பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!பெண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள் முதலில் ஆதாமைப் படைத்தார்..? ஏவாளை முதலில் படைத்து, பின் அவளின் விலா எழும்பிலிருந்து ஆதாமை படைத்திருக்கக்கூடாதா..?' என்பதான கருத்துக்கள் கூட புதிதில்லைதான். 'ஆண்தான் முதலில்' என்ற கருத்தாக்கம் மனதெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாறுகள் அப்படித்தான் இருக்கும். அதில் வியப்பேதும் இல்லை. அந்த வரலாற்றின் வீதிகளிலிருந்து, நடைமுறை வாழ்வு வரைக்கும் பெண் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருப்பது குடும்பம் என்னும் அமைப்புதான்.

அதிகாலை தூக்கத்தின் சுகம்(?) குறித்து சிலாகிக்கும் கவிதைகள், கதைகள் நிறைய படிக்கிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆனால், 95 % பெண்கள் அதிகாலை தூக்கம் துறந்து பல தலைமுறைகளாகிவிட்டது. கிராமமென்றால் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து, வீட்டு முற்றம் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரம் விளக்கி, மாட்டுக் கொட்டகை கூட்டி, சாணம் அள்ளி எருக்குப்பையில் போட்டு, குடிக்க நல்ல தண்ணீரும், புழங்க உப்புத்தண்ணீரும் எடுத்து வைத்து, பிள்ளை மற்றும் கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து... அவள் நிமிரும்போது காலை சாப்பாட்டு நேரம் வந்து நிற்கும். அப்போதும் குடும்பத்தினரின் பசியாற்றிய பின்னரே தன் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறாள்.

நகரமென்றால் மேற்சொன்ன வேலைகளில் பெரும்பாலானவையோடு, பிள்ளைகளைப் பள்ளிக்கும், கணவனை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது. அவர்களுக்குண்டான காலை, மதிய உணவை தயார்செய்துகொடுத்துவிட்டு நிமிரும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் ஏதோ ஒன்று குடும்பத்தில் காத்திருக்கிறது. தன்னைப்பற்றி சிந்திக்க விடாமல், எப்போதும் குடும்பத்தின் நலன் நோக்கியே சிந்திக்கும் இயந்திரமாக பெண்ணை மாற்றி வைத்திருக்கிறோம்.

வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து உணவு உண்ணுகிறோம். எல்லோருக்கும் பறிமாறிவிட்டு தானும் அமர்ந்து சாப்பிடுகிறாள் அம்மா. சாப்பிட்டபிறகு தகப்பனும், மகனும் சாப்பிட்டத் தட்டை அப்படியே வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அம்மாவும், மகளும் அனைத்து எச்சில் தட்டுகளையும் எடுத்து உள்ளே வைக்கின்றனர்.

நெருங்கிய உறவினர் வீட்டுக்குக் கணவன், மனைவி இருவரும் செல்கின்றனர். சாப்பிட்டு முடித்ததும் கணவன் கை கழுவச் சென்றுவிடுகிறான். மனைவி மட்டும் தான் உண்ட இலையை/தட்டை தானே எடுக்கும்போது, அது விருந்தினர் வீட்டின் பெண்களுக்கும் இயல்பானதாகவே தெரிகிறது. ஏனெனில் அவர்கள் நாளை இன்னொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது இதையேதான் செய்வார்கள்.

கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் ஹோட்டலொன்றில் சாப்பிடுகின்றனர். அது, சாப்பிட்டவர்களே இலையையும் எடுத்துப்போட வேண்டிய வழக்கம் உள்ள ஹோட்டலாயின், மனைவிதான் அனைத்து இலைகளையும் எடுத்துப் போடுகிறாள்.

இவை அனைத்தையும் நாம் இயல்பென ஏற்றுக்கொள்கிறோம். பெண்ணையும் அப்படியே நம்ப வைத்திருக்கிறோம். இயல்பை மீறும் பெண்களை திமிர் பிடித்தவளென்கிறோம். நிலவி வரும் நியதிகளை மீறி ஒரு பெண், இயல்பான தன்னுணர்வோடு ஒரு முடிவை எடுக்கும்போது, அது குறித்து அவளைக் குற்றவுணர்வடையச் செய்யும்விதமாகவே சுற்றத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

"காலம், காலமாக பெண் சமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், ஒரு நாள் சமைக்காவிட்டாலும், 'என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இல்லையோ..' என்று குற்றவுணர்வடைகிறேன்.." என்று சமீபத்திய பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் கவிஞர் இளம்பிறை. இது நுணுக்கமானது. 'இன்னென்ன வேலைகள் பெண்ணுக்கானவை. அதை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் நான் குற்றம் செய்தவளாகிறேன்..' என்று பெண்ணையே உணர வைப்பதில்தான் சூது ஒழிந்திருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவும் பெண்களையே பழக்கி வைத்திருக்கிறோம். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் ஆண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பெண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதி போதனை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பத்து, பன்னிரண்டு வயதில் ஆண் பிள்ளைகள் கவலைகளற்று விளையாடும்போது, பெண் பிள்ளைகள், சின்னச்சின்ன வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுகின்றனர். உடையணிவது, உண்ணுவது, எத்தனை இஞ்ச் காலை அகற்றிவைத்து நடப்பது, எப்படி உட்காருவது, என்ன விதமாக அழுவது, எந்த டெஸிபலில் சிரிப்பது... என்று அனைத்துக்கும் பெண்ணுக்கென்று தனியான முன் தீர்மானங்களை வைத்திருக்கிறது குடும்பம். அவள் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பதை தீர்மானிப்பதும் குடும்பம்தான். நஞ்சை, புஞ்சை என்பவை எப்படி அசையா சொத்துக்களோ, அதுபோல பெண் என்பவள் குடும்பத்தின் அசையும் சொத்து.. அவ்வளவே. ஆனாலும், அன்பு, பாசம், கருணை, கடமை, பொறுப்பு என்ற சர்க்கரை கயிறுகளால் பெண்ணை, குடும்பத்தோடு பலமாக இறுக்கி வைத்திருக்கிறோம்.

து காதலின் காலமென்று சிலாகிக்கிறோம். இருந்தாலும் இந்திய சமூகத்தில் பெற்றோர் பார்த்து வைக்கும் ஏற்பாட்டு திருமணங்களே இன்றளவும் அதிகம் நடக்கின்றன. அத்தகையை ஏற்பாட்டுத் திருமணங்களில், தனக்கு வரப்போகும் மனைவி எப்படிப்பட்ட புற/அக அழகுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஆண்தான். இதை, பெண்ணின் தரப்பில் அவளது பெற்றோரே தீர்மானிக்கின்றனர். திருமண விஷயத்தில், ஆணை விட பெண் உயரம் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் கிட்டத்தட்ட எல்லோருமே உறுதியாக இருக்கின்றனர். மனைவி உயரமாகவும், கணவன் குள்ளமாகவும் உள்ள தம்பதிகளை நான் வெகு அரிதாகவேப் பார்த்திருக்கிறேன். காதலில் கூட இந்த உயரம் ஒரு காரணியாக இருக்கிறது. ஆண், பெண் பேதத்தின் ஆதி சாட்சியாக இதைச் சொல்லலாம்.

இந்த பேதம் உயரத்தோடு மட்டும் நிற்பதில்லை... மணமகனை விட மணமகள் ஒரு படியேனும் குறைவாகப் படித்திருக்க வேண்டும், அவனை விட அவள் நூறு ரூபாயேனும் குறைவான சம்பளம் வாங்க வேண்டும், அவனது வயது அவளது வயதை விட இரண்டு, மூன்று வயதாவது அதிகமாக இருக்க வேண்டும்... என்றெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகள் நீள்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எந்த கணவனும் வேலைக்குப் போகாமல் இருப்பதில்லை.

