வேலை இருக்கு... ஆள் இல்லை..


'நாட்டின் முதுகெலும்பு' என்பார்கள். ஆனால் முதுகெலும்பு ஒடிய உழைக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை மட்டும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதுதான் நம் நாட்டின் நெடுநாளைய நிலைமை. வறட்சியும், வெள்ளமும் விவசாயிகளை குறிவைத்துத் தாக்குவது போதாதென்று கடந்த சில வருடங்களாக டெல்டா பகுதி விவசாயிகளை வேறொரு பிரச்னை சுழற்றியடிக்கிறது.

விவசாயம் செய்ய போதுமான கூலியாட்கள் கிடைக்காமல் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் படாதபாடு படுகிறார்கள். இந்த வருடம் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கிவிட்ட நிலையில், நடவு வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் தள்ளாட ஆரம்பித்துவிட்டன. இந்த பிரச்னையை சமூகம், பொருளாதாரம் என்ற இரண்டு பின்னணியிலிருந்து ஆராய வேண்டும்.

பொருளாதாரக் காரணம்: விவசாயம் செய்வதற்கான எந்த ஒரு செலவும் குறைந்துவிடவில்லை. மாறாக வருடத்திற்கு, வருடம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. வீட்டுக்கு வீடு மாடு வளர்த்து, வீட்டுக்குப் பின்னால் எருக்குழி தோண்டி, மாட்டுச்சாணத்தை எருக்குழியில் கொட்டி, அதையே நிலத்திற்கு அடியுரமாய் இட்டு விவசாயம் செய்த நம் பாரம்பரிய விவசாயம் இப்போது இல்லை. பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் விவசாய நிலத்தை ஆக்டோபஸைப் போல ஆக்கிரமித்துவிட்டன. யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற ரசாயண உரங்கள், இப்போது விதை நெல்லை விட முக்கியமாகிவிட்டன. இவை இல்லாத வெள்ளாமையை டெல்டாவில் எங்கும் பார்க்க முடியாது.

இந்த மருந்துகளின் விலை ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த வருட விலைப்படி, ஒரு மூட்டை டி.ஏ.பி. 486 ரூபாய். ஒரு மூட்டை யூரியாவின் விலை 250 ரூபாய். நடவு செய்யும்போது ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி. இட வேண்டும். பத்து நாள் கழித்து ஒரு மூட்டை யூரியாவும், இன்னும் சில நாட்கள் கழித்து யூரியா மற்றும் பொட்டாஷ் கலந்த கலவை ஒரு மூட்டையும் இட வேண்டும். எப்படியும் இரண்டு முறை பூச்சிமருந்து அடிக்க வேண்டிய அவசியம் வரும். இப்படியாக மருந்து செலவு மட்டுமே ஆயிரக்கணக்கில் வருகிறது.

இவற்றைத்தவிர, விதைநெல் செலவு, நிலத்தை உழும் செலவு, நாற்று விட, நாற்று அரிக்க, நடவு வயலை ஓட்டிப்போட, நடவு தினத்தன்று சேறு அடிக்க, வரப்பு வெட்ட, நட்டபிறகு முதல் களை எடுக்க, இரண்டாம் களை எடுக்க, பூச்சி மருந்தடிக்க ஸ்பிரேயர் வாடகை, மருந்தை அடிக்க அடிப்புக்கூலி, அறுப்பு செலவு, நெல்கட்டை வயலிலிருந்து கொண்டு வந்து களத்தில் சேர்க்கவும், நெல் மூட்டைகளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கவும் டயர் வண்டி வாடகை அல்லது கதிரடிக்கும் மெஷினுக்கு வாடகை... என்று தாவு தீர்ந்துவிடும் அளவுக்கு தினசரி ஒரு செலவு வந்துவிடும். இவை அனைத்தையும் செய்து விளைவிக்கும் நெல்லுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையோ 70 கிலோ முட்டையொன்றுக்கு வெறும் 430 ரூபாய். ஒழுங்காக விளைந்தால் போட்ட காசை எடுத்து, வீட்டுக்கு அந்த வருட சாப்பாட்டுக்கு நெல் வைத்துக்கொள்ளலாம். இல்லையெனில் இருப்பதை சாப்பாட்டுக்கு வைத்துக்கொண்டு அடுத்த வருடம் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆனால், விளைந்ததையேக் கூட, ஈரப்பதம் அதிகம், கருக்காய் அதிகம் என்று ஆயிரம் நொட்டை சொல்லி விலையைக் குறைத்துவிடுகின்றனர்.

போகட்டும்.. சொல்ல வந்தது என்னவெனில் இவ்வளவு வேலைகளையும் செய்ய எப்போதும் கூலி ஆட்களின் தேவை டெல்டாவில் இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கூலி ஆட்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்ன...? காலை ஏழு மணிக்கு வயலில் இறங்கி மதியம் மூன்று மணி வரைக்கும் நடவு நட்டால் 50 ரூபாய். காலை முதல் மதிய உணவு நேரம் வரைக்கும் ஏறு ஓட்டினால் 100 ரூபாய். காலை டூ மதியம் களை பறித்தால் 30 ரூபாய். நூறு முடிச்சுகள் அடங்கிய ஒரு கட்டு நாற்றரித்தால் 20 ரூபாய். வரப்பு வெட்ட 80 ரூபாய். நூறு குழி(ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பகுதி..) நிலத்தில் அறுவடை செய்தால், கூலியாக முப்பது மரக்கால்(ஒரு மூட்டையும் ஆறு மரக்காலும்)நெல்... இப்படி சகலவிதமான விவசாய வேலைகளுக்கும் நூறு ரூபாய்க்கும் குறைவான கூலியே தரப்படுகிறது(இந்த வருடம்தான் இவ்வளவு கூலி. இதற்கு முந்தைய வருடங்களில் இதைவிட குறைவு..). இதற்கு மேல் தர முடியாது என்பது அதிர்ச்சியான யதார்த்தம்.

ஏனெனில் நெல் உள்பட எந்த ஒரு விவசாய விளைபொருளுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை. விவசாயி விளைவித்தப் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயிக்க முடியாது. தனியார் வாங்கினாலாலும், அரசு வாங்கினாலும் நெல்லின் விலை மட்டும் ஏறுவதேயில்லை. பெரும்பாலான குறு விவசாயிகள், விவசாயம் செய்யாமல் நிலத்தை சும்மாப்போட்டால் ஊருக்குள் அவமானம் என்று நினைத்துதான் கடன் வாங்கியேனும் வெள்ளாமைப் பார்க்கின்றனர். குறைந்த அளவு நிலம் படைத்த பலபேர் விவசாய கூலிகளாகவும் இருக்கின்றனர் என்பதால், இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும். இதற்கு மேல் கூலி தருவதால் உண்டாகும் நஷ்டங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். இப்படி பொருளாதார ரீதியாக ஒரு அடி கூட முன்னேற்றாத இந்த தொழிலிலிருந்து விவசாயக் கூலிகள் வெளியேற நினைப்பது இயல்பானது.

சமூகக் காரணம்: இதுதான் முக்கியமானது. விவசாயக் கூலிகள் கிடைக்காமல் போவதன் அதிகபட்சக் காரணம் இதுதான்.

டெல்டா மாவட்ட விவசாயிகளை சிறு, குறு விவசாயிகள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இவர்களில் ஒன்று அல்லது இரண்டு ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இந்த இரண்டு பிரிவினரின் எண்ணிக்கையை விட, நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த விவசாய கூலிகளில், 90% விழுக்காட்டினர் தலித் மக்கள்தான். ஆதிக்கசாதியினரின் வயல்களில் நடவு முதல் அறுப்பு வரைக்கும் அனைத்துக் கூலி வேலைகளையும் பார்ப்பது இந்த தலித்துகள்தான்.

காலங்காலமாக கூலி வேலைப் பார்த்தாலும் வயிற்றுப்பாட்டுக்கே காணாது. இன்னொரு புறம் 'பறப்பய..' என்றும், 'பள்ளப்பய..' என்றும், 'வளப்பய..' என்றும் வார்த்தைக்கு வார்த்தை வன்சொற்களைக் கேட்க வேண்டியிருக்கும். வருமானத்துக்கு சாதி இந்துக்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழலில் எதிர்த்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இப்படி எதிர்க்கும் ஊர்களில் ஆதிக்க சாதியினர் செய்யும் முதல் காரியம், 'தலித்துகளை உள்ளூர் வேலைகளுக்குக் கூப்பிடுவதில்லை' என்று ஊர் கட்டுப்பாடு போடுவதுதான். பட்டிணிபோட்டு பணிய வைக்கும் பண்டய தந்திரம்தான்.. என்ன செய்வது.. பசிக்கும் வயிறு முன்னால் சகலமும் மண்டியிட வேண்டியிருக்கிறதே.. அவர்களால் செய்யக்கூடிய ஒரே விஷயம், எப்பாடுப்பட்டாவது தனது அடுத்தத் தலைமுறையை அந்த ஊரிலிருந்து இடம் பெயர்த்து நகரம் நோக்கிக் கொண்டு சென்றுவிடுவதுதான்.

படித்து வேலை கிடைத்து நகரம் நோக்கி செல்வது ஒரு பக்கமிருக்க, இந்த மிருகங்களின் ஆதிக்க வன்மத்திலிருந்து தப்பிக்க கூலி வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று நகரம் நோக்கி இடம் பெயர்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 2% விவசாயக் கூலிகள், கட்டடத் தொழிலாளர்களவும், சாயப்பட்டறை தொழிலாளர்களாகவும் டெல்டா மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்கின்றனர் என்கிறது சில வருடங்களுக்கு முந்தைய ஆய்வொன்று.

இப்படியாக விவசாய கூலி ஆட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக எல்லா விவசாய வேலைகளிலும் தேக்கம் ஏற்படுகிறது. கடந்த வருடம் டெல்டாப் பகுதியில் நடவு நட ஏற்பட்ட ஆள் தட்டுப்பாடு காரணமாக, நிலா வெளிச்சத்தில் இரவு நடவுகள் கூட நடந்தன. இப்போதும், பல கிலோமீட்டர் தூரம் தாண்டிச்சென்று, ஏதோ ஒரு ஊரிலிருந்து ஆட்களை டிராக்டரில் கூட்டி வர வேண்டிய நிலைமை. என்னதான் எல்லாவற்றிற்கும் இயந்திரம் வந்துவிட்டதாக சொன்னாலும் எல்லா வேலைகளுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது.

சாலையிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் போக, வர வழி உள்ள வயல்களுக்கு மட்டுமே இயந்திரங்கள் உதவும். உள்ளடங்கி இருக்கும் வயல்களுக்கு இவை செல்ல இயலாது. அங்கு மனித உழைப்பே பிரதானம். இப்போது ஏறு ஓட்டவும், கதிரடிக்கவும், நாற்று நடவும் இயந்திரம் வந்திருக்கிறது. இதில் நாற்று நடும் இயந்திரம் இன்னும் பரவலாகவில்லை. எக்காலத்திலும் இயந்திரத்தால் செய்ய முடியாத மனித உழைப்பால் மட்டுமே முடியக்கூடிய பணிகள் மட்டுமே விவசாயத்தில் ஏராளமாக உள்ளன.

என்ன செய்யலாம்..?: 1. முதலில் நிலம் அதிகமாக இருக்கிறது என்பதால், 'நான் கூலி ஆட்களை வைத்து மட்டுமே வேலை வாங்குவேன். சேற்றில் கால் வைக்க மாட்டேன்..' என்ற மனநிலையை மாற்றிக்கொண்டு அனைவரும் உழைக்க வேண்டும். ஏனெனில் இப்போது ஐந்து ஏக்கருக்கும் மேல் இருக்கும் விவசாயிகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர், மேம்போக்கான வேலைகளை செய்துகொண்டு, கார்வார் செய்வதோடு சரி.. உழைப்பதில்லை. இப்படியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம், விவசாயக் கூலிகளின் இடப்பெயர்வு மறுபுறம் என்று இரண்டும் எதிர்விகிதத்தில் இருப்பது ஆபத்தானது.

2. விவசாய விளைபொருளுக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமை, அதனை உற்பத்தி செய்த முதலாளிகளான விவசாயிகளிடமே இருக்க வேண்டும். இதன் பின் விளைவாக விவசாயக் கூலிகளுக்கான சம்பளம் உயரும்.

3. 'யாரும் சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது. எல்லோரும் சமமாம நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தலித்துகள் இடம் பெயர்வது தடுக்கப்படும்' என்று எழுதும்போதே காமெடியாக இருக்கிறது. 'இந்து சமய அறநிலையத்துறை'க்கு தனி அமைச்சர் வைத்திருக்கும் இந்த அரசாங்கத்திடம் இதை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் நிரந்தர தீர்வுக்கான வழி இதுதான். அதாவது நிரந்தர தீர்வென்றால், ஆதிக்க சாதியினரின் வயல் வேலைகளுக்கு தலித்துகளை தடையில்லாமல் கிடைக்கச் செய்யும் செயல்திட்டமல்ல. அவர்களின் மண்ணுரிமையையும், வாழும் உரிமையையும் காக்கும் திட்டம்.

கருத்துகள்

அய்யனார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக மிக சிறப்பான கட்டுரை
0---0--
விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் போவதற்கு நகர்புற வாழ்வின் கவர்ச்சிகளும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.அதனோடு மிக முக்கிய காரணமாய் நகரத்தில் சாதி அடையாளம் துறக்கப்படுகிறது.நகரம் சார்ந்த வழ்வில் பெயிண்டர்,பிளம்பர்,சித்தாள்,கார்பெண்டர் என இன்ன பிற வேலை சார்ந்த பெயர்களில்
அழைக்கப்படுவதும் மிகப் பெரிய ஆறுதல்..
0----0----
விவசாயம் எப்படி வளரப்போகிறது என்பதை யோசித்தாலே குழப்பமாய் இருக்கிறது ஆழியூரான்..

ஏன்யா யோசிக்க வைக்கிற :)
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன்யா யோசிக்க வைக்கிற :) //

::))
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. யாரும் அதிகம் பேசாத பொருளை துணிந்து எடுத்து எழுதியிருக்கிறீர்கள். யதார்த்தத்தை தெளிவாகச் சொல்லியிருந்தாலும்கூட நீங்கள் சொல்லும் தீர்வுகள் சாத்தியமானவையாகத் தோன்றவில்லை.நல்ல கனவெனினும் நடைமுறைச் சாத்தியமற்றவையென்பதையே சொல்ல வருகிறேன்.

இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா, ஒரு மாணவர் மருத்துவமோ இல்லை பொறியியலோ பாடமாய் எடுத்துப் படித்தால் படிப்பு முடித்த பின் அந்தந்தத் தொழிலில் நேரடியாக ஈடுபடத் தயங்குவதில்லை. ஆனால் விவசாயக் கல்லூரியில் பி.எஸ்ஸி அக்ரி முடித்தவர்கள் மட்டும் அரசின் வேளாண்மைத்துறையில் வேலைக்குப் போவதையே நான் இதுவரை பார்த்துள்ளேன். எனக்குத் தெரிந்து அக்ரி படித்து முடித்து ஊருக்கு வந்து விவசாயம் பார்த்த யாரையும் தெரியாது. இதனாலேயே வேளாண்மைத் துறையினர் சொல்லும் அறிவுரைகள் பெரும்பாலானவை வெறும் ஏட்டுச் சுரைக்காயென்று விவசாயிகளால் உதறித் தள்ளப்படுகிறது. முதலில் இந்நிலையை மாற்ற அரசு நடவடிக்கையேதும் எடுக்கலாம்.

பி.எஸ்ஸி அக்ரி படித்த யாரையேனும் ஆலோசகராய் கொண்டோ இல்லை பங்குதாரராய் கொண்டோ இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசே நிலம் குத்தகைக்கு கொடுத்தும் , மற்ற கருவிகள் வாங்க கடனுதவி செய்தும் பெரிய அளவில் இயந்திரங்களை உபயோகித்து உற்பத்தி செய்ய ஊக்குவிக்கலாம். பசுமை விகடனில் சமீபத்தில் மைசூரில் நடக்கும் ஒரு கூட்டுறவுப் பண்ணையைப் பற்றி எழுதியிருந்ததை படிக்கையில் நம்மூரில் இதற்கெல்லாம் வாய்ப்பேயில்லையா என்ற ஏக்கம் வந்தது. இந்த கூட்டுறவுப் பண்ணை விவசாயமென்பது எனது நீண்ட கால கனவுத் திட்டம். எவ்வளவுக்கு சாத்தியமென்று தெரியாததாலும், உனக்கு எதுக்கும்மா இந்தத் தலைவலியென்ற அப்பாவின் சலிப்பிற்கஞ்சியும் ஒத்திப் போட்டுக்கொண்டே போகிறேன். பார்க்கலாம், கைகூடுகிறதா கனவென்று.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு மாணவர் மருத்துவமோ இல்லை பொறியியலோ பாடமாய் எடுத்துப் படித்தால் படிப்பு முடித்த பின் அந்தந்தத் தொழிலில் நேரடியாக ஈடுபடத் தயங்குவதில்லை. ஆனால் விவசாயக் கல்லூரியில் பி.எஸ்ஸி அக்ரி முடித்தவர்கள் மட்டும் அரசின் வேளாண்மைத்துறையில் வேலைக்குப் போவதையே நான் இதுவரை பார்த்துள்ளேன். எனக்குத் தெரிந்து அக்ரி படித்து முடித்து ஊருக்கு வந்து விவசாயம் பார்த்த யாரையும் தெரியாது. //

லஷ்மி.. நிஜமாகவே என்னை திடுக்கிட வைத்த கருத்து. 100% உண்மை.
ranjith இவ்வாறு கூறியுள்ளார்…
மீண்டும் ஒரு சிறந்த பதிவு திரு ஆழியூரான். நட்சத்திரப் பதிவுகள் நட்சத்திரமாகவே மிளிர்கின்றன. வாழ்த்துக்கள்.

இந்த விவசாய நலிவிற்கு நிச்சயம் சாதீய சிந்தனைகள் ஒரு மூல மற்றும் முதன்மைக் காரணம். விவசாயக் கூலிகளுக்கான சம்பள நிர்ணயம் போன்றவற்றில், ஒரு தொழிற்சாலையின் முதலாளித்துவ சிந்தனையை ஒத்த ஒரு நிலைப்பாட்டைத்தான் ஆதிக்க சாதிகள் கூட்டாக எடுத்திருக்கின்றன என்பது வரலாறு கூறும் உண்மை.

கிராமப்புறங்களில் இருக்கும் சாதீய அடக்குமுறைகளைக் களையாமல் மறைமுகமாக ஆதரித்ததோடல்லாமல், விவசாயம் மற்றும் விவசாய வளர்ச்சிபற்றிய தொலைநோக்குப் பார்வையற்ற அரசாங்கமும் கண்டிக்கப்படவேண்டியவை. மேலும், நம் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் அல்லது வளர்ச்சிப் பணிகள் என்ற போர்வையில் செய்யப்படும் பலவும் விவசாயத்தையும், விவசாயிகளையும் வளர்த்தெடுக்கும் பாங்கிலில்லாமல், அவற்றை அழித்தொழிக்கும் பாங்கிலேயே செல்வதும் வேதனை தரக்கூடியவை.

அது தவிர பொதுவெளியில் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படையிலான ஒரு சமுதாய அங்கீகாரம், மற்றும் மதிப்பு ஆகியவை, விவசாயிகளிடத்தில் தாம் செய்யும் தொழில் பற்றி மனதளவில் ஒரு தாழ்ந்த சிந்தனையை வளர்த்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சிறு விவசாயி(ஆதிக்க சாதியாக இருந்தாலும்) கூட தமது வாரிசுகள் சேற்றில் கால் வைக்கக்கூடாது என்ற மனப்பாங்கை அவர்களிடத்தில் வளர்த்துவிட்டது.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ரஞ்சித்..
//தாம் செய்யும் தொழில் பற்றி மனதளவில் ஒரு தாழ்ந்த சிந்தனையை வளர்த்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சிறு விவசாயி(ஆதிக்க சாதியாக இருந்தாலும்) கூட தமது வாரிசுகள் சேற்றில் கால் வைக்கக்கூடாது என்ற மனப்பாங்கை அவர்களிடத்தில் வளர்த்துவிட்டது.//

என்ற உங்களது வார்த்தைகள் வெகு உண்மை. விவசாயம் செய்வது குறித்த தாழ்வுணர்ச்சி விவசாயிகளிடம் நிறைந்திருக்கிறது. இதற்கான அடிப்படை படிப்பறிவற்றவர்கள் செய்த/செய்ய வேண்டிய தொழில் என்ற எண்ணம் மற்றும் விவசாயம் மூலமாகக் கிடைக்கும் குறைவான வருமானம்.. இரண்டுமாக இருக்கலாம்.
ranjith இவ்வாறு கூறியுள்ளார்…
பொதுவெளியில் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படையிலான ஒரு சமுதாய அங்கீகாரம், மற்றும் மதிப்பு ஆகியவை,நிச்சயம் பெரும் பங்கு வகிக்கின்றன.

லக்ஷ்மி அவர்களின் கேள்வியும் பெரிதும் சிந்திக்க வைக்கிறது.

விவசாயத்தைப் பொருத்த வரையில், நிச்சயமாக விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய ஒரு கட்டாய மற்றும் விளிம்பு நிலையில் இருக்கிறோம். இப்போது கூட விழித்துக் கொல்லவில்லையென்றால், பொங்கல் திருநாள் அவசியமற்றதாகிவிடும், அப்போதும் விடுமுறை கிடைக்காது என்று கூறிப் பயமுறுத்தினால்தான் உண்டு.
பச்சோந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆட்கள் பற்றாக்குறை இன்னும் நான்கைந்து வருடங்களில் எந்த அளவுக்கு போக போகிறது பாருங்கள். டெல்டா மாவட்டங்கள் எவ்வளவோ பரவாயில்லை. காரணம் அங்கு விவசாய கூலிகளுக்கு வேறு தொழில் செய்ய வாய்ப்பு இல்லை.

ஆனால் கொங்கு மண்டலம் போன்ற இடங்களில் மற்ற தொழில் களுக்கு ஆட்கள் பற்றாகுறை இருந்துகொன்டே இருக்கிறது(திருப்பூர்). விவசாய வேலையோடு ஒப்பிடுகையில் மற்றவேலைகள் சுலப வேலைகளே.

அதுவுமில்லாமல் பெரிய விவசாயிகளே தங்கள் வாரிசுகள் விவசாயம் பார்பதை கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்.அவர்களுக்கே இப்படி என்றால் ஒரு விவசாய கூலி தன் மகனும் விவசாய கூலியாக வந்து நாட்டிற்கு உணவளிக்கும் புண்ணியத்தை செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பான்?

ஆனால் இவை அனைத்தும் நன்மைக்கே. ஏனெனில் நீங்கள் டெல்டா மாவட்டங்கலிள் கவனித்திருக்கக் கூடும் ஒரு ஏக்கர் அளவுக்கு மட்டுமே நிலம் வைத்திருப்போர் எண்ணிக்கை தான் அதிகம். அதை வைத்துகொண்டு எந்த சீர்திருத்த விவசாயமும் செய்ய முடியாது.

இப்போதே கொங்கு மண்டலத்தில் ஆள் கூலி 150 ரூபாய். பெண் என்றால் 100 ரூபாய்.போன வருடம் நல்ல மழை பெய்த பின்பு எனக்கு தெரிந்த 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு பாட்டாளி விவசாயிடம் என்ன விவசாயம் செய்து இருக்கிரீர்கள் என்று கேட்டேன். அவர் பதில் அதிர்ச்சி அடைய வைத்தது

மாட்டு தீவனத்துக்கு மட்டும் சோளம் பொட்ருகேன். அதற்கான வேலைகளை நானே செய்து கொள்கிறேன். என் மனைவி தினமும் கூலி வேலைக்கு போகிரார். நானும் அப்பபோ வேலைக்கு போகிரேன் மாசம் 3000 லிருந்து 4000 ரூபாய் கிடைகிறது. ரொம்ப சந்தோஷம் என்று கூறினார்.

