ஓடிப்போலாமா...?


ர்த்தங்களும், அபத்தங்களும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் தடுமாற்றங்களுடன் கழிகின்றன நாட்கள். அதில் பல அபத்தங்கள் விதிக்கப்பட்டவை. சில, விதித்துக்கொண்டவை. காதல் என்ற இயல்புணர்ச்சி, மன்னிக்க முடியாத உயரிய துரோகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் சமூக அபத்தமும் அப்படி விதித்துக்கொண்டனவற்றில் ஒன்றுதான். ஆனால், இதில் அபத்தம் மட்டுமே இல்லை. இந்த சாக்கடை சமூகத்தின் எல்லா அனர்த்தங்களும், அசிங்கங்களும் மூழ்கியிருக்கின்றன.

கடந்த மூன்று பதிவுகளாக 'அவன் நம்ம ஆளு', 'செல்வியக்கா', 'ரவுடி பிரேமா' ஆகிய மூன்று கதைகளை எழுதினேன். காதல் மறுக்கப்பட்ட சமூகத்தில், வாழ்வதற்காக ஓடிப்போக வேண்டிய அவல நிலை இருப்பதையும், ஓடிப்போன பின்னால் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலையையும் அந்தக் கதைகள் விவரித்தன. இவை ஏதோ திட்டமிட்டு, கற்பனையில் எழுதப்பட்ட கதைகளல்ல. மிகை விழுக்காடு உண்மைகளே அந்த கதைகளை ஆட்கொண்டிருக்கின்றன. அனைத்தும் நானறிய நிகழ்ந்தவை. அவற்றை கட்டுரையாக எழுத நினைத்து, கதைக்குரிய தன்மை இருப்பதாக உணர்ந்ததால், கதையாக எழுதப்பட்டன.

எது, எதுவோ மாறிவிட்டது. மக்களின் சிந்தனைப்போக்கு பல விஷயங்களில் ஊரோடு ஒத்துப்போகும் தன்மைக்கு வெகு வேகமாக மாறிவருகிறது(அது நல்லதா கெட்டதா என்பது தனியாக பேச வேண்டியது). ஆனால், சாதியும் அதன் பெயரால் மறுக்கப்படும் காதலும் மட்டும் இன்னும் முழுசாக மாறிவிடவில்லை. அதேநேரம் மாற்றமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அது ஒப்பீட்டளவில் குறைவு என்பதுதான் விஷயம். இதே ஒப்பீட்டளவில் பார்த்தால், காதலை அங்கீகரிக்க மறுப்பது நகரங்கலளை விட கிராமங்களில் அதிகம். ஏன் அப்படி..? இன்னும் சாதியின் வேர்கள் உயிர்ப்பாக இருப்பது கிராமங்களில்தான்.

கிராமங்களில் ஒரு பெண்ணும், ஆணும் காதலிப்பதே தப்பு என்றுதான் சமூகம் சொல்கிறது. அப்படியே கொஞ்சம் 'முற்போக்கான' குடும்பமாக இருந்து காதலை அங்கீகரிக்கிறார்கள் என்றாலும்் ் கூட, நிச்சயமாக சாதி விஷயத்தில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இருவரும் சொந்த சாதியாக இருந்தாலொழிய அந்தக்காதல் அங்கீகரிக்கப்படாது. அதையும் மீறி அவர்களின் காதலுக்கு அதிர்ஷ்டமிருந்து சொந்த சாதியாக இருந்துவிட்டால், அடுத்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பிரதானமாகப் பேசப்படும். எல்லா இடங்களிலும் பெண்களின் காதலை அனுமதிக்காதது மட்டுமில்லை...அவமதிக்கும் அசிங்கமும்் நடக்கும். காதலிப்பது ஆணாக இருந்தால் காட்டப்படும் எதிர்ப்பைக் காட்டிலும், பெண்ணாக இருந்தால் காட்டப்படும் எதிர்ப்பின் வலு் மிக அதிகம்.

காதலித்து வீட்டைவிட்டு ஓடிப்போனது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரும் ஒரே சாதியாக,் இருக்கும்பட்சத்தில் சில வருடங்களில்(குழந்தை் பிறந்த பிறகு என்று புரிந்துகொண்டால் தப்பில்லை..) அவர்கள் குடும்பத்தினரோடு ராசியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதுவே தன்னைவிட தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒரு பையனோடு ஒரு பெண் ஓடிப்போனால் அவர்கள் மறுபடியும் ஒன்று சேர்வதற்கான சாத்தியம் மிகக்குறைவு. காரணம், குடும்பத்தின் மானம், மரியாதை, கௌரவம் அனைத்தும் அவளோடு சேர்த்து ஓடிப்போய்விட்டதாக குடும்பம் கருதுவதுதான்(குடும்பத்தின் ஒட்டுமொத்த மானம் மரியாதையையும் தன்னிடம் வைத்திருக்கும் பெண், குடும்பத்தில் எப்படி நடத்தப்படுகிறார் என்பது அவர்களின் சிந்தனைக்கே முரணானது).ஒரு பெண், தன்னினும் தாழ்வான சாதி பையனோடு ஓடிப்போனால், அதன் பிறகு அந்த பெண்ணின் குடும்பத்தினர் படும்பாடும், அவமானமும் மிகுந்த துயரமானது.( காதலை அங்கீகரிக்க மறுத்தது அந்த பெற்றோர்களின் தவறுதான். ஆனால், அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. அது ஒரு சமூக தப்பு. அதனால், அதற்கு அவர்களை மட்டுமே காரணம் காட்ட முடியாது). மிச்சமிருக்கும் குடும்ப உறுப்பினர்களை ஊர் மதிப்பதில்லை. சாதியை மதிக்கத் தெரியாத பிள்ளையை பெற்ற குற்றத்திற்காக அவர்களை தினமும் சமூகம் அவமானப்படுத்துகிறது. அப்படி தாழ்ந்த சாதி பையனோடு ஓடிப்போன ஒரு பெண்ணின் தந்தை அனாதை பிணமானதையும், தங்கை பாலியல் தொழிலாளியானதையும், அம்மா காணாமல் போனதையும், மல்லிகை கொடி படர்ந்திருந்த அவர்களின் வீடு இடிந்து தரைமேடாகி எருக்கஞ்செடிகள் முளைக்கும் நிலைக்கு ஆனதையும்், ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக விவரிக்கும் கதைதான் 'செல்வியக்கா'.

இத்தனைக்கும் காதலையும், காமத்தையும் கொண்டாடிய மரபு நம்முடையது. எந்த இடத்தில் திசைவழி மாறியது என தெரியவில்லை. எல்லாம் தலைகீழாக மாறிக்கிடக்கிறது. தொலைகாட்சிகளைத் திறந்தால், திரைப்படம், பாடல், வசனம், உரையாடல் என ஏதோ ஒரு வடிவத்தில் காதல்தான் பேசுபொருளாக இருக்கிறது. சொந்த வாழ்வில் காதல் வந்தால் மட்டும் தள்ளிவைக்கிறோம். வேகமான கால மாற்றமும், நகர்மயமாதலும் இந்த நிலையை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையெனில், 'தயவுசெய்து அங்கீகரியுங்கள்..மறுத்தால்் ஆசிர்வதிக்கும் வாய்ப்புக் கூட இல்லாமல் போய்விடும்..' என்ற வார்த்தைகளை மெய்ப்பிக்க, யாவரும் ஓடிப்போகவே செய்வார்கள்.

கருத்துகள்

தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்! நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது அதிலுள்ள உண்மை புரிகிறது. ஆனால்,அவரவர் குடும்பம் என்று வரும்போது சாதியை விலக்கி வைக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாமல்லவா...? சாதி என்பது நீதியல்ல என்று தெரிந்தாலும்,அதை மறுத்தோடியவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் படும் அவலங்களும் கவனத்திற் கொள்ளத்தக்கதே. இது கத்தியில் நடப்பதுபோல கையாளப்பட வேண்டியது. மரபுசார் சிந்தனையும் காதலும் எப்போதாவது எந்தப் புள்ளியிலேனும் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. 'செல்வியக்கா'வாசித்தேன். நல்ல எளிமையான ஆனால் சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லிய கதை. முன்பே பின்னூட்டமிட நினைத்தேன். வழக்கம்போல சோம்பல் கையைப் பிடித்து இழுத்துப்போய்விட்டது.
தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
சிந்திக்க வைக்ககூடிய எழுத்து, ஆழியூரான்!

/... ஏதோ ஒரு வடிவத்தில் காதல்தான் பேசுபொருளாக இருக்கிறது./
'அலைகள் ஓய்வதில்லை' வெற்றிப் படம்தான். ஆனால், விவேக் நகைச்சுவையாக ஒரு படத்தில் குறிப்பிட்டது போல, 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அதற்குமேல் அந்த காதலர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்று இயக்குநர் சொல்லவில்லை. சொல்லிருந்தால், 'காதல்' திரைப்படம் போல் இருந்திருக்கலாம்.

ஆனால்.. 'ஓடி போனால்....' சாதியை ஒழித்து விட முடியுமா, இல்லை பிரச்சனையைதான் தீர்த்துவிட முடியுமா? அதை வீட்டிலிருந்து போராடிதானே ஜெயிக்க வேண்டும். காதல் ஒரு இயல்பான ஓர் உணர்வு. திரைபடங்களிலும், பாடல்களிலும் வருவது போல அபத்தங்களையும், கற்பனைகளையும் கொண்டதல்ல.

/சொந்த வாழ்வில் காதல் வந்தால் மட்டும் தள்ளிவைக்கிறோம்./
இவ்வாறு பொதுவாக குறிப்பிட முடியுமா என்று தெரியவில்லை, ஆழியூரான்! ஒவ்வொருவரின் வாழ்க்கையை பொருத்து மாறும் சாத்திய கூறுகள் அதிகம்.
Chia Mimi இவ்வாறு கூறியுள்ளார்…
Beautiful pictures with beautiful people on it !

Thanks for your greeting,
~waving~ from The Netherlands.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'