அறிமுகம் - ஆழியூரானாகிய நான்..!


புரசைவாக்கம் நெடுஞ்சாலை, நேரே சென்று முட்டுமிடத்தில் கெல்லீஸ் சிக்னல் இருக்கிறதில்லையா.. அதனருகிலிருக்கும் உயர்ந்த கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு பெரியவர் மெஸ் போல ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். கீழே ஊர்ந்து நகரும் வாகனங்களையும், அதில் அமர்ந்தபடி ஏதோவொரு காண்டம் விளம்பரத்தில் வருவதுபோல, காதலனின் காதுமடல் கடிக்கும் காதலியின் சில்மிஷங்களையும் ரசித்தபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த விநாடியொன்றில்தான் பாலபாரதி, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை சொன்னார்.

இணையம், பிளாக், தமிழ்மணம்... என்றெல்லாம் அவர் சொல்லியவை, ஏதோ வேற்றுகிரக மொழிபோலவே தோன்றியது. அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே திடீர், திடீரென்று செல்போனை காதில் வைத்தபடி டோண்டு, போலிடோண்டு, சூடுபறக்குது, அனல் அடிக்குது.. என்றெல்லாம் யாருடனாவது மணிக்கணக்கில் பேசப்போய்விடுவார். கேட்கும் நமக்குதான் ஒரு எழவும் புரியாது. திடீரென்று ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பின் வழியே சில தகவல்களைக் கேட்டுக்கொண்டு, சில நிமிடங்களில், 'இதுதான் உன் பிளாக்கின் முகவரி..' என்று அவர் சொன்னபோது, தனக்கான முதல் பா.க.ச. உறுப்பினரை உருவாக்கி, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை :)

பிளாக்கில் என்ன எழுதுவது என்று தெரியாமல் குழம்பி நின்ற வேளையில் தோழி லிவிங் ஸ்மைல் வித்யாவின் நாட்டுப்பற்றுப்பற்றிய சர்ச்சை வலைபரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அம்பேத்கரின் உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டி வித்யா தரப்பின் நியாயங்களாக நான் சொன்ன வார்த்தைகள், ஆழியூரானை பரவலாக கவனப்படுத்தின. அதன்பிறகும் உருப்படியாய் எதுவும் செய்துவிடவில்லை. இதற்கு, என் பத்தாயத்திலிருக்கும், C&P டெக்னாலஜிபடி(?) பதிவிடப்பட்ட சில பதிவுகளையும், ஏராளமான தர்க்கத் தவறுகளுடன் கூடிய சில உளறல்களையுமே உதாரணமாகக் காட்ட முடியும். ஆனாலும் நான் இப்போது நட்சத்திரம். என்ன செய்ய.. எல்லா விளையாட்டுகளிலும் ஒப்புக்குச் சப்பாணிகள் உண்டே.. :) இந்த ஒரு வார காலத்தில் மேலும் சில பயனுள்ள உளறல்களைத் தருவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும் என்னால்..?

ரசியல், பொருளாதாரப் பின்னணியற்ற பின் தங்கிய கிராமத்தின் விவசாயக்கூலி குடும்பமொன்றில் பிறந்து, முதல் தலைமுறை கல்விபெறும் கத்துக்குட்டி நான். செருப்பணிவதை ஆடம்பரத்தின் அடையாளமாக கருதும் வாழ்க்கை எங்களுடையது. நடவும், அறுப்பும் அறிந்த எங்களுக்கு படிப்புக் கொஞ்சம் குறைச்சல்தான். ஆனால், 'மேட்டூர் அணை நீர்மட்டம்' பார்க்க மட்டும் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டு முற்றத்தில் கிழவிகள் துப்பிய வெற்றிலை எச்சிலில் சிதறிக்கிடக்கும் துணுக்குகளை கொத்தித்திண்ணும் கோழிகள் முதல், செங்கூரணி குளத்தில் குடத்தை கவிழ்த்து வைத்து குமரிகளுக்கு நீச்சல் கற்றுத்தரும் நீலாவதி பெரியம்மா வரைக்கும்... வாழ்வை ரசிக்க தனக்குள் ரம்மியமான ரகசியங்களை வைத்திருக்கும் கிராமம்தான். ஆனால், அது மட்டுமா கிராமம்..?

என்னோடு எப்போதும் ஒன்றாகவே திரிந்து, பங்கு தரவில்லை என்ற கடுப்பில் என் வாயிலிருந்த ஜவ்வுமிட்டாயை விரலைவிட்டு நோண்டி எடுத்து தன் வாய்க்குள் போட்டுக்கொண்ட பிரபு, பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்துவிட்டால் என் அருகில் வரவே அஞ்சுவான். ஒருமையில் விளிப்பதை முற்றாகத் தவிர்ப்பான். காரணம் பிரபு தலித். நான், ஆதிக்க சாதியொன்றில் பிறந்தவன். எனக்கு வேண்டுமானால் என் கிராமம்பற்றி பெருமைகள் இருக்கலாம். பிரபுவுக்கு..? இந்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டு/மறைத்துவிட்டு, கிராமம்பற்றியும் மண்பற்றியும் பெருமை பேசுவதில் உடன்பாடில்லை எனக்கு. இந்த வாழ்வியல் கொடுமைகளுக்கு எதிரான செயல்களையும், எழுத்துகளையும் என்னால் இயன்ற அளவுக்குத் தருவதே எனக்கான சிறு லட்சியம்.

நன்றி நண்பர்களே..!

கருத்துகள்

ஜெகதீசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் ஆழியூரான்.
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாரம் மிகச் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள்!
அய்யனார் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள் ஆழியூரான்

போட்டாவை பார்த்தா அசப்பில ஜி.நாகராஜன் மாதிரியே இருக்கியே தலைவா!!

82 ன்னா நாங்க நம்பிடுவோமா :)
SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டு/மறைத்துவிட்டு, கிராமம்பற்றியும் மண்பற்றியும் பெருமை பேசுவதில் உடன்பாடில்லை எனக்கு. இந்த வாழ்வியல் கொடுமைகளுக்கு எதிரான செயல்களையும், எழுத்துகளையும் என்னால் இயன்ற அளவுக்குத் தருவதே எனக்கான சிறு லட்சியம்//

Excellent! good luck sir.
delphine இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு வேண்டுமானால் என் கிராமம்பற்றி பெருமைகள் இருக்கலாம். பிரபுவுக்கு..? இந்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டு/மறைத்துவிட்டு, கிராமம்பற்றியும் மண்பற்றியும் பெருமை பேசுவதில் உடன்பாடில்லை எனக்கு./////வாழ்த்துக்கள் அன்பரே! இந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது.. நிறைய எழுதுங்கள்.
தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஆழியூரான்.

இந்த வாரம் சுவாரசியமா இருக்கும்னு தாராளமா நம்பலாம்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெகதீசன், சிவபாலன், அய்யனார்,சர்வேசன், டெல்பின்.. நன்றிகள்.

அய்யனார்.. ஜி.நாகராஜனுக்கு இன்னும் கொஞ்சம் கூரான மீசையில்லையா..?
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை நண்பர் ஆழியூரான்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட/வஞ்சிக்கப்பட்ட பலருக்கு நீங்கள் நட்சத்திரமாக இருந்திருப்பதை அறிவேன். உங்களைத் தமிழ்மண நட்சத்திரமாகக் காண்பதில் மனது உவகையடைகிறது.


/* அரசியல், பொருளாதாரப் பின்னணியற்ற பின் தங்கிய கிராமத்தின் விவசாயக்கூலி குடும்பமொன்றில் பிறந்து, முதல் தலைமுறை கல்விபெறும் கத்துக்குட்டி நான். செருப்பணிவதை ஆடம்பரத்தின் அடையாளமாக கருதும் வாழ்க்கை எங்களுடையது. நடவும், அறுப்பும் அறிந்த எங்களுக்கு படிப்புக் கொஞ்சம் குறைச்சல்தான். ஆனால், 'மேட்டூர் அணை நீர்மட்டம்' பார்க்க மட்டும் எல்லோருக்கும் தெரியும். */

மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும், குறிப்பாக வறுமையாலும், ஒடுக்கு முறைக்கும் உள்ளாகியுள்ள எம் இனத்தவர் அனைவரின் பிள்ளைகளுக்கும் கல்வி வசதி கிடைத்து, இனியும் அவர்கள் பின் தங்கிய நிலையில் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வழி பிறக்கட்டும். எழுத்துரிமையும் படிப்புரிமையும் ஒவ்வொரு தமிழரினதும் பிறப்புரிமை என்பதை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
இராம் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள் ஆழியூரான்..... :)
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் ஆழியூரான்,

அசத்தலான அறிமுக பதிவு. அடுத்து அதிர்வுகளை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதற்கான முன்னோட்டம் என்று எனது கணனி சொல்கிறது.

வாழ்த்துக்கள் !
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்!!!

மனிதநேயம் குறித்த தங்கள் புரிதல்களை பகிர்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். பத்திரிகையுலக அனுபவங்கள் குறித்த ஒரு காமெடி பதிவினை பர்சனலாக எதிர்பார்க்கிறேன். நன்றி!!!
வெயிலான் இவ்வாறு கூறியுள்ளார்…
அசத்துங்க ஆழியூரான்!

அதி அதிகமான தன்னடக்கமா தெரியுதே?

அருமையான மனிதரை கண்டெடுத்த தல பாலபாரதிக்கு நன்றி!
tamil144 இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்!!!
முத்துலெட்சுமி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் ஆழியூரான்.
பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் ஆழியூரான்

எதிர்பார்ப்புகளுடன்...
நந்தா இவ்வாறு கூறியுள்ளார்…
//வீட்டு முற்றத்தில் கிழவிகள் துப்பிய வெற்றிலை எச்சிலில் சிதறிக்கிடக்கும் துணுக்குகளை கொத்தித்திண்ணும் கோழிகள் முதல், செங்கூரணி குளத்தில் குடத்தை கவிழ்த்து வைத்து குமரிகளுக்கு நீச்சல் கற்றுத்தரும் நீலாவதி பெரியம்மா வரைக்கும்... வாழ்வை ரசிக்க தனக்குள் ரம்மியமான ரகசியங்களை வைத்திருக்கும் கிராமம்தான். ஆனால், அது மட்டுமா கிராமம்..?

என்னோடு எப்போதும் ஒன்றாகவே திரிந்து, பங்கு தரவில்லை என்ற கடுப்பில் என் வாயிலிருந்த ஜவ்வுமிட்டாயை விரலைவிட்டு நோண்டி எடுத்து தன் வாய்க்குள் போட்டுக்கொண்ட பிரபு, பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்துவிட்டால் என் அருகில் வரவே அஞ்சுவான். ஒருமையில் விளிப்பதை முற்றாகத் தவிர்ப்பான். காரணம் பிரபு தலித். நான், ஆதிக்க சாதியொன்றில் பிறந்தவன். எனக்கு வேண்டுமானால் என் கிராமம்பற்றி பெருமைகள் இருக்கலாம். பிரபுவுக்கு..? இந்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டு/மறைத்துவிட்டு, கிராமம்பற்றியும் மண்பற்றியும் பெருமை பேசுவதில் உடன்பாடில்லை எனக்கு. இந்த வாழ்வியல் கொடுமைகளுக்கு எதிரான செயல்களையும், எழுத்துகளையும் என்னால் இயன்ற அளவுக்குத் தருவதே எனக்கான சிறு லட்சியம்.//

வாழ்த்துக்கள் ஆழியூரான். அசத்தலான அறிமுக பதிவு.

