அனுபவிக்கத் தயாரா...?
இந்த வயதில் அனுபவிக்காமல்
வேறு எந்த வயதில் அனுபவிப்பது,
என்று வாதாடும் இளைஞனே..!
எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயாரா நீ..?
இந்த வயதில்..
கல்லூரிக்குப் போக வழியில்லை
கரும்பு வெட்டி கன்னல் சுனையில்
கைத்தோல் உரியும்.
சோறு உள்ளங்கையில் பட்டு எரியும்.
கட்டுகள் மின்னல் வேகத்தில்
டிராக்டரில் ஏறும்.
கை நரம்பின் சாறனைத்தும்
கரும்புக்கு மாறும்.
உயிரைப் பிழியும் அந்த உழைப்பை
அனுபவிக்கத் தயாரா நீ..?
இந்த வயதில்...
உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லை..
ஓட்டை பனியனுக்குள் நுழையும் காற்று,
நெஞ்செலும்பின் வியர்வையில்
உறைந்து ஆவியாகும்.
அய்ந்தாறு சதை கொழுத்த வாழைத்தாரை
பழம் நோகாமல்
முதுகுத் தண்டில் தூக்கிப்போகும்,
கூலிக்கார இளைஞனின் ஒரு பொழுதை
ஜாலியாக நீ அனுபவிக்கத் தயாரா..?
இந்த வயதில்...
வண்டியில் வலம் வந்து,
கடலைப்போட்டு, கலாய்க்காமல்
எழுபது , எண்பது இளநீரை மிதி வண்டியில்
காய்த்ததுபோல் அடுக்கிவைத்து
எதிர்காற்றில் ஏறி மிதிக்கையில்
தென்னை மரத்தின் வேர்கள்
மிதிக்கும் கால்களில் தெரியும்..!
உடல் வழுக்கும் வியர்வை
வெட்கப்பட்டு ஓடி
இளநீரின் கண்களில் ஒளியும்..!
இளநீர் குளிர்ச்சி..-குடிப்பவனுக்கு..!
இளநீர் சூடு..-வெயிலில் திரிந்து
அதை விற்பவனுக்கு..!
இந்த சூடான அனுபவத்தை நீ
சொந்தமாக அனுபவிக்கத் தயாரா..?
அன்றலர்ந்த ரோஜாவின் பவுசு குலையாமல்
கண்ணிறைந்த காதலியின் கையில்
யாருக்கும் தெரியாமல் கொடுக்க
வாய்ப்புத் தேடும் வயசுக்காரனே..!
இந்த வயதில்..
அன்றாடம் யாரோ ஒருத்தரின் மலத்தை
அனைவரும் பார்க்கும்படி கை கூசாமல்
கரண்டியில் வாரும் இளைஞனின்
மலம் சுமக்கும் அனுபவத்தை
நீ அள்ளி அனுபவிக்கத் தயாரா..?
இந்த வயதில்...
இரத்தம் கசியும் வாழ்வுக்கெதிராக
உன்னையொத்தவர்கள் போராடித்
திசைகளைத் திறக்கையில்,
கண்ணை மூடிக்கொண்டு
தான் மட்டும் அனுபவிக்க
ஒதுங்குவதைவிட அருவருப்பானது
வேறு உண்டா..?
இளமையை அழகாக்கும் சமூக உணர்வை
அனுபவிக்க ஆசைப்படு..!
வா..! இணைந்துகொள்..
இந்த வயதில் போராடாமல்
நீ எந்த வயதில் போராடப் போகிறாய்..??!!
-துரை.சண்முகம், புதிய கலாச்சாரம் செப் 2007
புகைப்படம் நன்றி: மரக்காணம் பாலா
கருத்துகள்
படமும் கவிதை பேசுகிறது.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆழியூரான்.
( ஆமா இப்ப்ல்லாம் எல்லா ப்ளாக்கும் ரொம்ப சப்புன்னு இருக்கும் போல? எல்லா பயபுள்ளயும் அமைதியா இருகான்ங்ய. பொலச்சு போவட்டும்)