நள்ளிரவின் நாட்குறிப்பிலிருந்து..
நிராகரிக்கப்படும் அன்பின் வலி கொடியது। எவற்றினும் கொடியது.எவ்வித கைமாறும் பாராது, மலர்களின் நறுமனமென நுரைக்கிறது என் அன்பு. அது, நுகர்வின் ருசியை ஒருபோதும் உணர்ந்ததில்லை.
தர்க்கத்தின் பிரகாரம் தவறு எனதாகவும்/எனதாகவே இருக்கலாம். ஆனால், இறுக மூடிய கரங்களுக்குள் நாய்க்குட்டியின் அடிமடி வெப்பமென பகிர்வதற்கான நேசங்களே வாழ்கின்றன என்பதை தயவோடு புரிந்துகொள்ளுங்கள். அன்பை பகிரும் கலை அறியும் ஆயத்தங்கள் அனைத்திலும் எனக்குப் பின்னடைவே. என் கரங்கள் நீள்வதற்குள்ளாக உங்கள் வார்த்தைகள் முடிந்திருக்கின்றன அல்லது உங்கள் கவனம் சிதறும் கணம் ஒன்றில் காற்றிடம் கரம் நீட்டி ஏமாறுகிறேன். இரண்டுமல்லாது என் கரம் நீட்டலுக்கான காரணம், அதன் எதிர்தன்மையிலும் உணரப்படுகின்றன சமயங்களில்.
உணர்ச்சிக்கேற்ற பாவனைகளை வெளிப்படுத்தத் தெரியாத முட்டாளாக இருக்கிறேன். உங்கள் கண்ணீரின் உப்பைப் பகிர நீளும் என் கரங்களில் கொடுவாள் இருப்பதாக உணர்வது உங்கள் தவறு மட்டுமல்ல.. அவ்வாறாக உணர வைக்கும் பாவனைகளையும், சொற்களையும் கொண்டிருக்கும் என்பால், தவறின் விழுக்காடு அதிகமிருக்கிறது.
கூட்டத்தில் ஒருவனாக இருக்கவே பிரியம். தனியனாகத் திரியவே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை என்னை நீங்கள் உணர்ந்திருப்பதற்கும், இந்த எழுத்துக்களுக்கும் முரண் இருப்பதாக நினைக்கலாம். தின வாழ்வின் சௌகர்யங்களுக்காக என் புலன்களும் அனிச்சையாய் நடிக்கப் பழகியிருக்கக்கூடும். நான் சொல்வதும்/எதிர்பார்ப்பதும் அதையல்ல. இந்த நடிப்பு கடந்து அக உலகின் நேசங்களைப் பகிர விரும்புகிறேன்.
சுவிங்கம் போல வார்த்தைகளை நான் மென்று கொண்டே இருப்பதாக குற்றப்படுத்துகிறீர்கள். துப்பினால் எழும் மனம் உங்களுக்கு உவப்பளிக்காமல் போகலாம் என்ற தயக்கமே அதன் காரணமாக இருக்கக்கூடும். ஆனால், நிச்சயமாக நம்புங்கள்.. என் மௌனங்களுக்குப் பின்னால் எந்த கூர் தீட்டும் பட்டரைகளும் இயங்கவில்லை. வெளிப்படுதலின் தயக்கத்தோடு மட்டுமே வார்த்தைகள் விக்கி நிற்கின்றன.
ஏன் தயக்கம்..? நான் அறியேன். என்பால் நான் கொண்ட தாழ்வின் மிச்சம் என்பது என் அனுமானம். பொய்யாகவும் இருக்கக்கூடும்.
அறிவிற்கு அப்பாற்பட்ட உணர்வின் உன்னதங்களை எவ்விதம் வெளிப்படுத்துவது॥ நாம் இயல்பென் வரையறுக்கும் உணர்வுகள் அனைத்தும் எவ்வித முன் தீர்மானங்களும் இன்றிதான் வெளிப்படுகிறதா॥ அவற்றை அனிச்சையென வரையறுக்க இயலுமா॥?
யோசித்துப் பார்த்தால் உங்களை உங்கள் இயல்போடு ஏற்றுக் கொள்ளாத எனக்கும், என்னை என் இயல்போடு ஏற்கத் தயங்கும் உங்களுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஏற்படுத்திக்கொண்ட சட்டகங்களே, நம் புற/அக எல்லைகளைத் தீர்மானிக்கின்றன போலும்.
கருத்துகள்
லவ் பெய்லியர்??????
லவ் பெய்லியர்??????\\
ரீப்பிட்டே!!!!
இரண்டு மாதங்களுக்கு முன் தஞ்சையிலிருந்து ஒரத்தநாட்டிற்கு சென்றபொழுது ஆழிவாய்க்கால் ஊரின் பெயர் பலகையைப் பார்த்த பொழுது உங்கள் ஞாபகம் வந்தது.
பதிவைப் போலவே இதனையும் வெகுவாய் ரசித்தேன் :-)
முன்னிரவில் துவங்கும் தனிமையின் வெறுமை நள்ளிரவில் பரிணமித்து நமது முகமூடிகளைக் கழற்றும் ஆசாத்தியத் திறமை கொண்டதுதான்.
பகிர்வுக்கு நன்றி.
புது முயற்சியா? நடைவண்டி நல்லா ஓடுது போலருக்கு? நடத்துங்க...