காதலித்துப்பார்- டவுசர் கிழியும், தாவு தீரும்..!"தோழர்.. காதலிக்கிறதுன்னா என்ன பண்ணனும்..?" - இரண்டாம் ஜாம தூக்கத்திலிருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பை விட அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 'என்னடா இது.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எலி ஜட்டி போட்டுகிட்டுப் போகுதே..'ன்னு எனக்கு ஆச்சர்யம்.

"ம்... குவாட்டர் அடிச்சுட்டு குப்புறடிச்சு தூங்கனும்.." என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை.

"தோழர்.. உங்களை வெவரமானவர்னு நினைச்சுதானே இதை கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.."

"எல.. நான் சொன்னனா நான் வெவரம்னு. நீங்களா நெனச்சுகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய..?"

"சும்மா சொல்லுங்க தோழர்.. காதலிக்கிறவங்க என்னல்லாம் பண்ணுவாங்க..?"

"இது என்னல கூறுகெட்டத்தனமா இருக்கு.. நான் என்னமோ நெதம் ரெண்டு பிள்ளைவொ கூட சுத்துறமாறி என்கிட்ட கேக்க. கழுத.. நம்மளே சீண்ட ஆளில்லாம நாதியத்துக் கெடக்கோம். இதுல ஊமையன்கிட்ட ஊத்துமலைக்கு வழிகேட்ட மாதிரி நல்லா கேட்டப்போ. அது சரி.. என்ன திடீர்னு காதலைப்பத்தியெல்லாம் கேக்க..?"

காலக்கொடுமை, அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவன் வெட்கப்பட்டான். நாலது தேதிவரை அவன் வெட்கப்பட்டு நான் பார்த்ததில்லை. இதுதான் முதல்முறை. ஸ்டாலினாகிய அவன் ஏதேதோ காரணத்தால் பெற்றோர் இட்டபெயரை காப்பாற்றும் பொருட்டு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்றின்மீது பற்றுகொண்ட வரலாற்று விபத்து நடந்து ஏழெட்டு வருடங்களாகிவிட்டது.

செய்துங்கநல்லூரில் ஸ்டாலின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த வக்கீலொருவன் சாக்கடைத் தண்ணீர் பிரச்னைக்காக முன்னொரு காலத்தில் வக்கீல் நோட்டீஸ் விட்டான். 'பக்கத்துலதானே இருக்க.. கூப்பிட்டு சொன்னா என்ன..? எதுக்கு நோட்டீசெல்லாம் விட்ற..?' என்று ஸ்டாலின் கேட்ட யதார்த்தவாதமான கேள்விக்கு, 'அதெல்லாம் உன்னயமாதிரி சாதாரணமான மனுஷப்பயலுவ செய்யிற வேலை. நான் வக்கீலு. நோட்டீஸ் விட்டாதான் எனக்கு மரியாதை..' என்று மிகை யதார்த்தமாய் அந்த வக்கீல் சொன்ன பதில்தான், ஸ்டாலினை வக்கீலுக்குப் படிக்க வேண்டும் என்று உத்வேகம் கொள்ள செய்தது. இதற்காக கடும் முயற்சி செய்து எப்படியோ சீட்டு வாங்கி வக்கீலுக்குப் படித்துகொண்டிருந்த நான்காவது வருடத்தில்தான் அவன் எனக்கு அறிமுகம் ஆன இரண்டாவது வரலாற்று விபத்து நடந்தது.

கல்லூரிக்கு அருகிலிருந்த பேக்கரியொன்றில் நான் மாஸ்டராய் இருந்தபோது ஒரு நாள், என்னருகில் நான் வாசித்து வைத்திருந்த 'குடும்பம்..அரசு.. தனிச்சொத்து..' கவிழ்ந்து கிடந்தது. ஒரு கையில் பாதி கடித்த எக் பப்ஸை வைத்துக்கொண்டு அதை ஆசையோடு எடுத்துப் பார்த்தான் அவன். இப்படியே முன்னேற்றப் பதிப்பக நூல்களை எப்படியாவது கூட்டு சேர்ந்து படித்தாவது புரிந்துகொண்டு விடுவது என்ற எங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக தோழமை வளர்ந்தது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என்கூடவே வந்து தங்கிவிட்ட ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வக்கீலிடம் ஜூனியராய் இருக்கிறான்.

வன் வெட்கப்பட்டது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பார்றா.. தோழர் வெட்கப்படுறாரு. யாரு ராசா அந்தப்புள்ள..? என்ன வெவரம்..?"

இன்னும் கொஞ்சம் வெட்கம் சிந்தினான்.

"எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே.. வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்..?"

"இது சூப்பரா இருக்கு தோழர்.. இதே மாதிரி ஏதாவது சொல்லுங்க.."

"கருமம்.. அது தபூசங்கர்னு ஒரு ஆளு எழுதுன கவிதை. நீ உன் ஆளு யாருன்னு சொல்லவே இல்லையே..?"

"ரெண்டு மாசத்துக்கு முந்தி ஊருக்குப் போயிருந்தேன்ல தோழர்.. அப்ப என் செல்போனை எடுத்து நம்ம பசங்க யாருக்கோ மெசேஜ் அனுப்பியிருக்கானுங்க. அது எனக்குத் தெரியாது. அடுத்த நாளு அந்த நம்பர்லேர்ந்து ' who is this..?'னு மெசேஜ். 'மொதல்ல நீ யாருன்னு சொல்லு'ன்னு நான் அனுப்புனேன். இப்படியே மாத்தி,மாத்தி ஓடுனுச்சு தோழர். ரெண்டு நாளு கழிச்சு 'நாம ஃபிரண்ட்ஸா இருக்கலாம்'னு ஒரு SMS அனுப்புனா.."

"...ஹூம்..."

"ஒரே வாரத்துல வாடா, போடான்னு பேச ஆரம்பிச்சுட்டா தோழர். எனக்குதான் என்ன பேசனும்னே தெரியலை.."

"ஏன்.. 'அராஜகவாதமும், அராஜகவாத சிண்டிக்கலிசமும்' பத்தி பேசியிருக்கலாமே..?"

"நக்கல் பண்ணாதீங்க தோழர். பொம்பளைப் பிள்ளைகக்கிட்ட அதைப்பத்தியெல்லாம் எப்படிப்பேச..?"

"எல்லாம் தெளிவாத்தாண்டா இருக்கீய. நாந்தான் கேணப்பயலாயிட்டேன். சரி நீ சொல்லு.."

"ஒரு மாசத்துக்கு மேல மாத்தி, மாத்தி மெசேஜ்தான். எனக்குன்னா தலைகாலு புரியலை. எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற கொய்யா மரத்துல ஏறி உட்கார்ந்து நைட் பதினொன்ரை மணிக்கு மெசேஜ் அனுப்பிகிட்டிருந்தப்போ எங்க அய்யா பார்த்துட்டாரு.."

"மாட்டினியா.."

"இல்லை தோழர்.. 'நாளைக்கு திருச்செந்தூர்ல ஆர்ப்பாட்டம் இருக்கு. அதுக்காக எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பிகிட்டிருக்கேன்'னு சொல்லித் தப்பிச்சுட்டேன்.."

"பொம்பளைப்பிள்ளைக்கு மெசேஜ் அனுப்புறதுன்னாதான் பொய்யெல்லாம் பொத்துகிட்டு வருமே.."

"ஒரு வாரத்துக்கு முன்னாடி திடீர்னு போன்பண்ணி, 'நான் உன்னை லவ் பண்றேன். நீ என்ன சொல்றே..?' திடீர்னு கேக்கா. கருமம் நம்மளையும் ஒரு புள்ள லவ் பண்ணுதன்னு சொல்லுதா.. இதுல யோசிக்க என்ன கெடக்கு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன். ஆனா தோழர், அதுக்குப் பிறகு அவ பேசும்போதெல்லாம் ஒரு வார்த்தையை சொல்லுதா.. அதுதான் ஒரு மாதிரியா இருக்கு.."

"அப்படி என்னல சொல்லுதா..?"

" 'போடா லூசு'ங்கா தோழர். எப்பமாவது ஒரு தடவை சொன்னா பரவாயில்லை. பேசும்போதெல்லாம் நாலஞ்சு தடவை சொல்லுதா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ஆனா கோவம் மட்டும் வரமாட்டேங்கு.."

அவனுக்கு கோபம் வந்ததோ இல்லையோ... எனக்கு கபகபவென சிரிப்பு வந்தது. உள்ளே இழுத்திருந்த சிகரெட் புகை, சிரித்த சிரிப்பில் தொண்டையில் மாட்டிக்கொண்டு இருமலெடுத்தது.

"விட்றா ஸ்டாலினு. இனிமே நீ வெளங்கிடுவ. ஒரு பொம்பளைப்பிள்ளை வாயால 'போடா லூசு'ன்னு சொல்லிக் கேக்குற பாக்கியம் இங்க எத்தனை பேருக்கு கிடைச்சுருக்கு சொல்லு. கழுத.. நானெல்லாம் நாயா, பேயாதான் அலையுதேன். எந்தப்புள்ள நம்மளை பாக்கு..? எவனும் போன்பண்ணி சொல்லுவாய்ங்களோ என்னவோ.. நாம இந்தால நடந்தா, அதுக பத்தடி தூரம் தாண்டி அந்தால போவுதுக. ரெண்டு நிமிஷம் உத்துப்பாத்தா, 'என்னல பாக்க..?'ன்னு கண்ணை உருட்டி, மிரட்டிக் கேக்குதுக. நமக்கு வெடவெடங்கு. அந்த வகையில நீ பாக்கியசாலிதான் போ. 'ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னாலயும் ஒரு வர்க்கத்தோட முத்திரை இருக்கு'ன்னு பேராசான் லெனின் சொல்லியிருக்காரு. அந்தப்புள்ள 'லூசு'ன்னு சொல்றதுலயும் ஒரு முத்திரை இருந்தாலும் இருக்கும். நல்லா யோசிச்சுப்பாரு.."

"நீங்க லந்து பண்ணுறதிலேயே குறியா இருக்கீய.."

"அப்புறம் என்னடா.. என்கிட்டயும்தான் செல்போனு இருக்கு. நானும்தான் ஊருக்குப் போறேன். பயகளும்தான் எடுத்துப் பேசுதானுவ. ஆனா, வெவரமா 'இது இன்னொரு வெளங்காவெட்டி செல். இதுக்குப்பிறகு இந்த நம்பருக்கு மறந்தும் பேசிடாத..'ன்னு ஒரு மெசேஜை தட்டி விட்டுட்டுதான் கெளம்புறானுவ. அதுலயும், sent items, dialled numbers லயெல்லாம் போயி அந்த நம்பரை அடையாளம் தெரியாம அழித்தொழிப்பு செஞ்சுட்டுதான் அடுத்த வேலை பாக்கான். அது கெடக்கட்டும்..அதான் 'நீ லூசு.. நான் மெண்டல்'னு உன் காதல் நல்லாப் போவுது போலருக்கே.. அப்புறம் எதுக்கு நீ ஐடியா கேக்க..?"

"அது வந்து... நான் ஒரே மாதிரியா பேசுறனாமாம். எனக்கு ரொமான்ஸா பேச தெரியலையாம். 'லவ் பண்ற மாதிரியா பேசுத..?'ன்னு அப்பப்போ அவமானப்படுத்துறா. அதுக்கெல்லாம் ஏதாச்சும் ஸ்பெஷல் ஸ்டைல் இருக்கா தோழர்..? முன்னேற்றப் பதிப்பகத்துல எது எதுக்கோ புக் போட்டிருக்காங்க. இந்த காதல் கருமத்துக்கு ஒரு புத்தகம் போடலியே.."

"வெளங்குச்சு. முன்னேற்றப் பதிப்பக புத்தகங்களை நம்புன.. இப்பவே உன் காதல் க்ளோஸ். நீ மணிமேகலை பதிப்பக புத்தகங்களை டிரை பண்ணிப்பாறேன். அங்கதான் இந்த 'எப்படி..?' டைப் புத்தகமெல்லாம் கிடைக்கும். அதுசரி... உங்க கட்சியிலதான் எல்லாத்தையும் சித்தாந்த ரீதியா நியாயப்படுத்தனுமே.. நீ காதலிக்கிறதை எப்படி நியாயப்படுத்துவ..?"

"நீங்க வேற கடுப்புகளை கிளப்பாதீங்க தோழர். மார்க்ஸ் காதலிக்கலியா.. சே குவேரா காதலிக்கலியா. காதலிக்கிறதையெல்லாம் கட்சி தடுக்காது. ஆனா தெரிஞ்சா எதையாச்சும் பேசி கவித்துவிட்டுருவாய்ங்க. சொல்லக்கூடாது.."