சொந்த நிலம் வைத்திருக்கும் சம்சாரிக்கு 4000 ரூபாய் வருமானம் என்பது அவ்வளவு சந்தோஷம்

மேட்டருக்கு வருகிரேன். இந்த சிறு விவசாயிகள் விவசாயத்தை நம்பி பிழைக்கமுடியாத சூழ்நிலை வரும்( இப்ப மட்டும் என்ன வாழுதாமா?) அப்போ கூட்டு பண்ணையங்கள் 1000,2000 ஏக்கர்களுக்கு ஒன்றாக வரும். அப்பொது இயந்திரங்கலின் உதவி கடனுதவி மார்கெட்டிங் எல்லாவற்றிற்க்கும் நல்ல வழி பிறக்கும்.

(எல்லாரையும் கலாய்க்க ஒரு வலைப்பூ ஆரம்பிச்சா எடுத்த உடனே சீரியசா பேச வெச்சுட்டீங்களே மக்கா.
ஆமா மக்களே எப்படி டைப் பன்ரிங்க. எனக்கு இத டைப் பண்ண மட்டும் 2 மணி நேரம் ஆச்சு:( )
படகோட்டி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

தாங்கள் சொல்வது போல சாதி ஒரு காரணமாகத் தெரியவில்லை. விவசாயக் கூலி பொதுவாக குறைவாகத் தெரிகிறது. சித்தாள், கொத்தனார் வேலைகளில் இதைவிட கூடுதலாக பணம் கிடைக்கிறது மற்றும் பஸ்ஸிற்குக் கூட காசு கொடுத்து விடுகிறார்கள். டீ, வடை கூட உண்டு. கிலோ 2 ருபாய்கு அரிசி கொடுத்ததால், மேஞ்செலவுக்கு மிச்சத்தைப் பயன்படுத்தலாம், சேமிக்கலாம். ஆக, சேற்றில் கிடந்து உழலுவதை விட, பஸ்ஸில் போய் பட்டணத்தில் வேலை பார்ப்பது இவர்களுக்கு பெரிதாகத் தெரிகிறது.


இந்த செயற்கையான ஆளில்லாத் திண்டாட்டம் போக்க கூட்டு விவசாயம் மேற்கொள்ளலாம். இயந்திரங்கள் ஆளில்லாக் குறையைப் போக்கும்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
பச்சோந்தி.. இரண்டு மணி நேரம் பிடித்ததா என்ன..? எனக்கு டைப் தெரியும். உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லையே..
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
லஷ்மி, படகோட்டி,பச்சோந்தி.. அனைவருமே கூட்டுப்பண்ணை திட்டம் இதற்கு ஒரு தீர்வைதரலாம் என்கிறார்கள். நமது ஆதார பலமான கூட்டுறவின் அடையாளமான அது நிச்சயமாக வெற்றி ஃபார்முலாவாகத்தான் இருக்கும்.
முத்துலெட்சுமி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் பதிவு நன்றாக இருக்கிறது...கிராமத்தில் வசதிகளை பெருக்கினால் ஒருவேளை கிராமத்திலிருந்து வெளியேறும் ஆட்கள் குறையலாம் போல...

லக்ஷ்மி பேரைப்போல நாம் அதிகம் விசயத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்று இப்போதும் உணர்கிறேன்..என் அம்மாவிடம் அம்மா ந்ம்ம தாத்தாக்கு தாத்தா காலத்தில் விளைநிலம் எல்லாம் வைத்திருந்தோமே எனக்கு விவசாயம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றூ சொன்னேன். படிப்பு இல்லீங்க நேரடியாக இறங்கி செய்ய ....அம்மா சொன்னாங்க " ம் சேத்துல காலவச்சு பாத்தால்ல உனக்கு தெரியும் என்னமோ ஈஸியா சொல்றயே "
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

எனது பலப்பதிவுகளிலும் , மேலும் ,மா.சிவக்குமார், மர்றும், ஓகை நடராஜன் ஆகியோர் பதிவுகளிலும் விவசாயம் குறித்து பல முறைப்பேசியுள்ளோம், இங்கு நீங்கள் பேசியவையில் பலவும் அங்கு ஏற்கனவேப்பேசப்பட்டுள்ளது.

எத்தனை முறை வேண்டுமானாலும் விவசாயம் குறித்து பேசலாம், ஏன் எனில் அத்தியாவசியமானது அது.

சாதியக்கொடுமை ஒன்று தான் அவ்வளவு எளிதில் தீர்க்க முடியாது.அரசின் சட்ட திட்டங்களுக்கு ஆதிக்க சாதியினர் அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்து வர மாட்டார்கள்.(பாப்பா பட்டி,கீரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்களே உதாரணம்)

விவசாயம் நசிந்து வருவது குறித்து அதிகம் பேச வேண்டும், அப்பொழுது தான் பலரையும் சென்று சேரும்.
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
லஷ்மி ,
//ஆனால் விவசாயக் கல்லூரியில் பி.எஸ்ஸி அக்ரி முடித்தவர்கள் மட்டும் அரசின் வேளாண்மைத்துறையில் வேலைக்குப் போவதையே நான் இதுவரை பார்த்துள்ளேன். எனக்குத் தெரிந்து அக்ரி படித்து முடித்து ஊருக்கு வந்து விவசாயம் பார்த்த யாரையும் தெரியாது//

நீங்க எந்த ஊருங்க , எத்தனை அக்ரி படிச்சவங்களை உங்களுக்கு தெரியும்!

நம்மாழ்வார் என்ற இயற்கை விவசாயம் குறித்து பரப்பும் , செய்யும் ஒருவர் அக்ரி படித்தவர் தான்! இன்னும் பலர் நுண்ணுயிர் உரம் , விவசாயம் என செய்தும் வருகிறார்கள். ஒரு வேளை எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். இதை விட பெரிய காரணம் , கல்லூரிப்படிப்பு படித்து விட்டு நம்மை போல பையனும் விவசாயம் தான் செய்ய வேண்டுமா என என்னும் பெறோர் தான் அதிகம். அவர்கள் சொல்வது விவசாயம் செய்ய எதுக்கு உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன் என்பது. ஏன் எனில் அவர்கள் என்ன படித்து விட்டா விவசாயம் செய்கிறார்கள்.

விவசாயம் படித்தால் போதுமா , விவசாயம் செய்ய சொந்த நிலம் வேண்டும், அப்புறம் அதற்கு முதலீடு வேண்டும். இது இரண்டும் இல்லை எனில் வேலை தேடித்தான் போக வேண்டும்.

இல்லைத்தெரியாமல் தான் கேட்கிறேன் எலெக்ரானிக்ஸ் எஞ்சினியர் படித்தவர்கள் எத்தனை பேர் சொந்தமாக டீ.வி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்கள்.

டாக்டர், சிவில் எஞ்சினியர் தவிர வேறு யாரும் அவ்வளவாக சொந்தமாக தொழில் செய்யப்போவது இல்லை. ஒரு ரூம் வாடகை எடுத்தால் போதும் அவர்களுக்கு. மற்ற துறை படித்தவர்கள் வெகு சொற்பமே சுயத்தொழில் செய்வார்கள்.

அக்ரி படித்தவர்களின் ஆலோசனையை விவசாயிகள் கேட்காதற்கு காரணம் , இத்தனைக்காலமாக படித்து விட்டா செய்தோம் என்ற எண்ணம் தான். அனுபவ அறிவே போதும் என எண்ணுகிறார்கள்.மற்ற துறையில் எல்லோரும் சுயமாக இதற்கு முன்னர் செய்துகொண்டு இல்லை.எனவே ஒர்ரூ நிபுணர் வந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள்.

