மரணத்தின் சுவை என்ன?
‘இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் இறந்து போவார்கள்..’ என்ற பேருண்மை புரிந்த பால்ய வயதில் அப்பிய பயம் அது. இப்போது வரைக்கும் மரணத்தை நினைத்தால் பய கங்குகள் புகையத் தொடங்கிவிடுகின்றன. மரணம் காணும்போதெல்லாம் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத துளை வழியாக வாழ்நாள் கசிவதாகவே தோன்றுகிறது. தேடித்தேடி பொருள் சேர்த்தாலும், எத்தகைய இயல்புடையவராயிருந்தாலும், ஊர் மெச்சும் சாதனைகள் புரிந்தாலும் ஒரு நாள் இறந்துபோவோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.

‘விட்டுவிடப் போகுது உயிர்- &விட்டதும்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்..’

-என்ற பட்டிணத்தாரின் வார்த்தைகள் எப்போதும் மனதுக்குள் ஒலித்தபடியே இருக்கின்றன. இந்த மரணபயம் பல சமயங்களில் அலட்சியமாக வெளிப்படுகிறது. ‘எல்லாப்பயலும் சாகப்போறான்.. அப்புறமென்ன மயிரு..’ என்று வாழ்வின் அவமானங்களை, தோல்விகளை, வெற்றிகளை புறந்தள்ள இந்த அலட்சியம் உதவுகிறது.

‘சாவது உறுதி’ என்று தெரிந்துவிட்ட பின்பு வாழ்வு மீதான காதல், ஊற்றுபோல் பெருக்கெடுக்கிறது. குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை, சுற்றத்தை, விலங்குகளை, தாவரங்களை நேசிக்க மரணத்தை விட பெரிய காரணமெதுவும் தேவையாயில்லை. துரோகம், நன்றி, விசுவாசம், பாசம், நட்பு, பகை என அனைத்தையும் தின்று செரிக்கும் மிகப்பெரிய வயிறு சாவுக்குண்டு. பாலைவன மணல் மேட்டிற்கிணையாக, சாவின் வயிற்றில் நிரம்பிக்கிடக்கும் சாம்பல் மேட்டில், என்/உங்கள் தலைமுறைகளும், கல்லூரியில் இறந்துபோன என் தோழியொருத்தியும் இருக்கக்கூடும். ஆனாலும் தன் பசியடங்காமல், தீண்ட வரும் சர்ப்பமென நாவை நீட்டியபடி யாவரையும் தொடர்கிறது சாவு.

ஒரு மரணம் ஏற்படுத்தும் இழப்பின் வீச்சு, அதன் மீதான பயத்தை மேலும் கூட்டுகிறது. இயற்கையோ.. செயற்கையோ.. மரணம் எத்தகையதாக இருப்பினும், குறைந்தபட்சம் பத்து உயிர்களை பாதிக்கிறது. சார்ந்து வாழ்தலின் விழுக்காடும், வாழ்ந்த வாழ்வின் மீதான மதிப்பெண்ணும் மரணத்துக்குப் பிறகுதான் தெரிகிறது. ‘இந்த பூமியில் வாழவந்த அனைவருமே மரண தண்டனை கைதிகள்தான். தண்டனை நாட்களில்தான் வேறுபாடு’ என்ற கன்பூசியஸின் வரிகளும், ‘வாழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைபட்ட மௌனம்’ என்று இரண்டாவது இசைக்குறிப்பில் மரணத்தை உணரச் செய்கிற ஓஷோவும், ‘மரணமும் ஒரு அனுபவம்தான். யாருடனும் பகிந்துகொள்ள முடியாத அனுபவம்’ என்று எங்கோ யாரோ எழுதிச் சென்ற வரிகளும் மரணக்குறிப்புகளாய் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தையும் பகடி செய்து, ‘வாழ்வதற்கு எந்த நோக்கமும் இல்லாததால் இறந்துபோகிறேன்’ என்று கையசைத்து கம்பீரமாக விடைபெறும் மனத்திண்மை உடையோரும் இதே பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தன் எல்லா மாயைகளையும், எல்லா வசீகரங்களையும் அடி ஆழத்தில் ஒளித்து வைத்து புன்னகைக்கிறது மரணம்.

மரணபயமற்ற மாவீரர்களைப்பற்றிய பாடப்புத்தக வரலாறுகள் பால்யத்தில் என்னை வியக்க வைத்தன. ‘ஒரு மனிதன் மரணத்தைக் கண்டு எங்ஙனம் அஞ்சாமல் இருக்க இயலும்.?’ என்ற கேள்வி, அதன் ஆரம்ப வியப்பின் அதே விகிதத்துடன் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொருமுறை முறை வெட்டுப்படும்போதும், ‘இன்னும் சில நாட்களில் கதை முடிந்துவிடும்’ என்று யூகிக்கப்பட்டு, பின்பு எல்லோரையும் ஆச்சர்யமூட்டி உயிர் மீண்டு வரும் காசியண்ணன், மற்றொரு சண்டைக்கு மல்லுக்கட்ட எந்த தயக்கமுமின்றி கிளம்புவார். ஊருக்குள் வம்பழந்து, இரண்டு பேரை காயப்படுத்தி, தானும் வெட்டுப்படும் ஆர்வம் அவருக்கு ஒரு போதும் குறைந்ததேயில்லை. கண்டிக்காரர் வீட்டு மாமா இறந்தபோதும், அவரது பெரியப்பா இறந்தபோதும்.. ஊருக்குள் இன்னபிற மரணங்களின்போதும் ஆட்டம்போடும் கூட்டத்தின் முதல் நபராய் நிற்பது காசியண்ணன்தான். நானறிந்து எந்த மரணம் கண்டும் அவர் கலங்கியதில்லை. அவரும் ஒரு நாள் இறந்துபோனார். கடைவாயில் ஈ மொய்க்க, பாலிடாயில் நாற்றம் காற்றில் வீச, வயலில் அவர் பிணமாகக் கிடந்தற்கும், அதற்கு முந்தைய வாரம், லட்சுமியக்கா தன் வீட்டு கிணற்றடி புளியமரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கும் உள்ள தொடர்புகளை ஊரெங்கும் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் மீதான ஊராரின் பரிதாபம் ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு வியப்பு மட்டுமே மிஞ்சியது. காரணம் எதுவாக இருந்தாலும் மரணத்தைத் தேடிச்சென்று கை குலுக்கும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது..? சாவதற்கு பயமாக இருக்காதா..?

அதே கிராமத்தின் அப்பாயிகளும், அம்மாயிகளும் மரணத்தை எதிர்கொள்ளும் முறை ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது. தஞ்சாவூரில் என் ஆத்தா ஒருவர் இருக்கிறார். உடம்பில் எங்கு சுளுக்கு என்றாலும், விளக்கெண்ணையை தடவிக்கொண்டு சக்கரையாய் பேசியபடியே சடக்கென ஒரே இழுப்பில் உருவி சுளுக்கெடுக்கும் வித்தைக்காரி. வெளிநாட்டுக்கு சம்பாதிக்கப்போன அவரது மகன், அங்கேயே விபத்தொன்றில் இறந்துபோய், ஒரு பெட்டியில் சடலமாக ஊர்வந்து சேர்ந்த பிறகு, அவரது கண்கள் எப்போதும் கண்ணீரூற்றாகிவிட்டன. தன் மகள் வீட்டிலிருக்கும் ஆத்தாவை அண்மையில் பார்க்கப் போயிருந்தேன்.

"என்னத்தா.. எப்படி இருக்கீய..?"

"எனக்கென்ன கொறைச்ச..? அதான் பேரனுவொ இருக்கியள.. நீதான் ஆடிக்கொருதரம், அம்மாசிக்கொருதரம் எட்டிப்பார்க்குற.. ஆனா, எங்கெருந்தாலும் என் சாவுக்கு வந்துடுறா. பேரப்பிள்ளைவொ நெய்ப்பந்தம் புடிச்சாதான் என் கட்டை வேவும்.."

"நெய்பந்தம் புடிக்கவா ஆளில்ல.. அய்யங்கொளம் வரைக்கும் பூ கொட்டி, உருமிசெட்டு வச்சு மொளக்கிடுவோம் விடு. ஆனா, சாவுற மாதிரியிருந்தா சொல்லியனுப்பிட்டு சாவு.. நான் அங்கேயிருந்து வரணும்.."