-என்றவாறு பேசிக்கொண்டிருந்தவன், திடீரென ஆர்வமாகி, 'அவ என்ன ஹலோ டியூன் வச்சிருக்கா தெரியுமா..?' என்று கேட்டுவிட்டு, 'don't attend this call..' என்று மறக்காமல் மெசேஜ் அனுப்பிவிட்டு அந்த வோடஃபோன் நம்பரை டயல் செய்தான்.

"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்,
அந்திப்பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்,
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே,
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே,
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே.."

"இந்தப்பாட்டை எனக்காகவே வச்சிருக்கா தெரியுமா..? காலர் டியூன் செட் பண்ண உடனே எனக்கு போன்பண்ணி, முதன்முதல்ல நாந்தான் இந்தப்பாட்டைக் கேக்கனும்னு போன் பண்ணச்சொன்னா.."

"எனக்கு ரெண்டு நிமிஷமா காது செவுடு. நீ சொல்றது எதுவும் கேக்கலை.."

"விடுங்க தோழர்.. எனக்கொரு முத்தழகுன்னா, உங்களுக்கொரு மாரியம்மாளோ, பேச்சியம்மாளோ கிடைக்காமலயா போயிடுவா..?"

"முத்தழகு.. ஸ்டாலின் முத்தழகு. நல்லாயிருக்கு பேரு. இப்பல்லாம் பின் நவீனத்துவ கவிஞர்கள் கூட, சில்வியா குண்டலகேசி, கேத்தரீன் பழனியம்மாள், ஏஞ்சலின் கோயிந்தசாமி.. மாதிரி வித்தியாசமாதான் பேர் வச்சுக்குறாங்க. அதுபோல இந்த பேரும் வித்தியாசமா இருக்கு.."

விடிய, விடிய பேசியும் என்னால் ஸ்டாலினுக்கு ஒரு யோசனையும் சொல்ல முடியாத கையறு நிலையில் இருந்தேன். நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்..? சட்டியில் இருந்தாலல்லவா அகப்பையில் வரும்..? அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதில்லையா.. காதலில் கரைகண்ட வேறு சில நண்பர்களிடம் ஆலோசனைப்பெற்று ஸ்டாலினிடம் சொல்ல, அவனும் தன் சொந்த முயற்சியில் தன் காதலை பெருக்கிக்கொண்டிருக்க.. காதல் நதியில் ரொம்ப நாள் வரைக்கும் முங்கி, முங்கி எழுந்துகொண்டிருந்தான் ஸ்டாலின்.

மாதங்கள் சில கடந்தபிறகு அவன் விரல்கள், செல்போனை தட்டுவதை நிறுத்தியிருந்தன. முத்தழகு சொன்னாலென இடையில் விட்டிருந்த சிகரெட்டை மறுபடியும் பிடிக்க ஆரம்பித்திருந்தான். அவனது செல்போனின் புதிய காலர் டியூன், 'காதல் என்றால் கவலையா.. கண்ணில் நீரின் திவலையா..' என்று சோகம் சிந்தியது.

"என்னாச்சு ராசா..?"

"இல்ல தோழர்.. அதெல்லாம் சரிப்பட்டுவராது.."

"ஏம்ப்பா.. வீட்டுக்குத் தெரிஞ்சுடுச்சா..?"

"அது என்ன கருமமோ தெரியலை.. திடீர்னு போன் பண்றதை நிறுத்திட்டா. நாம போன் பண்ணாலும் கட் பண்ணுதா. ஒரே ஒரு தடவதான் பார்த்திருக்கேன். இன்னொரு தடவப் பார்க்கலாம்னு சொன்னா, இன்னைக்கு, நாளைக்குங்கா. எனக்கென்னமோ இது சரியா வரும்னு தோணலை.."

"அந்தப்புள்ளைக்கு வீட்டுல எதாச்சும் பிரச்னையோ என்னவோ.."

"அதெல்லாம் இருக்காது தோழர். இப்பல்லாம் அவ என்னை 'லூசு'ன்னு சொல்றதில்லை தெரியுமா..? ஊடால ஊடால 'வாங்க, போங்க'ன்னு வேற பேசுதா.. இதுலேர்ந்தே தெரியலையா...?"

அடப்பாவி தோழா.. காதலில் கவலைப்படத்தான் எத்தனையெத்தனை காரணங்கள்..? நீ லூசு என்பதில் அத்தனை திடகாத்திரமான நம்பிக்கையா உனக்கு..?

"மார்க்ஸ் சொன்னது சரிதான் தோழர்.."

"எது..?"

"எல்லோரையும் சந்தேகி.."

அந்த வாசகத்தின் இறுதியில் மௌனமாய் அவன் உச்சரித்த இன்னொரு வார்த்தை 'முத்தழகாக இருந்தாலும்..'...!

கருத்துகள்

✪சிந்தாநதி இவ்வாறு கூறியுள்ளார்…
அனுபவம்னு நினைச்சேன். சிறுகதைன்னு லேபல் போட்டிருக்கீங்க;)
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
சிந்தாநதி.. ஔஇது என் நண்பனின் அதாவது அந்த தோழரின் அனுபவம். நமக்கு அந்த அற்ப சந்தோஷம் கூட இன்னும் வாய்க்கவில்லை.
TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கதை..பார்க்கமலே காதலிப்பவர்களின் நிலையயைச் சுட்டும் இதே போன்ற ஒரு கதையயை தமிழ்மணத்திலேயே பார்த்திருக்கிறேன்..ஆனால், நக்கல் நைய்யாண்டி..நல்லா இருக்கு.,..
பூக்குட்டி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியின் அட்டகாசம் தொடரட்டும்.. நல்லா இருக்குங்க..
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
//"எல்லோரையும் சந்தேகி.."

'முத்தழகாக இருந்தாலும்..'...!//

சூப்பர். உங்கள் தோழர் ஒரு "காதல் மார்க்ஸ்"
அய்யனார் இவ்வாறு கூறியுள்ளார்…
செம ஃப்ளோ ய்யா ...

அதுசரி மீன் குஞ்சுக்கு நீந்த கத்து தரனுமா :)
முரளி கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
kalakkal
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
/"காதல் மார்க்ஸ்"/

சூப்பர் லக்கி.
ஜெகதீசன் இவ்வாறு கூறியுள்ளார்…
:))))
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
//விட்றா ஸ்டாலினு. இனிமே நீ வெளங்கிடுவ. ஒரு பொம்பளைப்பிள்ளை வாயால 'போடா லூசு'ன்னு சொல்லிக் கேக்குற பாக்கியம் இங்க எத்தனை பேருக்கு கிடைச்சுருக்கு சொல்லு. // இதென்னாங்க புது தத்துவம்? :))))
செந்தழல் ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
ஹை க்வாலிட்டி அட்டகாசம்...!!!!!!!!!!
ஜெஸிலா இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்ல கதையோட்டம். வட்டார வழக்கும் அருமை. நேரமில்லாததால் எந்த பதிவுகளுமே பல நாட்களாக படிக்கவில்லை. இன்று இந்த பக்கம் எட்டிப் பார்த்தது நல்லதாப் போச்சு :-)
நிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நம்மை சுற்றிலும் நடக்கும் கதைதான். ஆனால் நக்கலும் நையாண்டியுமாக அருமையாக சொல்லி இருக்கிங்க ஆழியூரான் மாமா. ஹாட்ஸ் ஆப்
பனிமலர் இவ்வாறு கூறியுள்ளார்…
கதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
TBCD,பூக்குட்டி,அய்யனார், முரளிகண்ணன்,ஜெகதீசன், லஷ்மி, ரவி, ஜெஸிலா, நிலா, பனிமலர்..அனைவருக்கும் நன்றிகள்.

அய்யனார்..என்னாது இது மீன்குட்டி, சிங்கக்குட்டின்னு.. என்ன பிரச்னை.. ஆஃப் லைன்ல பேசித் தீர்த்துக்குவோமா..?

லஷ்மி... தத்துவமெல்லாம் இல்லை. நிஜம். 'நீ சொல்லும் போடா லூசுவை விட வேறெந்த பெயரும் இனிக்கவில்லை எனக்கு' என்று அருட்பெருங்கோ ஒரு கவிதை கூட எழுதியிருந்தார். கற்றது தமிழ் கதாநாயகி ஆனந்தி சொல்லும், 'நிஜமாத்தான் சொல்றியா..?' என்ற வார்த்தைகளும் கூட இந்த உணர்வை நிரப்பக்கூடும்.

ரவி.. கொரியா வொர்க் முடிஞ்சுதா..? சொகமா இருக்கியளா..?

ஜெஸிலா.. வட்டார வழக்கை குறிபிபிட்டு சொன்னதற்கு நன்றி. ஏனெனில் இது என் சொந்த ஊர் இல்லை. பிழைக்க வந்த ஊர். கேட்டதை வைத்து எழுதியிருக்கிறேன்.

நிலா.. நீங்கல்லாம் என் பக்கத்துக்கு வந்து படிக்கிறீங்களா.. ரொம்ப சந்தோஷம். போட்டோல உன்னோட சிரிப்பு ரொம்ப க்யூட்.
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
புகைப்படம் மிக அருமை - ஒற்றைக் காலில் காத்திருப்பது கதையின் நாயகன் ஸ்டாலினா.. இல்ல.. கதாசிரியரா...???
காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்…
கதை சூப்பர் ஆழியூரான்.. டெம்ப்ளேட்டெல்லாம் மாத்திடீங்க போல... (அம்புலியில் நனைந்து... உருகுதே மறுகுதே இல்ல? ச்சே.. என்னா அருமையான பாட்டு!) எப்பவும் ரீடர்லயே படிக்கற நான் சோம்பேறித்தனத்தை விட்டுட்டு நல்ல புள்ளையா வந்து கமெண்ட் போட வெச்சிடுச்சு உங்க பதிவு. கலக்கறீங்க! :)
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
காயத்ரி.. உருகுதே மருகுதே.. எனக்கு மிகப்பிடித்த பாடல். ஷ்ரேயா கோஷலின் குரலில், 'ஏழு கடல் தாண்டித்தான், ஏழு மலை தாண்டித்தான் என் கருத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு' என்று காதலொழுகும் வார்த்தைகள் அப்படியே மிதக்க வைக்கின்றன.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
gnana balan


suuuuuaperapppu... yepadiya ippadi pindre..
sirichi srichi vairu punnakiduchu..
luky yoda comment KADAL MARX.. alaparai...
tholar valga.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
dear friend, very nice story with communist background and as well as regionalised language. wonderfull really. took me to my college days rememberance. i really enjoyed this and realised the pain of a lover. shankar
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
vow!!! - as usual :)
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் செம கலக்கலா இருக்கு, முதல் வரி படிக்கும் போது ஆரம்பிச்ச புன்முறுவல் கடைசி வரை இருந்தது..

இது செம ஹைலைட்
"'இது இன்னொரு வெளங்காவெட்டி செல். இதுக்குப்பிறகு இந்த நம்பருக்கு மறந்தும் பேசிடாத..'ன்னு ஒரு மெசேஜை தட்டி விட்டுட்டுதான் கெளம்புறானுவ. அதுலயும், sent items, dialled numbers லயெல்லாம் போயி அந்த நம்பரை அடையாளம் தெரியாம அழித்தொழிப்பு செஞ்சுட்டுதான் அடுத்த வேலை பாக்கான்."
கோவை ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
அண்ணச்சி சும்மா சொல்லப்புடாது. கதை ஐ கிளாஸ் போங்க. நல்லா சோக்காத்தாம் எழுதிருக்கிய. ஆனாலும் சேக்களிய இம்புட்டு கிருத்துருவம் புடிச்ச்சி அலைய வைச்சுப்புட்டியளே.
அருட்பெருங்கோ இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
கதை, அட! போட வைக்கிற ரகம்.
நல்ல நடைங்க!!!

( அப்புறம் அந்த லூசுக்கவிதையெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா? )
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ஞானபாலன், பொன்ஸ், குசும்பன், கோவை ராஜா.. அனைவருக்கும் நன்றிகள். நான் நிஜமாவே வெளங்குற மாதிரி எழுதுறனோ..:)

அருட்பெருங்கோ.. உங்கள் பக்கத்தில் பின்னூட்டங்களாக என் கருத்துகள் இல்லாமல் போகலாம். வாசிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தவறியதில்லை. போடா லூசுவெல்லாம் மறக்கக்கூடிய வரிகளா என்ன..?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'