I am damn sure that this week we all will have the explosive posts from you. Your intro says that very soundly.
முத்துகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் ஆழியூரன்.

வழக்கமான உங்கள் படைப்புகளோடு வாருங்கள்.

நட்சத்திர வாரத்திற்கான உங்கள் அறிமுக குறிப்பு மிகவும் அருமை

//இந்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டு/மறைத்துவிட்டு, கிராமம்பற்றியும் மண்பற்றியும் பெருமை பேசுவதில் உடன்பாடில்லை எனக்கு. இந்த வாழ்வியல் கொடுமைகளுக்கு எதிரான செயல்களையும், எழுத்துகளையும் என்னால் இயன்ற அளவுக்குத் தருவதே எனக்கான சிறு லட்சியம்.
//

உங்கள் லட்சியம் வெல்லட்டும்
✪சிந்தாநதி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்.

உங்கள் சிறு இலட்சியம் அது சீரிய இலட்சியம்.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் ஆழியூரான்.

உங்களின் உண்மை நிகழ்வுகளை மிக தத்ரூபமாக எழுதும் அழகிய கலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அனைவராலும் இதுபோல் எழுத வராது. உங்களின் இது ஒரு கிறுக்கு பய புள்ள வியர்டு பதிவு மீண்டும் நினைவுக்கு வருகிறது.

மனிதர்களின் அன்றாட சாதாரண வாழ்க்கை நடப்புகளை படம்பிடித்து எழுத்தால் வரைவதில், உங்களுக்கு நிகர் நீங்களே.

பாபுவுக்கு வணக்கம்.

//செருப்பணிவதை ஆடம்பரத்தின் அடையாளமாக கருதும் வாழ்க்கை எங்களுடையது.//

இதைத்தான் தன்னடக்கம் என்பதோ?

நட்சத்திர வாரத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆழியூரான். மனம் திறந்து எழுதுங்கள்.

மகிழ்ச்சி எங்களுக்கே!
சுகுணாதிவாகர் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா, வாழ்த்துக்கள்.
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் நண்பா
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்து(க்)கள், ஆழியூரான்.
சின்னக்குட்டி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்
மலைநாடான் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்!

வாய்யா வா! எதிர்பார்ப்பும், வாழ்த்துக்களும்!
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
வெற்றி, இராம்,கோவி, லக்கி, வெயிலான்,தமிழ்144, முத்துலட்சுமி, பாரி.அரசு, நந்தா,முத்துக்குமரன், சிந்தாநதி, மாசிலா,சுகுணா, மஞ்சூர் ராசா, துளசி கோபால், சின்னக்குட்டி, மலைநாடான்.... எனக்கு கையசைக்கவும் இத்தனை பேர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நண்பர்களே..

ஆனால், எல்லோரும் சொல்வதைப் பார்த்தால், 'ரொம்பத்தான் பில்-டப் கொடுத்துட்டமோ..'ன்னு ஒரே கேரிங்கா இருக்கு..
பத்மா அர்விந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள். உங்கள் பெயர் முதலில் என் கவனத்தை ஈர்த்தது. திருச்செந்தூர் என் நினைவுக்கு வரும். பிறகு உங்கள் பின்னூட்டங்கள் என் கவனத்தை கவர்ந்தது. இப்போது பதிவுகள்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
//உங்கள் பெயர் முதலில் என் கவனத்தை ஈர்த்தது. திருச்செந்தூர் என் நினைவுக்கு வரும்//

திருச்செந்தூர்..? எதனால் அப்படி என தெரிஞ்சுக்கலாமா..?
♠ யெஸ்.பாலபாரதி ♠ இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் தம்பி..,

உனக்காகவே இன்று இணையம் வந்திருக்கிறேன். அசத்து..!
கோபிநாத் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் ஆழியூரான் :)
காட்டாறு இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள் ஆழியூரான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

சாதி சூழ் உலகு..!

கற்றதனால் ஆன பயனென்ன..?