ரஜினி… ஒரு நடிகனின் கதை!
ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ரஜினியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விதவிதமாக வெளியானபடியே இருக்கின்றன. ‘இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன’ கல்லீரல் செயல் இழந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து’ என பலவாறு சொல்லப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை ஏதோ ஒரு விதத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ரஜினியின் உடல்நிலை எப்போது சீராகும், அவர் மீண்டு வந்து நடிப்பாரா, முடியுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அலசப்படுகின்றன. வேறு சிலரோ, ரஜினியுடனான தங்களது உறவு குறித்து அசைபோடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி என்ற மனிதரை நாம் சற்று விலகி நின்று பார்ப்போம்.
ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது? ரஜினிக்கு ஒன்று என்றால் மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதைப் போலவும் உருவாக்கப்பட்டிருக்கும் தோற்றம் பல பத்தாண்டுகளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிய மிகை பிம்பம். யதார்த்தத்தில் நிலைமை அவ்வாறு இல்லை.
சினிமா மட்டுமே மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாக இருந்த காலத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய மவுசு இருந்ததுதான். கடந்த 15 ஆண்டுகளாக தொலைகாட்சி மற்றும் இணையத்தின் ஆதிக்கம் வந்துவிட்ட பிறகு ரசிகர்களுக்கான ரசணைத் தேர்வுகள் அதிகரித்துவிட்டன. இதில் ரஜினி மட்டுமே போட்டியாளர் இல்லை. இதனால் நடைமுறையில் ரஜினிக்கு ரசிகர்களிடையே இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனால் அப்போதெல்லாம் ரஜினி, அவருடையக் கட்டுப்பாட்டில் இருந்து வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்த பிரமாண்ட சினிமா சந்தைக்கு ரஜினி என்ற பெரிய இரை தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. உண்மையில் ரஜினியே நினைத்தாலும் அவரது செல்வாக்கை குறைக்க முடியாது. ஏனெனில் அவரது செல்வாக்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் ரஜினியிடம் இல்லை.
பொதுவாகவே உலகமயமாக்கல் சூழலில் எதையும் வேகமாக உறிஞ்சி முழு பலனையும் அனுபவித்துவிட்டு சக்கையாக்கிவிடுவது அதன் இயல்பு. பிளாச்சிமடா தொடங்கி மைக்கேல் ஜாக்சன் வரை பல உதாரணங்கள் வழியே இதை நாம் அறிய முடியும். போட்டி முதலாளித்துவ உலகில் நாள்தோறும் புதிய ஸ்டார்கள் கொண்டுவரப் படுகிறார்கள். அவர்களுக்கான சந்தை மதிப்பு காலாவதியாகும் வரை அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். பிறகு புதிய இன்னொரு ஸ்டார் வருவார். ரஜினியை பொருத்தவரை அவர் நீடித்து உழைக்கும் ஒரு தரமான பொருள். மற்றொரு புதிய நடிகரை புதிதாக பில்-டப் செய்து மேலேற்றுவதைக் காட்டிலும் ரஜினியைக் காட்டி வித்தைக் காட்டுவது கூடுதல் லாபம் தரக்கூடியது. அதைத்தான் பலகாலமாக ஊடக மற்றும் அரசியல் அரங்கில் செய்து வருகிறார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளாக, ஒவ்வொரு ரஜினி படம் ரிலீஸ் ஆகும் தினத்தன்றும் தமிழகத்தில் திருவிழா நடப்பதை போல மாற்றியிருக்கின்றனர். உண்மையில் இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அதற்கு முன்பிருந்தே தொடங்கிவிடுகின்றன. ரஜினி படம் அறிவிப்பு வந்த உடனேயே அந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஒவ்வொரு பத்திரிகையும் தங்களது கற்பனை சக்தியின் எல்லை வரை ஒரு கதை தீட்டுகின்றன. பிறகு அதில் ரஜினியின் கெட்-அப் என்ன, ஹீரோயின் யார், இசை அமைப்பது யார், இயக்குநர் யார் என ஒவ்வொன்றையும் உளவறிந்து சொல்லி, தங்களது விற்பனையைப் பெருக்குகின்றன. படப்பிடிப்பில் ரஜினி இன்று மூன்று முறை தும்மினார், நான்குமுறை கக்கூஸ் போனார் என்பது வரை கூச்சமின்றி எழுதுகின்றனர். ரஜினி ஒரு நடிகன். ஆனால் அவரை கடவுளின் அவதாரம் போல சித்தரித்து, ரசிகர்களை பக்தர்களாக்கிய முழு பொறுப்பும் தமிழக ஊடகங்களுக்குதான் உண்டு. இப்படி ரசிகர்களை, பக்தர்களாக்கும் இவர்கள், அவ்வப்போது ‘ரஜினிக்கு ஒரு கடிதம்’ என்ற பெயரில் ‘தலைவா, விஜயகாந்த் வந்துட்டாரு. நீ இன்னும் வரலையே’ என உசுப்பேற்றவும் செய்வார்கள்.
