கற்றதனால் ஆன பயனென்ன..?"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?" என்று இந்த தலைமுறை கல்வியை கரன்ஸியால் அளவிடுகிறது. கல்வி கற்பிப்பதே வணிகமாகிவிட்ட சூழலில் முதல் போட்டவர்கள் அதை வட்டியோடு திருப்பி எடுக்க நினைக்கின்றனர். இந்த சூழலில், தமிழின் சில எழுத்துக்களைப் பார்த்தால் உண்மையிலேயே 'இவற்றால் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லையே..' என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சின்ன வயதில் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும், சில நாட்களில் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமுமே என் முன்னால் அமர்ந்திருக்க, நான் 'கா..ஞா..சா..' என்று கால்சட்டையோடு நின்று கத்துவேன். எதிரில் உள்ள மாணவர்கள் உரத்த குரலில் அதை கோரஸாக எதிரொலிப்பார்கள். அப்படிப் படிக்கும்போதுதான் கீழ்கண்ட எழுத்துக்களையும் படித்திருப்பேன் போல.. ஆனால், இப்போது அனைத்துமே 'வெள்ளெழுத்துகளா'கத்தான் தெரிகின்றன.

'ஞ' வரிசையில் ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ஞௌ... போன்ற எழுத்துக்களைப் பார்த்தால் இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள்தானா என்று சந்தேகமே வருகிறது.

'ட' வரிசையில் 'டௌ' என்ற எழுத்து வருகிறது. சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதும்போது இந்த எழுத்துப் பயன்படலாமேயன்றி, இந்த எழுத்தைப் பயன்படுத்திய நேரடி தமிழ் வார்த்தைகள் எதுவும் நான் இதுவரைக்கும் படித்ததில்லை.

வாய்பாட்டில் மேலிருந்து கீழாக 'கௌ' வரிசையில் பல எழுத்துக்கள் படிக்கவே காமெடியாக இருக்கின்றன. ணௌ, தௌ, நெள, லௌ, வௌ, ழௌ, ளௌ, னௌ போன்றவற்றை தட்டச்சும்போதே புதியதாக தெரிகிறது. 'ழௌ'வும், இதன் நெடிலெழுத்தும் எந்த வார்த்தையிலாவது வருகிறதா..?

'ங' வரிசையில் ங-வையும், ங்-யையும் தவிர்த்த எழுத்துக்களைப் பயன்படுத்தி யாராவது ஒரு தமிழ் வார்த்தை சொல்லுங்களேன் பார்ப்போம். இந்த வரிசையில் இந்த இரண்டு எழுத்துக்களைத் தவிர ஏனைய எழுத்துக்களை தட்டச்சவே எ -கலப்பையில் வசதியில்லை. அந்த மென்பொருளை உருவாக்கியவர்களே, இந்த எழுத்துக்களின் பயன்பாடின்மையை உணர்ந்திருக்கிறார்கள் போல.. 'றவ்' என்ற உச்சரிப்புடன் கூடிய 'கௌ' வரிசை எழுத்தையும் எ-கலப்பையில் தட்டச்ச முடியவில்லை. ஆனால், இவற்றைதான் சின்ன வயதில் மெனக்கெட்டு 'நெட்டுரு' போட்டு படித்திருக்கிறோம்.

இந்த உண்மைகள் அனைத்தையும் பண்டிதர்கள் யாவரும் வாய் மூடி ஏற்றுக்கொண்டபோது; மொழியைக் குறை சொன்னால், திருத்தினால் நம்மை இன துரோகியாக்கிவிடுவார்களோ என்று மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தபோது, தன் பட்டறிவுகொண்டு தமிழை திருத்தி, வளப்படுத்தியவர் தந்தை பெரியார். முழுமையாக இல்லையென்றாலும் பகுதியளவிலாவது அவர் முன்வைத்த எழுத்து சீர்திருத்தம் இப்போது வரைக்கும் முழுமையாக நடைமுறைக்கு வராதது வருத்தமே.

மொழியை முழுதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை. அதை முழுதாக பயன்படுத்த வேண்டும்/ பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பயன்பட வேண்டும் இல்லையா..? இப்படி பயன்படாத எழுத்துக்கள், எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் புதிய நுட்பங்களுக்கு தமிழை பழக்க, நுட்பவியலாளர்கள் எத்தனை சிரமப்பட்டிப்பார்கள்...? இந்த சிரமத்தின் பொருட்டே பல இணைய/ கணிணி நுட்பங்கள் தமிழில் சாத்தியப்படாமல் போயிருக்கலாம் அல்லது தள்ளிப்போயிருக்கலாம்.

ஆனால், அவசியமில்லாமலா அந்த எழுத்துக்களை தோற்றுவித்திருப்பார்கள்..? இருவேறு எழுத்துக்களின் நுணுக்கமான ஒலி வடிவ வேறுபாட்டுக்குள், வெவ்வேறு அர்த்தங்களை ஒழித்து வைத்திருக்கிற தமிழ்மொழிக்குள், இந்த எழுத்துக்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருந்திருக்க வேண்டும். பயன்பாடில்லாத எழுத்துக்களை தோற்றுவித்திருக்க முடியாது. எனில் இந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருந்த இலக்கியங்கள் என்னவாயின..? அந்த எழுத்துக்கள் கொடுத்த வார்த்தைகள், அவை சொன்ன அர்த்தங்கள், சுட்டிய பொருள்கள், செயல்கள் எல்லாம் எங்கே..?

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்று சொல்கிற அளவுக்கான அறிவு எனக்கில்லை. இதை எழுதிய பிறகு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற சில எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளையாவது உங்களில் சிலர் அறியத்தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் தட்டச்சுகிறேன். அப்படி
அறிந்தவர்கள் சொன்னால், என்னைப் போல நினைக்கிற மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
"ஙே"ன்னு முழிக்கிறத தவிர எனக்கு எதுவும் தோணலைங்க..

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி
http://www.desipundit.com/2007/06/18/nje/
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
டுபுக்கு...
முன்பொருமுறை குமுதத்தில், 'ங வரிசையில் மற்ற எழுத்துக்கள் எதுவும் பயன்படுவதில்லையே..?' என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, அரசு பதிலில், நீங்கள் சொன்ன இதே வார்த்தைகள்தான் பதிலாக வந்தன.
ஙே......
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
ங ஙா ஙி ஙோ ஙொ ஙே - இவை எல்லாவற்றையும் தமிழ்விசை நீட்சியைக் கொண்டு எழுதுகிறேன். இதை உருவாக்கியவர்கள் தான் எ-கலப்பையையும் உருவாக்கினார்கள். அவர்கள் நீங்கள் சொல்கிற எழுத்துக்களைவிட்டு உருவாக்கி இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. சோதித்துப் பார்த்து விட்டு சொல்கிறேன். அப்படியே வர வில்லை என்றாலும் அது மென்பொருள் வழுவாக இருக்கலாம். எ-கலப்பை குழுவுக்குத் தெரிவிக்கிறேன். சில settingகளில் சில ஔகார எழுத்துக்களைத் தட்டச்ச இயல்வதில்லை என்பதும் அறியப் பட்ட வழுவே. வேண்டுமென்று ஒதுக்கப்படவில்லை. இலக்கியங்கள், உரையில் பயன்படாவிட்டாலும் தமிழ் அரிச்சுவடி எழுதுவதற்காவது இந்த எழுத்துக்கள் தேவை. அதனால் எந்த மென்பொருள் உருவாக்குனரும் தன்னிச்சையாக இவற்றை ஒதுக்கி உருவாக்க முடியாது. இந்த எழுத்துக்களை வெட்டி விடுவதால் மென்பொருள் இயங்கு வேகத்திலோ அது அடைத்துக் கொள்ளும் நினைவகச் சுமையிலோ மாற்றம் வரும் என்று தோன்றவில்லை.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறுத்தி முழுமையாக அறியேன். அவர் இந்த எழுத்துக்கைளையும் ஒதுக்கச் சொன்னாரா என்று தெளிவுபடுத்தினால் நலம். மாற்று எழுத்துக்களை முன்வைத்தாரா?

ஒலி-பேச்சுக்கு அடுத்து தான் எழுத்து வடிவம் எந்த மொழியிலும் வரும் என்று நினைக்கிறேன். எனவே, தேவையில்லாத எழுத்துக்களை உருவாக்கிவிட்டு அவற்றை ஒலிக்காமலும் இருக்கிறார்கள் என்பது தவறான புரிதலாக இருக்கலாம். அந்தக் காலத்தில் இந்த ஒலிகள் வழக்கில் இருந்து எழுத்துக்கு வந்திருக்கலாம். எந்தச் சூழ்நிலைகளில் இந்த ஒலிகள், எழுத்துக்கள் பயன்பட்டன என்று அறிந்தவர் தான் சொல்ல வேண்டும்.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ - இது எல்லாம் எ-கலப்பை 2.0b tamilnet99 கொண்டு எழுதினது தாங்க..நீங்க பயன்படுத்தும் எ-கலப்பை பதிப்பு பத்தி சொன்னா வழு திருத்த உதவியா இருக்கும்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் ரவிசங்கர்...

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.. எனக்கு அவ்வளவாக தொழில்நுட்ப அறிவில்லை. நான் பயன்படுத்துவது எ- கலப்பையின் எந்தப் பதிப்பு என்று என்னால் தற்போது சொல்ல முடியவில்லை. நண்பர்கள் உதவியுடன் விரைவில் சொல்கிறேன்.

'அண்ணா' என்று இப்போது எழுதுகிறோம். இதில் உள்ள 'ணா' என்ற எழுத்தை பின்புறமாக சுழித்து எழுதும் வழக்கம் முன்பிருந்தது. இதே போன லை,ளை, னை, ணை போன்ற எழுத்துக்களைம் மேற்புறமாக சுழித்து எழுதும் முறை வழக்கிலிருந்ததை அறிந்திருப்பீர்கள். இது நடைமுறைக்கும், அச்சுக்கும் பெரும் சிரமமாக இருக்கிறது என்பதை உணர்ந்து அவற்றை சீர்திருத்தியவர் பெரியார்தான். இதை எழுதும்போது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களைப் புரட்டினேன். அவற்றில் அதுபற்றி இல்லை. விரைவில் கேட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

ஒரு சாமானியனின் பார்வையில் அந்த எழுத்துக்கள் தொங்கு சதைபோல, 'ஆட்டுக்குத் தாடி' என்று அண்ணா சொன்னதைப்போல, தேவையில்லாமல் உருத்திக்கொண்டிருக்கின்றனவோ என்று எனக்கு எழுந்த சந்தேகத்தையே எழுதினேன். யாரேனும் நிவர்த்தி செய்தால் தெரிந்துகொள்வேன்.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் குறிப்பிட்டுள்ள பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் அறிந்ததே. அவர் குறிப்பிட்டது எழத்து வடிவ மாற்றம். காலத்துக்கு காலம் தமிழ் எழுத்து வடிவங்கள் மாறி வந்துள்ளதால் இது பெரிய விசயமில்லை. ஆனால், அவரோ வேறு எவருமோ முழு எழுத்துக்களையே ஒழித்துக் கட்டி விடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்களா என்று அறிய ஆவல். தெலுங்கில் இப்படி சில எழுத்துக்களை அரசே ஒழித்து விட்டதாக நண்பர் சொல்லக் கேட்டேன். என்னைப் பொறுத்த வரை இந்த எழுத்துக்களை ஒழித்துக் கட்டுவதால் மிச்சப்படுத்தப்போவது ஏதுமில்லை. எப்படி இருந்தாலும் குழந்தைகள் ஞ, ங போன்ற எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். உயிர் மெயர் எழுத்துக்களை தனித்தனியாக மனனம் செய்ய வேண்டிய சுமை இல்லாத வரை, ஒரு ஒழுங்குடன் இவை இருந்து விட்டுப் போகட்டுமே? உயிர் + மெய் = உயிர் மெய் என்று இலக்கணம் சொல்லிக் கொடுத்து விட்டு, இந்த எழுத்துக்களை ஒழித்துக் கட்டி விட்டால் குழந்தைகளை வீணாகக் குழப்பியது போல் ஆகும்
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?"

இதேமாதிரிதான் தேற்றம், ஸைன் டிட்டா, காஸ் டிட்டா, லாக் புக்னு படிக்கும்போது டார்ச்சர் பண்ணினானுங்கோ.... பைசா பிரயோசனமில்ல...
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ரவிசங்கர்.. அந்த எழுத்துக்களின் பயன்பாடின்மைபற்றிய சந்தேகம்தான் இந்த கட்டுரை. அந்த அயற்சியில் விளைந்தவையே, 'அப்புறம் என்ன கருமத்துக்கு இதைப் படிக்கனும்.?' என்ற வார்த்தைகள். படிப்பதற்கான காரணம் கிடைத்துவிட்டால் என் சந்தேகம் தீர்ந்துவிடும்.

//எப்படி இருந்தாலும் குழந்தைகள் ஞ, ங போன்ற எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். உயிர் மெயர் எழுத்துக்களை தனித்தனியாக மனனம் செய்ய வேண்டிய சுமை இல்லாத வரை, ஒரு ஒழுங்குடன் இவை இருந்து விட்டுப் போகட்டுமே?//

என்ற உங்கள் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள தக்கவையே. ஆனாலும் இவை சந்தேகத்திற்கான நேரடி விளக்கமாக இல்லை.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Very interesting post. I could not think of any words with these letters. Perhaps, as mentioned by others, these letters are kept in sequence to provide a structure for learning the language. These letters may also be useful to write certain names from other languages. Research on language development also suggests that if children are not exposed to certain sounds before a critical developmental period, they are least likely to reproduce those sounds (e.g., certain sounds in Finnish language are difficult to decipher for non-native speakers).
களவாணி இவ்வாறு கூறியுள்ளார்…
யோசிக்க வைக்கும் படைப்பு. கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா தேடி பார்த்துட்டு சொல்றேன் அண்ணா. சென்னையில இருக்க எங்க தமிழ் வாத்தியாருக்குத்தான் ஃபோன் போடணும்.
குறிச்சி டைம்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்று நாம் யாரும் முழுமையான தமிழில் பேசுவது இல்லை. அந்த எழுத்துக்களை தற்போது உபயோகிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அவசியம் தேவைப்படும்,அதில் சிறிதும் மாற்றமில்லை. அறிவியல்தமிழ் வளரும்போது இந்த எழுத்துக்கள் தேவைப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ரவிசங்கர்.. குறிஞ்சி ஜெகா.. இருவருக்கும் சேர்த்தே என் நிலையை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த எழுத்துக்கள் பயன்பாடில்லாதவை என நிறுவி அவற்றை ஒழிக்கச் சொல்வது என் நோக்கமல்ல. ஒரு சராசரி சாமானியனின் எளிய பாமரப் பார்வையில் அந்த எழுத்துக்களுக்கு நடைமுறை பயன்பாடில்லை என்பதையே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதை சொல்ல நான் பயன்படுத்திய வார்த்தைகளில் எழுத்துக்களே தேவையில்லை என்ற தொணி இருந்தால் மன்னிக்கவும். ஆனால், பயன்பாடில்லாத எழுத்துக்களைப் படிப்பதனால் என்ன பயன் என்ற என் கேள்வி அப்படியேதான் இருக்கிறது.
லிவிங் ஸ்மைல் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழி எனது முதுகலை ஆய்வேட்டை காப்பியடிக்கலைதானே!!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
நான் வாசிக்கும் மிகச்சிறந்த சில வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//முதுகலை ஆய்வேட்டை காப்பியடிக்கலைதானே!!//

நான் இன்னும் அறிவொளி இயக்கத்துல கொடுத்த புத்தகத்தையே படிச்சு முடிக்கலைங்கோ::))

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு