நன்றி நண்பர்களே..!

'அரசமரத்தை சுத்திவந்து அடிவயித்தை தடவிப்பார்த்தாமாதிரி' என்றொரு பழமொழி உண்டு. 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-7.00 மணிக்கு மெரீனா பீச் காந்தி சிலை அருகே சந்திப்பு என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் யாரையும் காணாத நிலையில் அந்த பழமொழிதான் நினைவுக்கு வந்தது. ஆனாலும் பெருவாரியாக கலந்துகொண்டு நண்பர்கள் என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டனர்.

முதல் ஆளாய் வந்தவர் மரக்காணம் பாலா. அதன்பிறகு பைத்தியக்காரன் வர, மெல்லிய தூரலை தன்னுடனேயே அழைத்து வந்தார் லிவிங் ஸ்மைல் வித்யா. ''எப்படியும் இங்கனதான் எங்கயாச்சும் கும்மியடிப்பீங்கன்னு தெரியும். அதான் போன் பண்ணாம நாமளே கண்டுபிடிச்சுடலாம்னு வந்துட்டேன்.." என்று ஹெல்மெட் கலட்டியபடியே வந்தமர்ந்தார் நந்தா. சற்று நேரத்தில் சிவாஜி மொட்டை பாஸ் போல கறுப்பு டி-சர்ட்டில் ஹீரோ கணக்காக வந்த அந்த நபர், வந்தவர்களின் பெயரையெல்லாம் விசாரித்துவிட்டு, தன் பெயர் சொல்ல சின்னதாய் சஸ்பென்ஸ் வைத்து 'நான்தான் இளவஞ்சி' என்றார். புதியவர்களின் திடீர் சந்திப்பின்போது கவிழும் மௌனத்தை தன் நகைச்சுவையால் அவ்வப்போது உடைத்தார்.

அப்புறம் வரிசையாக லக்கிலுக், பாலபாரதி, ஊற்று, எஸ்.பி. சுந்தர், முரளிக்கண்ணன், பூக்குட்டி, தமிழ்குரல், தமிழினியன் எல்லோரும் வர நெய்முறுக்கு சகிதம் வந்தார் சிவஞானம்ஜி. சந்திப்புக்கென ஸ்பெஷல் அஜண்டா எதுவும் இல்லையென்பதால், 'உங்களோட அந்தக் கதையில ஹீரோ டயலாக் சூப்பர்..' என்ற ரேஞ்சிலேயே ஒருவருக்கொருவர் பொய் சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது.

லிவிங் ஸ்மைல், தான் தற்போது சென்னையில் வேலைபார்க்கும் 'சுயம்' என்னும் அமைப்புப்பற்றியும் அதில் படிக்கும் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறன் படைத்தக் குழந்தைகளைப்பற்றியும் அவர்களுக்கான உதவிகள் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் சொன்னார். "எந்த funding agency-யிலும் பணம் வாங்காத அமைப்பு என்பதால், அக்கரையுள்ளவர்களின் உதவி மட்டுமே அந்தக் குழந்தைகளை உயிர் வாழச் செய்கிறது. உதவக்கூடிய பொருளாதாரச்சூழல் உள்ளவர்கள் நேரடியாக தங்களால் இயன்ற அளவுக்கு உதவலாம். அல்லது உதவும் மனம் படைத்தவர்களை சுயம் பக்கம் திருப்பி விடலாம்" என்று சொன்னார். (இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு லிவிங் ஸ்மைல் எழுதிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்).

நான் நெல்லையிலிருந்து சில்வியாவுக்கென வாங்கி வந்திருந்த இருட்டுக்கடை அல்வாவை, பாலபாரதியின் அறையிலேயே மறந்து வைத்துவந்துவிட்டேன். 'அறுபது கிலோ அல்வா' நானே வந்திருந்ததால், அந்த அல்வாவைப்பற்றி நண்பர்கள் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை என்றாலும், இளவஞ்சியும், நந்தாவும், பூக்குட்டியும் அவ்வப்போது 'நான் நிஜமாகவே அல்வா கொடுத்துவிட்டதாக' புலம்பினார்கள். 7.30 மணிக்குக் கிளம்புகிற நேரத்தில் சுகுணா திவாகர் வந்தார். நின்றவாறே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, லைட் ஹவுஸ் தாண்டி சென்று ஒரு தேநீர் அருந்திவிட்டு, எஸ்கேப் ஆனோம். நன்றி நண்பர்களே..!