மண வீடுகளில் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் நிறைய கேள்விகள் எனக்குள் துடிக்கும். அந்தப்பெண் இதுவரை, தான் வளர்ந்த வீட்டை, பழகிய உறவை, சொந்தங்களை, நண்பர்களை, ஓடித்திரிந்த மண்ணை, மாற்றிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இனி அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் இல்லை.. கணவன்தான். ஒரு நாள் இடம்மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை. எனில் காலமெல்லாம் தன் அனைத்து அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு வாழப்போகும் அந்தப்பெண்ணின் மனநிலை என்ன...? எங்கேயோ, எப்போதோ 'வீட்டோடு மாப்பிள்ளைகளாகும் ஒரு சிலரை ஏளனப்பார்வை பார்க்கிறோம். வீட்டோடு மாப்பிள்ளையானால் ஏற்படும் சங்கடங்களை 'தலைகீழ் விகித'மாக்குகிறோம். 'சொல்ல மறந்த கதை' என்கிறோம். ஆனால், 'வீட்டோடு மருமகள்'களின் சங்கடங்களை நாம் ஒருபோதும் யோசித்ததில்லை. அந்த வார்த்தை பிரயோகமே நமக்கு புதியதாக இருக்கிறது.ப்போதிருக்கிற நமது குடும்ப அமைப்பு பெண்ணின் சித்ரவதைக்கூடமாக இருக்கிறது. சொல்லாலும், செயலாலும், கருத்தாலும் எல்லா கணப்பொழுதிலும் அவள் மீது வன்கொடுமை ஏவப்படுகிறது. அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் குடும்பத்திற்குள்ளிருந்துதான் பெண்ணுரிமை குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும். இதன் பொருள் குடும்பம் என்னும் அமைப்பை உடைப்பது அல்ல. அது வலுவான செண்டிமெண்ட் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டிருக்கும் நிறுவனம். அதை உடைப்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் இல்லை. தவிரவும், கூடி வாழ்தலின் மிச்சமாக மனித சமூகத்தில் எஞ்சி நிற்கும் ஒரு சில அடையாளங்களில் குடும்பமும் ஒன்று. அது மறு சீரமைக்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள குடும்பமே நமக்குத் தேவையானது.

மேற்சொன்னவையெல்லாம் குடும்பத்திற்குள் நடப்பது. சமூக வீதிகளில் மட்டும் பெண்கள் உரிமைகளோடு இருக்கிறார்களா என்ன..? உரிமைகளை விடுங்கள்.. குறைந்தபட்ச சுதந்திரமாவது இருக்கிறதா..? இரவு பத்து மணிக்கு ஒரு பெண் சாலையில் தனித்து நடந்துபோனாள் நல்ல எண்ணத்தோடு பார்ப்பவர்கள் குறைவு. செல்போனில் சத்தமாக சிரித்துப் பேசினாள் சில புதிய பட்டங்கள் அவளைத் தேடிவரும். சாலையில் நடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் குறைந்தபட்சம் இரண்டு கண்களாவது உற்றுப் பார்க்கின்றன. எந்த ஒரு பொது இடத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு பெண் காத்திருப்பதன் சங்கடங்களை பெண்கள் நன்றாக அறிவார்கள். ஒரு இளம்பெண், தனியாகவோ, தோழிகளோடோ டீ கடைக்குச் சென்று டீ குடிப்பது இயல்பென ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எல்லா இடங்களிலும் ஆணின் சார்பு பிராணியாகவே பெண்ணை வைத்திருக்கிறோம்.

இன்னமும் பத்திரிகைகளில் ஆண் சமைப்பதென்பது நகைச்சுவையாகவே வருகிறது. எப்போதும் 'அழகி'கள் மட்டுமே பிடிபடுகிறார்கள். 'அழகன்'கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளாக பெண்ணுரிமை பேசுபவர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் 'மூளை வீங்கிகள்' என்று ஏளனம் செய்யப்படுகின்றனர். 'ஒரு பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும்..' என்று இப்போதும் சினிமா நாயகர்கள் உபதேசம் செய்கிறார்கள். "பொம்பளை உனக்கே இவ்வளவு இருக்குன்னா.. ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்..?" என்ற திமிர் வார்த்தைகளை ஏறத்தாள எல்லாப் பெண்களுமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கேட்க நேர்ந்திருக்கும். ஆம்பளை என்பதால் அவனுக்கு உடம்பில் உபரியாக என்ன இருக்கப்போகிறது - சில உறுப்புகளைத் தவிர..? இந்த வார்த்தை சவடால் ஆண்களின் ஜீன்களில் ஊறியிருக்கிறது.

குடும்பம், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தன் உரிமைகளை உரத்தக் குரலில் கேட்கும் பெண்களை அடக்கிப் போடுவதற்கு ஆண்கள் எடுக்கும் ஆயுதம் ஒழுக்கம். பெண்ணின் ஒழுக்கத்தால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்பதுபோலவும், பெண்ணின் ஒழுக்கம் கெட்டால் சகலமும் கெட்டுவிட்டதாகவும் இவர்கள் அடிக்கும் கொட்டம் மிகுந்த ஆபாசமாக இருக்கிறது. பெண்கள், எத்தனை ஆண்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சுற்றமே தீர்மானிக்கிறது. ஒரு ஆண், காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டால், அடுத்தடுத்து காதலிக்கலாம்.. தப்பில்லை.. அது இயல்பானது. அதையே ஒரு பெண் செய்தால், அவளுக்கு பெயர் வேறு. (தான் காதலித்த பெண்களுக்கெல்லாம் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் 'ஆட்டோகிராஃப்' சேரனின் கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை கற்பனை செய்து பார்க்கச்சொல்லி முன்பொருமுறை ஞாநி எழுதியிருந்த கட்டுரை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது).

இந்த சமூகத்தின் சகல ஒழுக்க விதிகளும், பெண்ணின் தொடையிடுக்கில் ஒழித்து வைக்கப்பட்டிருப்பதாக, முன்பொருமுறை பூங்குழலி சொன்னது மிகச்சரியானது. இளம்பிராயத்திலிருந்து அவ்விதமே பெண் பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர். ஒரு பெண், தான் ஒழுக்கமுள்ளவள் என்று சுற்றத்திற்கு பறைசாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். "பொம்பளைப்பிள்ள கண்டமேனிக்கு டிரஸ் பண்ணிட்டுப்போறது.. அப்புறம் 'அவன் கிண்டல் பண்றான், இவன் கையைப் பிடிச்சு இழுக்குறான்'னு சொல்றது.." என்ற பொதுப்புத்தியின் வார்த்தைகள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. ஒழுக்கம், பெண்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறதா என்ன..? ஆண்களுக்கு உறுப்புகளே இல்லையா..? சமயத்தில் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற எரிச்சலான கேள்வியும் வருகிறது. 'சமூகம் என்பது மனித இனத்தின் கூட்டுத் தொகுப்பு. கூட்டு வாழ்க்கைக்கென்று ஒரு வாழ்வியல் நெறி இருக்கிறது..' என்ற பதில் வருமாயின் அந்த நெறி ஆண்களைக் கட்டுப்படுத்தாதா..?

பெண்ணை ஒடுக்குவதில் மதங்களின் பங்கு மகத்தானது. '1,800 ஆண்டுகளுக்கு முன்பே குர்-ஆனில் பெண்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன..' என்று இஸ்லாமிய சகோதரர்கள் பெருமைப்பேச்சு பேசுகின்றனர். ஆனால், உயிரற்ற பிணத்தை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கும் அவர்கள், பெண்ணை அனுமதிப்பதில்லை. வழிபாட்டு உரிமைக்கூட பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது. அதே குர்-ஆனில்தான் மணப்பெண்ணுக்கு, மணமகன் மஹர்(வரதட்சணை) கொடுத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன..? பெயருக்கு 1,000 ரூபாய், 2,000 ரூபாய் பெண்ணுக்கு மஹராகக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டாராரிடமிருந்து அதிக அளவுக்கு வரதட்சனை வாங்குகின்றனர்.

திருமணம் நடந்தபோது உடனிருந்த பெரியவர்களின் முன்னிலையில்,சீரான இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும். இதைத்தான் முத்தலாக் என்கிறது குர்-ஆன். ஆனால், நடைமுறையில் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் சொன்னால் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டதாக அர்த்தம். இப்படித்தான் நடக்கிறது.

இந்து மதம், பெண்ணுரிமை மறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் ஒழுக்கக்கேடானவர்கள்' என்று கருத்துச் சொல்கிறார் இந்து மத மடாலயமொன்றின் தலைவர் இருள்நீக்கி சுப்ரமணி. எல்லாப் புராணங்களிலும் பெண்கள், ஆண்களின் அடிமைகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இப்போது கூட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை விடுவது குறித்தான சர்ச்சைகள் கேரளாவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

'கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச் சுவர் (glass-ceiling ) ஒன்று பெண்ணைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் மேலே செல்லும்போதுதான் அது தலையில் இடிக்கும். அப்போதுதான் சுவர் இருப்பதையும் உணர முடியும்' என்று ஒரு தியரி சொல்வார்கள். ஆனால் நம் ஊரில் பெண்களுக்கு எதிராக கண்ணுக்கு தெரிந்தே கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றை கண்ணாடிச் சுவர் போன்று மென்மையானவையாக பெண்களை உணர வைத்துக்கொண்டிருக்கிறோம்.

குடும்பம், சமூகம், மதம் என்று பெண்ணை அடக்குவதில் மட்டும் எல்லோரும் ஒரே விதமாகத்தான் உள்ளனர். ச. தமிழ்செல்வன் சொல்வதைப்போல, 'குடும்பம் என்னும் பலிபீடத்தில் காலங்காலமாக தன்னை விருப்பத்தோடு பலி கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் பெண்'. இதை மாற்றுவதற்கான குறைந்தபட்ச எண்ணத்தை மனதுக்குள் உருவாக்கி, அதை தனது குடும்பத்திற்குள் மட்டுமாவது செயல்படுத்திப் பார்க்காத வரைக்கும் நாம் அனைவரும் குற்றவாளிகள்தான். தீங்கிழைப்பது மட்டுமல்ல.. அதை வேடிக்கை பார்ப்பதும் குற்றம்தானே..!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பப்பா. சரியான சரவெடிப்பதிவு.

ஒரே பதிவினுள் எத்தனை விஷயங்களைத் துவைத்துக் காயப்போட்டுப் போய் இருக்கிறீர்கள்.

ஆழியூரான் நீங்கள் சொன்னதுடன் 100% ஒத்துப் போகிறேன்.

(மேற்கோள் காட்டிப் பாராட்ட வேண்டும் என்றுதான் நினைத்தேன். இன்னொரு முறை முழுப் பதிவையுமே மேற்கோள் காட்ட வேண்டுமே என்று விட்டு விட்டேன்.)

அடிச்சு நொறுக்குங்க. பின்னூட்டங்களைப் பொறுத்து பின்னால சேர்ந்துக் கொள்கிறேன்.
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான சாட்டையடி இடுகை, முழுவதும் அலசி எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் !
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி,

உங்களைப் பற்றிய அறிமுகத்தில் ரொம்பவே தன்னடக்கமா எழுதியிருக்கீங்க :)

பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் வருகிறேன். நட்சத்திர வாழ்த்துக்கள்.
முத்துகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயமாக நாம் அனைவரும்ம் குற்றவாளிகளே!

பெண்கள் அடிமையாயிருத்தலையே பெருமை என்றாக்கி வைத்திருப்பதுதான் ஆணின் அதிகார வெற்றி. அந்த அடிமைத் தனத்தை அன்பென்றும், தியாகமென்றும், பெண்களின் பிரத்யோகாமான சிறந்த குணம் என்றும் பல்வேறு வண்ணப்பூச்சுகள் வேறு. பெண் சிந்திப்பதே சமீப காலங்களில்தான் அங்கொன்றூம் இங்கொன்றுமாக அங்கீகரிக்கப்படுகிறது. பெண் அடிமைத்தனத்தில் அனைத்து மதங்களும், அனைத்து சமூகங்களும் ஓரணியிலே நிற்கின்றன.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.

ஆனால் இதற்கு தீர்வுதான் என்ன?
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
இன்று உலகத்தில் உள்ள மூன்று அல்லது நான்கு முக்கிய மதங்களிலும் ஆணாதிக்க கடவுள்களே உருவாக்கப்பட்டு உலாவுகின்றனர்.

அனைத்து கேடுகளுக்கும் இதுவே மூள காரணம்.

பெண்களுக்கு தக்க உரிமைகளையும் சுதந்திரத்தையும் கொடுக்காத சமூகங்கள் அழிவை நோக்கி செல்வது நிச்சயமே.

இன்றைய அபாயகரமான உலக சூழல்களை சற்று உற்றுக் கவனித்தால் போதும். இதன் உண்மைகள் நன்கு விளங்கும்.

மேலும் கலை, ஊடகம் என்கிற பெயரில் இவர்கள் இன்றைக்கு வெறும் ஒரு காட்சிப் பொருளாகவே மாற்றப்பட்டு வருகின்றனர்.

பெண்களில் எப்போது ஒரு பெரியார் தோன்றுவாரோ?

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆழியூரான்.
முத்துலெட்சுமி/muthuletchumi இவ்வாறு கூறியுள்ளார்…
ம் .. முன்பே சில பின்னூட்டங்களில் உங்களின் இந்த கருத்துக்களின் சில குறிப்புக்களை கண்டிருக்கிறேன்..இங்கே மிக விரிவாய்.

நன்றி என்று சொல்லத்தோன்றுகிறது. காலம்மாறட்டும் உங்களின் ஆசைப்படி.
வரவனையான் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா !

முதல் பதிவே ஆழ்ந்த கருத்துகளுடன் துவங்கியிருக்கிறீகள் . கலக்குங்க
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி..

ஆனாலும் நான் இங்கு எழுதியிருப்பது முழுமையானதாக இருக்க முடியாது. அந்த வலி உணர்ந்தவர்களால் மட்டுமே அதை வீச்சுடன் சொல்ல முடியும். நான் பார்வையாளனாக இருந்து இதை எழுதியிருக்கிறேன். இது அனுதாபமாக மாறும் அபாயமும் உள்ளது.
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். பதிவு அருமை. விரிவானதொரு பின்னூட்டத்தை விரைவில் இடுகிறேன்.
Hariharan # 03985177737685368452 இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

குடும்ப அமைப்பின் உள்ளே பெண்ணுரிமை இல்லை எனும் நிலைக்கு ஆண்களைவிடவும் / ஆண்களையொத்த அளவிற்கு பெண்களே பிரதான காரணமாக இருக்கிறார்கள்.

குற்றம் செய்தவரைவிட குற்றம் செய்யத் தூண்டுபவன் தண்டிக்கப்பட வேண்டியவர் என்கிற வகையில் குடும்ப அளவில் பெண்ணுரிமைக்கு,
மாமியார்-மருமகள்-மாமியாரின் மகள்(சகோதரி) எனும் இந்தப் பெண்களுக்கு இடையிலான பூசல்-பாகுபாடு தீர்ந்தால் குடும்ப அமைப்பில் பெண்ணுரிமை பெருமளவுக்கு வந்துவிடும்.

குடும்ப அளவில் பெண்ணுரிமைக்குத் தடைக்கான காரணிகளைத் தன்வசம் வைத்திருப்பதில் ஆண்களைவிடவும் பெண்களே!

அரசியல் பொதுவாழ்வில் சோனியா காந்திகிட்ட பம்புகிற மன்மோகன் சிங்குகளாக, சோனியாகாந்தி சொன்னா பிரதிபா பாட்டீலை முதல் பெண் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் சமூகமாக, அம்மா காலில் விழும் மந்திரிகளாகன்னு பெண்களிடம் முடிவெடுக்கும் சர்வ வல்லமையையும்,அதிகார உரிமையையும் ஆண்கள் தந்திருப்பதும், ஆண்-பெண் பேதம் குறைந்த மேற்கத்திய அமெரிக்காவிலேயே தரப்படாத பெண்ணுரிமை இந்தியாவிலேதான் நடந்திருக்கிறது.
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய கட்டுரை. இன்றைய தேதியில் இருபத்தைந்து சதவீதம் கூடப் பொருந்தி வருமா என்பது சந்தேகம். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தொடுகிறேன். (தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா என்று தெரியவில்லை). பெண்கள் திருமணம் ஆனதும் தங்கள் பிறந்த வீட்டினை விட்டு etc., வரிகள் வாழ்வியலை நீங்கள் இன்னும் கூர்ந்து நோக்கவில்லை என்று காட்டுகின்றன. காலகாலமாய் பெண் வீட்டாருடன் சிநேகமாக (அதற்கான விலையாக தன் பெற்றோரையும் உடன்பிறப்புகளையும் கூட ஒதுக்க வேண்டி இருந்தால் அதையும் தந்து) இருக்கும் கணவர்களின் வீடுகள் தான் சந்தோஷம் கொண்டாடும் இல்லங்களாக இருந்து வந்திருக்கின்றன. இன்றும். தன்னுடைய கணவனுக்காக, தன்னுடைய குழந்தைக்காக என்று பெண் செய்வதை எல்லாம் ஏன் தியாக முத்திரையோடு சிலாகிக்கிறீர்கள் என்று புரியவில்லை. ஆண் மட்டும் வேலை வெட்டி என்று அலைவதும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதும் ஊர்ப் பிள்ளைகளுக்காகவா? நான் சம்பாதிக்கிறேன்; சமையல் தெரியும்; ஒரு நல்ல HOUSE HUSBAND ஆக இருக்கத் தயார் என்று சொல்லும் ஆண்மகனை மணம் முடிக்கத் தயாராக உள்ள பெண்களைக் காட்டுங்கள் பார்க்கலாம். ஒரு சந்தேகம்; இது நையாண்டிக் கட்டுரை இல்லையே?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ஹரிஹரன்.. உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவை அல்ல. ஆனாலும் நாமிருவரும் உறுதியான முன் முடிவுகளுடன் இருப்பதால் விவாதம் செய்வது வீண் என்றே தோன்றுகிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ரத்னேஷ்.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றுசொல்லி, உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதைத்தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

