டு கிலோமீட்டர்
தூரத்துக்குச் செங்குத்தாகத் துளைகள் இட்டு குழாய்
செலுத்தி, அதன் அடிப்பகுதியிலிருந்து பக்கவாட்டில் பல
நூறு மீட்டர்களுக்குக் குழாய்களைச் செலுத்தி, அடியாழப் பாறைகளில் படிந்துள்ள வாயுக்களை இழுத்து வெளியே எடுக்க
வேண்டும். இந்தச் செயல்முறைக்கு, உள்ளே
இருக்கும் நிலத்தடி நீரை வெளியேற்ற வேண்டும்.
வெளியில் இருந்து வேதிக்கரைசலை உள்ளே
செலுத்த வேண்டும். இது பூமியின் அடிப்பரப்பு,
மேற்பரப்பு இரண்டையும் ஒருசேர நஞ்சாக்கும் தன்மைகொண்டது.
மேலும், நிலத்தடி நீர் இடைவிடாமல் உறிஞ்சப்படும்போது
நீர்வளம் வற்றும் என்பதுடன், கடலின்
உப்புநீர் முழுவதும் உள்ளே ஊடுருவிப் பரவிவிடும்.
எனவே, ‘நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை சில ஏக்கர் நிலத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்போகிறோம்’ என அவர்கள் சொன்னாலும், பூமியின் மேற்பரப்பில் மட்டும்தான் திட்டம் சில ஏக்கரில் இருக்கும். பூமியின் கீழே சுற்றியிருக்கும் ஒட்டுமொத்த நிலத்திலிருந்தும்தான் உறிஞ்சுவார்கள். எனவே, மொத்த விவசாயமும் ஒழித்துக்கட்டப்படும் என்ற விவசாயிகளின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதைப்போல அவர்கள் கண்களை மூடிக்கொண்டு எதிர்க்கவில்லை.
ஹைட்ரோ
கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு, நாடு முழுவதும் பல்வேறு
இடங்கள் இனம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே
நாகாலாந்தில் பணிகள் ஆரம்பித்துவிட்டன. நெடுவாசல்
அகழ்வுப் பணிக்கு `ஜெம் லேபரட்ரீஸ்' என்ற
தனியார் நிறுவனத்துக்கும் காரைக்கால் அகழ்வுப் பணிக்கு `பாரத் பெட்ரோ ரிசோர்ஸ்'
என்ற அரசு நிறுவனத்துக்கும் அனுமதி
வழங்கப்பட்டுள்ளன. நெடுவாசலைப் பொறுத்தவரை, அடுத்த 15 ஆண்டுகளில் நான்கு கோடி டன்
எண்ணெய் மற்றும் 2,200 கோடி கனமீட்டர் எரிவாயு
எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்படும் வாயுக்கள்
மற்றும் எண்ணெயின் விலையை அந்தந்த நிறுவனங்களே
முடிவுசெய்துகொள்ளவும், அவர்களே சந்தைப்படுத்தவும் அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேலே இருந்த அனைத்தையும்
தனியாரின் லாப வேட்டைக்குத் திறந்துவிட்டு...
முடித்துவிட்டு, இப்போது பூமிக்குக் கீழேயும்
கண் வைத்திருக்கிறார்கள்.
ஓ.என்.ஜி.சி.,
ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய
அரசு நிறுவனங்கள், இந்தியாவில் எண்ணெய் வளம்மிக்க நிலப்பகுதிகளைத்
தொடர்ந்து ஆய்வுசெய்து, எண்ணெய் வளம்கொண்ட பகுதிகளைப்
பட்டியலிட்டுள்ளன. இப்போது இவற்றை எடுத்து,
தனியாருக்கு லட்டுபோல கொடுக்கிறார்கள். அந்த நிறுவனங்களுக்கு, ஆராய்ச்சி
மற்றும் அபிவிருத்தி வேலைகளும் அதற்கான செலவுகளும் மிச்சம்.
உண்மை இப்படியிருக்க, `ஹைட்ரோ கார்பன் எடுக்கும்
திட்டத்துக்கு அதிக செலவாகும் என்பதால்,
தனியாருக்கு விடுகிறோம்' என மத்திய அரசு
கூறுகிறது. இதை, சில தினங்களுக்கு
முன் தீபா பேரவையில் சேர்ந்த
உறுப்பினர்கூட நம்ப மாட்டார். ஏனெனில்,
ஆதாயம் வராத எந்தத் திட்டத்தையும்
தனியார் நிறுவனங்கள் எப்போதும் ஏற்காது. மேலும், பொதுத் துறை
நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு என, தனியே ஓர்
அமைச்சரவையே வைத்திருந்த பா.ஜ.க
அரசு, இதைச் சொல்லலாமா?
பொதுவாக,
இதுபோன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது
‘மக்கள் கருத்துக் கேட்பு’ என்ற பெயரில்
கண்துடைப்பு நாடகம் ஒன்றை அரசு
நடத்தும். அப்படிக் கேட்கப்படும் எந்த மக்கள் கருத்தையும்
மதித்ததே இல்லை என்றபோதிலும், ஆவணத்தில்
கணக்குக் காட்டுவதற்காக அப்படி ஒன்றை, சடங்குபோல
நடத்துவார்கள். ஹைட்ரோ கார்பனுக்கு, அந்தச்
சடங்குகூட நடத்தப்படவில்லை. இப்போது மக்கள் எதிர்ப்பு
வலுத்துள்ளதால், ‘கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்’
என்பதையே ஒரு புரட்சிகர முழக்கம்போல
முன்வைத்து, ஏதாவது சில என்.ஜி.ஓ-க்கள்
கிளம்பி வர வாய்ப்பு உண்டு.
எனினும், நெடுவாசல் போராட்டக் களத்தின் கொதிநிலையின் முன்பு அவர்கள் செல்லாக்
காசாகிப்போவார்கள் என்பதே யதார்த்தம்.
அதே
நேரம் நெடுவாசலில் இருக்கும் ஒரு விவசாயியிடம் பேசியபோது
இப்படிச் சொன்னார், ``ஹைட்ரோ கார்பனை விடுங்கள்.
விவசாயம் அழிகிறது. விளைநிலம் எல்லாம் பிளாட் ஆகின்றன
என்பது பொதுவான பலருடைய கவலை.
உண்மைதான். ஆனால், எதற்கு பல
நூற்றாண்டுகளாக விவசாயி மட்டுமே வெள்ளாமையைச்
செய்துகொண்டிருக்க வேண்டும்? விவசாயம் நீடித்து, நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவோர், வயலுக்கு
வாருங்கள். பாரம்பர்யப் பெருமை என்ற பெயரில்
லாபமோ, உத்தரவாதமோ, சமூகக் கௌரவமோ இல்லாத
இந்த விவசாயத்தை எதற்கு நாங்கள் கட்டிக்கொண்டு
அழ வேண்டும்?”
இவரது
குரலில் ஒலிக்கும் ஆதங்கத்தை நாம் நேர்மறையில் புரிந்துகொள்ள
வேண்டும்.
அவர்,
விவசாயத்தை வெறுக்கவில்லை; விவசாயம் அனைத்துத் தரப்பினராலும் கைவிடப்படும் சூழலை வெறுக்கிறார். `எல்லோரும்
வெறும் அறிவுரை மட்டுமே செய்துகொண்டிருக்க,
அந்த வலியைச் சுமக்கவேண்டியது நாங்கள்தான்'
என்ற யதார்த்தத்தில் காலூன்றிப் பேசுகிறார். இவரது மனக்காயத்துக்கு மருந்திட்டு,
விவசாயம் நீடித்திருப்பதற்கான வேலையைச் செய்ய வேண்டும். மாறாக,
‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை
எப்போ காலியாகும்’ எனக் காத்திருந்து அல்லது
அண்ணனைச் சாகடித்துவிட்டு திண்ணையைக் கைப்பற்றத் துடிப்பது ஆபாசமானது.
`ஒட்டுமொத்த
நாட்டின் நலனுக்காக, ஒரு மாநிலத்தைத் தியாகம்
செய்யலாம்’ எனப் பேசியிருக்கிறார் பா.ஜ.க தலைவர்
இல.கணேசன். ஏன் இவ்வளவு
காலமாக விவசாயிகள் செய்துகொண்டிருக்கும் தியாகம் எல்லாம் போதாதா?
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்
வழங்கப்பட்டுள்ள ஜெம் லேபாரட்ரீஸ் நிறுவனம்,
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி
சித்தேஸ்வரராவுக்குச் சொந்தமானது. அதானிக்குச் சொந்தமான நிறுவனம், நாட்டின் வேறொரு பகுதியில் இந்த
உரிமையைப் பெற்றுள்ளது. எனில், யாருடைய நலன்களுக்காக
தமிழ்நாட்டை நரபலி கொடுக்கத் துடிக்கிறது
பாரதிய ஜனதா? தியாகம் என்பது,
மனமுவந்து செய்யவேண்டியது; கழுத்தை இழுத்துவைத்து கரகரவென
அறுப்பது அல்ல.
