IPL: காசு, பணம், துட்டு, Money.. Money..


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி நாடே பேசுகிறது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 25 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரன் எடுக்கும் வகையில் மோசமாக பந்து வீச ஒரு ஓவருக்கு 60 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கியிருக்கிறார்கள். மைதானத்தில் இருந்தபடி துண்டை இடுப்பில் சொருகுவது, டி-சர்ட்டை மேலே இழுத்துவிடுவது, கையில் ரிஸ்ட் பேண்ட்டை அணிந்துகொள்வது... என லட்சக் கணக்கான ரசிகர்களின் கண்கள் பார்த்திருக்கும்போதே ரகசிய சமிக்ஞைகளை கொடுத்திருக்கின்றனர்.


சிக்ஸ் அடித்தபோது தலையை கவிழ்ந்து அவர்கள் ஃபீல் பண்ணியதை நினைத்து ‘என்னமா ஃபீல் பண்ணான்டா.. ஙொய்யால..' என ஆதங்கப்படுவதைத் தவிர ரசிகர்களுக்கு இப்போது வேறு வாய்ப்புகள் இல்லை. இவர்களின் சிக்னல்களை வைத்து சூதாட்டக்காரர்கள் பெட் கட்டுவதற்கு ஏதுவாக மைதானத்தில் இருந்தபடி வாம்-அப் செய்வது போல நேரம் கடத்தியிருக்கிறார்கள். இந்த கருமம் எதுவும் புரியாமல் ‘லாஸ் ஆஃப் பே'-வில் லீவ் போட்டுவிட்டு டி.வி.யில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள், அவர்கள் அடித்த சிக்ஸுக்கும், எடுத்த விக்கெட்டுக்கும் கைதட்டி, கண்ணீர் விட்டு... காமெடி பீஸ்களாய் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கிரிக்கெட் ரசிகராயின் மனசாட்சியுடன் சொல்லுங்கள்... ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடப்பது இப்போதுதான் உங்களுக்குத் தெரியுமா? ஐ.பி.எல். போட்டியே ஒரு சூதாட்டம் இல்லையா?

கிரிக்கெட் என்ற விளையாட்டில் புழங்கும் பணம், லாபி, அரசியல், வியாபாரம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதுபற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் நிறைய பேசியிருக்கிறார்கள். ஐ.பி.எல். என்பது அதில் இருந்து சற்றே வேறுபட்டது. ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை, விளம்பரங்கள், பிராண்ட் அம்பாசிடர்கள், கிரிக்கெட் வீரர்களின் சம்பளம்... என பல்லாயிரம் கோடிகளை கொட்டி கிரிக்கெட் நடத்தும் முதலாளிகளுக்கு ‘துரித லாபம்' சம்பாதித்துக் கொடுக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐ.பி.எல். போட்டிகள். ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளோ, 100 ஓவர்கள் வீச வேண்டிய ஒரு நாள் போட்டியோ ஈட்டித் தரும் வருவாயை விட 20:20 போட்டிகளில் லாபம் அதிகம்; செலவிடும் நேரம் குறைவதால் செலவும் குறைவு. அனைத்தையும் அதிவேகமாக நுகரப் பழகிவிட்ட மக்களின் மனம், விளையாட்டிலும் அத்தகைய வேகத்தை எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் அதிவேக சேவையை வழங்கி அதிவேக லாபத்தையும் அள்ளுகிறது. ஆரம்பத்தில் 5,000 கோடி ரூபாயாக இருந்த ஐ.பி.எல். போட்டிகளின் மதிப்பு, கடந்த ஆண்டு 15,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த ஆண்டு இது 20,000 கோடியை நெருங்குகிறது.

இப்போதைய ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பான தொலைகாட்சி விவாதங்களில், ‘இது ஒரு தேசிய அவமானம்' என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். அது உண்மையாயின், இந்த அவமானம் இன்று தொடங்கியது இல்லை. அது ஐ.பி.எல். சீஸன் 1-ல் இருந்தே துவங்கிவிட்டது. விளையாட்டு வீரர்களை அவர்களின் சுய மரியாதையை மதித்து அணிக்குத் தேர்வு செய்யாமல், சந்தையில் பல் பிடித்து மாடு வாங்குவது போல ஏலம் எடுப்பது எவ்வளவுப் பெரிய அசிங்கம்? சுய மரியாதையுள்ள வீரர்கள் இந்த ஏலத்தில் இருந்து விலகிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களோ... பெரும் தொகையை ஒரே மூச்சில் அள்ளும் நல்வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்டனர்.

ஐ.பி.எல்லுக்கு முன்பு ‘இந்திய கிரிக்கெட் என்பது தேச ஒற்றுமையின் அடையாளம்; தேச பக்தியின் சின்னம்' என்றெல்லாம் வசனம் பேசினார்கள். அத்தகைய வெறியை கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களிலும் ஆழ விதைத்தார்கள். குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் போலவே பார்க்கப்பட்டது. ஐ.பி.எல். வந்தது. பிரதேச‌ வாரியாக கிரிக்கெட் ரசிகர்களை கூறுபோட்டது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்' ‘கொல்கத்தா நைட் ரைடர்' என பிரதேச வெறியை தூண்டிவிட்டு கல்லா கட்டியது. தேசிய வெறியிலும் துட்டு; பிரதேச வெறியிலும் துட்டு. ஐ.பி.எல். அணிகளின் ஓனர்களுக்கு இத்தகைய தேசியவெறியோ, பிரதேச வெறியோ இல்லை. அவர்களுக்குத் தேவை எல்லாம் முதலீட்டை விட பல மடங்கு லாபம். அதனால்தான் கலாநிதிமாறன், ஆந்திர அணியை வாங்குகிறார். ஷாருக்கான், கொல்கத்தா அணியை வாங்குகிறார். ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா.. என வெளிநாட்டு வீரர்கள் எல்லாம் இந்த அணிகளுக்காக விளையாடுகின்றனர். ஐ.பி.எல்-லின் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சில வகை வருவாயை அனைத்து உரிமையாளர்களும் பங்கிட்டுக்கொள்கின்றனர்.

தன் மாநிலத்தின் அணி வெற்றிபெற வேண்டும் என கனவு காணும் ரசிகனால், தன் மாநில அணியில் விளையாடும் வீரர்களையோ, அதன் உரிமையாளரையோ தீர்மானிக்க முடியாது. அதை அவனது மனம் சிந்திப்பதும் இல்லை. ஆர்ப்பரிக்கும் மைதானத்தின் பெரும் ஓசையில்; காற்றில் பறக்கும் பந்து உருவாக்கும் உவகையில்... அவனது ரசணை மாற்றி அமைக்கப்படுவதை, உழைப்பும், சேமிப்பும் சுரண்டப்படுவதை அவன் உணர்வதில்லை.

இப்படி நுணுக்கமாக சிந்தித்துதான் ஐ.பி.எல். அக்கப்போர்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. அவ்வப்போது அது வெளிப்படையாகவும் வரத்தான் செய்கிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். சீசன் நடந்தபோது, ‘இந்தியா டி.வி.' என்ற தொலைகாட்சி ஒரு ரகசிய விசாரணை நடத்தியது. நான்கு வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ய ஒப்புக்கொண்டு அப்பட்டமாக பேரம் பேசினார்கள். கை எடுக்க இவ்வளவு, கால் எடுக்க இவ்வளவு என ரேட் பேசும் கூலிப்படையைப் போல ‘நோ பால் போட இவ்வளவு, வொய்டு போட இவ்வளவு' என பார்ட், பார்ட்டாக பிரித்துப்போட்டு யாவாரம் பார்த்தார்கள். அதை பதிவு செய்து ஒளிபரப்பியது அந்த தொலைகாட்சி. ஆனால் அதை அந்த நான்கு பேரின் தனிப்பட்ட ஒழுக்கப் பிரச்னையைப் போல மாற்றிப்பேசி, ஊத்தி மூடினார்கள்.

கடந்த ஆண்டே, ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன் என்ற கல்லூரி மாணவன் ஐ.பி.எல். சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் கட்டி தோற்றுவிட்டான். அந்த கடன் தொகையை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி, இறுதியில் கொலையும் செய்துவிட்டான். இன்னும் எத்தனையோ... தன் மத்திய அமைச்சர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தன் ‘கேர்ள் ஃப்ரெண்டு'க்காக கொச்சி அணியில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பெற்றுத் தர முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பதவியை இழந்த‌ சசி தரூரை மறக்க முடியுமா?

அந்த சசி தரூர்தான் இப்போது - ஸ்ரீசாந்தே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில் - ‘‘ஸ்ரீசாந்த்தை அவசரப்பட்டு குற்றவாளி என தீர்ப்பு சொல்ல முடியாது. விசாரித்தபிறகே அதை முடிவு செய்ய வேண்டும்" என்கிறார். இருந்தாலும் கேரளா அரசு தனது லாட்டரி விளம்பரத்தில் இருந்து ஸ்ரீசாந்த்தை வெளியேற்றியுள்ளது. ‘‘அவர் மீது ஊழல் புகார் இருப்பதால், அவரை நடிக்க வைப்பது சரியல்ல" என அதற்கு விளக்கம் வேறு. லாட்டரி சூதாட்ட விளம்பரத்துக்கு ஸ்ரீசாந்த்தை விட பொருத்தமான நபர் வேறு யார்?

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் 8 கோடி, 10 கோடி, 15 கோடி என சம்பளம் வாரி வழங்கப்படுகிறது. அதுபோக விளம்பரங்களில் நடிக்கும் வருவாய், பரிசுப்பொருட்கள், ஆட்டநாயகனாக தேர்வானால் அந்தப் பணம்... என ஏராளமான தொகை, நேர் வழிகளிலேயே வருகிறது. அது போதாது என்றுதான் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி சூதாடி பிடிபட்ட தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டர் ஹன்சி குரேனியே, ‘‘ஆம், நான் பணம் வாங்கினேன். அதற்காக எனக்கு தேசப்பக்தி இல்லை என சொல்ல முடியாது. எனக்கு நாட்டையும் பிடிக்கும்; பணத்தையும் பிடிக்கும்" என்று தத்துவம் பேசினார். நல்லவேளையாக இப்போது சிக்கியவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியிலும் 400 கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு சீசனின் மொத்த சூதாட்ட மதிப்பு, 6,000 கோடி ரூபாய். இந்த பணத்துக்காக அவர்கள் என்னவும் செய்வார்கள். 6,000 கோடி முதலீடு போட்டவனுக்கே இவ்வளவு அதுப்பு இருந்தால் 15,000 கோடி கொட்டியிருக்கும் அணிகளின் உரிமையாளர்களுக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்? சியர் லீடர்ஸ் ஆபாசம் முதல், ஐ.பி.எல்.லுக்காக தேர்தலையே மாற்றி வைக்க முயலும் அதிகாரம் வரை அவர்கள் என்னவும் செய்வார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகளுக்கு அந்நியச் செலாவணி சட்டத்தை மீறி 1,077 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொரிஷியஸ், பகாமா, பிரிட்டீஷ் வெர்ஜின் ஐலேண்ட் ஆகிய நாடுகள் வழியாக வந்திருக்கும் இந்தப் பணம் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. ஆனால் விசாரணை கூட இல்லை. ‘‘ஐ.பி.எல். போட்டிகள் நடத்திய லாபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி 160 கோடி ரூபாயை இன்னும் கட்டவில்லை. அதற்காக அவர்களுக்கு 96 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கடந்த 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வரி இன்னும் வசூலிக்கப்படவில்லை.

மஹாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றின் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு சந்தித்திருக்கிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றிவிட்டன. குடிநீருக்கே மக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் மும்பை மற்றும் புனே நகர கிரிக்கெட் மைதானங்களின் பசுமையை பாதுகாக்க, அரசு சலுகை விலையில் தண்ணீர் வழங்குகிறது. ஒரு டேங்கர் லாரி 400 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு 25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் கொடுக்கிறது மஹாராஷ்டிரா அரசு. மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளோ, ஒரு டேங்கர் லாரி தண்ணீரை 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. விவசாயிகள் தாகத்தில் சாக... கிரிக்கெட் தாகத்துக்கு தாராள விநியோகம் நடக்கிறது.

ஆகவே ஏதோ சூதாட்டக்காரர்கள் மறைமுகமாக பணம் கட்டி நடத்துவதாலும், அதில் சிலர் அம்பலப்பட்டுக்கொண்டதாலும் இது மட்டும்தான் சூதாட்டம் என்பதில்லை. ஐ.பி.எல். என்ற இந்த போட்டியே ஒரு மோசமான சூதாட்டம்தான். இது பல கோடி உழைக்கும் மக்களின் வருமானத்தை சுரண்டுகிறது; மக்களின் ரசணையை வன்முறையாக மாற்றி அமைக்கிறது; நீங்கள் எப்போது கை தட்ட வேண்டும், எப்போது கோபப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கிறது. இனியும் இது விளையாட்டல்ல, திட்டமிடப்பட்ட குற்றம், தீர்மானிக்கப்பட்ட சதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதி சூழ் உலகு..!

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'