கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!



திரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம். பளபளக்கின்றன ஜிகினா உடைகள். ஆரம்பமாகிறது ஆட்டம். கதவடைத்து, விளக்கணைத்து, நான்கு கண்கள் மட்டுமே விழித்திருந்து நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய ஆண் பெண் உடலுறவு, ஆயிரக்கணக்கான கண்களின் முன்னால் அரங்கேறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம், உறவில் ஈடுபடுபவர்கள் உடையணிந்திருக்கிறார்கள். இதைத்தான் நாம் நாட்டுப்புற கலை என்கிறோம். கரகாட்டம் என்றும், குறவன் குறத்தி ஆட்டம் என்றும் விதவிதமாய் பெயர் வைத்திருக்கிறோம். உண்மையில் இது கலையா..? யார் வீட்டுப் பெண்களையோ மேடையேற்றி ஆபாசமாக ஆடவிட்டு ரசிப்பதுதான் தமிழ் கலாச்சாரமா..?

கிராமத்துக் கொடை விழாக்களின் இரவு நேரங்களை கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் இவர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. சராசரி பெண்கள் பேசத் தயங்கும் - ஒரு அர்த்தம் மட்டுமே கொண்ட - இரட்டை அர்த்த வசனங்களை இவர்கள், மேடைகள் தோறும் ஒலிபெருக்கிகளில் பேச வேண்டும். எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். நாவில் நீரொழுக சுற்றி அமர்ந்திருக்கும் அத்தனை ஆம்பளை நாய்களும் மனதளவில் அம்மணமாய் இருக்கின்றன என்பது ஆடுகிற அவர்களுக்குத் தெரியாதா என்ன..? ஆனாலும் வயிற்றுப்பாட்டுக்கு ஆட வேண்டியிருக்கிறது. 'வயித்துப்பாட்டுக்கு இப்படி செய்றதைவிட வேற ஏதாவது தொழில் செஞ்சுட்டுப் போயிடலாமே..?' என அவசரப்பட்டுக் கேட்டுவிட வேண்டாம். அதையும்தான் செய்ய வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் இப்படி ஆடை அணிந்து அவமானப்படுவதைவிட, ஒரு அறைக்குள் ஆடையின்றி உழைப்பது மேலானதுதான்.

ரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்ற இரண்டு பெயர்களில் நடத்தப்படும் இந்த ஆட்டங்களை நடத்த கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையாக குறவர் (நரிக்குறவர் அல்ல..) என்ற SC பிரிவுக்குள் வரும் இனத்தவர்கள் இந்த தொழிலில் இருக்கின்றனர். தஞ்சாவூரில் சௌராஸ்ட்டிரா( இவர்கள் பட்டுநூல் நெய்யும் வேலையில் பெருமளவு ஈடுபட்டிருப்பதால், வட்டார வழக்கில், 'பட்டுநூல்காரர்கள்' என்றழைக்கப்படுகிறார்கள்) இனத்தைச் சேர்ந்த சிலரும், தேவர் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலரும் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனைவருக்குமே இந்த தொழிலைப்பற்றிய கசப்புணர்வு மனதளவில் பதிந்துகிடக்கிறது.



"முன்னாடியெல்லாம் ரொம்ப பக்தியா இருப்பாங்க. நாங்க ஆடுறதுதான் ஆட்டம். ஆனா இப்ப எல்லாம் மாறிப்போச்சு. 'செக்ஸா' ஆடச்சொல்றாங்க. 'முடியாது'ன்னு வீறாப்பா சொல்ல முடியாது. நாங்க முடியாதுன்னு சொன்னா, அடுத்த ஊரு செட்டு அதைவிட செக்ஸா ஆட தயாரா இருக்காங்க. தவிரவும், எங்களுக்கு இதைவிட்டா வேற எதுவும் தொழில் தெரியாது.. ஆனா, ஆடுற எங்களை மட்டும்தான் அசிங்கமா பேசுறாங்க. அப்படி ஆடச்சொல்லிக் கேக்குறவங்களையும், நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டுப் பார்க்குறவங்களையும் யாரும் ஒண்ணும் சொல்றது கிடையாது.