ஆனால், //தன்னுடைய கணவனுக்காக, தன்னுடைய குழந்தைக்காக என்று பெண் செய்வதை எல்லாம் ஏன் தியாக முத்திரையோடு சிலாகிக்கிறீர்கள் என்று புரியவில்லை// என்ற உங்கள் வார்த்தைகள், இதே தொனியில் இந்தக் கட்டுரைக்குள்ளும் இருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
ரத்னேஷ்,
//எங்கேயோ, எப்போதோ 'வீட்டோடு மாப்பிள்ளைகளாகும் ஒரு சிலரை ஏளனப்பார்வை பார்க்கிறோம். வீட்டோடு மாப்பிள்ளையானால் ஏற்படும் சங்கடங்களை 'தலைகீழ் விகித'மாக்குகிறோம். 'சொல்ல மறந்த கதை' என்கிறோம். ஆனால், 'வீட்டோடு மருமகள்'களின் சங்கடங்களை நாம் ஒருபோதும் யோசித்ததில்லை. அந்த வார்த்தை பிரயோகமே நமக்கு புதியதாக இருக்கிறது.//
இந்த வரிகளை படித்து விட்டும்
//நான் சம்பாதிக்கிறேன்; சமையல் தெரியும்; ஒரு நல்ல House Husbandஆக இருக்கத் தயார் என்று சொல்லும் ஆண்மகனை மணம் முடிக்கத் தயாராக உள்ள பெண்களைக் காட்டுங்கள் பார்க்கலாம். //
என்று கேட்கும் உங்களிடம் கேட்க எனக்கும் ஒரு சந்தேகம் - செலக்டிவ் அம்னீசியா மாதிரி ஒரு கட்டுரைல செலக்டிவ்வா ஒரு சில வரிகளை மட்டும் படிக்கறதுக்கு எதுனா பேர் இருக்கா?
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
மேடம், இன்னொருவரின் நட்சத்திர இடுகையில் நாம் இருவரும் க்ராஸ்டாக் செய்வது சரியா என்று தெரியவில்லை. மன்னியுங்கள் ஆழியூரான் சார். மேடம், தாங்கள் மேற்கோளிட்டிருக்கும் "சொல்ல மறந்த கதை"யிலும் நான் சொன்னது போல் பெண் வீட்டாருடன் ஒத்துப் போக முடியாத ஆண் தான் நிம்மதி இழக்கிறான். "வீட்டோடு மருமகள் சங்கடம்" என்று ஒன்றே சமூகத்தில் இருப்பதில்லையே; ஆண் வீட்டாருடன் ஒத்துப் போக முடியவில்லை என்றால் பெண் வீட்டினை இரண்டு படுத்தி விடுகிறாள் என்பது தானே நிஜம். இது சரியா தவறா என்கிற கோணத்திற்குள் நான் போகவே இல்லை. நடைமுறையை சித்தரிக்கிறேன். அவ்வளவு தான். சமூகத்தில் பலவிதங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாற்றங்கள் வந்து விட்டன; அவை தொடரவும் செய்யும். பிரச்னையை தம் கோணத்தில் முடித்துக் கொள்ளும் வித்தையில் பெண்கள் குறிப்பாக இந்தக் காலத்துப் பெண்கள் கில்லாடிகள். சமூகவியல் உண்மை இது. நன்றி ஆழியூரான் சார்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nanbare..!
Sorry for writing in English.

' Islam does not allow women in Masjid' - Not true.

Islam allows women according to the Quran and Prophet's tradition but Muslims are not allowing due to various social reasons. So, Muslims are to be accused and Not Islam.

Same as in the case of Dowry.
However, Fast progressive changes are in Islamic Soceity happens as they are nearing Quran. Many Muslim youths return the Dowry after they felt that is unislamic and such things happened only in Muslim Soceity.

I agree that Women are suppressed by men in all soceities is True. However, there are some exceptional cases also to be considered, as Feminists are also mistaking in several matters.
PPattian இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. காலையில் ஒரே நேரத்தில் எழுந்து காலை வேலைகளை பகிர்ந்து (குழந்தைகள் வேலை உட்பட) ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் தம்பதிகளை இப்போது வெகுவாக பார்க்க முடிகிறது. சமையல் சாப்பாடு எல்லாம் முடிந்து பாத்திரங்களை ஒருவர் தேய்க்க ஒருவர் கழுவுவதும் பார்க்க முடிகிறது... (இது இந்தியாவிலதாங்க!!!) ஆனாலும் இது போன்ற எண்ணங்கள் இன்னும் தேவைப்படுகிறது..
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
சார், அந்த சொல்ல மறந்த கதையிலும் கடைசியில் அந்த ஆண் அந்த பெண்ணின் குடும்பத்தை துண்டாக்கி அந்தப் பெண்ணை தனியாகத்தான் அழைத்துச் செல்லுகிறான். ஆனால் அந்த முடிவு எப்படி பார்க்கப் படுகிறது - ஒரு ஆண் தன் சுயகௌரவத்தை காப்பதற்காகச் செய்யப்படும் வீரச்செயலது. ஆனால் அதே காரியத்தைப் பெண் செய்தால் அது எப்படி பார்க்கப் படுமென்பதைத்தான் நீங்களே சொல்லி விட்டீர்களே - குடும்பத்தைத் துண்டாக்கும் நாச வேலை. அதுதான் வித்தியாசம்.

அப்புறம் க்ராஸ்டாக் பற்றி சொன்னீர்கள் இல்லையா, வலைப்பதிவின் பெரிய பலமே பின்னூட்டம் மூலம் நடத்தப்படும் விவாதங்கள்தான். நானறிந்தவரை ஆழியூரானும் ஆரோக்கியமான விவாதங்களை ஆதரிப்பவரே. ஒரு வேளை விவாதம் பதிவை திசை திருப்புவதாகாக் கருதினால், அவரே தேவையான இடத்தில் பின்னூட்டங்களை அனுமதிக்காது நிறுத்திவிடலாம். எனவே அது பற்றிய கவலையேதும் எனக்கில்லை :)

நண்பர் PPattian குறிப்பிட்டது போன்ற சில விஷயங்கள் நடைமுறையில் நடக்க ஆரம்பித்திருப்பது என்னவோ உண்மைதான். அது இன்றைய பொருளாதாரச் சூழலில் தம்பதியர் இருவரும் வேலைக்குப் போவது கட்டாயமாகி வருவதன் விளைவு - காரணம் என்னவாயிருப்பினும் மாற்றம் வரவேற்க்கப்பட வேண்டியதே. அதிலும் கூட இன்னும் சில பல உப நிபந்தனைகள், கட்டுப்பாடுகளெல்லாம் உண்டு. ஆனால் அதையெல்லாம் இங்கே விவரிக்கப் போனால் அதுவே ஒரு கட்டுரையளவு விரிந்துவிடும் அபாயமிருப்பதால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் நட்சத்திர வாழ்த்துகள்.
உங்கள் பதிவை நான் என்று நினைவில் வைத்துக் கொள்வது... இந்த வரிகளைவைத்துத்தான்!
//விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதுவே நம் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்..!//
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த தடைகளை உடைத்தெரிய பெண்களை பழக்கப் படுத்துதல் இன்றியமையாதது. முதல் படியாக அவர்களை மாற்றுக்கருத்துக்களுக்கு உட்படுத்துதல் வேண்டும். எல்லாம் தலைவிதி என்று நினைக்கும் மனப்பான்மையை விட்டொழிக்க அறிவியல் முறையில் அவர்கள் சிந்திக்க வழி செய்ய வேண்டும். எதனை அவர்களின் மனதில் பதிக்க வேண்டிய தருணம் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவமே!
Jazeela இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கட்டுரை. இப்படி ஒரு கட்டுரையை ஒரு ஆண் எழுதியதில் ரொம்ப மகிழ்ச்சி. மொத்தமாக நல்லா இருந்தாலும், நிறைய விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும், சில கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

//இந்த பேதம் உயரத்தோடு மட்டும் நிற்பதில்லை... மணமகனை விட மணமகள் ஒரு படியேனும் குறைவாகப் படித்திருக்க வேண்டும், அவனை விட அவள் நூறு ரூபாயேனும் குறைவான சம்பளம் வாங்க வேண்டும், அவனது வயது அவளது வயதை விட இரண்டு, மூன்று வயதாவது அதிகமாக இருக்க வேண்டும்... என்றெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகள் நீள்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எந்த கணவனும் வேலைக்குப் போகாமல் இருப்பதில்லை.// இந்த விஷயமெல்லாம் மலையேறிப் போச்சு. யாரைவிட யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று முக்கியமல்ல திருமணத்திற்கு பிறகு உன்னால் என் வீட்டுக்கு எவ்வளவு வருமானம் என்ற கணக்கீடு பட்டியல் நீள்கிறது..

