எரியும் பனிக்காடு ( Red Tea )
தெருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..?
கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத் தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. வளைந்து நெளிந்து செல்லும் அந்த பசுமை மலைச்சரிவுகளுக்கும் கீழ் ஏராளமான மனித உடல்கள் புதையுண்டிருக்கின்றன. வனத்தை அழித்து, ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களை உயிர் பலியிட்டு உருவாக்கப்பட்டவைதான் இப்போது நாம் காணும் தேயிலை தோட்டங்கள். நாம் உறிஞ்சும் ஒவ்வொரு துளி தேநீரிலும் ஒரு சொட்டு ரத்தமும் கலந்திருக்கிறது. வலி மிகுந்த அந்த வரலாற்றை ஒரு கதை வடிவில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது 'எரியும் பனிக்காடு' புத்தகம். பி.ஹெச்.டேனியலால் ஆங்கிலத்தில் Red Tea என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் இது. இரா. முருகவேளால் மொழிபெயர்க்கப்பட்டு கோவை விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் இருக்கும் ஆனைமலைதான் கதைக்களம்। 1940-களில் அந்த மலை ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது। காடுகளை அழித்து புதிய தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கவும் அவர்களுக்கு ஆயிரக்கணக்காவர்கள் தேவை. அருகாமை மாவட்ட மக்கள், உள்ளூரிலேயே வேலை கிடைத்ததால் மலையேறி வந்து வேலை செய்ய தயாரில்லை. தோதான வேறு இடங்களை தேடியபோது அகப்பட்டதுதான், அந்நாட்களில் வறட்சியின் கொடூர பிடியில் சிக்கியிருந்த தென் மாவட்டங்கள்.
மலைக்குப் போனால் மலையளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதாக ஏதேதோ கதைகள் சொல்லி கொத்து கொத்தாக மக்களை திருநெல்வேலியிலிருந்து வால்பாறைக்கு புலம் பெயர்த்து அழைத்து வந்தனர். தென்காசி, ராதாபுரம், கழுகுமலை, கோவில்பட்டி, ராஜபாளையம், நாங்குனேரி என்று நெல்லை மாவட்டத்தில் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் தேயிலைத் தோட்டங்களில் அகதிகளாகப் புகுந்தனர். அவர்களில் தலித்துகள் அதிகம்.
சம்பளம் என்று எதுவுமில்லை. ஊரிலிருந்து கிளம்பும்போது ஆட்களை ஏற்பாடு செய்கிற 'மேஸ்திரி' இருபது ரூபாய், முப்பது ரூபாய் (அந்த காலகட்டத்தோடு பொருத்திப்பார்த்துப் புரிந்துகொள்ளவும்) என்று முன்பனம் கொடுப்பார். அதை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான். அதன்பிறகு தோட்டங்களுக்கு வந்து சேர்ந்தால், மேஸ்திரி சொன்னதற்கு எதிர் மாறாகத்தான் எல்லாம் நடக்கும்.
- தேயிலைத் தோட்டத்து வேலை அவர்கள் நினைத்து வந்ததுபோல அத்தனை சுலபமானதாக இல்லை. காலையின் கடுங்குளிரில் கொழுந்து பறிக்க வேண்டும், மாலை வரை அந்த கணம் நிறைந்த சாக்கை முதுகில் மாட்டிக்கொண்டு திரிய வேண்டும்
- செடிகளுக்கிடையே நெளியும் அட்டைகள் எந்த வலியும் தெரியாமல் கையைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்,
- பொழுது விடியும்/சாயும் வேலைகளில் காட்டு யானைகள் கூடிவந்து பலரை துவம்சம் செய்யும்,