இல.கணேசன் மட்டுமல்ல, ஸ்ரீராமஜெயம்
எழுதுவதைப்போல ‘தமிழ்ப் பொறுக்கிகள்’ என
எழுதும் சுப்பிரமணியன் சுவாமி, பெரியாரைக் கண்டபடி
வசைபாடும் ஹெச்.ராஜா என
அந்தக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள்
இப்படிப் பேசுவதைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். கேட்டால், ‘அது அவருடைய தனிப்பட்ட
கருத்து’ எனச் சொல்லிவிடுவார்கள். வாந்தி,
நம் சொந்த வாயில் இருந்துதான்
வருகிறது. அதற்காக யார் முகத்தில்
வேண்டுமானாலும் எடுத்துவிட முடியாது.
இப்படி,
போவோர்... வருவோர் எல்லாம் தமிழ்நாட்டைத்
தலையில் தட்டிவிட்டுச் செல்கிறார்கள். கேட்க, ஒரு நாதியும்
இல்லை. கேட்கவேண்டிய மாநில அரசின் மிக்ஸர்
தட்டுகள் இன்னும் தீரவில்லை. ஜெயலலிதா
பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, கை தட்டாமல் அமர்ந்திருந்த
விவசாயிகளைப் பார்த்து, ‘வெறும் சோற்றால் அடித்தப்
பிண்டங்களைப்போல உட்கார்ந்திருக்கிறீர்களே!’ எனக் கேட்ட தஞ்சாவூரைச்
சேர்ந்த வைத்திலிங்கத்தை, அமைச்சராக வைத்திருந்த கட்சி அ.தி.மு.க. இது
அவர்களின் பண்பு. எனினும் இப்போது
காட்சிகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஜல்லிக்கட்டுப்
போராட்டத்தைத் தொடர்ந்து, தங்கள் மீதான அதிகாரத்தை
எதிர்த்து நிற்கும் கூட்டு மனவலிமையை மக்கள்
பெற்றுள்ளனர். அரசின் இரும்புக்கரம் தங்கள்
மீது பாயும் என்பது அவர்களுக்குத்
தெரியும். இருப்பினும் ஒன்றிணைந்தால் இறுதிக் கோரிக்கையில் வெற்றியைத்
தொட முடியும் என்ற நேர்மறைக் கண்ணோட்டத்தை
மக்கள் பெற்றுள்ளனர். மக்களின் இந்த ஒற்றுமையை அரசியல்
கட்சிகள் வாக்கு வங்கிகளாகப் பார்க்கின்றன.
ஆனால், மக்களுடன் களத்தில் இணைந்து நிற்பதில் `டச்’விட்டுப் போய்விட்டதால், மிக எளிதில் அவர்களின்
கொண்டை வெளியே தெரிந்துவிடுகிறது. அதனால்
நெடுவாசல் மக்கள் அத்தனை எளிதில்
ஏமாறத் தயாராக இல்லை என்பதை
அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.
வழக்கமாக,
பெருந்திட்டங்களின் வருகையின்போது தேச நலனின் பெயரால்
‘தன்னிறைவு, வளர்ச்சி’ என்ற முழக்கங்களும், தனிநபர்
நலனின் பெயரால் வேலைவாய்ப்பு என்ற
முழக்கமும் முன்வைக்கப்படுவது வழக்கம். இரண்டுமே ஏமாற்று என்பது, கடந்தகால
உதாரணங்கள் உணர்த்தும் உண்மை. மாறாக, நெடுவாசல்
உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சி அடைய வேண்டும் எனில்,
அரசு உண்மையாகவே செய்யவேண்டியது என்ன? அவர்களுக்குத் தடையற்ற
விவசாயத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். தண்ணீர் விநியோகம், விளைபொருளுக்கு
உரிய விலை ஆகியவற்றை உறுதி
செய்துதர வேண்டும். மாறாக, இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு
விவசாயி வயிற்றில் அடிப்பதற்குப் பெயர் `வளர்ச்சி' அல்ல.
- Thanks- Vikatan
கருத்துகள்