"மண் பூனை எலியைப் பிடிக்காது" -தி.க.சி.
சு டலை மாடன் கோயில் தெரு... திருநெல்வேலி-டவுண் பகுதியில் இருக்கும் இந்த தெரு, எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பரிட்சயமானதாகவே இருக்கும். குறுகலான தெருவின் கடைசிக்கு முன்பாகவுள்ள, இடது வாசல் வீட்டுக்குள் நுழைந்தால் மெல்லிய தேகத்தோடு வரவேற்பார் தி.க.சிவசங்கரன்.. சுருக்கமாக தி.க.சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பங்காற்றிய இவருக்கு இப்போது 85 வயது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டபிறகு, புத்தகங்களும் இவரும் மட்டுமே வசிக்கின்றனர் அவ்வீட்டில். எப்போது போனாலும் வாசல் வரைக்கும் எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்கும் பண்புடையவர். நாற்காலியை கொடுத்து அமரச் சொல்லிவிட்டு பல்செட் எடுத்து அணிந்துகொண்டுதான் அடுத்த வார்த்தைப் பேசுவார். அவரைப்பற்றி நாம் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் அவர் சொல்வதே அதிகமாக இருக்கும். பேசவும், எழுதவும் இப்போதும் அலுக்காத மனிதர். எங்கிருந்தோ அஞ்சலில் வரும் சிற்றிதழ்களை முழுமையாகப் படித்துவிட்டு, இரண்டு வரியாகவது தட்டிக்கொடுத்து கடிதம் எழுதிவிடுகிறார். தீவிர இலக்கிய இதழ்கள் முதல், தினமணி வரைக்கும் இவரது விமர்சனங்களைத் தாங்கிய கடிதங்கள் இப்போதும் சென்றுகொண்டிருக்க...