//இனி அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் இல்லை.. கணவன்தான்.// அவளுக்கென்று அடையாளம் அவளேதான். இவ்வளவு எழுதிய நீங்களும் அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் திருமணத்திற்கு பிறகு கணவன் என்கிறீர்களே? அவரவர்களுக்கென்று ஒரு தனித்தன்மையும், முகவரியும் உண்டு, நாங்கள் யாரையும் எந்த காலக்கட்டத்திலும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை.

//உயிரற்ற பிணத்தை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கும் அவர்கள், பெண்ணை அனுமதிப்பதில்லை. வழிபாட்டு உரிமைக்கூட பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது.// அப்படியல்ல, சில பள்ளி வாசல்களில் பெண்களுக்கென்று இடமும் உண்டுதான். பள்ளிவாசலுக்கு பெண்களும் வந்துவிட்டால் வழிபாடுதளத்திலும் வக்கிர புத்தி வந்து விடக் கூடாது என்பதற்கான ஏற்பாடு அது. அதனால் பெண்கள் வீட்டிலேயே தொழுதுக் கொள்வோம்.

//அதே குர்-ஆனில்தான் மணப்பெண்ணுக்கு, மணமகன் மஹர்(வரதட்சணை) கொடுத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன..? // நம் நாட்டிலும் சில ஆசிய நாடுகளிலும் தான் அப்படி. நான் வாழ்வது அமீரகத்தில் இங்கு பெண்களுக்குத்தான் மஹர் தந்து முடிக்க வேண்டிய சூழலில் ஆண்கள் இருப்பதால் ஆண்கள் இந்தியா வந்து இலவசமாக ஹைத்ராபாத்திகளை திருமணம் செய்துக் கொள்கிறார்கள் :-)
//ஆனால், நடைமுறையில் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் சொன்னால் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டதாக அர்த்தம். இப்படித்தான் நடக்கிறது.// மார்கத்தை பற்றி சரியாக தெரியாதவர்கள் அப்படி செய்கிறார்கள் இதற்காக ஒட்டுமொத்தமாக நடைமுறையில் அவ்வாறு நடக்கிறது என்று சுட்டிக்காட்டுவது தவறு.
---
ஹரிஹரன் ஒரு சிலரை மட்டும்தானே சுட்டிக்காட்ட முடிகிறது? சதவீத அடிப்படையில் ஆண் ஆதிக்கம் உலகம் முழுவதும் இருக்கத்தானே செய்கிறது?
---
ரத்னேஷுக்கு சொல்ல வேண்டியதை தோழி லஷ்மி சொல்லியாச்சு :-)
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள். நல்ல பதிவு. குறிப்பான பிரச்சனைகளை பேசி கட்டுரையை கச்சிதமாக எழுதியுள்ளீர்கள்.
//'இன்னென்ன வேலைகள் பெண்ணுக்கானவை. அதை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் நான் குற்றம் செய்தவளாகிறேன்..' என்று பெண்ணையே உணர வைப்பதில்தான் சூது ஒழிந்திருக்கிறது//

அருமை.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெஸிலா.. உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
சம்பாதிக்கும் நிலையில் மாற்றம் வருவது உண்மையே. ஆனாலும் இப்போதும் அப்படியானவர்களின் சதவிகிதம் குறைவுதான். நான் பேச எடுத்துக்கொண்டிருப்பது பெரும்பான்மை பற்றிதான்.

//இவ்வளவு எழுதிய நீங்களும் அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் திருமணத்திற்கு பிறகு கணவன் என்கிறீர்களே? அவரவர்களுக்கென்று ஒரு தனித்தன்மையும், முகவரியும் உண்டு, நாங்கள் யாரையும் எந்த காலக்கட்டத்திலும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை//.

மிகச்சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். என்னதான் முகமூடிபோட்டுக்கொண்டு எழுதினாலும் நூற்றாண்டுகளாக ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இது. மன்னிப்புக் கோருகிறேன்.

//பள்ளிவாசலுக்கு பெண்களும் வந்துவிட்டால் வழிபாடுதளத்திலும் வக்கிர புத்தி வந்து விடக் கூடாது என்பதற்கான ஏற்பாடு அது. அதனால் பெண்கள் வீட்டிலேயே தொழுதுக் கொள்வோம்.//

மிக, மிக மத அடிப்படைவாத வரிகள் இவை. பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் யாருக்கு வக்கிரபுத்தி வரும்..? 'ஆண்களுக்கு' எனில், அது யார் தவறு..? அதே பெண்களை சாலையில் பார்த்தால் வக்கிரபுத்தி வராதா..? இந்தக் கேள்விக்கு, 'பள்ளிவாசல் புனிதமான இடம்.. அதனால்தான் இப்படி..' என்று நண்பர்கள் பலர் பதில் சொல்கின்றனர். எனில் பள்ளிவாசலுக்கு வெளியே வக்கிரம் சரியானதா என்ன..?

காம உணர்வைதான் வக்கிரம் என்று குறிப்பிடுவதாக எடுத்துக்கொண்டால், ஆண், பெண் இருபாலருக்கும் அது பொதுவானதுதானே..

பெண்களை பள்ளிவாசலுக்குள் தொழ செய்துவிட்டு, ஆண்கள் வீட்டிலிருந்தே தொழுதால் என்ன..?

ஜெஸிலா.. நிச்சயம் நான் மார்க்கத்தைப்பற்றி தவறாக சொல்லவில்லை. மார்க்கத்தில் சொல்லப்பட்டிருப்பதை பின்பற்றாமல், ஆணாதிக்க சிந்தனைகள் ஆக்கிரமித்திருப்பதைதான் சுட்டிக்காட்டுகிறேன்.
டி.அருள் எழிலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு முன் பின் என இரு வேறு உலகங்கள் உண்டு.அதில் இந்த இரண்டுமே ஆண்களின் களம்தான்..ஆனால் இந்த இரண்டுக்கும் வேறு பாடு உண்டு....ஒன்று குழந்தை என்கிற ஒரு பாசமான செல்லமான அடிமை ஒருத்தியின் பால் கொண்ட அன்பு...இன்னொன்றூ தனக்கு அடிமை செய்ய உரிமையாக கிடைத்த உயிருள்ள பொருள் என்று....இந்த இரண்டிலுமே அஸ்திவாரமாக அமைவது குடும்பம் என்கிற நிறுவனம்தான்...அது பெண்ணை அடிமையாக பேணுவதோடு தலைமுறை தலைமுறையாக சொத்து உரிமையை பேணுகிறது.ஆண் சொத்து உரிமையை பேணுகிறது....சொத்து குடும்பத்தை சாதியை தாண்டி செல்ல அது ஒரு போதும் அனுமதிப்பதில்லை ஆகவே நீங்கள் குடும்பத்தை ஒரு போதும் ஜனநாயக அமைப்பாக மாற்ற முடியாது ஆண் தலைமை ஒழிந்த சாதி ஒழிந்த பெண் தலைமையுடன் குடும்பமிருந்தால் ஒரு வேளை மாற்றாம் நேரலாம்...மற்றபடி குடும்பம் என்கிற அமைப்பு சிதறி உடைந்து இல்லாதொழிந்து போனாதால் தான் பெண்விடுதலை சாத்தியம்...இதைத்தான் தந்தை பெரியார்''பெண்கள் தன் கர்ப்பப்பைகளை சாத்திக் கொள்ளவேண்டும்"என்றார்.....இன்னும் விரிவாக பேசுவோம்..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
greetings;
mikka anpudan
selventhiran
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாவ..Excellent!

மிக அருமையான அதே சமயத்தில் மிக தேவையான இடுக்கை.

பகிர்வுக்கு நன்றி!
Kasi Arumugam இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை!
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு திரு ஆழியூரான். கருத்துக்கள் அருமை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப அருமையா இருக்கு இந்தப்பதிவு. உங்களை மறுத்தவர்களின் கருத்தில் ஏனொ வலிவு இல்லை. ஆனா இதே போல் ஆண்கள்தான் இதச்செய்யணும் அப்படின்னும் நம்ம சமுதாயத்தில சில உண்டு. அவைகளும் மாறனும்
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன லக்ஷ்மி மேடம் விடுவதாக இல்லையா நீங்க? Well, ஒரு காதில் அலைபேசியுடன் (தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த படியே ) உங்க பதிலைப் படிச்ச என் மனைவி, தொலைபேசியை மூடிக் கொண்டு சொன்ன பதில்: "அந்தக் கதாநாயகிக்குத் தான் தனிக்குடித்தனம் மினிமம் கியாரண்டியாக இருக்கிறதே; பிரச்னை, கணவன் அவனுடைய வீட்டாருடன் ஒற்றுமையாக இருப்பது குறித்ததே இல்லை; தன் வீட்டாருடன் ஒத்துப் போக மாட்டேனென்கிறான் என்பது குறித்துத் தானே? கதையின் முடிவில் அவள் ஒன்றும் தன் வீட்டுடனான தொடர்பை உடைத்துக் கொண்டு போகவில்லை. அம்மா தங்கை வேலைக்காரி மூலம் தொடர்பு ஒட்டியபடிதான் போகிறாள். அவள் போவதே கணவனை எப்படியாவது சமாதானப் படுத்தி தந்தையுடன் இணைப்பதற்காகத் தான். ஏங்க, கணவன் மாமனாருக்கிடையில் அல்லது கணவன் கொழுந்தனுக்கிடையில் பிரச்னை என்றால் எந்தப் பெண்ணாவது சமாதானம் செய்ய முயற்சிக்கிறாளா? கணவனுக்கும் தன் தந்தைக்கும் அல்லது கணவனுக்கும் தன் சகோதரனுக்கும் பிரச்னை என்றால் எவ்வளவு மத்தியஸ்தத்துக்குத் தயாராகிறாள்? அது தான் பெண்". என் மனைவியுடனான வெளிப்படையான விவாதத்தில் நாங்கள் வந்த முடிவு இது தான்: "கண்ணே மணியே நிலவே மலரே" என்று கவிதை எழுதுவது போல் பெண்களைக் குஷிப்படுத்த இது போல் அவர்கள் உரிமை குறித்த பேச்சுக்களும் ஒரு வகை. கானல் நீர் பொய்யே என்று உணர்ந்தவனுக்கும் அது கண்ணுக்குத் தெரிவது போல் இது போன்ற புகழ்ச்சிகள் பச்சாதாபங்கள் பெண்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில் உங்களுக்கு முழு வெற்றி ஆழியூரான் சார்.எங்கள் இருவர் சார்பிலும் வாழ்த்துக்கள்.

RATHNESH
காயத்ரி சித்தார்த் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்ப.. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்! நீண்ண்ண்ட பதிவில் பெண்களுகென்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இதனால் விளையப் போகும் பயனென்று ஒன்றுமில்லை. பெண் விடுதலை பேசிய பாரதியே கூட மனைவியின் உணர்வுகளை மதிக்கவில்லை ஆழியூரான். அவனையும் சேர்த்து "வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே" என்று வசைபாடத்தான் தோன்றுகிறது எனக்கு!

எனினும் எழுத்தாகப் பார்க்கையில் அருமையான இடுகை.. வாழ்த்துக்கள்!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
காயத்ரி.. உண்மைதான். தனித்து இருந்துகொண்டு வசனம் பேசும் நானும் கூட வாய்ச்சொல்லில் வீரனாக இருக்கக்கூடும். எனக்கான வாய்ப்பு வரும்போது என் யோக்கியதை தெரிந்துவிடும். ஆனாலும் இம்மாதிரியான விஷயங்களை தொடர்ந்து பேசவாவது செய்ய வேண்டும்தானே..?
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி.. கட்டுரை அருமை.. :)
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக்கட்டுரையில் வரும் பல உதாரணங்களும், வார்த்தைப்பிரயோகங்களும் ஏற்கனவே ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்த கட்டுரையை ஒத்து இருப்பதாக எனக்கு தோன்றுகிறது, ஒரு வேளை இதற்கு முன்னர் பத்திரிக்கையில் எழுதியவரும் நீங்களே தானா? அல்லது அக்கட்டுரை உந்துதலா?

அனேகமாக ஓராண்டாவது ஆகி இருக்கும் என்பதால் எந்த பத்திரிக்கை , யார் எழுதியது என்பது மறந்து விட்டது நினைவு வந்தால் சொல்கிறேன்.

எப்படி இருப்பினும் நல்ல ஆக்கம், நடைமுறை வாழ்வில் எவ்வித மாற்றமும் இன்றி! ஆனால் இப்படிப்பட்ட கருத்துக்கள் மட்டும் அதிகம் பேசப்பட்டு தற்போது பழங்கதை ஆகிய ஒன்றாக போய்விட்டது.
உங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திரத்திற்கும், நல்ல கட்டுரைக்கும் வாழ்த்துக்கள் ஆழியூரான் ,

நானும் உங்களின் அறிமுகத்தை நட்சத்திர பக்கத்தில் பார்த்தேன், தன்னடக்கத்துடனும், இயல்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள்!


சற்று பெரிய பதிவு இருந்தாலும் கூறப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் உண்மையே!

பின்னூட்டத்தில் சொல்லப்பட்டது போல் தற்பொழுதைய சமுதாய வாழ்க்கையில் பெண்ணுரிமை முன்பு இருந்ததைவிட மாறி உள்ளதாவே எனக்கும் படுகின்றது! அதற்கான காரணம் தாங்கள் கூறியதுபோல் இருவரும் பணிக்குச் செல்ல வேண்டும் என்பது கூட இருக்கலாம்!

//இதை மாற்றுவதற்கான குறைந்தபட்ச எண்ணத்தை மனதுக்குள் உருவாக்கி, அதை தனது குடும்பத்திற்குள் மட்டுமாவது செயல்படுத்திப் பார்க்காத வரைக்கும் நாம் அனைவரும் குற்றவாளிகள்தான்.//

நிச்சயமாய்! குற்றம் செய்வதை முற்றிலுமாய் நிறுத்திக் கொள்ள முடிந்தவரை முயற்சிப்போம்!


அன்புடன்...
சரவணன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தப் பதிவு வரும்போதே நினைத்தேன், வெகு நிச்சயமாக ஏதேனும் ஒரு பகுதியில் கொஞ்சமேனும் விவாதம் வரும் என்று.

எதிர்பார்த்தது போலவே ரத்தினேஷ் ஒரு சில கருத்துக்களை சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

//"கண்ணே மணியே நிலவே மலரே" என்று கவிதை எழுதுவது போல் பெண்களைக் குஷிப்படுத்த இது போல் அவர்கள் உரிமை குறித்த பேச்சுக்களும் ஒரு வகை. கானல் நீர் பொய்யே என்று உணர்ந்தவனுக்கும் அது கண்ணுக்குத் தெரிவது போல் இது போன்ற புகழ்ச்சிகள் பச்சாதாபங்கள் பெண்களுக்குப் பிடிக்கும். //

அனேகமாய் நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணராகத்தான் இருந்திருக்க வேண்டும் ரத்னேஷ். இல்லையென்றால் பெண்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று நீங்கள் அடித்துக் கூற முடியாதல்லவா??

கானல் நீர் என்று சொல்லி இருக்கிறீர்கள். பெண்களை தியாக பிம்பங்களாக நீங்களே அவர்களை உருவகப் படுத்திக் கொண்டு அவர்களுக்கும் சேர்த்து நீங்களே முடிவுகளை எடுத்துக் கொண்டு, "தோ பாரு இப்போ நானும் என் மனைவியும் சந்தோஷமாதானே இருக்கோம் " என்று சொல்லிக் கொண்டு இருக்கற வரைக்கும் இது கடைசி வரைக்கும் கானல் நீராகவேதான் இருக்கும்.

சரி வேணும்னா இப்படி பண்ணலாமா ரத்னேஷ்?

இந்த பதிவை குப்பைன்னு சொல்லி ஒதுக்கி விட்டுட்டு,

வேலைக்கு போற பொம்பளைங்க எல்லாம் மோசமானவளுங்க,

பெண்ணாக பிறந்தால் எச்சில் தட்டுகளை மட்டுமே கழுவிக் கொண்டிருக்க வேண்டும்,

உத்யோகம் பார்ப்பதுதான் புருஷ லட்சணம், வீட்டில் பெண்களுக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் சரியான கிறுக்குப் பயலுக,

என்றெல்லாம் முன் மொழிந்து ஒரு தீர்மானம் போட்டுடலாமா???
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வவ்வால்.. இந்தக் கட்டுரையை இதற்கு முன்பு நான் எங்கும் எழுதவில்லை. படித்ததாகவும் நினைவில்லை. வாய்ப்பிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். நன்றி.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நந்தா..ரத்னேஷுக்கான உங்கள் விளக்கங்கள் நியாயமானவை. இந்தக்கட்டுரையின் மையத் தொணியோடு மாற்றுக் கருத்துடையவர்களின் பிரதியாக இருக்கிறார் அவர். இன்னும் மாற்றுக் கருத்தாளர்கள் அவரவர் எண்ணங்களை சொன்னால் இதை ஒரு திறந்த விவாதமாக மாற்றலாம்.
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் சார், ஒரு விளக்கம்.//இந்தக்கட்டுரையின் மையத் தொணியோடு மாற்றுக் கருத்துடையவர்களின் பிரதியாக இருக்கிறார் அவர்// என்பதில் மாறுபடுகிறேன். கட்டுரையின் மையத் தொனியோடு மாறுபடவில்லை; தாங்கள் எழுதிய கருத்துக்கள் பலவும் உண்மை பத்தாண்டுகளுக்கு முந்தைய சமூக நிலவரப்படி. இன்றைய நிலையில் பலவும் நீர்த்துப் போய் விட்டவை என்று தான் சொல்ல வந்தேன். ஓட்டல்களிலும் கணவன் சாப்பிட்ட இலையை மனைவி எடுத்துப் போடுவது, அதிகாலை வாசல் கோலங்கள் என்றெல்லாம் POINT BY POINT நான் விளக்கம் எழுதினால் மிக நீளமாக வளருமே என்று தயக்கம்.

நந்தா சார், கானல் நீர் என்கிற உதாரணத்தைத் தாங்கள் சரியானபடிப் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்ல இயலாமல் போனது என் எழுத்தின் பலவீனம் என்று ஒப்புக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, 'தம்மைப் பற்றிப் புகழ்ந்து சொல்லப்படுவதில் மிகையும் பொய்யும் இருப்பதை உணர்ந்தாலுமே எவரும் விரும்பத்தான் செய்வார்கள்; அவற்றை விரும்பி ஏற்று தமதாக்கிக் கொள்வதில் பெண்களின் தயார்நிலை கொஞ்சம் அதிகம்' என்பது தான். இதனைத் தான் நான் படித்த உளவியல் புத்தகங்களும், நடைமுறையில் observe செய்த அனுபவமும் எனக்குக் கற்றுத் தந்தன. மற்றபடி //இந்த பதிவை குப்பைன்னு சொல்லி ஒதுக்கி விட்டுட்டு,

வேலைக்கு போற பொம்பளைங்க எல்லாம் மோசமானவளுங்க,

பெண்ணாக பிறந்தால் எச்சில் தட்டுகளை மட்டுமே கழுவிக் கொண்டிருக்க வேண்டும்,

உத்யோகம் பார்ப்பதுதான் புருஷ லட்சணம், வீட்டில் பெண்களுக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் சரியான கிறுக்குப் பயலுக// என்கிற மோசமான தொனி என் எழுத்துக்களில் இருந்ததாக உங்களைத் தவிர்த்து இன்னும் சிலரும் சொல்வார்கள் என்றால் எனக்கு தமிழ் எழுதத் தெரியவில்லை என்கிற மன்னிப்புடன் விலகிக் கொள்ள எனக்குத் தயக்கமோ வருத்தமோ கிடையாது.

RATHNESH
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//கட்டுரையின் மையத் தொனியோடு மாறுபடவில்லை; தாங்கள் எழுதிய கருத்துக்கள் பலவும் உண்மை பத்தாண்டுகளுக்கு முந்தைய சமூக நிலவரப்படி. //

இல்லை ரத்னேஷ். சென்னையையோ அல்லது பிற நகரங்களையோ வைத்துக் கொண்டு நீங்கள் சொல்லுகிறீர்களோ?

என் ஊரில் 95% இது இப்படியாகவே உள்ளது. இதில் வெற்றியே பெண்கள் இப்படி நடந்தால்தான் நல்லது மீறி நடப்பவர்கள் எல்லாம் அடங்க மறுப்பவர்கள் என்ற பட்டத்தை பெண்கள் வாயாலே சொல்ல வைக்கும் அளவுக்கு அவர்களுள்ளே அடி மனது வரைக்கும் உரமேற்றி வைத்ததில்தான்.

//ஓட்டல்களிலும் கணவன் சாப்பிட்ட இலையை மனைவி எடுத்துப் போடுவது, அதிகாலை வாசல் கோலங்கள் என்றெல்லாம் POINT BY POINT நான் விளக்கம் எழுதினால் மிக நீளமாக வளருமே என்று தயக்கம்.//

எழுதுங்கள். அப்போதுதானே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இன்னும் தெளிவாகப் புரியும். இவற்றில் "ஓட்டல்களிலும் கணவன் சாப்பிட்ட இலையை மனைவி எடுத்துப் போடுவது" இது வேண்டுமானால் மிகக் குறைவாகவோ அல்லது வழக்கிழந்தோ போய் இருக்கலாம். ஆனால் மற்றவைகளை நானே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.நான் பார்க்கின்ற பெரும்பாலான வீடுகளில் நிலைமை இவ்வாறே இருக்க நீங்கள் 10 வருடங்களுக்கு முந்தைய பிரச்சினை இது என்பதை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியாது.

// 'தம்மைப் பற்றிப் புகழ்ந்து சொல்லப்படுவதில் மிகையும் பொய்யும் இருப்பதை உணர்ந்தாலுமே எவரும் விரும்பத்தான் செய்வார்கள்; அவற்றை விரும்பி ஏற்று தமதாக்கிக் கொள்வதில் பெண்களின் தயார்நிலை கொஞ்சம் அதிகம்' //

நான் சொல்ல வருவதும் இதைப் பற்றிதான். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அவர்களை எமோஷனல்,சென்டிமெண்டல் இடியட்ஸ்களாகவே நாம் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

//எனக்கு தமிழ் எழுதத் தெரியவில்லை என்கிற மன்னிப்புடன் விலகிக் கொள்ள எனக்குத் தயக்கமோ வருத்தமோ கிடையாது//

இது நையாண்டிக் கட்டுரையாக உங்களுக்குத் தோன்றியதால்தான் என்னை அப்படி எழுத வைத்தது.
முத்துலெட்சுமி/muthuletchumi இவ்வாறு கூறியுள்ளார்…
\\என் ஊரில் 95% இது இப்படியாகவே உள்ளது. இதில் வெற்றியே பெண்கள் இப்படி நடந்தால்தான் நல்லது மீறி நடப்பவர்கள் எல்லாம் அடங்க மறுப்பவர்கள் என்ற பட்டத்தை பெண்கள் வாயாலே சொல்ல வைக்கும் அளவுக்கு அவர்களுள்ளே அடி மனது வரைக்கும் உரமேற்றி வைத்ததில்தான்.//

நந்தா நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..
ஈயக்கட்டுரை என புகழப்படும் பெண்ணுரிமை பற்றி எழுதி நாளாகிறது இதைப்பற்றி எழுத ஆசை..
Jazeela இவ்வாறு கூறியுள்ளார்…
//'தம்மைப் பற்றிப் புகழ்ந்து சொல்லப்படுவதில் மிகையும் பொய்யும் இருப்பதை உணர்ந்தாலுமே எவரும் விரும்பத்தான் செய்வார்கள்; அவற்றை விரும்பி ஏற்று தமதாக்கிக் கொள்வதில் பெண்களின் தயார்நிலை கொஞ்சம் அதிகம்' // அப்படியா ரத்னேஷ்? பெண்களே இங்கன கொஞ்சம் எட்டிப் பார்த்து உண்மையா இல்லையான்னு சொல்லுங்க. :-) வசைப்பாடுவதைக் கூட கேட்டுக் கொள்ளலாம் சும்மா மிகைப்படுத்தி புகழ்ந்தா அப்பப்பா தாங்க முடியாது சாமி.