- வருடம் ஒரு முறை எப்படியும் மலேரியா வரும், கொத்து கொத்தாக சாவார்கள், இன்னொரு பாட்டம் விஷ காய்ச்சல் வரும், குடும்பம் குடும்பமாக மடிவார்கள்,
- தோட்டத்தில் வேலைபார்க்கும் பெண்களை வெள்ளைக்காரத் துரைகள் பாலியல் சில்மிஷங்கள் செய்வார்கள்-பொருத்துக்கொள்ள வேண்டும், எதிர்த்து பேசினால்் தேயிலைத் தோட்டத்துக்கு உரமாவார்கள்,
- கடுங்குளிர் காலங்களில் குழந்தைகள் தப்பிப்பிழைத்தால் பெரிய விசயம்,
- பறிக்கும் தேயிலையை குறைத்து கணக்கு எழுதி படிக்காத கூலிகளை ஏமாற்றுவார்கள், வருடம் முழுவதும் உழைத்தாலும் ஊருக்குச் செல்வதற்குக் கூட காசு மிஞ்சாது,
- ஒரு முறை உள்ளே வந்துவிட்டால் குறைந்தது மூண்று வருடங்கள் உழைத்தால்தான் ஊருக்குச் செல்லும் அளவுக்காவது சம்பாதிக்க முடியும்,
- கொடுமைத் தாங்காமல் இடையில் ஓட நினைத்தால் அந்த கடும் மலைப்பாதையில் கீழே இறங்கும் முன்னர் காட்டு விலங்கு ஏதோ ஒன்றிடம் மாட்டி உயிர் போகும் அல்லது குளிரால் விறைத்து செத்துப்போக வேண்டும் அல்லது எஸ்டேட் ஆட்கள் பிடித்துவந்து அடித்துப் புதைத்துவிடுவார்கள்,
- எஸ்டேட்டின் அதிகாரத்தில் பல நிலைகளில் இருக்கும் வெள்ளைக்கார துரைகளை எப்போதுப் பார்த்தாலும் 'சலாம் துரைகளே' என்று விறைப்பாக நின்று சல்யூட் அடிக்க வேண்டும், துரைகளுக்கு முன்னால் செருப்புப் போட்டுக்கொண்டு நிற்கக்கூடாது, மழை அடித்து ஊற்றினாலும் துரைக்கு முன்னால் குடை பிடிக்கக்கூடாது...
இதெல்லாம் அந்த எஸ்டேட்டுகளின் கட்டுப்பாடுகள்.
வாசித்து முடிக்கையில் பசுமைக்காடுகளாக இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் பயமுறுத்தும் பிசாசுகளாகத் தெரிகின்றன. எந்தெந்த நாய்களோ சம்பாதிக்கவும், அனுபவிக்கவும் தங்களின் உயிரை இழந்த ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் உயிர் ஓலங்கள் மலை முகடுகளில் எதிரொலிப்பது கேட்கிறது அந்த அளவுக்கு அந்த மக்கள் பட்ட வேதனையை அழுத்தமாக தந்திதிருக்கிறார் நூலாசிரியல் டேனியல்.(அந்நாட்களில் தேயிலைத் தோட்டங்களில் இருந்த மருத்துவமனைக்கு வேலைபார்க்க வந்த மருத்துவர்தான் டேனியல். அங்கு நிலவிய சகிக்கவே முடியாத மனிதத்தன்மையற்ற செயல் கண்டு கொதித்த அவர், தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தென்னிந்திய தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கத்தை அமைத்தார். அதன்பிறகுதான் ஓரளவுக்கான உரிமைகள் கிடைக்கத் தொடங்கின. அந்த மக்களின் சோக வாழ்வை வெளியில் கொண்டு வரும்விதமாக டேனியலால் எழுதப்பட்ட நூல்தான் இது). அதை மொழிபெயர்ப்புக்குரிய வறட்டுத்தன்மை எதுவுயின்றி, அசல் திருநெல்வேலி நடையில் சிறப்பாக மொழி பெயர்திருக்கிறார் இரா.முருகவேல்.
இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு முந்தைய வாரம் எதேச்சையாக, வேறு வேலையாக வால்பாறை போக வேண்டியிருந்தது। படித்த பக்கங்கள் எல்லாம் அப்படியே காட்சிகளாக கண்முன்னே விரிந்தன.வாசித்து முடித்த அடுத்த வாரம் தேனி மாவட்டத்தில் இருக்கும் இன்னொரு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதியான மேகமலைக்குப் போனேன். அங்கும் இதேபோன்ற கொடுமைகள்தான் நடந்திருக்கின்றன.
இப்போதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வின் எவ்வித மலர்ச்சியும் வந்துவிடவில்லை. கொழுந்து பறிக்கச் செல்லும் பெண்கள் காலையில் எட்டு மணிக்கு வேலைக்குப் போனால், மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப முடியும். ஒரு நாள் கூலி என்பது வெறும் 80 ரூபாய்தான். இது அரசு நடத்தும் எஸ்டேட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கான கூலி. இதுவே தனியார் எஸ்டேட்டுகள் எனில் ஒரு நாளைக்கு 77.65 பைசாதான் கூலி. மழை பெய்தாலும் வேலை செய்தே ஆக வேண்டும். மாதம் முழுவதும் உழைத்தாலும் 2,500 ரூபாயைக் கூட தாண்டாது.
இதே உழைப்பை திருப்பூர் சாயப்பட்டரைகளிலோ, சொந்த ஊர்களின் வயல்களிலோ கொடுத்தால், இதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும். இருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்த தொழிலுக்குள் வந்து முடங்கிவிட்டனர். செய்வதற்கு வேறு வேலை தெரியாது என்ற நிலையில் புதிய வேலைக்கு மாற அனைவருக்குமே பயம். 1940-களில் ஐந்து ரூபாய் கூலி என்பது அடிமைத்தனம் என்றால், இப்போது 80 ரூபாய் கூலி என்பதும் கொத்தடிமைத்தனமே.! எத்தனையோ வகையான போராட்டங்களை செய்து பார்த்துவிட்டார்கள்.. அப்போதெல்லாம் தொழிற்சாலைகளை மூடி, தொழிலாளர்களை பட்டினிபோட்டு பனிய வைக்கும் தந்திரத்தைதான் எஸ்டேட்டுகள் செய்து வருகின்றன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி, தாங்கள் கஸ்டப்பட்டாலும், தங்களின் அடுத்தத் தலைமுறையை இதிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான். பெரும்பாலானோர் அதைத்தான் இப்போது செய்து வருகிறார்கள்.
கருத்துகள்
எங்கள் ஊரில் நெல் வயல்களில் களையெடுக்கும் பெண்களுக்கு இன்னும் சம்பளம் 40 ரூபாய் தான்!
/மலைக்குப் போனால் மலையளவு பணம் சம்பாதிக்கலாம்/
இன்றும் பல கிராமப்புற ஏழைகளிடம் உள்ள நம்பிக்கையும் எந்த அரசாலும் நிறைவேற்றப்படாத(முடிந்திராத) கனவு.
/சம்பளம் என்று எதுவுமில்லை.......வீட்டில் கொடுத்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்/
அன்று கொத்தடிமை முறை-இன்று ஒப்பந்தக் கூலி முறை.
/இதே உழைப்பை திருப்பூர் சாயப்பட்டரைகளிலோ, சொந்த ஊர்களின் வயல்களிலோ கொடுத்தால், இதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும்/
சமத்துவ சோசலிச சமுதாயத்தை அமைப்பதாக அரசியல் சட்டத்தில் கூறி 60 வருடங்களாகியும் இன்னும் நம்மால் ச - என்ற எழுத்தைக் கூட தாண்ட முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
- இதைப் படித்தபிறகு தேநீர் சுவை தித்திப்பதில்லை;
முன்பு இதற்கும் முட்டுக் கட்டை இருந்தது. என் தந்தை மேகமலையில் (1970 80 களில்) 10 ஆண்டு்களுக்கும் மேல் மின்சார வாரியத்தில் அணைகள் கட்டும் வேலை செய்திருக்கிறார்.
ஆனால் எங்களை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முதலாளிகளே கட்டிக் கொடுத்திருந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. முதலாளிகளின் நோக்கம் அவர்கள் படிக்கக் கூடாது என்பதே. படித்தால் கேள்வி கேட்பார்கள். ஏன் வம்பு.
எனவே ஆசிரியர்களே மாணவர்களை சுள்ளி பொறுக்க அனுப்பிவிடுவார்கள். என் தந்தையோடு வேலை செய்த ஒரு சிலரின் பிள்ளைகளும் அங்கே படித்து வீணாய் போயிருக்கிறார்கள்.
ஓரளவு சுமாரான பள்ளி என்றால் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆபத்தான மலைப் பாதையில் பயணம் செய்து மலையடிவாரத்தில் உள்ள சின்னமனூருக்கு போகவேண்டும். இப்போது அங்கே நிலமை எப்படியோ? விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்.