அவங்க அப்படிக் கேக்கலன்னா நாங்க ஏன் ஆடப்போறோம்..? இந்த கலையை முறைப்படி எப்படி ஆடனும்னு எங்களுக்குத் தெரியும். அதுப்படி ஆடிட்டுப் போயிடுவோம். கட்டிப்பிடிச்சு, காலைத்தூக்கி ஆடனும்னு எங்களுக்கு என்ன ஆசையா..? எங்க வீட்டு ஆம்பளை, பொம்பளைக்கெல்லாம் வெட்கம், மானம் இல்லையா..? எங்களுக்கும் அப்படியெல்லாம் ஆட விருப்பம் இல்லைதான். அதனாலதான் இப்பல்லாம் எங்கப் பிள்ளைகளை எப்படியாவது பள்ளிக்கூடம் அளவுக்காவாவது படிக்கவச்சு, மில் வேலைக்கு, ஒர்க் ஷாப்புக்குன்னு அனுப்பிகிட்டிருக்கோம்.." என்கிறார்கள் சில ஆட்டக்கார நண்பர்கள்.

பார்வையாளர்களின் மன வக்கிரங்களை திருப்திபடுத்த மேடைகளில் ஆபாசமாக பேசவும், ஆடவும் வேண்டியிருப்பதால், அது இவர்களின் சொந்த வாழ்வையும் பெருமளவுக்குப் பாதிக்கிறது. உறவுகளுக்குள் உடலுறவு என்பது இங்கே கிட்டத்தட்ட தவறில்லை. சில இடங்களில் ஆட்டத்துக்குப் போகிறவர்கள், பாலியல் தொழில் செய்ய வேண்டியிருப்பதையும் நானறிவேன். வயதும், இளமையும் இருக்கிறவரைக்கும்தான் ஆட்டத்துக்கு அழைப்பார்கள் என்பதால், 45 வயதுக்கு மேல் இங்கு பெண்கள் செல்லாக்காசாகிவிடுகின்றனர். வயசு போனால், பவுசும் போய்விடுகிறது.



இரவு பத்து மணிக்கு ஆட்டத்தைத் தொடங்கினால், விடிய, விடிய ஆட வேண்டியிருக்கும். இதற்காக இவர்கள் பெரும் சம்பளம் 2,500 முதல் 3,000 ரூபாய். பெரும்பாலும், 'ரத்னா கரகாட்டக் குழு','ரூபா கரகாட்டக் குழு' என்று பெண்களின் பெயரால் அந்தந்தக் குழுக்கள் அறியப்பட்டாலும், நடப்பில் அந்தக் குழுவின் நிர்வாகியாக இருப்பது ஒரு ஆண்தான். பெண்ணை வைத்தே ஆட்டமும், வருமானமும் இருந்தாலும் அவள் அங்கு பெயரில் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறாள்.

ருடத்தின் ஆறு மாதங்கள் மட்டுமே கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன. அந்த நாட்களில் மட்டுமே வருமானம். அதைக்கொண்டுதான் மற்ற நாட்களில் சாப்பிட வேண்டும். பெரும்பாலான செட்டுக்காரர்கள் ஏதோவொரு ஏஜண்ட் கையில் சிக்கியிருக்கின்றனர். 'வருடம் இத்தனை ஆயிரம் ரூபாய்' என்று மொத்தமாக அந்த ஏஜண்ட்டிடம் காண்ட்டிராக்ட் பேசி பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் எப்போது எங்கு அழைத்தாலும் போய் ஆடிவிட்டு வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அந்த 2500,3000 ரூபாயும் கிடைக்காது. நிகழ்ச்சிக்குப் போய்வர பஸ்ஸுக்கு மட்டுமே பணம் தரப்படும்.

மேடைதோறும் ஆடி எல்லோரையும் 'சந்தோஷப்படுத்தும்' இவர்கள், வாழ்நாளில் ஒரு பொழுதும் சந்தோஷமாய் இருப்பதில்லை. நகரத்தின் குப்பைக் கூடமாய் இருக்கும் இடமே இவர்களின் வாழ்விடம். எல்லா வகையிலும் இவர்களை விட மேம்பட்ட நிலையில் இருக்கும் நாம், சிந்தனையையும், செயலையும் இவர்களுக்காகவும் கொஞ்சம் செலவிடுவோம் நண்பர்களே..!

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். //

இது கரகாட்டம் மட்டும் அல்ல பெண்களை முன்னிலைபடுத்தி ஆடும் எல்லா ஆட்டங்களுக்குமே பொருந்தும். சினிமாவில் ஜட்டி,பிராவுடன் (உள்ளாடைகளில் ஜிகினா சேர்த்து விட்டால் அது மேலாடை என்பதறிக) ஆட்டம் ஆடும் பெண்களின் அப்பட்டமன பாலியல் இயக்கங்கள் கொண்ட இந்த குத்தாட்டங்கள் சென்சாரின் அனுமதியுடனே காட்சிப்படுத்தப்படுகிறது.

வெள்ளைத் தோலுடன் சினிமாவில் ஆடினால் இருக்கும் மதிப்பு இந்த தெரு ஓர ஆட்டப் பெண்களுக்கு இருக்காது. மற்றபடி ஆட்டம் எல்லாம் ஒன்றுதான்.2000 ரூபாய்க்கு தெருவில் ஆடும் போது இருக்கும் வலி 2 இலட்சம் ரூபாய்க்கு சினிமாக்காக அதே தெருவில் ஆடினால் "நடிகை" யாக கொண்டாடப்படும்.

***
மிட்டாமிராசுகளும், ஊர்ப் பெரிசுகளும் கோவிலகளில் பெண்களை ஆடவிட்டு(தேவதாசி) பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் , சாதரணமக்கள் தெருவில் இந்த ஆட்டக்காரிகளை பார்த்துக் கொண்டு இருந்திருக்காலாம்.

வேறு வழியே இல்லாமல் இந்த தொழிலுக்கு வருவது (விருப்பம் இல்லாவிட்டாலும் வழி வழியாக திணிக்கப்படுவது ) தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு வாழ்வாதரத்தை அமைத்துக் கொள்ளும் பொருளாதார வலு வேண்டும். அதற்கு கல்வியும் அரசின் உதவியும் தேவை.

சினிமா விழாக்களில் மாண்புமிகுக்கள் முன்னால் ஆடும் ஆட்டங்களுக்கு கரகாட்டகாரர்கள் ஏன் அழைக்கப்படுவது இல்லை. கரகாட்டகாரர்களுக்கு ஏன் சினிமா ஆட்டக்காரர்கள் போல கலைமாமணி விருது கிடைப்பது இல்லை?

ஒருவேளை இவர்களும் மாண்புமிகுக்கள் முன்னால் ஆடினால சலுகைகள் கிடைக்குமோ?

**
மாடலிங்,சினிமாவும் பெண்களின் உடல் சார்ந்து இயங்கும் துறையே. ஆனால் இங்கே வருபவர்கள் புகழ் , வசதியான வாழ்க்கை வேண்டும் என்று வருகிறார்கள். அதற்கான திரைமறைவு விலைகளை கொடுக்கத் தயங்குவது இல்லை.கிராம ஆட்ட நாயகிகள் அவர்களின் அன்றாட வாழ்வாதார விசயங்களுக்காக ஆடுகிறார்கள் "வயிற்றின் வலி" மிகவும் கொடுமையானது. இரவிக்கையின் மேல் குத்தபடும் பத்து ரூபாய் நோட்டு பால் கொடுக்கும் முலையைக் குத்தினாலும்,சோத்துக்காக அழும் குழந்தைக்காக வலியைத் தாங்க வேண்டியுள்ளது.

சினிமாவில்: ஆட்டம் கொண்டாடப்பட்டு உடல் கொள்ளை போகிறது.

தெருவில்: கரகாட்டம் கேவலமாக்கப்பட்டு உடல் கொள்ளை போகிறது.


நிச்சயம் இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மனிதன் உள்ளவரை காமம் கலர் கலராக சட்டை போட்டுக்கொண்டு வரும். காமம் உள்ளவரை எல்லா வடிவத்திலும் அதை நுகர மனிதர்கள் விரும்புவார்கள்.கலை,வாழ்க்கை எதுவாக இருந்தாலும் யாவும் "காமம்" என்ற ஒரு நாரில் பின்னப்பட்ட பல மலர்கள்தான் இவை. முறைப்படுத்தப்பட்ட காமம் வாழ்க்கையாகிறது.

**
சாருக்கான சட்டையை கழட்டி அடி வயிற்றை சமீபத்தில் காண்பித்த பின்னால் அவருக்கு இரசிகைகள் பட்டாளம் கூடியுள்ளதாம். ஆணின் உடல் பெண்களாலும் இரசிக்கப்படுகிறது என்பது உபரித் தகவல்.
**
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கல்வெட்டு.. விரிவான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்..
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா,

நல்ல பதிவு.....

இதேமாதிரி நானும் ஒரு பதிவு போட்டுருந்தேன்......
Ayyanar Viswanath இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழியூரான்..

ஒரு கவிதை நினைவிருக்கா சாமி சிலைக்கு முன்னால ஆடிவரும் கரகாட்டம் பாத்து குப்பையாச்சி மனசா? எப்படியோ வரும் ..ஆனா தீம் இதான்..அங்கயும் அவள் உடல்தான்..

பலூன் மாமா சொல்வது போல நடிகைகளுக்கு நாம் தரும் அங்கீகாரம் கரகாட்டத்திற்கு தருவதில்லை..வறுமையும் விளிம்பு நிலை வாழ்வும் சங்கடத்தை தந்தாலும் உள்ளே தீப்பற்றிக் கொள்ளாதிருக்கிறதா என்ன?
/சாருக்கான சட்டையை கழட்டி அடி வயிற்றை சமீபத்தில் காண்பித்த பின்னால் அவருக்கு இரசிகைகள் பட்டாளம் கூடியுள்ளதாம்/

சல் மான் கான் னு ஒருத்தர் சட்டையே போடுவதில்ல..
அர்னால்ட்,ஸ்டாலன் இவங்களும் முண்டா பனியனோடதான் திரிவாங்க.. அழியும் உடல்தான ரசிச்சிட்டு போகட்டும் விடுங்க :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
// சல் மான் கான் னு ஒருத்தர் சட்டையே போடுவதில்ல..
அர்னால்ட்,ஸ்டாலன் இவங்களும் முண்டா பனியனோடதான் திரிவாங்க //

:-))

அய்யனார்,
சாருக்கான் இப்போதான் முதமுதலா அடி வயிற்றை காட்டுகிறார் என்கிறார்கள். அதானால்தான் அது செய்தி. :-))

// அழியும் உடல்தான ரசிச்சிட்டு போகட்டும் விடுங்க //

:-))
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆனா, ஆடுற எங்களை மட்டும்தான் அசிங்கமா பேசுறாங்க. அப்படி ஆடச்சொல்லிக் கேக்குறவங்களையும், நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டுப் பார்க்குறவங்களையும் யாரும் ஒண்ணும் சொல்றது கிடையாது.// இந்த விஷயம் மட்டும் சினிமா, கரகாட்டம், விபச்சாரம் என்று எல்லா நிலையிலும் மாறாத நிஜம்.

//2000 ரூபாய்க்கு தெருவில் ஆடும் போது இருக்கும் வலி 2 இலட்சம் ரூபாய்க்கு சினிமாக்காக அதே தெருவில் ஆடினால் "நடிகை" யாக கொண்டாடப்படும்// நிச்சயமாய் இல்லை கல்வெட்டு. 2000த்துக்கு பதில் 2 லட்சம் கிடைப்பது மட்டுமே நிஜம். ஆனால் கொண்டாடப்படுவதெல்லாம் இல்லை. தன் மேக்கப் தொழிலாளியின் சம்பளப் பணத்தை கேட்டதற்கே விபச்சாரி என்று அழைத்தது போன்ற சொல்ல மறந்த கதைகள் நிறையவே உண்டு. அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் பாத்ரூம்களில் காத்திருக்கும் கேமராக்களும் கொண்டாடும் வழிகளா என்ன? புகழ் இருப்பது என்பது வேறு. ரூபா கரகாட்டக் குழுவின் நாயகியும் அந்த சுத்துவட்டாரத்துக்குள் எல்லோருக்கும் தெரிந்தவளாகத்தானிருப்பாள். அது போலவே நாடறிந்தவர்களாய் நடிகைகள் இருக்கிறார்கள். அவ்வளவே.
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
மீண்டும் விளிம்பு நிலையில் இருப்போருக்கான ஒரு நல்ல பதிவு.

இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு சுட்டி - ஒரு பகிர்வு.

http://home.iitk.ac.in/~amman/articles/patriotism.html
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
கும்பாட்டம் என்றுதானில்லை ஆழி, திருவிழாக் கச்சேரியில் பாட வந்தவளை, ஆடல் பாடலுக்கு ஆட வந்தவளையெல்லாம் அடுத்த திருவிழா வரும் வரைக்கும் விடாமல் தூரத்தும் தெக்கத்தி மைனர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்... ஏற்கனவே இந்தக்கலை அடுத்த தலைமுறைகள் கற்றுக்கொள்ள விரும்பாமல் சாவின் முதுகில்தான் சவாரி செய்து வருகிறது... மிஞ்சி போனால் பத்து வருஷம் தாக்கு பிடிக்கலாம்... அப்புறம் தூர்தர்ஷன் வீடியோ லைபரவரியில் மட்டும்தான் வாழும் என நிணைக்கிறேன்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மனம் சங்கடப்படுகிறது...

இந்தியா என்றாலே துக்கம் மனதை அடைக்கிறது..........
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழியூரான், தஞ்சாவூர் கொடி மரத்து மூலையில் இருந்து இவர்கள் வீடு ஆரம்பம் ஆகும் ஒவ்வொரு வீட்டு முன்பும் சேது புகழ், சமுத்திரம் புகழ், அப்படி இப்படின்னு போர்டு மட்டும் அழகாக கலர் கலராக இருக்கும் ஆனா வாழ்கையும் வீடும் இருண்டுதான் கிடக்கும். மிக அருமையாக இருந்தது உங்க பதிவு!
காரூரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு,
தஞ்சை பெருங்கோயிலுள்ள‌ நிர்வாணமான ஓவியமும் கலை என்பார்கள். இது பழமை வாதமா அல்லது கலையா? ஆண்களின் பல்வீனத்தை பெண்கள் பயன் படுத்திகின்றார்களா? அல்லது பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன் படுத்துகின்றார்களா? அல்லது எளியவர்களின் பல்வீனத்தை வலியவர்கள் பயன்படுத்துகின்றார்களா? இப்படி கேள்விகள் கேள்விகளாகவே நின்று விடுகின்றன.
சுரேகா.. இவ்வாறு கூறியுள்ளார்…
கரகாட்டக்காரர்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது!
அதற்கான திட்டமும் தயார்!

தங்களுக்குத்தெரிந்து யாராவது இதற்கு முன்னால் இதுபற்றி எடுத்திருக்கிறார்களா?

தயவுசெய்து விபரம் தெரிவிக்கவும்

rsundartronics@gmail.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!