//என்னதான் முகமூடிபோட்டுக்கொண்டு எழுதினாலும் நூற்றாண்டுகளாக ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இது.// ஆழியூரான், முகமூடி மாட்டிக்கிட்டு எழுதுனீங்கன்னு ஒப்புக் கொண்டமைக்கு நன்றி :-)
//'பள்ளிவாசல் புனிதமான இடம்.. அதனால்தான் இப்படி..'// வாதம் திசைத் திரும்ப வேண்டாம் என்பதற்காக உங்களுக்கு முழுமையாக பதிலளிக்கவில்லை. இன்னொரு சமயம் விளக்குகிறேன். ஆனால் ஹஜ் யாத்திரையில் இருபாலாரும் சேர்ந்து செய்வது என்பதை மறந்துவிட வேண்டாம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஈயக்கட்டுரை என புகழப்படும் பெண்ணுரிமை பற்றி எழுதி நாளாகிறது இதைப்பற்றி எழுத ஆசை..//

எழுதுங்கள். இன்னொரு பரிமாணம் கூட கிடைக்கக் கூடும். காத்திருக்கிறோம்.
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் சார், தங்களுக்கு நன்றியுடன் திரு.நந்தா அவர்களுக்கான பதில் கோணத்தில் நான் எழுதியது மிகவும் நீண்டு போனதால் தனிப் பதிவாகப் போட்டிருக்கிறேன். தங்கள் இருவருக்கும் என் நன்றி. தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்.

RATHNESH
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

//இவை அனைத்தையும் நாம் இயல்பென ஏற்றுக்கொள்கிறோம். பெண்ணையும் அப்படியே நம்ப வைத்திருக்கிறோம். இயல்பை மீறும் பெண்களை திமிர் பிடித்தவளென்கிறோம். நிலவி வரும் நியதிகளை மீறி ஒரு பெண், இயல்பான தன்னுணர்வோடு ஒரு முடிவை எடுக்கும்போது, அது குறித்து அவளைக் குற்றவுணர்வடையச் செய்யும்விதமாகவே சுற்றத்தின் நடவடிக்கைகள் உள்ளன.//

பெண்ணின விடுதலைக்கு குடும்பம், திருமணம் என்னும் அமைப்புமுறை மிகப்பெரிய தடை. குடும்பத்தின் பல கட்டுப்பாடுகளையும் மீறி பொதுஅமைப்புகளில் பங்குபெறும் பெண்கள் மணமான பின்னர் வீட்டுக்குள்ளேயே அடக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. கணவன் என்னும் ஆணாதிக்கவாதியின் பங்குதான் இதில் முழு பொறுப்பிற்கும் உரியது.

//RATHNESH said...

காலகாலமாய் பெண் வீட்டாருடன் சிநேகமாக (அதற்கான விலையாக தன் பெற்றோரையும் உடன்பிறப்புகளையும் கூட ஒதுக்க வேண்டி இருந்தால் அதையும் தந்து) இருக்கும் கணவர்களின் வீடுகள் தான் சந்தோஷம் கொண்டாடும் இல்லங்களாக இருந்து வந்திருக்கின்றன.//

பெண்ணாக விரும்பி எடுக்கும் முடிவா இது? இதன் பின்னால் உள்ள பொருளியல் பார்வை என்ன? யாருடைய சந்தோசம் இங்கு கவனம் பெறுகிறது?

//இன்றும். தன்னுடைய கணவனுக்காக, தன்னுடைய குழந்தைக்காக என்று பெண் செய்வதை எல்லாம் ஏன் தியாக முத்திரையோடு சிலாகிக்கிறீர்கள் என்று புரியவில்லை.//

தன்னுடையை குழந்தைக்காக, தன்னுடைய மனைவிக்காக (குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு உட்பட அனைத்திலும்) ஆண் செய்யும் செயல்கள் என்ன?

இன்னும் நிறைய கேள்விகள் எழுகின்றன. பெண்களது வேதனையை, பிரச்சனைகளை என்னை உட்பட்ட ஆண்களின் பார்வையில் எளிதாக புரிந்துகொள்ள இயலாது. இது தான் உண்மை. பெண்கள் பேசட்டும்! இந்த உலகின் நியதி பெண்களாலும் உருவாட்டும். அப்போது நாம் பேசும் 'நியாயம்', 'விதிகள்', 'கலாச்சாரம்' .... அனைத்தில் கோரமுகமும் உடையும்.

ஆழியூரான் கட்டுரையில் குறிப்பிட்டவை ஒரு சிறு பகுதி மட்டுமே, இன்னும் மலையளவு குடும்பத்தில் மட்டுமே இருக்கிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//RATHNESH said...
ஆழியூரான் சார், தங்களுக்கு நன்றியுடன் திரு.நந்தா அவர்களுக்கான பதில் கோணத்தில் நான் எழுதியது மிகவும் நீண்டு போனதால் தனிப் பதிவாகப் போட்டிருக்கிறேன். தங்கள் இருவருக்கும் என் நன்றி. தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்.//

நல்லது ரத்னேஷ். ஆனால், உங்கள் பெயரை கிளிக்கினால் உங்கள் புரைஃபைலுக்கு செல்லமாட்டேன்கிறதே.. உங்கள் பிளாக்கின் URL என்ன..?
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
சார், உண்மையில் BLOG, URL முதலான எதுவுமே இன்னும் புரிபடாமல் தான் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறேன், அஸ்ஸாமின் வடகிழக்கு மூலையில் உட்கார்ந்து கொண்டு, சக ஆர்வமோ விஷய ஞானமோ கொண்ட யாரும் உடன் இல்லாமல். அலைபேசியில் GPRS மூலம் தொடர்பு ஏற்படுத்த முடிந்ததால் வீட்டுக் கணினியில் இணையத் தொடர்பு சாத்தியமானது. தொலைபேசி இணைப்புக்கோ வாய்ப்பு இல்லை. INTERNET BROWSING CENTRE இல்லாத ஊர் இது.

சில சமயங்களில் பரீட்சையில் கேள்வியே புரியவில்லை என்றால் எதையாவது எழுதிவைப்போமே அது போல் பதில் தருகிறேன்: http://rathnesh@blogspot.com
முயல்

நன்றி,

RATHNESH
Never give up இவ்வாறு கூறியுள்ளார்…
En ennathai appadiye sonnal pol irundhadhu. Aanaal idtharku unnmaiyaana theervu enna ennru theriyavilla. Kaalam orunaal maarum enkinra nambikaiyudan - Geetha
Never give up இவ்வாறு கூறியுள்ளார்…
En ennathai appadiye pradhipalikiradhu. Kaalam orunaal maarum enkinra nambikaiyudan - Geetha
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சரவணன்,
மிக நல்ல பதிவு. (வெறுமே வார்த்தைக்கு சொல்லவில்லை). எங்கள் வீட்டில் நீங்கள் குறிப்பிட்ட எதுவும் இல்லை. படிக்கும் போதே வலிக்கின்றது. அதில் வாழ்பவர்களுக்கு எப்படியிருக்கும்.

நட்சத்திரமானதிற்கு எங்களின் அன்பான வாழ்த்துக்கள்.
தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
நான் கதை போல ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்கள் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டன. 'ஏற்கெனவே'பேசப்பட்டதைத்தானே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். நல்லதொரு கட்டுரை ஆழியூரான். பல விடயங்களை ஓரிழைக்குள் இணைத்து கட்டுக்குள் வைத்து எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.

நந்தா! நான் பேசியிருந்தால் உங்களைப் போன்றதொரு தொனியிலேயே பேசியிருப்பேன். முந்திக்கொண்டுவிட்டீர்கள் என்று சொல்வதன் வழியாக என்னை விஷயமறிந்த ஆளாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எல்லோரும்தானே யோசிக்கிறோம். சிலருக்குத்தானே வார்த்தைகள் கூடிவருகின்றன. சொல்ல வந்த விடயத்தை கனகச்சிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுத்த ஆழியூரானுக்கு நன்றி.
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.
Caroline Naveen இவ்வாறு கூறியுள்ளார்…
azhagaana, arthamulla padhivu...miga arumai...
J.M.Ihsan இவ்வாறு கூறியுள்ளார்…
தாங்கள் இஸ்லாத்திலும் பெண் உரிமை மறுக்கப்படுவடாக குரியுள்ளீர்கள். உண்மையில் இஸ்லாமிய சட்டங்கள் பெண்களுக்குரிய உரிமையை 100% வழங்கியுள்ளன. அதை நடைமுறைப்படுத்தாவிட்டாஅல் அது முஸ்லிம்களின் குற்றமே தவிர இஸ்லாத்தின் குற்ற்மல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு