நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? அறிவியலா, ஆபத்தா? - முழுமையான விளக்கம்
நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது தமிழ்நாட்டின் புதிய பேசுபொருளாக மாறியிருக்கிறது . தேனி மாவட்டத்தில் அமையவுள்ள இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது அடிப்படையான அறிவியல் என்பது ஒரு பார்வையாகவும் , ‘ இல்லை ... நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும் ’ என்பது இன்னொரு பார்வையாகவும் முன்வைக்கப்படுகிறது . கூடங்குளம் அணு உலை , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் போன்ற பெரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன என்றபோதிலும் , இவற்றில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் வேறுபட்டது . கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் . டெல்டா மாவட்டங்களில் பூமியின் அடியாழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்கப் போகின்றனர் . ஆனால் , நியூட்ரினோ திட்டத்தில் எந்த பொருளையும் உற்பத்தி செய்யப்போவது இல்லை . அங்கு நடைபெறப்போவது ஓர் அறிவியல் ஆய்வு . தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த டி . புதுக்கோட்டை கிராமத்தின் மேற்கு எல்லையாக அமைந்திருக்கும் அம்பரப்பர் மலைதான...