'ஏழரை' முருகன்..!



ப்பவும் எதையாச்சும் ஏழரையை கெளப்புறதே இந்த முருகன்பயலுக்கு வேலையாப் போச்சு. இந்நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தால் அரசியோ, கோலங்களோ எதையாச்சும் பார்த்துக்கிட்டிருந்திருக்கலாம். முருகன்பயலால் முருகேசன் கடையிலேயே உட்கார வேண்டியதாகிடுச்சு.

"நீங்கதான் மாமா கேட்டுச் சொல்லனும். இந்த நாயி இப்படி பண்றது இது மொத தடவை இல்லை. என்கிட்டதான்னு இல்ல.. எல்லார்கிட்டயும் எகனக்கி, மொகனையா எதையாச்சும் செஞ்சுகிட்டே இருக்கான்.." முனகலான குரலில் சொல்லிவிட்டு அருகிலிருந்த பூவரச மரத்திலிருந்து இலையை இனுக்கி, இனுக்கி பிய்த்துப்போட்டுக்கொண்டிருந்தான் வீரையன். அவன் துன்பம் அவனுக்கு. அவன் நிலையில் இருந்தால் நீங்களும் இப்படித்தான் புலம்பியிருப்பீர்கள்.

முருகன்பயல் லேசுப்பட்ட ஆளில்லை. மூக்குக்குத் தெரியாம மூக்குத்தியை திருடுற வித்தைக்காரன் அவன். அவன்கிட்ட சொந்தமா உழவுமாடும், ஏறும் இருக்கு. ஆனா, அதை அவன் மச்சினன்கிட்ட கொடுத்து மாமியார் ஊர்ல வாடகைக்கு விட்டுட்டான். இங்க எவனாவது ஏர் உழுவக் கூப்பிட்டான்னா, 'என்கிட்ட ஏர் கலப்பை இல்ல.. உழுது தர மட்டும்னா வர்றேன்'னு பட்டுன்னு சொல்லிட மாட்டான். 'பத்து நிமிஷம் பொறு..என்ன சேதின்னு சொல்றேன்'னு சொல்லிட்டு, விழுந்தடிச்சு வடக்கித் தெருவுக்கு ஓடுவான். எவன் வீட்டுல மாடு அன்னிக்கு சும்மாக் கெடக்குதுன்னுப் பார்ப்பான்.

"என்ன தெக்கூராத்தா.. உன் புருஷன் குடிக்க மட்டும் நோட்டு நோட்டா எடுத்து நீட்டுறான். உனக்கு கா கிலோ கறி வாங்கி தரமாட்டானா..? நானும் தெரியாமத்தான் கேக்குறேன். பார்த்து ஒரு மாசம் இருக்குமா..? அதுக்குள்ள இப்படி எளைச்சுப் போயிட்டியே.." இப்படி நாக்குல பாயாசத்தை கொட்டுனா மாதிரி அடிச்சு விட்டான்னா, தெக்கூராத்தா மாட்டை அவிழ்த்து அவன் கையிலயே கயித்தைக் குடுத்து 'போயிட்டு வா ராசா'ன்னு சொல்லும்.

மாட்டை இழுத்து நடந்துகிட்டே, "ஒழுங்கா கஞ்சியை குடித்தா. நாளைபின்ன தெக்கூர்காரன்கிட்ட பொண்ணுகேட்டுப் போனா, 'உங்க ஊருக்கு பொண்ணு கொடுத்தா பட்டினி போட்டு கொண்ணுடுவீங்கடா'ன்னு சொல்லிடுவாய்ங்க மாப்பிள்ளைக.."ன்னு சொன்னதும் அந்த ஆத்தா வெட்கத்துல இன்னும் ஒரு படி எளகிப்போயிடும்.

மாட்டுக்கு ஒரு தெக்கூராத்தான்னா, ஏர்கலப்பைக்கு ஒரு மருங்கொளத்தாத்தாவோ, கோட்டையூர்காரியோ கெடைக்காமலா போயிடுவா. அது எந்த ஊருகாரியா இருந்தாலும் அவ சொந்த ஊரைப்பத்தி நல்லவிதமா நாலு வார்த்தை சொன்னா எல்லாரும் காலிதான். அது கூட பிரச்னை இல்லை. அப்படி நைச்சியமா பேசி மாட்டையும், ஏரையும் வாங்கிட்டுப் போறவன், திரும்ப கொண்டு வந்துவிடும்போது கெளப்புவான் பாருங்க ஏழரை. அதுலதான் இருக்கு வெவரம்.

"ஏன்த்தா.. எங்க பிடிச்சீய இந்த ஓடுகாலி மாடுகளை..? மொத ஓட்டு முடிஞ்சு ரெண்டு விலா ஓட்டுறதுக்கு முன்னயே, ஏதோ மணல் காட்டுல பாரம் இழுக்குற மாதிரில்ல படுத்துக்குது.. செத்த நேரம் நிறுத்தி வச்சுட்டு வெத்தலை போடுவோம்னா, சனியன் அதுபாட்டுக்கும் பக்கத்துல பால்சாமி வயல்ல வாய் வைக்குதுங்குறேன்.. ஏரை அவுத்துவிட்டா ஒரே ஓட்டமா ஓடிவந்து உன் வீட்டுல நிக்கிது. நல்லா மாடு வளர்த்து வச்சிருக்கியலாத்தா.." அப்படின்னு அவன் பேசுறதுல ஒரு சூது இருக்கும். வீட்டுல உள்ள பொம்பளையாளுககிட்ட யாராச்சும் மாடு கேட்டு வந்தா, சும்மா கெடந்தா அவித்துக் குடுத்து விட்றும். புருஷன்காரனுக்கு விவரம் தெரிஞ்சா தெக்கூராத்தா வீட்டுக்காரன் மாதிரி ஆளாயிருந்தா சாமியாடிருவான்.

"ஏண்டி.. அவன் பணத்தேறு ஓட்டி சம்பாதிக்க என் மாடுதான் கெடச்சுச்சா..? இருக்குறதை மச்சினன் கிட்ட கொடுத்துட்டு ஊர்ல இரவல் வாங்கியே ஒவ்வொரு வருஷமும் வெள்ளாமை பார்க்குற நாயி அது. அவன்கிட்ட எதுக்கு என்னைக் கேக்காம மாட்டைக் குடுத்த..? முதல்ல மாட்டுக்குண்டான காசை வாங்கு. சும்மா இல்ல.. நாலு வாரம் சந்தைக்கு அழைஞ்சு, நல்ல சாதி பார்த்து எட்டாயிரத்துக்கு வாங்குன ஜோடி மாடு.."

-ஆனால் முருகன்பயல் அதுக்குப் பிறகு அந்த தெரு பக்கமே தலைவச்சுப் படுக்கமாட்டான்.

போன வருஷம் மேட்டூர்ல நேரத்தோட தண்ணீர் திறந்துவிடலை. (அவய்ங்க எந்த வருஷம்தான் நேரத்தோட விட்டாய்ங்க..) திடீர்னு ஒரு நாள் 'மேட்டூர்ல திறந்தாச்சாம்'னு பேச்சு வந்தப்ப, ஆடி மாசம் கடைசி வந்துடுச்சு. அதனால, இனிமே நாத்து விட்டு அதுக்கு ஒரு மாசம் காத்திருந்து நடறதுக்குள்ள மறுபடியும் தண்ணியை நிறுத்திடுவாய்ங்கன்னு நினைச்சு, போர்வெல் வச்சுருக்குற மோகனோட வயல்ல ஒரு ஓரமா நாத்து மட்டும் விட்டுக்குறேன்னு கேட்டான் முருகன்பய. தண்ணியிருக்குறவன் வயல்ல நாத்து மட்டும் விட்டுக்குறது வழக்கமா நடக்குறதுதான். அதனால மோகனும் விட்டுக்கன்னு சொல்லிட்டான். இந்தப்பயலும் பத்து மரக்கா நெல்லை விரவி நாத்து விட்டான். ஆடுதொறை 18 ரகம். நல்லா புசுபுசுன்னு கலப்பில்லாம வளர்ந்து நின்னுச்சு.

"உன் நாத்து கலப்புல்லாம இருக்கப்பா. மீதியிருந்தா எனக்கு அஞ்சு, பத்து கட்டு நாத்து குடு"ன்னான் மோகன். அதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுனவன் வேறொரு வில்லங்கம் பண்ணிபுட்டான்.

நிலத்தை இரவலா நாத்துவிடக் குடுத்தவனுக்கு, அவனோட நடவுக்கு முன்னாடி பூரா நாத்தையும் அரிச்சு ஓட்டித் தரனுமா வேண்டாமா..? அப்பதானே நிலத்து சொந்தக்காரன் அந்த இடத்துலயும் நடமுடியும்..? அட ஓட்டிக்கூட தர வேண்டாம். நேரத்துக்கு நாத்தை அரிக்கணும்ல..? ஆனா இந்த முருகன்பய மோகன் வயல்லேர்ந்து நாத்தைப் பறிச்சு அவன் வயல்ல நட்ட பிறகு, மீதியிருந்ததைப் பறிச்சு சுத்தம் பண்ணிக் குடுக்காம எனக்கென்னன்னு அப்படியே போட்டுட்டுப் போயிட்டான். கேட்டா, 'மாமா.. நீதானே என் நாத்து வேணும்னு கேட்ட.. மிச்சமிருக்குறதைப் பறிச்சு எடுத்துக்க'ன்னு நல்லவன் மாதிரி சொல்றான்.

"உன் நாத்தைக் கேட்டதெல்லாம் வாஸ்தவம்தான் மாப்ள. ஆனா, அதை நடுறதுக்கு இடம் வேணுமா.. வேண்டாமா..? நாத்து விட்டுக்க உனக்கு இடம் கொடுத்ததுக்கு எனக்குத் தண்டனையாடா இது..? உன் யோக்கியதை தெரிஞ்சும் உனக்கு இடம் கொடுத்தனே.. என்னை செருப்பால அடிக்கனும்.." அப்படின்னு புலம்புற அளவுக்கு போயிட்டான் மோகன்.

கடைசியில் சுத்தியுள்ள எல்லா இடங்களும் நட்டு முடிச்சு, முருகன்பய நாத்துவிட்டிருந்த அந்த சின்ன இடத்திற்கு மட்டும் நடவு ஆள் கிடைக்காம, இருபது நாள் கழிச்சு ஒரு ஆள் வந்து நட்டுக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகும் மருந்தடிக்குறது, களையெடுக்குறது, அறுப்புன்னு எல்லாத்துக்கும் அந்த இடத்துக்கு மட்டும் தாமதமாவே எல்லாத்தையும் செய்ய வேண்டியிருந்துச்சு. பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்கியே லோல்பட்டான் மோகன்.

போன வெள்ளாமைக்கு தன்னோட சொந்த அண்ணன் காசிகிட்ட முருகன் பய பண்ணுன வில்லங்கத்தை காசி வீட்டுக்காரி இன்னைக்கும் சொல்லிகிட்டிருக்கா. அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் கோயில் நிலத்துலதான் வெள்ளாமை. அது சகதிவய. என்னதான் மாங்கு, மாங்குன்னு மண்ணை வெட்டிப் போட்டாலும் ரெண்டு சாணுக்கு மேல வரப்பு ஏறாது. காலை வச்சா 'உள்ளவா'ன்னு இழுக்கும். அந்த வரப்புல இந்தப்பய 'துவரை ஊனப்போறேன்'னுட்டு நிக்கிறான்.

"எல.. இருக்குற ரெண்டடி வரப்புல நீ பாட்டுக்கும் துவரையை ஊனிட்டா, அப்புறம் எப்படி அந்தண்ட இந்தண்ட போறது..? பயிரை மிதிச்சுகிட்டா போவமுடியும்..? ரொம்ப பண்ணாதடா.."ன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் காசி. அவன் கேட்டாதானே.. கடைசி வரைக்கும் கசாலித்தனம் பண்ணி துவரையை ஊனிட்டான்.

அதுபாட்டுக்கும் முசுமுசுன்னு மண்டிடுச்சு. கடைசியில வரப்போரம் போக, வர முடியாம அண்ணன், தம்பிக்கு இடையில அடிதடி ஆகிப்போச்சு. அதுலேர்ந்து ஆறுமாசம் வரைக்கும் ரெண்டு பேரும் பேசாம, கொள்ளாம திரிஞ்சாய்ங்க. இந்த வருஷம் ஆத்துல தண்ணி வந்த பிறகுதான் கோபம் குறைஞ்சுப் பேசுக்கிறாய்ங்க. ஆனா, காசி பொண்டாட்டி இன்னமும் பேசறதில்லை.

இன்னிக்கு வில்லங்கத்தைக் கொஞ்சம் கூடுதலா பண்ணிபுட்டான் முருகன்பய. அதனாலதான் சனமெல்லாம் கடுப்பா முருகேசன் கடையில கூடி நிக்கிது. வீரையன் இன்னமும் பூவரசு இலையை பிய்ச்சுப் போடுறதை நிறுத்தலை. எவன் என்ன சொன்னாலும் கவலைப்படாம நம்மாளு பாட்டுக்கும் 'என் சூத்துக்கு சொல்லு'ன்னு நிக்கிறான்.

நேத்து வீரையனுக்கு தாழடி நடவு. முந்தின நாள் வரைக்கும் நாத்தரிக்க ஆள் கிடைக்கலை. வேற வழியில்லாம முருகன்பயலைக் கூப்பிட்டான். "பயிரையெல்லாம் அப்படியே புடுங்கி, புடுங்கி வைக்காம முடிச்சை நல்லா அலசிபோடு"ன்னு சொல்லிட்டு வீரையன் வரப்பு வெட்ட ஆரம்பிச்சான். ஒரு கட்டுக்கு நூறு முடிச்சு. பத்து ரூபா கூலி. இதான் கணக்கு. காலையில அரிக்கப்போயி பதினோரு மணிக்கு கரையேறுன முருகன்பய, மறுபடியும் சாயுங்காலமும் வந்து அரிச்சான். 'மொத்தம் பத்து கட்டு'னு கணக்குச் சொல்லி, சாயுங்காலமா வீரையன் வீட்டுக்குப் போயி அவன் பொண்டாட்டிக்கிட்ட நூறு ரூவா வாங்கிட்டான்.

அடுத்த நாள் நடவு. நாத்து வயல்ல, தான் அரிச்ச பத்து கட்டு நாத்தையும் தனித்தனியா பிரிச்சு வச்சிருந்தான் முருகன்பய. அதை கைக்கு அஞ்சு வீதமா பத்து, பத்து முடிச்சா அள்ளி நடவு வயலுக்குக் கொண்டுபோனான் வீரையன். ஆனா, ரெண்டு கட்டு நாத்தை அள்றதுக்குள்ளயே அவனுக்கு சந்தேகம் வந்துடுச்சு. குறையுற மாதிரியே இருந்துச்சு. சட்டுன்னு நாத்து கட்டுகளை எண்ணிப்பார்த்தா, ஒரு கட்டுக்கு பத்து முடிச்சு குறையுது.

வீரையனுக்குன்னா கோவம் தாங்கலை. முசுமுசுன்னு வந்துச்சு. இப்பவே ஓடிப்போயி அவனை அடிக்கலாம்ங்குற அளவுக்கு கோவம். ஆனால், நடவுவயலை வச்சுகிட்டு எங்கப்போவ..? நடவு முடிஞ்சதும் சாயுங்காலம் மொத வேலையா முருகன்பயலை தேடிப்பிடிச்சுக் கேள்வியே இல்லாம மடமடன்னு அடிச்சுபுட்டான் வீரையன். இப்ப பஞ்சாயத்து வச்சுருக்குறதும் அதுக்குதான்.

"ஒரு கட்டுக்கு பத்து முடிச்சு அரிக்க எவ்வளவு நேரம் ஆயிடப்போவுது..? ரெண்டு பேரும் பங்காளிகதானடா. ஏண்டா இப்படி பண்ற..?"ன்னு பஞ்சாயத்து செய்யுற கீழவீட்டுக்காரர் கேக்குறதுக்கு எந்தபதிலும் சொல்லாம அவன் பாட்டுக்கும் நிக்கிறான் முருகன்பய.

"அவன் கோயில் நிலத்துல நடுறவன் மாமா. அவனுக்கு லாபம் தெரியுதா..? நஷ்டம் தெரியுதா..? சொந்தமா நிலம் வாங்கி நட்டுப்பார்த்தா அப்ப தெரியும் வலி.."ன்னு கோபட்டான் வீரையன். அப்ப ஆரம்பிச்சான் பாருங்க நம்மாளு அடுத்த ஏழரையை..

"நான் கோயில் நிலத்துல நடுறது உண்மைதான். நான் இல்லன்னு சொன்னனா..? ஆனா, வருஷம் பாக்கியில்லாம குத்தகை கட்டுறேன்.. அதை மறந்துடாத. ஆனா நீ என்ன பண்ற..? கெவர்மெண்ட் காசுல எலவசமா கரண்ட்டு இழுத்து போர்வெல் போட்டு, அந்த தண்ணியை மணிக்கு நாப்பது ரூவான்னு காசுக்கு விக்கிற. அது எந்தூரு ஞாயம்..?"ன்னு அவன் கேட்டதும் யாரும் பேசலை. சட்டுன்னு எல்லா சத்தமும் அடங்கிப்போச்சு. எதோ தப்பா கேட்டுட்டமோன்னு முருகன்பய குழம்பிப்போயிட்டான். அவன் கேட்ட கேள்வியால ஊருக்குள்ள மொத தடவையா எல்லாரும் அதிர்ச்சியாகி நின்னாய்ங்க.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
:))))

முருகனோட சகவாசம் வச்சுக்காதப்பு.
ஆளு சரியான ஏழரை தான்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம்ம்ம். சின்னத்திருடனெல்லாம் போலிஸு புடிச்சு விசாரணைக்கு போக வேண்டிவரும். லட்சம்,கோடின்னு திருடறவங்க அரசியல்வாதியாகிருவாங்கன்னு சொல்லறீங்க. சரியா
காட்டாறு இவ்வாறு கூறியுள்ளார்…
கிராமிய மணம் மாறாத நடை. நல்லாயிருக்குது.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
விவசாய கிராமத்தில் வாழும் மனிதர்களின் நடப்புகளை மிக அருமையா 'நேரடி' வர்ணனை செய்திருக்கீங்க ஆழியூரான்.

வயல் வெளிகளில் வீசும் காற்றை உணர முடிந்தது, கழனியில் சேற்றில் கால்கள் ஊறிக் கிடந்ததையும் உணர முடிகிறது.

முருகன் போன்றவர்கள் கோமாளிகள் போல் தோன்றினாலும், இவர்கள் தன்னை அறியாமலே கிராமத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கிறவர்களே.

நன்றி.
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏழரை முருகன். மிக இயல்பாக கிராமிய வாசனை அடிக்கும் சிறுகதையை படித்த உணர்வை தருகிறது. சிறுகதைகளில் பாத்திரமும், நடையும்தான் முதன்மையானது என நினைக்கிறேன் இரண்டுமே இயல்பாக இருக்கிறது.

உங்களுக்குள் அருமையான கதை சொல்லி இருக்கிறார்.

பாராட்டுக்கள்.
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
அசத்தல் கிராமிய வாசம்..
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான நடை. கதை ரொம்பவே நல்லாயிருக்கு. நுணுக்கமான விவரணைகள் கதைக்கு அழகூட்டுது. கலக்கறீங்க போங்க.
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
கணினித் திரையில் கிராமிய யதார்த்தங்களுடனான ஒரு குறும்படம் விரிந்து முடிந்தது உங்கள் எழுத்துக்களின் வழியே - மிகைப்படுத்தவில்லை, உண்மை.

சென்ற பதிவில் அவர்களுக்கான குறைகள், இந்தப் பதிவில் அவர்களின் குறைகள் - நன்று
கதிர் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாருக்கு.
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல கதையைப் படிச்ச நிறைவு. ரொம்ப நன்றிங்க. இந்த மாதிரி கதைங்க அடிக்கடி தமிழ்மணத்துல பாத்தா எம்புட்டு நல்லா இருக்கும்?!

ஏழரை முருகனைப் பத்தி படிக்கிறப்ப நம்ம வடிவேலு கண்ணுக்கு முன்னாடி வந்துகிட்டே இருந்தாரு. :-)

கடேசியில ஒரு நியாயத்தைக் கேட்டு ஊரு வாயை அடைச்சுப்புட்டாரே நம்ம ஏழரை. விவகாரமான ஆளுங்க எல்லாமே இப்படித் தான். அவிங்க பண்றதை மட்டுமே நாம பேசுவோம். ஆனா நாம பண்றதை அவிங்க சொன்னாத் தான் நமக்குத் தெரியும். வாயி அடைச்சிக்கும்.
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
வயலும் வாழ்வுமா இருந்திச்சி ஆழி
ஜெகதீசன் இவ்வாறு கூறியுள்ளார்…
கத ரெம்ப நல்லா இருக்கு..
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

கதை அட்டகாசமா இருந்துச்சுங்க....

கிராமத்து வாசம் மாறாத எழுத்து நடை.... :)
ஓகை இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஆழியூரான்.

வட்டார மொழிவழக்கும் கதையோட்டமும் மிக அழகு.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல நடை. நல்ல கதை.

-சத்தியா
கோபிநாத் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான எழுத்து நடை...அருமையான கதை :)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வெயிலான், சின்ன அம்மிணி,காட்டாறு, மாசிலா, கோவி, இளா,லஷ்மி, ரஞ்சித், தம்பி,குமரன், செல்வேந்திரன், ஜெகதீசன்,ராம்,ஓகை,சத்தியா, கோபிநாத்.. அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

கதை எழுதும் சோலி எனக்கு புதிது. உங்களைப் போன்றவர்கள் சொல்லும் வார்த்தைகள், மேற்கொண்டும் எழுதிப்பழக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.
சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கதப்பா நம்முரு எம்பளத்தியெட்டு வாசம் ஜெகஜோதியா வீசுது.
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
ரசித்தேன். மிகமிக ரசித்தேன். ஊருப்பக்கம் போயிட்டு வந்த திருப்தி கதையப் படிச்சதுல இருந்துச்சு. நன்றி. இதுமாதிரி நெறைய எதிர்பார்க்குறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்