உதாரணமாக கேட்டரிங்க் படித்தவர்களை சிறு ஹோட்டல்களில் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை. அது போல தான் விவசாயிகளும் அக்ரி படித்தவர்களை நாடுவதில்லை. அதுவே பெரிய பண்ணைகள் வேலைக்கு வைத்துக்கொள்கின்றன.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு.
பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்வது தவிர்க்க முடியாதது. இதற்கான மூள காரணங்களை நீங்களே சரிபட விவரித்து இருக்கிறீர்கள்.

இதுவரை நம் மக்களை நாமே நசுக்கி அழித்து வந்திருக்கிறோம். அழித்த பிறகும் இன்னும் வேண்டும் என்றால் எங்கு போவது? ஒரு காலம் இல்லாயென்றாலும் இன்னொரு காலம் இந்நிலைக்கு வந்தே ஆகவேண்டும்.

ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நல்ல சம்பளம், வசதிகள், பாதுகாப்பு, சன்மானங்கள், தக்க உரிமைகள் அனைத்தும் கிடைத்தால்தான் நன்றாக வேலை செய்வார்கள். தொழிற்சாலையும் நன்கு வளரும்.

கூலியாட்களின் உழைப்பை நம்பியே பயிர்செய்துவிட்டு, பின் அவர்களுக்கு எந்த சவுகரியமும் பாதுகாப்பும் மரியாதையும் தகுந்த கூலியும் தராமலிருந்தால், அவர்கள் எப்படி அதிக காலம் தாக்குபிடிப்பார்கள்?

இது போன்ற கேள்விகளோடே மண்டைய போட்டு குடைந்துகொண்டு இருக்க வேண்டியதுதான்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பான பதிவு.

பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் ஊரை சுற்றிய எல்லா நிலங்களிலும் விவசாயம் நடக்கும். நானும் விடுமுறை நாட்களில் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது அந்த அளவுக்கு நடப்பதில்லை என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. எப்பொழுதும் விவசாயியின் வாழ்க்கை நஸ்டத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் நிலமையில் வேறு வழியில்லாமல் நகரத்தை நோக்கி நகர்வது தொடர்கிறது.
ILA(a)இளா இவ்வாறு கூறியுள்ளார்…
http://vivasaayi.blogspot.com/2005/09/blog-post_15.html
ஓகை இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான், ஒரு நல்ல பதிவைத் தந்திருக்கிறீர்கள்.

தயவுசெய்து இந்தப் பதிவைப் படியுங்கள். டெல்ட்டாவைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ஒருவரின் கதையாக என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். என் பார்வை உங்கள் பார்வையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
ஜெஸிலா இவ்வாறு கூறியுள்ளார்…
'சேத்துல நாங்க கால் வைச்சாத்தான் சோத்துல நீங்க கை வைக்க முடியும்'னு வசனம் கேட்டிருக்கிறேன். ஏறு ஓட்டுறது, நடவு நடுறது, விவசாயம் இதெல்லாமும் திரைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். ரொம்ப அழகான தெளிவான கட்டுரை- எனக்கும் புரியுறா மாதிரி எழுதியிருக்கீங்க நன்றி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பின்னூட்டம் உங்கள் புகைப்படத்தைப் பற்றியது.

நீங்கள் ஏதோ உங்கள் முதுகிலிருந்து ஒரு பெரிய பட்டா கத்தியை எடுப்பது போல இருக்கிரது.

கோவி
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

சிறந்த பதிவு!

மிகத் தெளிவாக பிரச்சனையையும் அதற்கான தீர்வு குறித்தும் அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

ஒரு விடயம் மட்டும் பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகிறேன். இந்து அறநிலைய ஆட்சித்துறை என்பது கோவில்களில் ஆதிக்க சக்திகளை அடக்கவும் அங்கு நடக்கும் கணக்கு வழக்குகளை கவனிக்கவும் உதவுகிறது என்பது என் புரிதல்.

ஏனெனில், ஒரு பிரசித்தி பெற்ற கோவிலில் துனை ஆனையாளராக ஒரு தலித் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அந்த கோவிலில் யாராக இருந்தாலும் மரியாதை செய்தாக வேண்டும். அந்த பதவில் இருப்பவர்கள் அந்த கோவிலைப் பொருத்தவரை எல்லாம். அந்த கோவிலுக்கு சொந்தமான மருத்துமனை, பள்ளி எல்லாம் அவரின் மேல் பார்வையில்தான்.

அந்த துறையின் பெறும் சில பயன்கள் சில.. குறிப்பிடுவதற்காக சொல்கிறேன்.

மற்றபடி எனக்கும் அந்த கேள்வி உண்டு. எதற்கு தனித் துறை என..

பதிவுக்கு மிக்க நன்றி!
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யா!!!

சமூகத்தில அடிமைப்ப்ட்டுகிடக்கிறவுங்கள முன்னேற விட மாட்டேங்கிருங்க?.

அவுங்க பிள்ளைங்கலாம் படிச்சி முன்னேறட்டும்.

என்னங்க 65% மக்க விவசாயம் பாத்தா எப்படிங்க அவங்க பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் முன்னேறது?
10% போதும் எல்லாறுடைய சாப்பாட்டிற்கு.

நம்ம அரசாங்கம், அதிகாரிகள் கீழே குடுக்கப்பட்டுள்ள தொடர்பில் உள்ள மாதிரி அறிவியல் திரிவுபட்ட (psuedo-scientific extrapolated datas/ extrapolations based on unverified scientific models) http://www.icpd.org/indian_development/index.htm
விளக்கங்களை முன்னிறுத்தும் வரை
மாற்றம் என்பதை எழுத்தில் மட்டுமே காணமுடியும்.்
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ஓகை.. நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பின் வழிசென்று செல்லமுத்துவின் கதை படித்தேன். நிறைய உண்மைகளும், இயல்பான எழுத்து நடையும் அருமை. என் கருத்தை அங்கேயே சொல்லியிருக்கிறேன். இதே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றிய அந்தக் கதையை படிக்குமாறு இங்கு பின்னூட்டமிட்டிருக்கிற
நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இது தொடர்பான BBC செய்தி தொகுப்பு ஒன்று. விவசாயிகள் மற்றும் கூலியாட்களின் நேர்க்காணலுடன்.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/05/070528_agriseries.shtml
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
தேரியூரான்.. நம் இருவரின் நோக்கமும் ஒன்றே. விவசாயம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது என்ற உங்கள் கருத்து என் கட்டுரைக்குள்ளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான தீர்வாக விவசாயத்தை விட்டு வெளியே வருவதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். நான் பிரச்னைகளை சரிசெய்து தொடர்ந்து விவசாயம் செய்வதை தீர்வாக சொல்கிறேன். மற்றபடி யாரும் படித்து முன்னேறாமல் சேற்றில் உழன்று சாகுங்கள் என்று நான் சாபமிடவில்லையே..
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
சிவபாலன்.. நீங்கள் சொல்வது சரிதான். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதுதான். காலப்போக்கில் உருவாக்கியவர்களின் கொள்கைகள் நீர்த்து போனதைபோலவே, உருவானவைகளின் நோக்கமும் சிதைந்துபோய்விட்டன. இப்போது, மற்ற அரசுத்துறைகளை போலவே அதுவும் நீர்த்துப்போய்விட்டது என்றாலும், 'இது மத சார்பற்ற நாடு..' என்ற கோஷத்தின் பொய்த்தன்மையை வெளிக்கொணரும் சாட்சியாக இருக்கிறது அது.
பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
//'தலித்துகளை உள்ளூர் வேலைகளுக்குக் கூப்பிடுவதில்லை' என்று ஊர் கட்டுப்பாடு போடுவதுதான். பட்டிணிபோட்டு பணிய வைக்கும் பண்டய தந்திரம்தான்.. என்ன செய்வது.. பசிக்கும் வயிறு முன்னால் சகலமும் மண்டியிட வேண்டியிருக்கிறதே..
//

சுட்டும் உண்மைகள் ஏராளம்...
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறந்த பதிவு. சிந்திக்க வச்சுருக்கு.

கடைசியில் ஜெயிப்பது வயித்துப் பசிதான்(-:
இராஜராஜன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்

மிக அருமையான பதிவு

இந்த பிறட்சணைகளுக்கு கூட்டுபண்ணையமே சிறந்த தீர்வு என நான் நிணைக்கின்றேன்
தூரிகா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமையான பதிவு
ஜாலிஜம்பர் இவ்வாறு கூறியுள்ளார்…
//அவர்களின் மண்ணுரிமையையும், வாழும் உரிமையையும் காக்கும் திட்டம்.//

இப்படி ஒரு திட்டம் புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.ஏழைக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்பதெல்லாம் இதைப் போன்ற எண்ணங்களின் சிறு வெளிப்பாடே.

விவசாயம் உயர்ந்த தொழிலாக இருந்தது ஒரு காலம்.அதைவிட உயர்ந்தது(?) இறைப்பணியாளர் தொழில்.அவர்களே காலமாற்றத்திற்கு ஏற்றவாறு டாக்டர்,வக்கில்,இஞ்சீனியர் என்று மாறிவிட்டனர்.

மற்றவர்கள் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்,பெயிண்டர்,எலக்ட்ரீசியன்,சித்தாள் என்று மாறிக்கொள்கின்றனர்.

இது இயல்பானது,வரவேற்கத்தக்கது.

மக்களின் இந்த இடப்பெயர்ச்சியால் விவசாயம் பாதிக்காது.மேலைநாடுகளின் விவசாய தொழில் நுணுக்கங்கள் ,எல்லாவற்றுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்றவை உள்நுழைந்து விடும்.

இதையெல்லாம் செய்ய முடியாத ஆதிக்கசாதி சிறு விவசாயிகள் காலப்போக்கில் தத்தமது மனநிலைக்கேற்ப கடைநிலைப் பாட்டாளிகளாகவோ,இடைநிலை தொழிலாளர்களாகவோ,அல்லது உயர்நிலை அதிகாரிகளாகவோ மாறிவிடுவர்.

சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு.
சுந்தர் / Sundar இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு !
திரு இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு கூலி விவசாய தொழிலாளிகளுக்கு நிலம் கொடுக்கப்படவேண்டும். விவசாயிகளிடம் கூட்டுறவு முறையிலான உற்பத்தி, அதற்கான தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.

மிகமுக்கியமாக பிறவேலைகளுக்கு இருக்கும் (வருமான) பாதுகாப்பு விவசாயத்தில் இல்லை. அதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அவசியம்.

அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட மிககுறைந்த அளவில் ஊதியம் இருப்பது விவசாயவேலைகளை விட்டு இடம்பெயர இன்னொரு காரணம். குறைந்த ஊதியத்திற்கும் விவசாய விளைபொருட்கள் விலை, நிலவுடமையாளர்களது மேலாதிக்க மனப்பான்மை, இடுபொருட்களது விலை என பல தொடர்புகள் இருக்கின்றன. இவற்றை நெறிப்படுத்தும் வரை காவிரியில் தண்ணீர் வந்தாலும் விவசாயிகள் நிலை பரிதாபமே.

இது ஒரு தனி விவசாயியின் பிரச்சனை மட்டுமல்ல. இந்த நிலை நீடித்தால் நாட்டின் உணவு உற்பத்திக்கும், தன்னிறவிற்கும் மிகப்பெரிய ஆபத்து. டாலர் பொருளாதாரத்தை பார்த்து எச்சில் வடிக்கும் நிபுணர்கள் கோவணத்தையும் உருவப்படுகிற நிலையை உணர்வதில்லை.

ஓட்டுப்போடும் சுதந்திரம் மட்ட்டும் கிடைத்தும், பொருளாதார விடுதலையை நோக்கி நகராத தன்மைக்கு விவசாயிகள் பிரச்சனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
Vaasi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
நம்ம ஊரப்பத்தியும், அப்பா செஞ்ச தொழில பத்தியும் சொல்லியிருக்கீங்க. வகை படுத்தியும் காட்டிருக்கீங்க. ரொம்ப அருமையா இருக்கு. சரி விசயத்துக்கு வருவோம். நா ஊர விட்டு ஓடி வந்து ரொம்ப நாளாச்சிங்க, ஆனாலும் வீட்ல விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. நான் தான் முதல் போடறேன் வருசா வருசமும். இது வரை திரும்ப எதுவும் வரல.காரணமெல்லாம் உங்க பதிவிலே இருக்கு.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்திலே சம்பளம் அதிகமாம் மற்ற இடங்கள்லே இதவிட குறைவாத்தான் இருக்குன்னு நண்பர் ஒருவர் சொன்னார்.
உங்க வயசு என்னன்னு தெரியல, ஏன்னா \\வீட்டுக்கு வீடு மாடு வளர்த்து, வீட்டுக்குப் பின்னால் எருக்குழி தோண்டி, மாட்டுச்சாணத்தை எருக்குழியில் கொட்டி, அதையே நிலத்திற்கு அடியுரமாய் இட்டு விவசாயம் செய்த நம் பாரம்பரிய விவசாயம் இப்போது இல்லை.\\ நா விவசாயத்த பாக்கர பொழுது (செய்யல) ரசாயன உரம் போட்ட வயல் ல பூச்சி புடிச்சிது, வேற வழி இல்லாம அவன் மருந்தடிச்சான். பக்கத்து வயல் பூச்சி நம்ம வயல சும்மா விடுமா? நாங்களும் வேற வழி இல்லாம மருந்தடிச்சோம் ஆனா பாருங்க மகசூல் பக்கத்தில வந்தத விட குறைவாத்தான் வந்துச்சி. அடுத்த வருசம் அப்பாவும் போட்டாரு அடி உரம் மேல் உரம் எல்லாம். விளைச்சலும் நல்லாத்தான் வந்துச்சி. இவ்ளோ வருசங்கழிச்சு போன வாரம் ஒருத்தர் பாடம் நடத்துனாரு. ஒரு தொழில் ஆரம்பிச்சா அதுல லாபம் உண்டாக்குனும்-னு ஆரம்பிக்கணும், இல்லேன்னா அது தொழில் இல்ல. இப்ப சொல்லு தம்பி விவசாயம் பாக்குறது என்ன தர்ம சத்திரம் நடத்துறதுக்கா? ஆதாயம் பாத்தா தப்பா?
\\அந்தக் கூலி ஆட்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்ன.\\
கூலி கம்மின்னு நெறய பேர் சொல்ராங்க, கூலி குடுக்க முடியாம தெணர்னது எங்களுக்கும் தெரியுங்க. ஒரு வேலி நெலமிருந்தும் கஷ்டப்பட்டது இன்னும் வலிக்குதுப்பா.
\\ஒழுங்காக விளைந்தால் போட்ட காசை எடுத்து,- இல்லையெனில் இருப்பதை சாப்பாட்டுக்கு வைத்துக்கொண்டு\\ இது அடிக்கடி நடக்கும்.

\\கூலியாக முப்பது மரக்கால்(ஒரு மூட்டையும் ஆறு மரக்காலும்)நெல்.\\
விளச்சல் நல்லா வராதபோதும் இந்த அளவு வேணும்-னு கேக்கராங்களே அப்ப என்னத்த குடுப்பே?
\\இதற்கு மேல் கூலி தருவதால் உண்டாகும் நஷ்டங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும\\
ரொம்ப கம்மி பேர்தான் இப்படி நெனக்கிறாங்க(வயசானவங்க)இள ரத்தம் அடுத்த எடத்தில வேல பாக்க போவுது.
\\இன்னொரு புறம் 'பறப்பய..' என்றும், 'பள்ளப்பய..' என்றும், 'வளப்பய..' என்றும் வார்த்தைக்கு வார்த்தை வன்சொற்களைக் கேட்க வேண்டியிருக்கும்\\
எங்க ஊரு பக்கம் இப்படி சொன்னா அடி தடி நடக்கும் வூட்டுக்கள்ளார வேணா சொல்லிக்கலாம்.
\\நான் கூலி ஆட்களை வைத்து மட்டுமே வேலை வாங்குவேன். சேற்றில் கால் வைக்க மாட்டேன்..' என்ற மனநிலையை மாற்றிக்கொண்டு அனைவரும் உழைக்க வேண்டும்\\

கம்பெனியில வேல பாக்கரவன் எல்லாருமே கீழ் மட்ட வேலை பாக்குறதில்லையே? முதலாளி தேவைப்பட்டால் உழைக்க முன் வர வேண்டும்.

சாதி சாதின்னு ஒரு பெரிய விவாதமே நடக்குதுப்பா இங்க. இதப்பத்தி நிறைய பேசணும் ஒரு தனி பதிவ போட்டு நலமான ஒரு விவாதம் நடத்தணும். தலித்துக்கு கோட்டா போட்டு படிப்பு வேலைன்னு முன்னுரிமை வழங்கியும் அவன் வேலைக்கு போன பின்னே காசு வாங்காம அவனுடைய இனத்த திருத்தப் பார்க்கிறானா? இல்லையே. சுயநலம் யாரையும் விட்டு வைக்கலப்பா. இப்போ நேரமில்ல பின்னால பாப்போம்
ரவிசங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான், உங்க நட்சத்திர இடுகைகள் எல்லாமே நல்லா இருக்கு..

தஞ்சை சூழல் எப்படியோ தெரியல..ஆனா, புதுகை பகுதிகள்ல நீங்க சொல்லுற மாதிரி சாதி ஒரு பெரும் காரணமா தெரில..இன்னும் வேளாண்மை செய்து உழைக்கும் குடும்பத்தில் இருப்பவன் என்ற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

எங்கள் ஊரைப் பொறுத்த வரை தலித்துகள் அதிக தொகையில் வந்து கூலி வேலை செய்வதில்லை. கோனார், கவுண்டர், அம்பலகாரர் என்று இடைப்பட்ட சாதியினர் நிறைய செய்வார்கள். ஆனால், 90களுக்குப் பிறகு அரபு நாடுகள், சிங்கை-மலேசியா, இந்திய நகரங்களுக்கு இடம்பெயர்வு காரணமாக ஊர்களுக்குள் வேலை செய்ய ஆண்களே இல்லாமல் போய் விட்டார்கள் என்பது தான் உண்மை நிலை. 4,5 ஆண்டுகள் வெளியில் வேலை செய்து வரும் அவர்கள் சொந்தமாக நிலம் வாங்கி, வீடு கட்டும் அளவுக்கு முன்னேறி விடுகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பப் பெண்களும் கூலிக்கு வருவதைப் படிப்படியாக குறைத்துக் கொள்கிறார்கள். 3, 4 ஏக்கர் மட்டும் கொண்டு ஊரை விட்டு வெளியேறாமல் இழுத்துப் பிடித்து விவசாயம் செய்து வந்தவர்களின் பொருளாதார நிலை முன்னேறாமல் அப்படியே தங்கி இருக்கிறது. இவர்களை விட முந்தைய கூலிக்காரர்களிடம் அதிகம் பணம் இருந்தாலும் முன்னாள் முதலாளி, ஆதிக்க சாதி, பாரம்பரியப் பெருமை காரணமாக சிறு விவசாயிகளின் கவுரவம் மட்டும் காப்பாற்றப்பட்டு வருகிறது. இதே வறட்டுப் பெருமையைக் காக்கும் பொருட்டே தான், ஊர் சிரிக்கும் என்று பயந்து நட்டமாகும் என்று தெரிந்தே விவசாயம் செய்து நொடித்துப் போகிறார்கள். விவசாயம் செய்வதை விட செய்யாமல் இருப்பதே லாபம் என்று வீட்டு உணவுத் தேவைகளுக்கு மட்டும் பயிரிடும் நிலைமையும் உண்டு. ஏனென்றால் குடியானவன் ration அரிசி வாங்குவது இன்னும் மானப் பிரச்சினையாக இருக்கிறது. தேவைப்படும் கூலி வேலைகளுக்கு விவசாயிகளே தங்களுக்குள் ஆள் மாற்றி மாற்றி முறை வைத்து ஒவ்வொருவர் வேலைக்காகச் சென்று உழைப்பது உண்டு. கூலி கிடையாது. ஆனால், நம் வயலில் வேலை இருக்கும் போது பக்கத்து வீட்டுக் காரர் வந்து உழைப்பார். அவர் வயலில் வேலை இருக்கும் போது நாம் போய் உழைக்க வேண்டும். பெரும்பாலும் பெண்கள் இது போல் ஆள் மாற்றி செல்கிறார்கள்.

என் அப்பா சொல்வார்..supply dictated market, demand dictated market போல் இப்ப இருப்பது labour dictated market..கரும்பு அறுவடை போன்ற காலங்களில் இது தெளிவாகப் புரியும். 100க்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து குடும்பம் குடும்பமாக ஊர் ஊராக வெட்டித் தருகிறார்கள். இந்த ஆட்கள் அனுப்புவதை ஆலைகள் ஒழுங்குபடுத்துகின்றன. இந்த வெட்டுக் காரர்களை நம் வயலுக்கு கொண்டு வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். சாதி ஆதிக்கம் எல்லாம் உள்ளூரில் தான் செல்லும். இது போல் ஊர் விட்டு ஊர் வருபவர்கள் தொழில்முறை வேலைக்காரர்களாக கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். விவரம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

உண்மையில் சிறு விவசாயிகளை விட கூலி வேலை பார்ப்பவர்களிடம் தான் இப்போது அதிக நெல் இருக்கிறது. காலம் காலமாக விவசாயம் செய்தவர்கள் + குடும்பப் பெருமை + சாதி அடையாளம் உள்ளவர்கள் இவற்றைத் துறந்து விட்டு கூலிக்குப் போக முடியாது என்பதால் ஒன்று தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார்கள். அல்லது, வெளிநாட்டு வேலைகளுக்குத் துரத்தி விடுகிறார்கள். உள்ளூரில் நாட்டாமை மாதிரி இருத்தவர்கள் எல்லாம் சிங்கப்பூரில் சாலை வேலை செய்வது கண்கூடு.

பல ஆய்வுகள், புத்தகங்கள், சட்டங்கள்,. சந்தை சீர்திருத்தங்கள் தேவைப்படும். அவற்றைப் பற்றி விரிவாக சொல்லும் அளவுக்கும் எனக்கு இத்துறையில் தேர்ச்சி இல்லை. ஆனால், இதற்கு தீர்வு என்ன என்று இரண்டு வரியில் சாதிய நோக்குடன் குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் விளக்கி விட முடியாது என்று நினைக்கிறேன்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ரவிசங்கர்,

தனிப்பதிவாகவே இடும் அளவுக்கு ஏராளமான செய்திகளுடன், நீண்ட நேரம் செலவழித்து பின்னூட்டமொன்றை இட்டிருக்கிறீகள்.

::குடியானவன் ration அரிசி வாங்குவது இன்னும் மானப் பிரச்சினையாக இருக்கிறது:: என நீங்கள் சொல்லியிருப்பது டெல்டா பகுதி முழுவதும் பொருந்தும். புதுகையின் நிலை நீங்கள் சொல்லியவாறு இருப்பதை ஓரளவு நானறிவேன்.

இறுதியில் நீங்கள் சொல்லியிருப்பது போல வெறும் சாதிய கண்ணோட்டத்திலிருந்து மட்டும் அணுகி, இந்தப் பிரச்னைக்கொரு தீர்வு காண முடியாதென்பது உண்மைதான். இதே கருத்தினை வேறு சில நண்பர்களும், வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அது என் மன ஆதங்கத்தினால் விளைந்த வார்த்தைகள்..அரசின் கொள்கை அளவிலான முடிவுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசணைகள் மூலம் இதற்கான முடிவை எட்டுவது சரியாக இருக்கும். மற்றபடி என் போன்றவர்கள் சொல்வது, சிற்றறிவின் யோசனையாகவும், சொந்த விருப்பத்தின் போதனையாகவுமே இருக்கும்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
திரு வாசி.,

உங்களின் பல ஆதங்கங்கள் நியாயமானவை. ஆனால்,

::இப்ப சொல்லு தம்பி விவசாயம் பாக்குறது என்ன தர்ம சத்திரம் நடத்துறதுக்கா:: என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக இல்லை. லாபம் பார்க்கத்தான் தொழில். ஆனால், லாபம் வருவதில்லை. ஏன்..? விவசாய பொருட்களுக்கு விலையில்லை. இதையெல்லாம் கட்டுரைக்குள்ளேயே சொல்லியிருக்கிறேனே..

::விளச்சல் நல்லா வராதபோதும் இந்த அளவு வேணும்-னு கேக்கராங்களே அப்ப என்னத்த குடுப்பே?:: என்று கேட்கிறீர்கள். விளைச்சல் எப்படி இருந்தாலும் உழைப்பு ஒன்றுதானே.. ஒரு ஏக்கருக்கு இத்தனை மூட்டை நெல் கூலி என்ற நிலையில், விளைச்சல் அதிகம் என்றாலும், குறைவு என்றாலும் உழைப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடப்போவதில்லையே..

::எங்க ஊரு பக்கம் இப்படி சொன்னா அடி தடி நடக்கும் வூட்டுக்கள்ளார வேணா சொல்லிக்கலாம்.:: எங்கள் ஊர்பக்கமும் தினசரி மூன்று முறை கூட்டிவைத்து, 'நீ பள்ளன், பறையன்..' என்று சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால், வேலை செய்யுமிடத்தில் வார்த்தைகளாக, செயல்களாக சாதித்திமிர் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும். இது மிகையில்லை. உண்மை.
ramachandranusha(உஷா) இவ்வாறு கூறியுள்ளார்…
இப்பதிவுக்கு தொடர்பில்லா இரண்டு செய்திகள்
சில வாரங்களுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் அல்லது டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்த விஷயம்- பஞ்சாப்பில்தான் ஆடம்பர கார்கள் (பென்ஸ் என்று நினைவு) அதிகமாம். வைத்திருப்பவர்கள் அனைவரும்
விவசாயிகள். அடுத்து குளீரூட்டப்பட்ட அல்டா மாடர்ன் காய்கறி சூப்பர் மார்கெட்டுகள், இடை தரகர் இல்லாமல் விவசாயி நேரடியாய் சப்ளை செய்யும் முறையில் இதுவும் பஞ்சாப்பில்.
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
//சில வாரங்களுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் அல்லது டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்த விஷயம்- பஞ்சாப்பில்தான் ஆடம்பர கார்கள் (பென்ஸ் என்று நினைவு) அதிகமாம். வைத்திருப்பவர்கள் அனைவரும்
விவசாயிகள்.//

அமிதாப்பச்சன் தான் ஒரு விவசாயி என்று கோர்ட்டில் தெரிவித்துள்ளார், ஜெயலலிதா வெங்காய விவசாயம் செய்து சொத்து சேர்த்ததாக வருமானத்திற்கு மீறிய வழக்கில் வாக்குமூலம் கொடுத்துள்ளார், மறைந்த மூப்பனார் ஒரு விவசாயி, நரசிம்ம ராவ் 1000 ஹெக்டேருக்கும் மேல் நிலம் வைத்திருந்தவர், ஏன் தற்போது ஆந்திர முதல்வர் கூட ஏழைகளின் நிலத்தை தவறுதலாக வாங்கிவிட்டதாக சுமார் 1000 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைத்துள்ளார் எனில் அவரிடம் எவ்வளவு விவசாய நிலம் இருந்து இருக்கும் , இவர்கள் எல்லாம் விவசாயிகள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள். அதனையும் நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும் :-))

நிலச்சுவாந்தார்களையும் விவசாயிகள் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால் விளங்கிவிடும் :-))
Vaasi இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி,
நீங்க இப்படி \\இன்னொரு புறம் 'பறப்பய..' என்றும், 'பள்ளப்பய..' என்றும், 'வளப்பய..' என்றும் வார்த்தைக்கு வார்த்தை வன்சொற்களைக் கேட்க வேண்டியிருக்கும்\\

கேட்க வேண்டியிருக்கும் -னு எழுதியதால் நான் அப்படி எழுதினேன் மற்றபடி ஒன்றும் இல்லை. எங்கள் ஊரில் இப்பொழுது தலித் மக்கள் கிருத்துவ மதத்தை தழுவுகிறார்கள். அடுத்த தலைமுறையில் ஜான், ஜார்ஜ் என வலம் வருவார்கள். கிருத்துவ மதத்தை பரப்புபவர்கள் பால் பவுடரும், நீ இனி மேல் கீழ் சாதி இல்லை எனவும் கூறி கொண்டு கூத்து கட்டி அடிக்கிறார்கள். மறுபடியும் மதச்சண்டை வராமலிருந்தால் நல்லது.
சதுக்க பூதம் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு மாணவர் மருத்துவமோ இல்லை பொறியியலோ பாடமாய் எடுத்துப் படித்தால் படிப்பு முடித்த பின் அந்தந்தத் தொழிலில் நேரடியாக ஈடுபடத் தயங்குவதில்லை. ஆனால் விவசாயக் கல்லூரியில் பி.எஸ்ஸி அக்ரி முடித்தவர்கள் மட்டும் அரசின் வேளாண்மைத்துறையில் வேலைக்குப் போவதையே நான் இதுவரை பார்த்துள்ளேன். எனக்குத் தெரிந்து அக்ரி படித்து முடித்து ஊருக்கு வந்து விவசாயம் பார்த்த யாரையும் தெரியாது. //

எத்தனை பொறியியல் கல்லூரி மாணவர்கள் சொந்தமாய் பொறியியல் தொழில் செய்கிறார்கள்?.அவர்கள் பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்வதயே விரும்புவார்கள். B.Sc(Agri). படித்தவர்கள் பூச்சிமருந்து,உரம்,விதை மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் உள்ள கம்பெனிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் Landscaping கம்பெனி சொந்தமாக நடத்துகிறார்கள் .ஒவ்வொரு வருடமும் 1000க்கும் மேற்பட்ட வேளாண் பட்டதாரிகள் வெளி வருகிறார்கள். ஆனால் அரசாங்க வேலையோ வெகு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கிறது.இந்தியாவில் விவசாயம் 24% GDP பங்களிக்கிறது. ஆனால் 60% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர்.எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு இயந்தர மயமாக்கலும், உற்பத்தி பெறுக்கமும் தான்.முடிந்த அளவு கூலி தொழிலாலர்கள் நகரத்துக்கு இடம் பெயர வேண்டும். வேளாண் சார்ந்த தொழில்கள் அதிகம் தொடங்க பட வேண்டும். இன்று அதை செய்யாவிட்டல் நாளை சீனாவிலிருந்து இறக்குமதியாக போகும் உணவு பொருட்களுடன் நம்முடைய பொருள் போட்டி போட முடியமல் ஒட்டு மொத்த இந்திய விவசாயமும் அழிந்து விடும்.
அமிர்தவர்ஷினி அம்மா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கட்டுரை.

யாருமே யோசிக்காத ஒன்றை திறம்பட யோசித்து கட்டுரையாக்கியிருக்கிறீர்கள்.

செருப்பு தைக்கிறவன் கூட தன் செருப்புக்கு விலை வைக்கிறான்.
ஆனால் வயிற்றுக்கு உணவிடும் விவசாயியின் நிலை.
கொடுத்தை வாங்கிட்டு போகவேண்டும்.

படித்தவர்கள் யாருமே விவசாயம் பக்கம் போகாத நிலையில், விவசாயியின் பிள்ளைகளே விவசாயம் பார்க்காத நிலையில்
பின்னாடி புவா வுக்கு என்ன வழி
என்று யோசித்து ஒன்றுமே செயயாமல் உக்காந்திருக்கும் அரசியல்வாதிகளே.

என்ன பண்ணப்போறீங்க. இதுக்கு ஒரு மாநாடு நடத்துவோமா, பேரணி வைப்போமா. பிரியாணிக்கும், ஆள் கூலிக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க.
suryajeeva இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'