கருத்துகள்

siva gnanamji(#18100882083107547329) இவ்வாறு கூறியுள்ளார்…
இதுவரையில் இளவஞ்சியும் இளாவும்
ஒருவரே என்று நினைத்திருந்தேன்...
சந்திப்பில் உண்மை அறிந்துகொண்டேன்.
இளவஞ்சியின் ஆர்கைவ்ஸில் ஆழ்ந்திருக்கின்றேன்
அடுத்தமுறை அல்வாவுடன் சென்னை
வரும்பொழுது அவர் ரூம் பக்கக் போகாதீங்க.......
60 கிலோ அல்வாவிற்கு நன்றி!
முரளி கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏம்பா அஜண்டா இருந்தாத்தான் சந்திக்கனுமா? சும்மா மொக்கை போட்டா தப்பா? எங்களை மாதிரி ஆட்கள் ஒத்த கருத்துள்ள ஆட்களுடன் அளாவளவுது எப்படி? இந்த சென்னையில் நான் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதே இந்த சந்திப்புகள் தான். இதற்க்கு அஜண்டா எதற்கு? தலை, சின்ன தலை (லக்கி), நந்தா, ஊற்று,இளவஞ்சி,சுகுணா,சுமைல்,பைத்தியக்காரன், ஜி அய்யா மற்றும் உங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவர் சந்திப்புகளின்போது எனக்கு ஒரேயொரு துணையாகவிருந்த பொன்ஸ் வேலை நிமித்தம் வேறு ஊர் போய்விட நான்தான் தனித்து தவித்துப் போனேன். உங்களைச் சந்திக்க வேண்டுமென்று ஆவல் இருந்தும் தனியொருவளாக 'துருத்தி'த் தெரிவேனோ என்ற அச்சத்தினால் வரவில்லை. நண்பர் சுகுணா திவாகரிடம் சொல்லியனுப்பினேன். அவர் வழக்கம்போல கூட்டத்தை முடித்து வைக்கவே போயிருந்ததாகப் பிறகு சொன்னார். இன்னொரு முறை சென்னைக்கு வரும்போது பொன்ஸ் இங்கிருக்கப் பிரார்த்திக்கிறேன். லிவிங் ஸ்மைல் வருவதாக முன்பே தெரிந்திருந்தால் வந்திருப்பேன். இப்போது 'மன்னித்துக்கொள்ளுங்கள்'என்று நான் சொல்லணுமாம் :)
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
சிவஞானம்ஜி தங்களின் வருகையும், அதைவிட அது குறித்து அன்று இரவே நீங்கள் எழுதிய பதிவொன்றும் ஆச்சர்யமூட்டுவதாய் இருந்தது.

முரளிக்கண்ணன்.. நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். சந்திப்பு அரை மணி நேரத்திற்குப் பிறகு போரடிக்க தொடங்கிவிட்டது என்றாலும், இத்தனை நண்பர்களை சந்தித்திருக்கிறோம் என்ற வகையில் மன நிறைவை தருகிறது.

தமிழ்நதி.. நானும் கூட சென்னை வருகையின்போது உங்களிடம் பேசலாம், சந்திக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். நேரக்குறைவினால் இயலவில்லை. விரைவில் சென்னைக்கே வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.
இளவஞ்சி இவ்வாறு கூறியுள்ளார்…
// கறுப்பு டி-சர்ட்டில் ஹீரோ கணக்காக வந்த அந்த நபர் //

இந்த அல்வா அன்று நீங்க கொடுத்த இருட்டுக்கடை அல்வாவை விட சுவையாக இருந்தது!

ஹிஹி...
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இது போன்ற சந்திப்புகள் குறைந்தபட்சம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவும். ஏன் சார் இப்படி வயித்தெறிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்கள். 5-மாதமாகிவிட்டது இதுவரை ஒரு பதிவரைக்சகூட காண முடியல. ஆமா.. சவுதியிலிருந்துகிட்டு இது என்ன புலம்பல் என்கிறீர்களா? அன்று நீங்கள் தொலைபேசியில் பேசியது ஆறுதல். ஆமா நீங்க.. நெல்லையா.. பதிவுல தஞ்சைன்னு பார்த்து நானே அல்வா வாங்கி தின்னுட்டேனோ?
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ஜமாலனண்ணேன்.. நான் தஞ்சாவூர்தான். இப்ப வேலைக்காக திருநெல்வேலியில் இருக்கிறேன். சவுதியில் எந்த தமிழ் வலைப்பதிவரும் இல்லையா என்ன..?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'