ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்''சுதந்திரம் என்பது கேட்டுப்பெறும் பிச்சைப்பொருள் அல்ல. வீரமிக்கப் போராட்டங்களால், விழுமிய தியாகங்களால் பற்றிப்பெற வேண்டியதாகும். 1947-ல்் பெற்ற சுதந்திரம் உண்மையானது அல்ல. அது போலி சுதந்திரமே ஆகும். வெள்ளைப் பரங்கியர்களின் கரங்களிலிருந்து, இந்திய தரகர்களின் கரங்களுக்கு அரசியல் அதிகாரம் மாறிய நாள்தான் ஆகஸ்ட் 15, 1947"
- இப்படி புத்தகம் முழுக்க, ் சிவப்பு சிந்தனைகள் சிதறிக்கிடக்கின்றன. வாசிக்க, வாசிக்க பிரமிப்பும், வியப்பும் மேலிடுகின்றன. அது, 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற தோழர் கலியபெருமாளின் தன் வரலாற்று புத்தகம். புலவர் கு.் கலியபெருமாள் என்று சொன்னால் உங்களில் சிலருக்கு தெரியக்கூடும்.

புலவர் கலியபெருமாள் தமிழ் மண்ணின் தனித்துவமிக்க புரட்சியாளர். 'வசதி படைச்சவன் தரமாட்டான். வயிறு பசிச்சவன் விடமாட்டான்' என்ற வார்த்தைகளை செயலுக்குக் கொண்டு வந்தவர். நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டியமைத்த புரட்சிக்கர போராளி. தன் வாழ்நாளெங்கும் உயிருக்கு அஞ்சாமல் அவர் நடத்திய போராட்டங்களையும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புரட்சிக்கர சிந்தனையை ஊட்டிய அவரது செயல்திறமும் வியக்க வைப்பவை.

'கிராமப்புறங்களில் இருக்கும் வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதன் மூலம், அங்கு சிவப்பு அரசியல் அதிகாரம் உருவாக்கப்படும், பின்னர் கிராமப்புற சிவப்பு அரசியல் அதிகாரம் நகர்புறங்களை சுற்றி வளைக்கும். இந்த செயல் திட்டத்தின்படி புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடித்து 1972-ல் செங்கோட்டையில் சிவப்புக் கொடி ஏற்றப்படும்..' என்று, கற்பனாவாத அரசியலை முன்வைத்து, அதற்கு இலக்கும், காலக்கெடுவும் நிர்ணயித்து செயல்பட்ட சாரு மஜூம்தாரின் எண்ணங்களை தமிழகத்தில் செயல்படுத்தியவர்தான் புலவர் கலியபெருமாள்.

முன்னாளில் ஜூனியர் விகடனில் இவரைப்பற்றி படித்து ஆர்வமாகி, மிகச் சமீபத்தில் புலவர் எழுதிய 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற தன் வரலாற்று நூலை வாசித்தபோது மிரட்சியாக இருந்தது. ஒரு மனிதன், தன் வாழ்நாளுக்குள் இத்தனை அடக்கு முறைகளை சந்தித்திருக்க முடியுமா என்று வியப்பு வந்தது. அதைப்பற்றி எழுத வேண்டும் என்ற நினைத்துக்கொண்டிருக்கும்போதே, 17.05.2007-தேதியன்று உடல்நலக்குறைவால், தனது 84-வது வயதில் புலவர் கலியபெருமாள் இறந்துவிட்டார்.

அடிப்படையில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் கலியபெருமாள், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள சோழபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். திருவையாற்றில் கல்லூரியில் படிக்கும்போது பார்ப்பனர்களின் பிடியிலிருந்த அந்தக் கல்லூரியில், பெரியாரின் கருஞ்சட்டைப் படையை திரட்டி மாணவராய் இருக்கும்போதே கலகம் செய்தவர். பிறகு சில ஆண்டுகள் அரசு ஆசிரியர் பணி பார்த்துவிட்டு, அரசியல் இழுத்ததால், 1954-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 62-ம் வருடம் கட்சி சார்பாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டு தோல்வியடைந்தார்.

அது நக்சல்பாரிகள் நாடு முழுவதும் உயிர்ப்போடு இயங்கிய காலம். எதையும் முழு வேகத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் போராடிய அனைவரும் தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தப்பட்ட நேரம். அப்படி தோழர் கலியபெருமாளும் நக்சல்பாரியாக அடையாளப்படுத்தப்பட்ட சமயத்தில், நக்சல்பாரிகளின் 'புரட்சிப்புயல்' இதழை படிக்கக்கூடாது என்று சொன்ன கட்சித் தலைமையை எதிர்த்துக் கேள்விக்கேட்டார். அதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 68-ல் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்.

69-ல் சாரு மஜூம்தாரை வைத்து அப்போதைய திருச்சி மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தின் முந்திரிக்காட்டில் ரகசியக் கூட்டம் நடத்தியிருக்கிறார். 'ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டி வாங்குபவர்கள், பொது சொத்துக்களை அபகரிப்பவர்கள் போன்றவர்களை அழித்தொழிப்பு செய்ய வேண்டும்' என்று சாரு சொன்னதையும், அதை தொடர்ந்து தானும், தன் ஆதரவாளர்களும் நடத்திய அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் அவர் விவரிக்கும்போது தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த பெரும் நிலச்சுவாந்தார்களின் நிலத்திற்குள், திடீரென்று தோழர்களுடன் சென்று அறுவடையை கைப்பற்றி அவற்றை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறார். இதற்கு 'அறுவடையைக் கைப்பற்றுவோம்' என்று பெயரிடப்பட்டு ஒரு இயக்கமாகவே நடந்திருக்கிறது. இந்த இயக்கம் வெகு வேகமாக பரவவே, தங்கள் நிலத்தில் அறுவடை செய்ய வேண்டாம் என்று சொல்லி, பலர் கட்சிக்கு நிதி கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

70-ல், தற்காப்புக்காக அவரது இயக்கத் தோழர்கள் தோட்டத்தில் வெடிகுண்டு செய்துகொண்டிருந்தபோது தவறுதலாக வெடித்து மூன்று பேர் இறந்துபோனதும், அதன்பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் மாநிலம் முழுவதும் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதும், அந்த இடைவெளியில் அவரது குடும்பம் போலீஸால் சித்திரவதைக்குள்ளானதும், அவரது நிலம் சிதைக்கப்பட்டதுமாக...உலகில் போராளி வாழ்க்கை வாய்க்கப்பெற்ற அனைவருக்குமான வாழ்விலிருந்து இவரும் தப்பவில்லை.

சிறையிலிருக்கும்போதே , அய்யம்பெருமாள் அழித்தொழிப்பு வழக்கில், தோழர் கலியபெருமாள், அவரது மூத்த மகன் வள்ளுவன் ஆகிய இருவருக்கும் தூத்துத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது துணைவியாரின் சகோதரி அனந்தநாயகி, அவரது இளைய மகன் நம்பியார், தம்பி மாசிலாமணி, ராஜமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சில கால இடைவெளியில் அவருடன் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் ஜனாதிபதியிடம் கருணை மனுவுக்கு விண்ணபிக்க, இறுதிவரையிலும் கலியபெருமாள் மட்டும் கருணை மனுவுக்கு விண்ணப்பிக்கவில்லை. வெளியில் இவர்களின் தூத்துத்தண்டனையை ரத்து செய்யக்கோரி பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பலவித போராட்டங்களை நடத்தியபோதும் கலியபெருமாள் மட்டும் கடைசி வரைக்கும் கருணை மனு கொடுக்கவில்லை. இறுதியில் வெளியிலிருந்த அவரது மனைவி வாலாம்பாளிடம் கருணை மனு வாங்கி, அதன் மூலமாக 1973-ம் ஆண்டு, தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

சென்னை பாண்டி பஜாரில் முகுந்தன் அணிக்கும், பிரபாகரன் அணிக்கும் சண்டை ஏற்பட்டு, அதில் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்ததைம், சிறைக்குள் பலமுறை பிரபாகரனுடன் பேசிக்கொண்டிருந்ததையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார் புத்தகத்தில்.

சிறையிலிருந்து வழக்குகளுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு முறையும், ''இந்த நீதிமன்றம் நிலவுடமை வர்க்கத்திற்கு சேவை செய்யக்கூடியது. உழைக்கும் மக்களுக்கும், அவர்களுக்காகப் போராடுபவர்களுக்கும் எதிரானது. இங்கு எங்களுக்கு நீதி கிடைக்காது. அதனால், இந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறேன்" என்று குரலுயர்த்தி சொல்லிய கலக்காரர் இவர்.

சிறையிலிருந்து தப்பிக்க முயற்சித்தது, சிறைக்காவலர்களால் பலமுறை கொடுமையாக சித்திரவதைக்குள்ளானது, சிறைக்குள்ளிருந்தே தன் மகளுக்கு திருமனம் செய்து வைத்தது, இயக்கத்தை இயக்கியது, பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்பு வெளியே வந்தும் சும்மா இல்லாமல் சாகும் வரைக்கும் இயக்க வேலைகள் பார்த்தது என்று ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகளாகவே நீள்கிறது புத்தகம்.


நூலின் தலைப்பு: மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்
ஆசிரியர்: புலவர் கு.கலியபெருமாள்,
விலை: 70 ரூபாய்,
நூல் கிடைக்குமிடம்:
1. க.வள்ளுவன்,
1A/8, புதிய நடராஜபுரம் சாலை,
எம்.எம்.டி.ஏ, அரும்பாக்கம்,
சென்னை.
செல்: 9382899651,
2.க.சோழநம்பியார்,
14/52, பூக்காரத் தெரு,
வடபழனி,
சென்னை-26
9840958917,
3. தமிழ்நிலம்,
115, கால்வாய்க்கரை சாலை,
சி.ஐ.டி. நகர்,
சென்னை-35
செல்:9444440449

கருத்துகள்

பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
test
தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
நூல் அறிமுகத்திற்கு நன்றி, ஆழியூரான்!

கல்லூரி நாட்களில், நக்சல்பாரிகள் என்றாலே இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம் எனக்கிருந்தது.

இந்த நூலை வாசிக்க வேண்டும்!
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
இந்நூல் பற்றிய பகிர்தலுக்கு நன்றி.
Ayyanar Viswanath இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்தலுக்கு நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு