நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? அறிவியலா, ஆபத்தா? - முழுமையான விளக்கம்


நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது தமிழ்நாட்டின் புதிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தேனி மாவட்டத்தில் அமையவுள்ள இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது அடிப்படையான அறிவியல் என்பது ஒரு பார்வையாகவும், ‘இல்லை... நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும்என்பது இன்னொரு பார்வையாகவும் முன்வைக்கப்படுகிறது.


கூடங்குளம் அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் போன்ற பெரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன என்றபோதிலும், இவற்றில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் வேறுபட்டது. கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் பூமியின் அடியாழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்கப் போகின்றனர். ஆனால், நியூட்ரினோ திட்டத்தில் எந்த பொருளையும் உற்பத்தி செய்யப்போவது இல்லை. அங்கு நடைபெறப்போவது ஓர் அறிவியல் ஆய்வு.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த டி.புதுக்கோட்டை கிராமத்தின் மேற்கு எல்லையாக அமைந்திருக்கும் அம்பரப்பர் மலைதான் திட்டத்தின் அமைவிடம். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான இங்குதான் நியூட்ரினோ ஆய்வு மையம் அமையப்போகிறது. India based Neutrino observatory. சுருக்கமாக .என். (INO). 

இதுவரை ஆடு-மாடுகளின் மேய்ச்சல் நிலமாகக் கேட்பாரற்றுக்கிடந்த இந்த நிலப்பகுதி இப்போது திடீர் பரபரப்பு அடைந்துள்ளது. தேவாரம், கோம்பை, போடி, கம்பம், உத்தமபாளையம், குமுளி என சுற்றுவட்டாரத்து மக்கள் நியூட்ரினோ குறித்த தெளிவில்லாத தகவல்களால் குழம்பி நிற்கிறார்கள். அவர்களின் மனங்களை அச்சம் ஆட்கொண்டிருக்கிறது.

நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்துக்காக தமிழக அரசு 66 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு முதல் கட்டமாக 1,450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. திட்ட அமைவிடத்தைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து, நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. சாலை அமைத்து, இடையில் குறுக்கிடும் காட்டு ஓடை மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற தடையால் சிலகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பணிகள் மறுபடியும் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இப்போதும் மக்கள் மத்தியில் குழப்பமும், பயமும் நீடிக்கும் நிலையில், முதலில் நியூட்ரினோ என்றால் என்ன? இந்த திட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? எதை ஆய்வு செய்யப்போகிறார்கள்? இதனால் பாதிப்பு உண்டா? உண்டு என்றால் என்ன பாதிப்பு? என பல கேள்விகள் எழுகின்றன. முதலில் நியூட்ரினோ என்றால் என்ன என்று பார்க்கலாம்.

கேட்பதற்கு பள்ளிக்கூட பாடப் புத்தக மொழி போல இருந்தாலும், நியூட்ரினோவை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவியல் அறிந்துகொள்வது அவசியம். மனிதர்களாகிய நமக்குத்தான் உயர்திணை, அஃறிணை என்ற பிரிவினை எல்லாம். இயற்பியல் ஆய்வில் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே பொருட்கள்தான் (Atoms). இதைப் படிக்கும் நீங்கள், படித்துக்கொண்டிருக்கும் கணினி; செல்போன், உங்கள் வீட்டு ரேஷன் கார்டு, அதில் உள்ள மனிதர்கள், நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்., வட்டச் செயலாளர் வண்டுமுருகன் என அனைத்தும்; அனைவரும் இயற்பியலை பொருத்தவரை பொருட்கள்தான். இந்தப் பொருட்கள், அணுக்களால் ஆனவை. ஒருகாலத்தில் அணுதான் இறுதித் துகள் என கருதப்பட்டது. அதாவது ஒரு பொருளை உடைத்துக்கொண்டே போனால், இறுதியாக மிஞ்சுவது அணு எனக் கருதப்பட்டது. அறிவியல் வளர, வளர இந்தக் கருத்து மாற்றம் கண்டது.

ஒவ்வோர் அணுவுக்குள்ளும் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில், நவீன இயற்பியல், ஓர் அணுவுக்குள் 60 வகையான அடிப்படைத் துகள்கள் இருப்பதாக வரையறுத்துள்ளது. அதாவது நாம் காணும் ஒவ்வொரு பருப்பொருளும் இந்த 60 வகையான துகள்களின் விதம்விதமான கூட்டிணைவுதான். இந்த 60-ல் ஒன்றுதான் நியூட்ரினோ (Neutrino). (நியூட்ரான், நியூட்ரினோ இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் வேறு, வேறு துகள்கள்).

ஆனால், நியூட்ரினோ என்பது பத்தோடு பதினொன்று அல்ல. இப்போது வரை விஞ்ஞானிகளின் அறிவுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் நியூட்ரினோ துகள், பிரபஞ்ச வெளியெங்கும் வியாபித்திருக்கிறது. எங்கும் என்றால் எங்கெங்கும். சூரியன், பூமி உள்ளிட்ட கோள்களைக்கொண்ட பால்வீதி முழுவதிலும் நியூட்ரினோ நீக்கமற நிறைந்துள்ளது. ஒளியின் வேகத்துக்கு இணையாகப் பயணிக்கக்கூடிய இந்தத் துகள், தனக்கு எதிரில் உள்ள அனைத்தையும் ஊடுருவி பயணிக்கும் திறன் கொண்டது. பூமியின்  ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு ஊடுருவிச் செல்லக்கூடியது. 360 டிகிரி கோணத்தில் அனைத்துத் திசைகளில் இருந்தும் இடைவிடாத அடைமழையைப்போல குறுக்கும் நெடுக்குமாகப் பொழிந்துகொண்டே இருக்கிறது நியூட்ரினோ. நம் உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 650 லட்சம் நியூட்ரினோ துகள்கள் கணம்தோறும் ஊடுருவிச் செல்கின்றன. சூரிய ஒளி போல, இரவு-பகல் போல... இந்த பூமி தோன்றிய நாளில் இருந்து நடைபெற்றுவரும் இயற்கை நிகழ்வு இது.

ஆனால்
, இந்த நியூட்ரினோ துகள் மிக, மிக, மிகச் சிறியது. கண்களுக்கும் கருவிகளுக்கும் புலப்படாதது. அதிநவீன நுண்ணோக்கியிலும் இதை பார்க்க முடியாது. நியூட்ரினோக்கள் அண்ட சராசரம் எங்கும் அலைந்து திரிகின்றன என்பதால், அதுகுறித்த ஆய்வு முடிவுகள் பல புதிய திறப்புகளை வழங்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், இது கடும் சவாலான பணி.

பொதுவாக ஒரு பொருளை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால்அது மற்றபொருள்களுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே அந்த ஆய்வு செய்யப்படும்.ஆனால் நியூட்ரினோ என்பதுவேறு எந்தப் பொருளுடனும் வினை புரியாதமின்காந்தசக்தியற்ற ஒரு துகள்யாருடனும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாத இறுக்கமான ஒரு நபரைப்புரிந்துகொள்வது சிரமம்தானே..? நியூட்ரினோவுக்கும் அது பொருந்தும்

வேறு எதனுடனும் வினைபுரியாத நியூட்ரினோ துகள், அரிதினும் அரிதாக  எப்போதேனும் வினைபுரிந்தாலும்கூட, மற்ற சில துகள்களின் வினைகளும் அதனுடன் கலந்துவிடுகின்றன. குறிப்பாக, பூமியின் மேற்பரப்பு முழுவதும் பரவியிருக்கும் காஸ்மிக் கதிர்கள், நியூட்ரினோவுடன் வினைபுரிகின்றன. இதனால் சோதனையின் முடிவில் இது காஸ்மிக் கதிர் ஏற்படுத்தியதா, நியூட்ரினோ ஏற்படுத்தியதா என்ற குழப்பம் வந்துவிடுகிறது.

அறிவியல் ஆய்வுகளை பொருத்தவரை துல்லியம் மிக முக்கியமானது. அனுமானத்தின் அடிப்படையில் தொடங்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு, துல்லியமான முடிவுகளில்தான் நிறைவடைகிறது. எனவே, நியூட்ரினோவுடன் வினைபுரியும் இதரத் துகள்களையும் காஸ்மிக் கதிர்களையும் வடிகட்டியாக வேண்டும். அப்போதுதான் துல்லியமான நியூட்ரினோ ஆய்வு முடிவை பெற முடியும். அப்படி ஒரு வடிகட்டியாக, கடும் பாறைப்பரப்பு விளங்க முடியும் என முடிவுசெய்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடம்தான், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் இருக்கும் அம்பரப்பர் மலைப் பகுதி.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இமயமலையில் இதைவிட பெரிய மலைகள் இருக்கின்றன என்றபோதிலும், அவை இளமையான மலைகள். மேற்குத்தொடர்ச்சி மலைகள், உலகின் தொன்மையான மலைப் பகுதிகளில் ஒன்று. இதன் பாறைப்பரப்பு கடும் இறுக்கத்தன்மைகொண்டது. நியூட்ரினோ ஆய்வுக்கு வடிகட்டியாகச் செயல்பட ஏற்றது. அதனால்தான் தேனி மாவட்டம் தேர்வுசெய்யப்பட்டது என்கிறார்கள்.  

இந்த ஆய்வு இப்போதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்டதாக சொல்ல முடியாது. கோலார்  தங்கச் சுரங்கத்தில் 2,500 மீட்டர் ஆழத்தில் செயல்பட்டுவந்த ஆரம்ப நிலையிலான நியூட்ரினோ ஆய்வு, 1992-ல் சுரங்கம் மூடப்பட்டதும் தனது பணிகளை நிறுத்திக்கொண்டது. இதன்பிறகு பல ஆண்டுகள் நியூட்ரினோ ஆய்வு முடங்கி கிடந்த நிலையில், அடுத்த கட்டமாக  நீலகிரி மாவட்டம் சிங்காரா பகுதி இதற்காக தேர்வு செய்யப்பட்டது. அங்கே மின் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள ஒரு கி.மீ. நீளமுள்ள சுரங்கம்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. சிங்காரா பகுதி விலங்குகள் சரணாலயம் என்பதாலும், சூழல் பாதிப்புகளை முன்வைத்து அதற்கு எதிர்ப்பு எழுந்ததாலும் அந்த திட்டம் கைவிடப்பட்டு தேனிக்கு வந்து சேர்ந்தது.

அடுத்த முக்கியமான கேள்வி, உலகிலேயே நியூட்ரினோ ஆய்வு திட்டம் தேனியில் மட்டும்தான் நடைபெறப்போகிறதா?  இல்லை! ஜப்பானில் உள்ள சூப்பர் கம்யோகாண்டே நியூட்ரினோ ஆய்வகம், கனடாவில் உள்ள சட்பெரி நியூட்ரினோ ஆய்வகம், இத்தாலியில் கிரான் சாசோ ஆய்வகம், தென் துருவத்தில் உள்ள ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகம்... என உலகில் பல நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் ஏற்கெனவே செயல்பட்டுவருகின்றன. ஒவ்வோர் இடத்திலும் ஒருவிதமான நில அமைப்பில், வேறுபட்ட முறைகளில் ஆய்வு நடைபெறுகிறது. தேனியில் அமைக்கப்படவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையம், மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டது.

இங்கு 50 ஆயிரம் டன் எடை கொண்ட உலகின் பிரமாண்டமான காந்தத்தை நிறுவி ஆய்வு செய்யவிருக்கின்றனர். இதற்காக மலையில் கிடைமட்டமாக இரண்டு கி.மீ நீளம் உள்ள சுரங்கப்பாதையைத் தோண்டவிருக்கின்றனர். அந்தச் சுரங்கத்தின் இறுதியில் 130 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமும் உள்ள  ஒரு குகை அமைக்கப்படும். அதன் உள்ளே ஆய்வுக்குரிய கருவிகள் பொருத்தப்படும். இந்தச் சுரங்கப் பணிகள் மொத்தம் 800 வேலை நாட்கள் நடைபெறும் என திட்ட அறிக்கை சொல்கிறது.

'’இத்தனை பிரமாண்டமான சுரங்கப் பணிகள் நடைபெறும்போது நிச்சயம் சூழல் சீர்கேடு ஏற்படும். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுரங்கக் கழிவுகளைச் சுமந்து அலைவதால், இந்தப் பகுதியே தூசி மண்டலமாக மாறும். வெடிமருந்து பயன்படுத்தித் தகர்ப்பதால் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ச் சூழல் பாதிக்கப்படும். அருகில் உள்ள அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்’’ என்பது சூழலியலாளர்கள் தரப்பு  முன்வைக்கும் முக்கியமான கருத்து. அரசுத் தரப்பும் நியூட்ரினோவை ஆதரிக்கும் அறிவியல் அறிஞர்களும் இதை மறுக்கின்றனர்.

’’சென்னையில் பல கி.மீ. நீளத்துக்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாதிரியான போக்குவரத்தும், மக்கள் அடர்த்தியும் மிகுந்த ஒரு நகரத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த பணிகள் நடைபெற்றுள்ளன என்றால், எந்த மக்களும் வசிக்காத ஒரு பிரதேசத்தில் நடைபெறும் அறிவியல் ஆய்வுக்கான கட்டுமானப் பணிகளால் ஆபத்து ஏற்படும் என்பது அறியாமை’’ என்கிறார்கள் அவர்கள்.

நியூட்ரினோ ஆய்வின் நோக்கம்தான் என்ன? - இது அடுத்த முக்கியமான கேள்வி. அறிவியல் ஆய்வுகளுக்கு குறிப்பான நோக்கங்களை ஆரம்பகட்டத்திலேயே வரையறுக்க முடியாது. அறிவியல் என்பதே அனுமானங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான். 1897-ல் ஜெ.ஜெ.தாம்ஸன் எலெக்ட்ரானைக் கண்டறிந்தார். அதன் பயன் என்ன என்று அப்போது சொல்லியிருக்க முடியாது. ஆனால், இன்று டி.வி முதல் கணினித் திரை வரை அனைத்தும் எலெக்ட்ரான் மூலம்தான் இயங்குகின்றன. ஆகவே, 'என்ன பயன்?’ எனக் கேட்பது அறிவியலில் அறமற்றது. எனினும், இதன் மூலம் பல நன்மைகள் விளையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

'நியூட்ரினோவை வெற்றிகரமாகக் கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், நாம் யூகிக்க முடியாத, முற்றிலும் புதியதோர் உலகத்துக்குள் பிரவேசிக்க முடியும்' என்கின்றனர். பூமியின் ஒரு இஞ்ச் இடைவெளி இல்லாமல் எங்கும், எப்போதும் ஊடுருவிச் செல்லும் நியூட்ரினோ ஒளியின் திசைவேகத்தை விட அதிகமாக பயணிக்கக்கூடியது என்பதால், பூமியின் ஒவ்வொரு இஞ்ச் குறித்த அறிவையும் மனித சமூகம் பெற முடியும் என யூகிக்கின்றனர். பால்வீதியின் புதிய அற்புதங்களை இனம் காண முடியும் என சொல்கின்றனர். எனினும் இப்போதைய நியூட்ரினோ ஆய்வு என்பது மிக, மிக தொடக்க நிலையிலானது மட்டுமே. இப்போதே இதன் பயன் என்ன என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்ற ஆய்வின் பயன் என்ன என்று கேட்க முடியுமா? அது மனித அறிவுத் தேடலின் ஒரு பகுதி. அதைப்போலதான் நியூட்ரினோ ஆய்வும் என்பது விஞ்ஞானிகளின் விளக்கம்.

ஆனாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் அமைப்புகளும் இதை எதிர்ப்பது ஏன்? நியூட்ரினோ ஆய்வு என்பது, இந்தியாவில் மட்டும் தனித்து நடைபெறுகிற ஒன்று அல்ல. உலக அளவில் நடைபெற்றுவரும் நியூட்ரினோ ஆய்வின் ஒரு பகுதியே இந்தியாவில் நடப்பது. India based Neutrino observatory என்ற திட்டத்தின் பெயர் மூலமே இதை உணர்ந்துகொள்ளலாம். உலகின் பல நாட்டு அரசுகளும், ஏராளமான பல்கலைக்கழகங்களும் இதில் இணைந்துள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்மி ஆய்வகமும் இதில் உள்ளது. எனவே இப்படி உலகம் தழுவிய அளவில் நடைபெறும் அறிவியல் ஆய்வு, வளர்ந்த நாடுகளின் நலன்களுக்கானதாகவே இருக்கும் என்பது எதிர்ப்பாளர்களின் யூகம் மட்டுமல்ல... 1,2,3 அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதையும், அதன் அடிப்படையிலேயே இந்த ஆய்வு நடைபெறுவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

’’மேலும், இந்தியாவில் இருக்கும் அணு உலைகளின் கழிவுகளை எப்படி மேலாண்மை செய்வது என்பது குறித்த திட்டவட்டமான கொள்கை இன்னும் இந்தியாவில் வகுக்கப்படவில்லை. அணுக் கழிவுகளை என்ன செய்வது என தெரியாமல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓரிடத்தில் கொட்ட வேண்டிய தேவை இந்திய அரசுக்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது நியூட்ரினோ ஆய்வி என்ற பெயரில் அணுக்கழிவை கொட்டப்போகிறார்களோ என சந்தேகம் வருகிறது’’ - இது பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் தொடக்க நிலையில் முன்வைத்த வாதம். அப்போது கேரள முதலமைச்சராக இருந்த அச்சுதானந்தன் கூட இதே சந்தேகத்தை எழுப்பினார். பத்மநாபா உள்ளிட்ட மேலும் சில ஆய்வாளர்கள் இதுகுறித்த கட்டுரைகளை எழுதினார்கள். நியூட்ரினோ ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற, சென்னை தரமணியில் இயங்கும் மத்திய கணிதவியல் ஆய்வு நிறுவனம், ‘அணுக்கழிவுஎன்ற பிரிவின் கீழ் விண்ணப்பம் கொடுத்திருந்ததையும் இதற்கு ஓர் ஆதாரமாக முன்வைத்தனர்எனினும், சமீப கால விவாதங்களில் அணுக்கழிவை கொட்டப்போகின்றனர் என்ற வாதத்தை பெரும்பாலும் யாரும் முன்வைப்பது இல்லை.

இரண்டாவது, நியுட்ரினோ என்பது இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் இருந்துவரும் ஒரு துகள். எனவே அதை ஆய்வு செய்வதால் எதுவும் பிரச்னை வரும் என கருதவில்லை. ஆனால், நியூட்ரினோ ஆய்வுக்கு இவர்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை நியுட்ரினோ கற்றைகளை பயன்படுத்தப்போகின்றனர். இது பாதிப்பை உருவாக்குமா, செறிவூட்டப்பட்ட நியூட்ரினோ கற்றையில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுமா என்பதை எல்லாம் பல விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். ஆபத்து வர சாத்தியம் உண்டு என சில ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வு முடிவுகளை வெளியுட்டுள்ளனர். இவற்றை புறக்கணித்துவிட முடியாது. இதுவரையிலான மனித அறிவின் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ள நியூட்ரினோவில் நிகழ்த்தப்படும் ஆய்வில் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்பட்டால், அதன் பாதிப்பு எப்படி இருகுக்ம் என்பதை அனுமானிக்க முடியவில்லை.’’ என்பது விமர்சனம் செய்வோரின் வாதம்

அதேநேரம், ‘செயற்கை நியூட்ரினோ கற்றைகள் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது. ஒளி என்பது போட்டானால் ஆனது. விளக்கு வெளிச்சமானாலும், சூரிய வெளிச்சம் ஆனாலும் போட்டோன் என்பதுதான் அடிப்படை. அப்படியிருக்கும்போது விளக்கை மனிதர்கள் பற்ற வைக்கிறோம் என்பதால் அது செயற்கை போட்டான் என்று சொல்ல முடியாது. அறிவியல் இதை ஏற்காது. அப்படித்தான், ஆய்வக வசதிக்காக நியூட்ரினோவை செறிவூட்டுவதை பெரும் ஆபத்து போல சித்தரிக்கிறார்கள்’’ என்று இதை மறுக்கின்றனர்.

இவை அனைத்தையும் கடந்து, இந்தியா போன்ற பலகோடி ஏழைகளை கொண்டஒரு நாடு, இதுபோன்ற அடிப்படை ஆய்வுகளுக்கு முன்னுரிமை தரவேண்டுமா என்ற தர்க்கமும்முன்வைக்கப்படுகிறதுஅறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு.  அறிவியல்,ஒரு விஷயத்தைச் சோதனை செய்து கண்டுபிடிக்கும்தொழில்நுட்பம்அதைச்செயல்படுத்தும்அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் முதலீடு தேவைஇந்தியா போன்றபொருளாதாரரீதியாக இன்னும் தன்னிறைவை அடையாதகோடிக்கணக்கான ஏழைகளைக்கொண்ட ஒரு நாடுஅறிவியல்  ஆய்வுகளுக்கு பல்லாயிரம் கோடி பணத்தை செலவழிப்பதைவிட,  அறிவியல் கண்டுபிடிப்புகளின்  அடிப்படையில்  நாம் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.

இப்போது தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள்நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம்என்ற பெயரில் இந்தத் திட்டத்தை எதிர்த்து களம் இறங்கியுள்ளன. தேவாரத்தை சுற்றியுள்ள பகுதி மக்களும் குழப்பத்திலும், அச்சத்திலும் தவித்து வருகின்றனர்.

நியூட்ரினோ என்ற கண்ணால் காண இயலாத ஒரு சின்னஞ்சிறிய துகள் மீது  ஆய்வு நடைபெறுமா? கட்சிகளின், மக்களின் எதிர்ப்பு என்னவாகும்? நியூட்ரினோ துகள் போலவே விடை தெரியாத கேள்விகள் நம் முன்னே காத்திருக்கின்றன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு