சேரியில் ஓர் இன்பச் சுற்றுலா

புதிய வகை சுற்றுலா ஒன்று உலகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்குப் பெயர் 'சேரி சுற்றுலா’ (Slum Tourism). மேற்கத்திய நாடுகளின் பணக்காரர்கள், ஏழை நாடுகளின் வறுமையை காட்சிப் பொருளாகக் கண்டு ரசிக்கின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளின் குடிசைப் பகுதிகளுக்கு வந்து குவிகிறார்கள். கையில் கேமராவுடன், குப்பங்களில் புகுந்து, மூக்கு ஒழுகும் சிறுவர்களைப் புகைப்படம் எடுக்கும் வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும் இத்தகைய சுற்றுலாவாசிகள்தான்.



ஏன் இவர்கள் ஏழைகளின் சேரிக்கு சுற்றுலா வர வேண்டும்? ஏனென்றால், பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உலகின் வழக்கமான சுற்றுலாப் பிரதேசங்கள் அலுப்புத்தட்டிவிட்டன. நீலக்கடல், பசுமையான மலை, குளிர் பிரதேசங்கள், செயற்கைப் பூங்காக்கள் போன்றவை அவர்களின் ரசனைக்குப் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு 'வெரைட்டிவேண்டும். த்ரில்லான, சாகசம் நிறைந்த, மனதின் ஈகோவை திருப்திப்படுத்தகூடிய ஒரு பொழுதுபோக்கு வேண்டும். அதுதான் 'ரியாலிட்டி டூர்எனப்படும் சேரி சுற்றுலா.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கிய இந்தச் சேரி சுற்றுலா, இப்போது உலகின் பல நகரங்களுக்குப் பரவிவிட்டது. குறிப்பாக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன், இந்தியாவின் மும்பை ஆகிய நகரங்கள், சேரி சுற்றுலாவின் தலைநகரங்கள். இவற்றை ஏற்பாடு செய்வதற்கு பிரத்யேக இணையதளங்களும் முளைத்துவிட்டன. அவர்கள் குடிசைப் பகுதியைப் பார்த்து ரசிக்க, 'வியூ பாய்ன்ட்டும் அமைத்துள்ளனர். 'உங்களின் வழக்கமான சுற்றுலாவை விட்டொழியுங்கள். சாகசம் நிறைந்த வாழ்வின் உண்மைகளை நெருக்கமாகக் கண்டுகளியுங்கள்என்று அழைக்கிறார்கள். ஆன்மிகச் சுற்றுலா, கோடைவாசஸ்தல சுற்றுலா வரிசையில்... 'சேரி சுற்றுலா’. 

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரம்தான், இதன் ஆரம்பம். நம் ஊரில் உள்ளதைப்போல இந்த நகரத்திலும் நிறைய குடிசைப்பகுதிகள் உண்டு. அவற்றை 'ஃபவெலா’ (Favela) என அழைப்பார்கள். சுமார் இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் 'ரோசின்ஹா’ (Rocinha) என்ற குடிசைப்பகுதி, பிரேசில் நாட்டிலேயே மிகப் பெரியது. இங்கு 2000-ம் ஆண்டுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கி, தனித் துறையாக வளர்ந்துவிட்டது. ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் கேப்-டவுன் நகரத்தில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்று லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான மும்பையின் தாராவியில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே சேரி சுற்றுலா களைகட்டிவிட்டது. 'ரியாலிட்டி டூர்ஸ் - டிராவல்ஸ்என்ற நிறுவனம், தாராவி சுற்றுலாவில் முன்னணி வகிக்கிறது. ஒரு நபருக்கு 600 ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டு, சுமார் 525 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துகிடக்கும் தாராவி குடிசைப்பகுதியின் சந்து பொந்துகளைச் சுற்றிக் காட்டுகின்றனர்.

Salaam Baalak Trust (SBT) என்ற நிறுவனம், டெல்லியில் சேரி சுற்றுலாவை ஏற்பாடு செய்கிறது. மூன்று மணி நேர சுற்றுலாவுக்கு 300 ரூபாய் கட்டணம். புதுடெல்லி ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபாரத்தில் தொடங்குகிறது இவர்களது சுற்றுலா. சாலையோரத்தில் படுத்து உறங்கும் மக்கள்தான் முதல் 'வியூ பாய்ன்ட்’. கூரைகள் இல்லாமல் திறந்தவெளியில் மக்கள் தூங்குவதையும், உள்ளூர் ரவுடிகள் மற்றும் காவல் துறையினரின் அட்டகாசங்களையும் 'கைடுகள்விவரிப்பார்கள். இந்த கைடுகள்... அதே பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் சிறுவர்கள்தான். ''இதன் மூலம் நாங்கள் குடிசைப்பகுதி சிறுவர்களுக்குப் புதிய வாழ்க்கைக்கான வாசலைத் திறந்துவிடுகிறோம்'' என்கிறார் எஸ்.பி.டி. நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் விகாஸ்.

சேரிச் சுற்றுலாவுக்கு சென்னையும் தப்பவில்லை. Semester-at-Sea என்ற நிறுவனம் சென்னையில் இத்தகைய சேரி சுற்றுலாவை ஏற்பாடு செய்கிறதுஎந்த வசதியும் பளபளப்புமற்ற குடிசைப்பகுதிகளில் அப்படி எதைத்தான் இவர்கள் பார்க்க விரும்புகின்றனர்?  ஏழ்மைதான் அவர்கள் பார்க்க விரும்பும் கேளிக்கை. மிகக் குறுகலான, நெருக்கடியான இடத்தில் மக்கள் 'தன்னம்பிக்கையுடன்வாழ்க்கை நடத்துவதை மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள். மக்கள், தண்ணீர் வாளிகளுடன் பொதுக் கழிப்பறையில் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் 'விடா முயற்சியை புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். மனிதக் கழிவுகள் மிதந்து செல்லும் வாசல்களில் அமர்ந்து சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகையுடன் உணவு அருந்தும் 'சகிப்புத்தன்மையை ஆச்சர்யத்துடன் பார்வையிடுவார்கள். காற்றுப் புக வழியில்லாத குகை போன்ற இருட்டு அறையில் நாள் முழுக்க நின்று 'கேக்குகளை சுடும் பேக்கரி மாஸ்டர்களின் 'கடின உழைப்பைகண்டு வியப்பார்கள். இப்படி சுற்றுலாவாசிகள், ஏழைகளின் அன்றாட வாழ்க்கையில் இருந்து 'தன்னம்பிக்கைத் தரிசனம்பெற்று, புதிய இந்தியாவைத் தரிசிக்கின்றனர்

''இதை, 'வறுமைஎன்று நினைத்தால் வறுமை; 'இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?’ என்று யோசித்தால் மிகச் சிறந்த வாழ்க்கைப்பாடம்'' என்கிறது, மும்பை 'ரியாலிட்டி டூர்ஸ்நிறுவனம்மேலும், ''மேல்நாட்டுப் பணக்காரர்களை குடிசைப்பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துவந்து, அவர்களின் இரக்கத்தைப் பெறுவதன் மூலம் குடிசைப்பகுதிகளுக்கு உதவிகள் குவியும்'' என்கிறார்கள். ஆனால், நடப்பதோ... சுற்றுலாவாசிகள் இங்கு எடுக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, தங்கள் குற்றஉணர்ச்சியைத் தணித்துக்கொள்வது மட்டும்தான். அதாவது, இந்த வெளிநாட்டுப் பணக்காரர்கள் ஏழைகளின் பகுதிக்கு சென்றுவந்ததே பெருந்தன்மையான ஒரு சமூக சேவையாம். அந்தச் சேவையைச் செய்யும் சமயத்தில், இரக்க உணர்ச்சி பீறிட்டு யாருக்கேனும் சில நூறு ரூபாய்கள் உதவியிருந்தால், மறக்காமல் அந்தப் புகைப்படங்களும் பதியப்படும். அது அவர்களின் 'மனிதாபிமானத்துக்கானசாட்சி. என்ன கொடுமை இது?!

உண்மையில், வறுமையில் வாடும் மக்களை, மிருகக்காட்சிசாலையின் மிருகங்களைப் போல காட்சிப் பொருளாக்கும் இந்தச் செயல், அருவருப்பான வக்கிரம். ஏழைகளின் வாழ்க்கை அவலத்தை, துயரத்தை பொழுதுபோக்காக மாற்றுவது குரூரத்தின் உச்சம். இந்தக் குரூர மனநிலை அபாயமான நோய்க்கூறாகப் பார்க்கப்பட வேண்டும். மாறாக, இதில் ஒரு தொழில்வாய்ப்பைக் கண்டுவிட்டனர். ஆகவே, இன்று 'சேரி சுற்றுலாஎன்ற பெயருடன் செம கல்லா கட்டுகிறார்கள்.  

இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் குடிசைப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். ''எங்களிடம் வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது? இது எங்கள் வாழ்க்கை. தினசரி உங்கள் வீட்டு வாசலில் நான்கு பேர் வந்து நின்று, உங்கள் அன்றாட நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?’ என்று கேட்கிறார்கள். ''நாங்களும் பணக்காரர்களின் பங்களாக்களைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறோம். 600 ரூபாய்தானே... கட்டிவிடுகிறோம். சுற்றுலா அழைத்துச் செல்வார்களா?'' என்று கேட்கிறார் தாராவிக் குடிசையில் வசிக்கும் சுனில்இத்தகைய சேரிப் பகுதிகளில் ஏதேனும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டால், அதன்பிறகு அந்தப் பகுதியின் சுற்றுலா மேலும் பரபரப்பாகிவிடுகிறது. 'ஸ்லம்டாக் மில்லியனர்படம் வெளியான பிறகு, மும்பை தாராவிப் பகுதிக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்தது.

2011-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் 2,613 நகரங்களில் 6.5 கோடி மக்கள் மோசமான குடிசைப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய இந்திய அரசோ, சேரி சுற்றுலா என்னும் அவலத்துக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ளதுதன் குடிகளின் வறுமையிலிருந்துகூட வருமானம் தேடிக்கொள்ளும் இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத் திறனை என்ன சொல்லிப் பாராட்ட?

- நன்றி: விகடன், 2013



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!