ஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்

கிழ்ச்சியுடன் வணக்கம் சொல்ல முடியாத காவிரி கரையின் விவசாயி எழுதுகிறேன். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக சொல்கிறேன், வணக்கம்.
ஆம், நாங்கள் எளிய மனிதர்கள்தான். விதைப்பும், அறுவடையும் தவிர மற்ற அனைத்தும் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். வெண்ணாற்றங்கரையில் இருந்து பிரிந்து செல்லும் கல்யாண ஓடை கிளை வாய்க்காலின் பாலக்கட்டையின் மீது அமர்ந்து, காலை தினத்தந்தியில் மேட்டூர் அணை நீர்மட்டம் பார்க்கும் பழக்கம் இன்னமும் எங்களிடம் இருந்து விடைபெற்றுவிடவில்லை. அந்த நம்பிக்கைக் கீற்று ஏதோ ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கிறது. ஆனால், அது உங்களைப் போன்ற ஆட்சியாளர்கள் விதைத்த நம்பிக்கை இல்லை... அது காவிரி மீதான எங்களின் பல்லாயிரம் ஆண்டுகால மரபுரிமையின் மிச்சம்.


‘நடந்தாய் வாழி காவேரி’ என இளங்கோவடிகள் எழுதியதை இலக்கியத்தின் மிகைப்பொய் என நீங்கள் புறக்கணித்துவிடக்கூடும். ஆனால், ‘காவிரி தீரத்தில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட விவசாய முறை இருந்தது’ என அதிகாரப்பூர்வ ஆய்வுகள் சொல்கின்றன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நடுவர் மன்றம் இல்லை, தீர்ப்பாயம் இல்லை, உச்சநீதிமன்றம் இல்லை, ஏன், இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. ஆனால் குடகு மலையில் பொழிந்த மழை, ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதியான காவிரியை நோக்கி காதலுடன் ஓடிவந்தது. நாங்கள் அதன் கரம் பற்றிக்கொண்டோம். இப்போது அந்த காதல், கடந்த காலத்தின் இனிய நினைவுகளாக மட்டும் மாறிவிடுமோ என எங்களுக்கு அச்சமாக இருக்கிறது.
ஒரு மார்கழி மாதத்திலோ, தை மாதத்திலோ திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரையிலும் காவிரிக் கரையின் ஓரத்தில் சென்று வந்த யாருக்கும் அந்தக் காட்சிகளையும், அது ஏற்படுத்திய உணர்வுகளையும் ஒருபோதும் மறக்க முடியாது. வெற்றிலைக் கொடிக்காலின் வாசமும், வாழைத் தோட்டங்களின் செழிப்பும், நெல் வயல்களின் சிலுசிலுப்பும் எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும். இவை எங்கள் கண்முன்னே பழங்கதையாகிக்கொண்டிருக்கின்றன. 

இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடே ஓரணியில் எழுந்து நிற்கிறது. காவிரி நீருக்கு எந்த தொடர்பும் இல்லாத கோவில்பட்டியிலும், நாகர்கோயிலிலும் கூட ஆதரவுக் குரல் கேட்கிறது. இதன் பொருள் என்ன? காவிரி மரபுரிமையை பறித்துக்கொண்டு கர்நாடகமும், மத்திய அரசும் தொடர்ந்து வஞ்சிக்கிறதே என்ற ஆதங்கம். அதன் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டங்கள்.
1924-ல் அன்றைய மைசூர்-மெட்ராஸ் அரசுகளுக்கு இடையே முதல் காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டுக்கு 575.68 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டது. குறுநில மன்னர்களும், சமஸ்தானங்களும் ஆண்டுகொண்டிருந்த இந்தியாவில் மதிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் சுதந்திர இந்தியாவில் மெல்ல, மெல்ல பறிபோனது. 1984-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் வழங்கப்பட்ட நீரின் ஆண்டு சராசரி 361 டி.எம்.சி. 1991-ல் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி.யாக இது குறைக்கப்பட்டது. 2007-ல் காவிரி தீர்பாயம் வழங்கிய தீர்ப்பு இதை 192 டி.எம்.சி.யாக குறைத்தது. கடைசியாக 2018-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறது. ஆனால் கர்நாடகமோ இந்த குறைந்த அளவு தண்ணீரையும் விட மறுக்கிறது. இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய மத்திய அரசோ, ‘சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ள ஸ்கீம் என்ற சொல்லுக்கு காரிவி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பொருள் அல்ல’ என்று விளக்கம் சொல்கிறது; அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. தமிழ்நாட்டை கர்நாடகா மட்டும் வஞ்சிக்கவில்லை... மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் இணைந்துகொண்டு வஞ்சிக்கின்றன என்ற உண்மையை நாங்கள் புரிந்துகொண்டோம்.
‘காவிரி உருவாவது கர்நாடகாவில்... அப்போ அவங்களுக்குதானே முதல் உரிமை. தனக்கு மிஞ்சிதானே தானமும், தர்மமும்’ - இப்படி பலபேர் அறியாமையிலும், சிலர் வஞ்சகமாவும் பேசுகின்றனர், எழுதுகின்றனர். காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாவது உண்மைதான். ஆனால் இது கர்நாடகாவின் வலிமையால் நிகழவில்லி; சித்தராமையாவின் அரசாணையால் காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாகவில்லை. அது இயற்கையின் அமைப்பு. அதைப்போல, ஒரு நதி சமவெளியை நோக்கி பாய்ந்தோடும் என்பதும் இயற்கையின் அமைப்புதான். அப்படிதான் காவிரி, தஞ்சை டெல்டாவை நோக்கி பாய்ந்து வருகிறது.
ஒரு நதி உருவாகும் தலைப்பகுதியை விட, அது பாயும் சமவெளிப் பகுதிக்குதான் ஆற்றின் மீது கூடுதல் உரிமையும், பாத்தியதையும் உண்டு. இதை நான் சொல்லவில்லை. நதிநீர் பங்கீட்டுக்கான சர்வதேச ஹெல்சிங்கி விதிகள் இதைத்தான் வலியுறுத்துகின்றன. ஆற்றின் மேல்பகுதியில் உள்ளோர் காலப்போக்கில் தங்கள் விவசாய பரப்பளவை அதிகரிப்பதால், கீழ்ப்பகுதிக்கான தண்ணீரின் அளவை குறைத்துவிட வாய்ப்பு உண்டு என்பதால் உலக அளவில் எல்லா நதிநீர் ஒப்பந்தங்களிலும் ஹெல்சிங்கி விதி பயன்படுத்தப்படுகிறது. இது காவிரிக்கும் பொருந்தும்.
’காவிரி எங்கள் ஊரில் உருவாகிறது. அதனால் அதில் எங்களுக்கே உரிமை உள்ளது’ என்று சொல்லும் கர்நாடகா, மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதிநீரில் எங்களுக்கும் பங்கு உண்டு என வாதாடுகிறது. சிந்து, ஜீலம், சீனாப் நதிகள் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன; பாகிஸ்தானில் பாய்கின்றன. இதைச் சொல்லி இந்த நதிகளுக்கு அணைபோடும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது. இதுதான் சர்வதேச விதி. ஆனால் இது எதையும் மதிக்காமல் கர்நாடகா அழிச்சாட்டியம் செய்கிறது.
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதனால்தான், மத்திய பா.ஜ.க. அரசு இப்படி நடந்துகொள்கிறது என்று சிலர் சொல்கின்றனர். இது மேலோட்டமான பார்வை. உண்மையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால், காவிரி எங்களுக்கே சொந்தம் என்ற கர்நாடகாவின் முழக்கம் பொருள் இழந்துவிடும். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் என்ற உண்மை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும். இதனால்தான் கர்நாடகா இதை எதிர்க்கிறது. இந்த சமயத்தில் காவிரி கரையின் நடைமுறை யதார்த்தம் குறித்த ஒரு சித்திரத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
------------------
ந்த ஒரு தொழிலையும் தன் அடுத்தத் தலைமுறையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என கருதுவதற்கு அந்த தொழில் குறித்த பெருமிதம் வேண்டும். வருமானம், சமூக கௌரவம் என அனைத்தையும் உள்ளடக்கியதுதான் இந்த பெருமிதம். ஆனால் இன்று, காவிரி தீரத்தின் எந்த ஒரு விவசாயியும் தன் அடுத்த தலைமுறையும் விவசாயத்தில் தொடர்வதை விரும்பவில்லை. அதை ஒரு கெட்ட கனவை போல மறந்துவிட நினைக்கிறார்கள். கடனை உடனை வாங்கியாவது பிள்ளைகளை படிக்க வைத்து வேறு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். அதை பெரும்பகுதி சாதித்தும்விட்டார்கள்.
இன்று விவசாய கிராமங்களில் முக்கால்வாசி இளைஞர்கள் ஊரில் இல்லை. சென்னையிலும், பெங்களூருவிலும் இன்னும் பல வெளியூர்களிலும் பணிபுரிகிறார்கள். பொங்கலுக்கும், தீபாவாளிக்கும் தட்கல் டிக்கெட்டில் ஊர்வந்து செல்வதுடன் அவர்களுக்கும் ஊருக்குமான பந்தம் முடிந்துபோய்விடுகிறது. இன்னொரு பகுதி இளைஞர் கூட்டம் வெளிநாடுகளில் சம்பாதிக்கிறது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியாவிலும் பணிபுரிகிறார்கள். இப்போது அல்ல... காவிரியில் நீர் வருவது என்றைக்கு தடைபட்டதோ, இதை நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற அவநம்பிக்கை என்றைக்கு மனதில் உருவானதோ அன்றைக்கு விமானம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கும், காவிரிச் சிக்கலுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இன்று காவிரி டெல்டாவில் எஞ்சியிருக்கும் மிச்ச, சொச்ச பசுமைக்குக் காரணம், இவர்கள் சம்பாதித்து அனுப்பும் பணம்தான். ’காவிரி நீர் வரட்டும். அப்புறம் நாற்று விடுவோம்’ என காத்திருந்தால் பசித்த வயிற்றுடன் செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரு காலத்தில் ஒரு வேலி நிலம் இருந்தால் அவன் கிராமத்தில் பெரிய விவசாயி. ஆனால் இன்று ஒரு வேலி இருந்தால் அவன் பெரிய கடன்காரன். அவ்வளவு நிலத்துக்கும் நாத்துவிடவே ஐம்பதாயிரம் வேண்டும். சேறு அடிக்க, நாற்று பறிக்க, நடவு நட, உரம் வாங்கிப் போட, களை பறிக்க, அறுவடை செய்ய... என ஒவ்வொன்றுக்கும் செலவு. அதில் சரிபாதியைக் கூட திருப்பி எடுக்க முடியாது. ஆனாலும் ’இது படுகுழி’ என்று தெரிந்தே பல விவசாயிகள் மீண்டும், மீண்டும் விழுகிறார்கள். ஏனெனில் ஒரு விவசாய கிராமத்தில் நிலத்தை தரிசாக போட்டுவைக்க முடியாது. ‘ஒரு வெள்ளாமைக்காரன் நிலத்தை சும்மா போட்டு வெச்சிருந்தா ஊருக்குள்ள காறித் துப்பமாட்டான்?’ என கேட்டுவிட்டு பொண்டாட்டி மூக்குத்தியை அடகுவைத்துவிட்டு அடி உரம் வாங்கி வருவான். இதை அத்தனை எளிதில் உங்களால் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சுற்றிலும் பசுமையான நிலம். உங்கள் வயல் மட்டும் சும்மா கிடந்தால் அது ஒரு சமூக அவமானம். அதனால்தான் பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும்,மீண்டும் சேற்றில் நிற்கிறார்கள்.
ஆனால், ’எந்த வகையிலும் லாபம் இல்லாத, எந்த வகையிலும் சமூக கௌரவத்தை உத்தரவாதப்படுத்தாத, எதிர்கால நம்பிக்கை துளியும் இல்லாத விவசாயத்தை நாங்கள் எதற்காக செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியும் எங்கள் மனதில் எழுந்து நிற்கிறது. ’விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என நீங்கள் ஸ்டேட்டஸ் போடுவதற்காக விவசாயி காலம் எல்லாம் வயலில் கிடந்து சாக வேண்டுமா? விளைநிலம் எல்லாம் ரியல் எஸ்டேட் ஆகிவிட்டதே என்று பலபேர் ரொம்ப கவலைப்படுகிறார்கள். ரியல் எஸ்டேட் காரனிடம் என்னுடைய ஒரு ஏக்கரை கொடுத்தால் 10 லட்சம் கொடுப்பான். அதை வைத்து என் பிள்ளையைப் படிக்க வைப்பேன். இல்லை, என் பெண்ணைக் கட்டிக்கொடுப்பேன். அப்படி இல்லாமல் தொடர்ந்து விவசாயம் செய்தால் அந்த 10 லட்சத்தை நான் எப்படி சம்பாதிப்பது? எவனிடமாவது கந்துவட்டிக்கு கடன் வாங்கி, வெள்ளாமை இல்லை; விளைச்சல் இல்லை என்று கடன் கட்ட முடியாமல் பால்டாயில் குடித்து சாக வேண்டும். இதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?
இப்படி ஆற்றாமையாக நாங்கள் பேசுவதன் பொருள், விவசாயத்தை வெறுக்கிறோம் என்பதல்ல. மிக ஆழமாக இந்த வண்டல் மண்ணை நேசிக்கிறோம். பனி பெய்யும் மார்கழி அதிகாலையில் வரப்பில் நடந்து சென்றால் பனியும், பயிரின் பசுமையும் இணைந்து ஒரு வாசம் வீசுமே... அது எங்கள் நாசியில் அல்ல, நினைவின் அடியாழத்தில் பதிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் எங்களை விவசாயத்தில் இருந்து விரட்டி அடிக்க எல்லா வேலைகளையும் செய்கிறீர்கள். காவிரி நீர்ச்சிக்கல் இத்தனை ஆண்டுகளாக தீராத பிரச்னையாக பராமரிக்கப்படுவதன் பின்னே, எங்களை விவசாயத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கம் இருக்கக்கூடும் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
எனினும் இந்தமுறை நாங்கள் தனித்து விடப்படவில்லை. மருத நிலத்துடன் இணைந்து நிற்கிறது தமிழ் நிலம். காவிரி என்பது நிலத்தில் ஓடவில்லை, தமிழ் மக்களின் மனதில் ஓடுகிறது என்பதை நாங்கள் இணைந்து நிருபிப்போம். மேலும், கர்நாடகாவில் மட்டும் தேர்தல் நடப்பது இல்லை என்ற உண்மையையும் உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டு விடைபெறுகிறேன்.
- காவிரிக் கரை விவசாயி... 

- பாரதி தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!