ரஜினி ரசிகர்களின் பிற்போக்குத் தனங்களை எள்ளி நகையாடி, விமர்சித்து அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் அவர்களோ, எரியும் நெருப்பை அணைக்காமல் எவ்வளவு தூரம் தூண்டிவிட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி விடுகின்றனர். பாபா’ பட அறிவிப்பு வெளியான உடனேயே அதில் ரஜினியின் பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கலாம் என வாசகர்களுக்குப் போட்டி நடத்தியது ஒரு பத்திரிகை. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது பஞ்ச் டயலாக்குகளை எழுதி அனுப்பி, அதில் ’சிறந்தவற்றை’ தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். இப்படி ரசிகர்களின் முட்டாள்தனங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளும் இவர்களுக்கு ‘ரஜினி, தமிழர்களை ஏமாற்றுகிறார், நாடகமாடுகிறார், கர்நாடகாவில் சொத்து வாங்கிவிட்டார்’ என்றெல்லாம் ‘ஆவேச’ கூச்சலிட ஏதேனும் அருகதை இருக்கிறதா?
இப்படி ரஜினியின் திரை நடிப்பு, யதார்த்த நடிப்பு என இரண்டையும் வெவ்வேறு முகங்களுடன் எழுதி விற்பனை செய்த ஊடகங்கள், தற்போது மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை வைத்து தங்களின் அடுத்தக்கட்ட வர்த்தகத்தை நடத்துகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக ஓர் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கிறார் ரஜினி. கடைசியாக ரஜினியை வைத்து ‘எந்திரன்’ என்ற சினிமா எடுத்து இதுவரை இல்லாத வகையில் 150 கோடி ரூபாய் கல்லா கட்டியது சன் டி.வி. இந்த நுகர்வு வெறி தின்று துப்பிய சக்கையாகவும் ரஜினியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மற்ற நடிகர்களின் ரசிகர்களைக் காட்டிலும் ரஜினி ரசிகர்கள் கூடுதலான ஈடுபாடு கொண்டவர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்பது போன்றவற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. ரஜினி ரசிகர் மன்றத்தின் செல்வாக்கு உண்மையில் அவ்வளவு பெரிதானது இல்லை. அதில் இருப்பவர்களின் பெரும் சதவிகிதத்தினர், ‘ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார், நாமும் ஏதேனும் ஒரு பதவிக்கு வந்துவிடலாம்’ என நம்புகிற காரியவாத ரசிகர்கள்தான். ஆனால் அரசியலுக்கு வருவதாக சொல்வதெல்லாம் வெறும் நாடக டயலாக் என்பது புரிந்த பின்னர் அவர்கள் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டனர். விஜயகாந்த், கட்சித் தொடங்கியபோது இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் சொன்னார்கள். ‘நேத்து வந்து மன்றம் ஆரம்பிச்சவன்லாம் இன்னைக்கு மாவட்டச் செயலாளர்னு அலையுறான். நாங்க இத்தனை வருஷம் உங்களையே நம்பியிருக்கோம். ஒரு நல்லவழியை காட்ட மாட்டேங்குறியே தலைவா’ என பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். இப்போது ரஜினியின் ரசிகர் மன்ற கூடாரத்தில் மிச்சம் இருப்பவர்கள் சந்தையில் விலைபோகாதவர்களும், ‘பிழைக்கத் தெரியாத’ பக்தர்களுமே!
ஆனாலும் ரஜினியின் செல்வாக்கு இம்மியும் குறையவில்லை என்பதுபோல் ஒரு சித்திரம் இருக்கிறதே… அது எப்படி? ’ஊடகங்கள் ஊதிப் பெருக்குவது’ ஒரு பக்கம் இருக்கட்டும். படம் ஓடுகிறதே… அதில் ஒன்றும் பாதகம் இல்லையே… ஏனெனில் புதிது, புதிதான ரஜினி ரசிகர்கள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றனர். விஜய், சிம்பு என பலருக்கு அடுத்த ரஜினியாகும் கனவு இருக்கிறது. அந்தக் கனவு இல்லாத நடிகர்களும் கூட, ரஜினியின் ‘மார்க்கெட்டையும், அவரது பக்தர்களான வாடிக்கையாளர்களையும்’ தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். அதனால் இன்று ரஜினி ரசிகர்களாக இருப்பவர்கள், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல. போட்டியில் இருக்கும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ரஜினி ரசிகர்கள்தான். அப்புறம் தேர்தல் சமயத்தில் வடிவேலு பேசினாலும், ஜெயலலிதா பேசினாலும், விஜயகாந்த் பேசினாலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவதைப் பார்த்தோம். அதை வைத்து அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் எக்கச்சக்கமான செல்வாக்கு இருப்பதாக கணக்கிடுவது எப்படித் தவறானதோ, அதுபோலதான் ரஜினிக்கு சேரும் கூட்டத்தையும் மதிப்பிடுவது தவறானது.
ரஜினிக்காக நாம் பாவப்பட வேண்டுமா என்றால் ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும், ஒரு கலைஞன் என்ற அடிப்படையிலும் ரஜினிக்காக நாம் பரிதாபப்படலாம். ஆனால், நடைமுறையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளோடு பலகோடி மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்தும், பல்வேறு நிறுவனங்களில் உடல் மற்றும் மூளை உழைப்பைக் கொடுத்தும் பணிபுரியும் சாதாரண மக்களின் உழைப்பில்தான் ரஜினி என்ற பிரமாண்ட பிம்பம் உயிர் வாழ்கிறது. இன்றும் மூன்று வேளை நிம்மதியான உணவுக்கு வழியற்ற கோடிக்கணக்கானோர் நம்மிடையே வாழ்கின்றனர். காய்ச்சலுக்கு மருந்து வாங்க வசதியற்றவர்களும், நோய்களை தீர்த்துக்கொள்ளும் திராணியற்றவர்களும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்படுவது? ரஜினி இசபெல்லா மருத்துவமனையில் இருந்தார், பிறகு ராமச்சந்திராவில் இருந்தார், இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார், அவர் விரும்பினால் சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கும் போகலாம். ஆனால் மக்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபமாக இருக்கிறது. நாம் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, ரஜினிக்கா? மக்களுக்கா?
இப்படிப் பேசுவதை ‘வறட்டுவாதம்’ என வரையறுப்பதோ, ‘நெகிழ்ச்சித்தன்மையற்றதாக’ புரிந்துகொள்வதோ சுலபமானது. ஆனால் அழகியல் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்டதல்ல. இப்படி எல்லாம் தோண்டித் துருவி பார்க்காமல் ரஜினியைப் பார்த்தோமா, விசில் அடித்து ரசித்தோமா என கடந்து சென்றால் பிரச்னை இல்லை. ஆனால் அந்த ’வெகுமக்கள் மனநிலை” உண்மையானது இல்லை என்பதே இங்கு சொல்ல வருவதன் சாரம். இது பொய்களால் கட்டப்பட்டது. அதனால்தான் ரஜினியே நடித்திருந்தும் கூட ‘பாபா’, ‘குசேலன்’ போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. இன்னொரு பிரிவினர், ‘உழைக்கும் தொழிலாளிகளை தனது நடிப்பின் மூலம் ஆசுவாசப்படுத்தினார்’ என ரஜினியைப் பற்றி சொல்கின்றனர். ’உழைப்பாளிகள் ரிலாக்ஸ் ஆக ரஜினி படங்கள் உதவின’ என்பது அவர்களின் ஆய்வு முடிவு. இந்த தர்க்கத்தின்படி ’மயக்க மருந்துகள் நோயைத் தீர்க்கும்’ என்ற முடிவுக்கே நாம் வர முடியும்.
இதைத்தாண்டி ரஜினிக்கு ஒரு பிரமாண்ட சித்திரம் உருவானதில் அவரது ’எளிமை’ ஒரு பாத்திரம் வகிக்கிறது. வாராத தலை, கலைந்த ஆடை, தாடி நிறைந்த முகம்… என்பது அவரது புறத்தோற்றம். இதை வைத்து சாதாரண எளிய ரசிகர்களும் கூட, ‘எவ்வளவுப் பெரிய ஆளு. எவ்வளவு எளிமையா இருக்காரு’ என்றே எண்ணுகின்றனர். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்களின் பெயர் வந்துவிட்டதைக் கண்டு டீ கடையில் அமர்ந்து மகிழ்ச்சியடைவதற்கும், ரஜினி எளிமையாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஓர் இந்தியன் உலக கோடீஸ்வரனாய் ஆனதால் டீ கடை தமிழனுக்கு என்ன லாபம்? ரஜினி எளிமையாய் இருப்பதால் சலூன் கடை தமிழனுக்கு என்ன பயன்? புறத்தோற்றத்தில் எளிமையைப் பின்பற்றும் ரஜினி தனது ஒவ்வொரு படத்துக்கும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேப் போகிறார். ’ராணா’வில் ரஜினிக்கான சம்பளம் 35 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, ரஜினி, ரஜினி என வெறியூட்டப்பட்ட ரசிக வெறியோடு அலறத் தேவையில்லை. ஏனெனில் உங்கள் ரசணை இயல்பானதில்லை. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
கருத்துகள்