ஊனா கட்டுரைகளும், உழைப்பால் உயர்ந்த உத்தமர்களும்!
வெற்றிகளைத் தேடி ஓடுகிறது உலகம். வெற்றி பெறுவது மட்டுமே இந்தப் பூமியில் உயிர் தரித்திருப்பதற்கான தகுதி என்றாக்கப்பட்டுவிட்டது. வெற்றியாளர்கள் சலிக்கச் சலிக்கக் கொண்டாடப்படுகின்றனர். முன் உதாரணங்கள், முதல் பரிசுகள், கோப்பைகள், பொன் மொழிகள் என ஊடகங்களில் தினம், தினம் வெற்றிச் செய்திகள் ஊற்றைப் போல பெருகி வழிகின்றன. வெற்றிபெற்றவன் மட்டும்தான் வாழத் தகுதியானவனா? தோல்வி வாழ்வின் பகுதி இல்லையா? ‘வலியது வெல்லும்’ என்றால் யார் வலியவர், அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து வந்தது, மற்றவருக்கு அந்த வலிமை வராமல் போனதன் சமூகக் காரணிகள் என்ன? அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குமான திறமையின் விகிதம் மாறக்கூடியதே. இதன் அடிப்படையில் வெற்றியின் விகிதமும் மாறக்கூடிய ஒன்றுதான். ஆனால் சமமின்மையுடன் இயங்கும் இச்சமூகத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதில் இருந்தே இதை நாம் அணுக வேண்டும். வாய்ப்புகள் சமமாக கிடைக்காத போது எப்படி வெற்றிகள் சமமாக இருக்கும்? அதனால் ஒரு நபரின் வெற்றி அல்லது தோல்வியை அந்த தனிநபரின் திறமை/திறமையின்மையுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் சமூகக் கா...