"இவன் ஒருத்தன்.. நான் செத்தப்பிறகு என் கறி என்ன கதியாவுதோ யார் கண்டா..? ஆனா ஒண்ணுடா.. என் மொவனை குழாய்ல குடுத்து, குடுவையில சாம்பலை வாங்கியாந்த மாதிரி என்னை பண்ணிறாதிய.. என் புருஷன் வெந்த வெள்ளத்தெரி சுடுகாட்டுலதான் என் கட்டை வேவணும்.."

-இப்படியாக நீண்ட அந்த உரையாடலில், சாவுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தபோதும், இயல்பேயென காபியை ஊதி, ஊதி குடித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆத்தா மட்டுமில்லை.. வாழ்வின் விளிம்போரம் தத்திநடக்கும் பெரியவர்கள் யாவரும் பேச்சின் இயல்புபோக்கிலேயே மரணத்தையும் கடந்து போகின்றனர். புழுக்கம் ஏறிய மதிய நேர வெம்மை பொழுதுகளில், ‘இந்த எமன் ஏடெடுத்துப் பாக்க மாட்டங்குறானே..’ என்ற வார்த்தைகள், சாணம் மெழுகிய வீட்டுத் திண்ணைகளில் பட்டு எதிரொலித்திக்கொண்டே இருக்கின்றன. கண்ணுக்கு தெரியாத பூங்கொத்து ஒன்றை, எமனுக்காக எந்நேரமும் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு அலைகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. வயதானவுடன் இந்த மனநிலை இயல்பாகவே வந்துவிடுகிறதா அல்லது இவ்விதம் பேசி மரணத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்களா.. தெரியவில்லை. உணவருந்தும்போது ஒரு எல்லையில் இது போதுமானது என்று தோன்றுவது போல, வாழ்வின் கடைசியில் வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் வருமோ என்னவோ.. ஆனாலும், மரணம் நெருங்க, நெருங்க, 'இன்னும் ஒரு நாள், ஒரு நிமிடம் வாழ்ந்துவிட மாட்டோமா..?' என்ற ஏக்கம் எல்லோரின் கண்களிலும் தென்படுகிறது.

வாழ்வின் கடைசி மிடறு, மிகுந்த சுவையுடையது என்பதை மரணத் தருவாயில் இருப்பவர்களின் கண்கள் உணர்த்துகின்றன. ஆனால், மரணத்தின் சுவை என்ன..? சயனைடின் சுவை சொல்வதற்குள், அதை சுவைத்தவரின் உயிர் பிரிந்துவிடும் என்று சொல்லப்படுவது போல, மரணத்தின் சுவை சொன்னவர் எவரேனும் உண்டா..? ‘மரணமும் ஒரு அனுபவம்தான். யாருடனும் பகிந்துகொள்ள முடியாத அனுபவம்’ என்று யாரோ எழுதிச் சென்றது நினைவுக்கு வருகிறது. ஆனாலும், மரணம் குறித்த பேச்சும், பயமும் கிளம்பும் எல்லா சமயங்களிலும், தரையில் கொட்டிய நீர் மெதுவாய் எங்கும் பரவுவது போல, நாவினடியில் மெள்ளக் கசிகிறது கசப்பு.

கருத்துகள்

இராம் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா,

நல்ல பதிவு....

/
வாழ்வின் கடைசி மிடறு, மிகுந்த சுவையுடையது என்பதை மரணத் தருவாயில் இருப்பவர்களின் கண்கள் உணர்த்துகின்றன. ஆனால், மரணத்தின் சுவை என்ன..? சயனடைடின் சுவை சொல்வதற்குள், அதை சுவைத்தவரின் உயிர் பிரிந்துவிடும் என்று சொல்லப்படுவது போல, மரணத்தின் சுவை சொன்னவர் எவரேனும் உண்டா என்ன..? ஆனாலும், மரணம் குறித்த பேச்சும், பயமும் கிளம்பும் எல்லா சமயங்களிலும், தரையில் கொட்டிய நீர் மெதுவாய் எங்கும் பரவுவது போல, நாவினடியில் மெல்ல, மெல்ல கசிகிறது கசப்பு.//

அட்டகாசம்......


இதுக்கு மேலே ஒன்னும் கருத்து சொல்ல தோணலை......... :-S
பைத்தியக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//துரோகம், நன்றி, விசுவாசம், பாசம், நட்பு, பகை என அனைத்தையும் தின்று செரிக்கும் மிகப்பெரிய வயிறு சாவுக்குண்டு. பாலைவன மணல் மேட்டிற்கிணையாக, சாவின் வயிற்றில் நிரம்பிக்கிடக்கும் சாம்பல் மேட்டில், என்/உங்கள் தலைமுறைகளும், கல்லூரியில் இறந்துபோன என் தோழியொருத்தியும் இருக்கக்கூடும்.//
இந்தப் பதிவை படிக்கும்போது சம்பத்தின் 'இடைவெளி' நாவல் நினைவுக்கு வருகிறது. க்ரியாவின் வெளியீடாக 80களில் வெளிவந்ததாக நினைவு. யாராவது அதை மறு பிரசுரம் செய்தால் நன்றாக இருக்கும். சர்ப்பமாக சுற்றும் மரணத்தை குறித்து எனக்கு தெரிந்து வந்த முதல் தமிழ்நாவல் இதுதான். உலகளவில் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தவஸ்கி மரணத்தை பற்றி நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். தமிழில் சம்பத் அந்த சிகரத்தை தொட்டிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணனின் 'உறுபசி' நாவல் உயிர்மை வெளியீடாக வந்தது. நண்பனின் மரணத்தை குறித்த மூன்று தோழர்களின் நினைவலைகளே 'உறுபசி'யாக விரிந்ததிருந்தது. மரணமடைந்த அந்த நண்பனின் பெயர் சம்பத்! எதேச்சையாக ராமகிருஷ்ணன் எழுதினாரா அல்லது திட்டமிட்டு பெயர் வைத்தாரா? என்றாலும் பொருத்தமான பெயராக அமைந்துவிட்டது.

மாறுபட்ட பதிவு ஆழியூர். எப்போதோ படித்த விஷயங்கள் எல்லாம் கண் முன் துல்லியமாக விரிகிறது. ஒட்டடை படிந்த நினைவுகள் புது பாலிஷுடன் மிளிர்கிறது. பின்னூட்டமிடும்போது கூட என்னை சுற்றிலும் மரணத்தின் வாசனை பரவுவதை நுகர முடிகிறது. பதிவின் வெற்றி இதுதான்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
இராம்.. இதை எழுதும்போதே, பின்னூட்டமிடப்போகும் நண்பர்களின் மனநிலை என்னவாக இருக்கக்கூடும் என்று யோசித்தான். நீங்கள் சொல்வது போல சொல்வதற்கு எதுவுமற்று, வெறுமையான மனதோடு வந்த வழி திரும்பிப்போகக்கூடும் என்றுதான் நினைத்தேன்.அதையே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
பைத்தியக்காரன்..

நீங்களும், மொழியும் நிலமும்(ஜமாலன்) என்ற பதிவரும் பின்னூட்டங்களிலேயே பல விஷயங்களை விட்டுச் செல்கிறீர்கள். உங்கள் வாசிப்பிற்கான சாட்சியாக இருக்கும் பின்னூட்ட வார்த்தைகள், பல விஷயங்களை தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற இடைவெளி, உறுபசி இரண்டையுமே நானின்னும் வாசிக்கவில்லை. நெடுங்குருதி மட்டுமே இப்போது என் வாசிப்பில்..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அச்சம் என்பது அறியாமையால் உருவாகும் உணர்வாகும்.
மெய்யறிவு சித்தித்தால் அன்றி அச்சத்தை அகற்றுவதென்பது இயலாத விடயமாகும். அதற்காக நம் முன்னேர்கள் பல முயற்சிகள் எடுத்துள்ளார்கள். அதில் பகவத்கீதையும்
ஒன்று. இந்த லிங்கில் பகவத்கீதை மிகவும் எளிமையாக விளக்குகிறார்.

http://www.sangeethapriya.org/~tvg/247.GITA%20-VELUKKUDI%20SRI%20KRISHNAN/
PPattian : புபட்டியன் இவ்வாறு கூறியுள்ளார்…
மரணம்'கிற தலைப்பில இதை விட சிறந்த கட்டுரையை நான் இதுக்கு முதலில படிச்சதில்ல... அருமை...
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு!

நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்..

மரணம் தெரிந்தவுடன் வாழ்வை காதலிப்பது அதிகமாகிவிட்டது என குறிப்பிடுகிறீர்கள்

இதே தீவிரவாதியின் எண்ணம் நேர் எதிராக இருக்கும் இல்லையா?

உங்களைப் போலவே நானும் வேறு மாதிரி சிந்துப்பார்த்தேன்.. தீவிரவாதியின் சிந்தனையை..

ம்ம்ம்ம்...

மரணம் எவ்வளவோ பெருந்தலைவர்கள் செய்து காட்டமுடியாத சமத்துவத்தை சாதிக்கிறது.
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்வையும் மரணத்தையும் இலகுவாக அணுகும் போக்கு முதுமையில் நமது நாடுகளில்
வித்தியாசமானதே! ஆனால் இங்கே
80 வயதிலும்,வயது போகுதே சாகப் போகிறோமென வருத்தப்படுவோர் அதிகம்.
முதியோர் சாகவில்லையேன கவலைப்படும் உறவுகளும் அதிகம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்க நட்சத்திர வாரம் ரொம்ப நல்லா போகுது.
தொடர்ந்து நிறைய எழுதுங்க! வாழ்த்துக்கள்!
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு.

"அடிவயிற்றை ஒருவித
பயம் கவ்விப்பிடிக்க
அம்மா உள்ளிட்ட
எல்லா பெரிய உறவுகளும்
நினைவினிலே ஊர்வலமாய்
வந்து போகிறார்கள்
அகால நடுநிசியில்
தெருநாய் ஊளையிடும் இரவுகளில்"

என்று ஒரு கவிதை படித்திருக்கிறேன்.

"தம்பி! சாவு ஏன் எல்லோரையும் மிரட்டுது தெரியுமா?" என்று கேட்டார்.

"தன்னைப் பற்றி நினைக்க வைப்பதால் இருக்கலாம். அங்கும் இங்கும் பறந்து கொண்டிருப்பவனை இழுத்துத் தரையில் காலூன்ற வைப்பதால் இருக்கலாம். சிறுவயதில் சொல்லப்பட்ட, பின்னர் மெச்சூரிட்டி என்கிற பெயரில் சௌகரியமாக மறக்கப்பட்ட பாவ புண்ணிய சமாச்சாரங்களை நினைவுக்குக் கொண்டு வருவதால் இருக்கலாம்"

"இல்லை தம்பி! வாழ்வு என்பதற்கு அர்த்தமே அனுபவப் பகிர்தல் தான். சின்னக் குழந்தை பக்கத்து வீட்டு மாமா மிட்டாய் கொடுத்ததை வீட்டில் விவரிப்பதில் இருந்து யாரிடமாவது தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டே இருக்கும் செயல் ஒரு முற்றுப்புள்ளிக்கு வருவது சாவில் தான். சாவும் ஓர் அனுபவம். ஆனால் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத அனுபவம். அந்த வித்தியாசம் தான் மிரட்டுதுன்னு நினைக்கிறேன்"

மேற்கண்ட உரையாடல் ஒரு சிறுகதையில் படித்து டைரியில் குறித்து வைத்திருந்தேன். இப்போது உங்கள் கட்டுரையின் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

RATHNESH
http://rathnesh.blogspot.com
அய்யனார் இவ்வாறு கூறியுள்ளார்…
மரணத்தின் சுவை பத்தி தெரியாது நண்பா ஆனால் மரணம்.. எழுத அலாதியான ஒரு தலைப்பு....காதலைப்போல மரணமும் அதன் வலிகளையும் வசீகரங்களையும் மாயைகளையும் உள்ளடக்கி இருக்கிறது.

என்னிக்காவது ஒரு நாள் செத்துடுவோம்னு வாழும்போது பெரும்பாலான மனுசங்களுக்கு தெரியதே இல்ல ஒருவேள தெரிஞ்சிடுச்சின்னா ஏகப்பட்ட குற்றங்கள் மலிய வாய்ப்பிருக்கு..

மரண பயம் இருக்கே இதான்யா மனுச பயலின் அகத்தோட ஆதார சுருதி..ரமணர்க்கு 13 வயசுல மரண பயம் வந்ததாம்..மரணம் பத்தின கேள்விகள்தாம் அவர திருச்சுழில இருந்து திருவண்ணாமலைக்கு தொரத்தி அடிச்சதாம்..நீயும் யோசிய்யா அடுத்த ரமணர் ஆகவும் வாய்ப்பிருக்கு :)
....0....

மரணம் பத்தின சரியான புரிதல்/கேள்விகளுக்கான விடைகள் ஓஷோவிடம் இருக்கு வாழ்வையே ஓஷோ இப்படித்தான் வரையறுக்கிறார்
"இரண்டு இசைக்குறிப்புகளுக்கிடைப்பட்ட மெளனம்னு" ( பிறப்பும் இறப்பும் இரண்டு இசைக்குறிப்புகள்)

(இவர சரியா புரிஞ்சிக்காத/என்னன்னே தெரியாத முட்டாப்பசங்க இங்க உளறிக் கொட்டும்போது மெல்ல சிரிச்சிட்டு கடந்து போயிட முடியுது....)
அய்யனார் இவ்வாறு கூறியுள்ளார்…
சொல்ல மறந்துட்டனே நல்ல கட்டுரை நண்பா :) இருப்பினும் இன்னும் கொஞ்சம் அலசி காயப்போட்டிருக்கலாம்
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
புபட்டியான், சிவபாலன், யோகன் பாரீஸ்,ரத்னேஷ், அய்யனார்.. அனைவருக்கும் நன்றிகள்.

@ ayyanaar : "இரண்டு இசைக்குறிப்புகளுக்கிடைப்பட்ட மெளனம்" இந்த வரையறை நல்லாயிருக்கு. ஆனா ஒண்ணு, ஓஷோவைப் படிச்சாலும் செத்துதான் ஆகனும்.. ஒரே பயம், பயமா இருக்குதுபோங்க..
மலைநாடான் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்!

மனம் நிறைத்த பதிவு. பாராட்டுக்கள்.

நெற்றியில் திருநீறும், திருமண்னும், எனும் முத்திரைகளில் சைவமும் வைணவமும், சொல்லிய சேதிகள் இதுவாகக் கூட இருக்கலாம். ஆனால் அவற்றை இட்டபடியே அடுத்தவனை வெட்டிச் சரிக்க அரிவாளோடு...
....வேணாம்.

ஆனால், மரணங்கள் குறித்த என் தரிசனங்கள் வேறானது நண்பா!.
முடிந்தால் மற்றொரு பொழுதில் அவைபற்றிப் பேசலாம்...:)
செல்வநாயகி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

உங்கள் நட்சத்திரவார இடுகைகளை சேர்த்துவைத்து இன்றுதான் படித்தேன். நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது. நன்றி.
தாமோதர் சந்துரு இவ்வாறு கூறியுள்ளார்…
எங்க ஆயாவுக்கு இந்த ஆவணியோட 90 வயசு முடியுது. ஆயான்னா அப்பாவ பெத்த அம்மா. இன்று காலையிலே தான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார்,டேய் சந்தரா நாளானிக்கு எனக்கு 90 முடுஞ்சு 91 நடக்கப்போகுது, இந்த சாமி என்னைய இன்னமும் கூட்டிட்டுப் போக மாட்டிங்கிதே அப்டினு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க.

சாவுங்கறது எப்ப வேணா, எப்படி வேணா நடக்கலாம். ஆனா தினமும் பேப்பர் படிக்கும்போது, "லாரியில் சுமோ வேன் மோதி குடும்பத்தினர் அனைவரும் சாவு,ஆனால் மூன்று வயதுக் குழந்தை மட்டும் பிழைத்துக்கொண்டது" என்று வாசிக்கும்போது மட்டும், ஏனடா மரணத்துக்கு மட்டும் மரணம் வராதா என்று
நினைக்கத்தோன்றுகிறது.
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை.

இப்பெல்லாம் 'போதும்.போ'ன்னுதான் இருக்கு. ஆனா அதுக்குள்ளே சொல்றதைச்
சொல்லி முடிச்சுடணும். அதுக்குக் கொஞ்சம் டயம் வேணுமுன்னு நினைப்பும் கூடவே..........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'