நடுக்குப்பமாக மாற்றப்படுமா நெடுவாசல்?


ல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றதைப் போல நெடுவாசல் போராட்டத்தில் வெல்ல முடியுமா? கூட்டம் கூடுவதை வைத்து; ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மட்டும் இதை எடைபோடக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது அதிக ஆபத்து இல்லாத ஒரு பண்பாட்டு கோரிக்கை. எனவே ஒரு வாரத்தில் புதிய சட்டம் இயற்ற வைப்பது அதில் சாத்தியமானது. ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் எதிர்ப்பக்கம் நிற்பது கார்ப்பரேட்டுகள்.
கௌதம் அதானியின் நிறுவனமும், பா.ஜ.க எம்பி சித்தேஸ்வராவின் நிறுவனமும் ஹைட்ரோகார்பன் அகழ்வுப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன. எனவே மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து அரசு பின்வாங்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. அல்லது ’ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழ்நாடு வீரியத்துடன் போராடியது. எனவே நெடுவாசல் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முயன்றால் அதேபோல வீரியமான போராட்டத்தைத் தொடங்கிவிடுவார்கள்’ என அஞ்சி அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப்பெறப்போவதும் இல்லை.
மேற்கு வங்கத்தில் கார்ப்பரேட் நலன்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த சி.பி.எம் போன்ற ஓர் இடதுசாரி கட்சித் தலைமையிலான அரசே தயங்கவில்லை என்பதை சிங்கூரிலும், நந்திகிராமிலும் கண்டோம். அப்படியிருக்க… மத்தியில் நடைபெறுவது முழுமையான பா.ஜ.க. அரசு. பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு என தனியே ஓர் அமைச்சரவையே வைத்திருந்தவர்கள் இவர்கள். கௌதம் அதானி வழங்கிய விமானத்தில் பறந்து மோடி தேர்தல் பிரசாரம் செய்ததும், அதானியின் ஆஸ்திரேலியே சுரங்கப் பணிகளுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கி கடன் கொடுத்ததும் நாம் கண்ட உதாரணங்கள். போதாக்குறைக்கு தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருப்பது அரை பா.ஜ.க அரசு. அதனால் அரசின் அணுகுமுறை அத்தனை மென்மையாக இருக்காது என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்பது அனைத்துத் தரப்பின் கோரிக்கையாக மாறியதைப்போல ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தும் கோரிக்கை மாறாது. இது விரைவில் வளர்ச்சிக்கு எதிரானதாக; வேலைவாய்ப்புக்கு எதிரானதாக கட்டமைக்கப்படும். போராட்டத்தை பிளவுப்படுத்தவும், நோக்கத்தை சிதைக்கவுமான சிறு குழுக்கள் உள்ளே நுழைவது ஊக்குவிக்கப்படும்.
திடீரென மர்மமான முறையில் தொடங்கப்பட்டுள்ள ’என் தேசம் என் உரிமை’ போன்ற அமைப்புகள் எல்லாம் நம் சந்தேகத்துக்கு முழு தகுதியானவை. மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு பெற்றுள்ள படிப்பினையின்படி, ஹிப்ஹாப் ஆதி-லாரன்ஸ் வகை நபர்களை இப்போதே களத்தில் கலக்கச் செய்வார்கள். பொருத்தமான சந்தர்ப்பத்தில் அவர்கள் அரசின் குரலை தங்களின் வழியே வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அரசுக்கு மட்டுமல்ல… மக்களுக்கும் ஒரு படிப்பினையை வழங்கியுள்ளது. கோரிக்கையில் விடாபிடியாக; சமரசமற்ற உறுதியுடன் போராடினால் இறுதி இலக்கில் வெல்ல முடியும் என்ற படிப்பினை அது. அதனால்தான் நெடுவாசல் போராட்ட களத்தின் வெப்பம் அதிவேகமாக உச்சம் தொட்டுள்ளது. மக்கள் மேலும் எதிர்பார்க்க வேண்டியது, எப்போது வேண்டுமானாலும் நெடுவாசல் இன்னொரு நடுக்குப்பமாக மாற்றப்படலாம். தேசவிரோதிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படலாம். பின்லேடன் படம் வைத்திருந்தார்கள் என போலியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டதைப்போல சின்னத்தனமான குற்றச்சாட்டை எந்த நேரமும் யாரும் சொல்லலாம்.
உலகப் புகழ்பெற்ற அல்கெமிஸ்ட் நாவலில் வரும் ஒரு வரி நினைவுக்கு வருகிறது.
“உங்கள் வாழ்க்கையில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை குறுக்கிடும் ஒன்றை திரும்பத் திரும்ப எதிர்பாருங்கள்”
நாம் மக்களின் இறுதி வெற்றியை எதிர்பார்ப்போம்!

- 2017-ல் எழுதியது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு