எங்கள் கிராமத்தில் குளம் இருந்தது..!
வழி தவறிய இரண்டு மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்.
இரண்டிடமும்
கடல் பற்றிய கதைகள் இருந்தன
கடல் இல்லை
-இலக்குவண்
‘கிராமங்களின் இயல்பு தொலைந்துவிட்டது’ என்பது எல்லோரும் பேசி சலித்த வாக்கியமாகிவிட்டது. ஆனாலும் அவற்றை பேசுவதற்கான தேவைகளும், காரணங்களும் மேலும், மேலும் பெருகியபடியே இருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் நுண்ணிய மாற்றங்கள் பற்றிய மாற்றுப்பார்வைகள் அவசியமானவை.
எங்கள் ஊரிலும், தஞ்சாவூரைச் சுற்றிய ஏனைய கிராமங்களிலும் ஆற்றுப்பாசனம்தான் பிரதானம் என்றாலும் குளங்களும் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களும் அன்றாட வாழ்க்கையில் குளத்தை மையப்படுத்திய கலாச்சாரமும் மக்களிடம் இருந்தது. செங்கூரணி குளக்கரையின் மேற்கே ஆண்கள் படித்துறை, கிழக்கே பெண்கள் படித்துறை. அந்த இடத்தில் மட்டும் குளத்து நீர், ஒரு தெரு போல உள்நோக்கி நீண்டு செல்லும். துணி துவைப்பதற்காக போடப்பட்டிருக்கும் சொறி மண்டிய கல்லின் இடுக்குகளில் எப்போதும் சவுக்காரக் கட்டியின் மிச்சங்கள் ஒட்டியிருக்கும்.
சோப்பு டப்பா பவுசு அறியாதவர்கள் சோப்பின் மேலே ஒரு பூவரசு இலை... கீழே ஒரு இலை.. புதர் இடுக்குகளில் ஒளித்து வைத்து அடுத்த நாள் வந்து எடுத்துக்கொள்வார்கள். விடுமுறை நாட்களில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்தி போவதும், முங்கு நீச்சல் அடிப்பதும், நாவல் மரமேறி பழம் தின்று நீரதிர கீழே குதிப்பதுமாக குளம் என்பது சிறுவர்களின் உலகமாக இருந்தது. குளத்துக்குள் கண்டெடுக்கும் காசில் வாங்கும் இலந்தைப்பழ மிட்டாய்க்கு ருசி அதிகம். காசைவிட எப்போதும் ஊக்குகளே அதிகம் கிடைக்கும். வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு, குடத்தை நீருக்குள் கவிழ்த்துப்போட்டு நீச்சல் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் அரிதானவையும், அழகானவையும். மெல்ல, மெல்ல குளத்தின் நீர்ப்பரப்பு சுருங்கி வெயில் தீயும் கோடையில் குளம், குட்டையாகும். ‘‘இன்னைக்கு செங்கூரணில மீன் புடிக்கிறது..’’ என அதிகாலையில் தண்டோரா சத்தம் கேட்கும் நாட்களில் ஊரெங்கும் மீன் குளம்பு. இப்போதும் செங்கூரணி இருக்கிறது. மீன் பிடியல் நடக்கிறது. ஆனால் அதில் மீன்வாசம் இல்லை. யூரியா வாசம் அடிக்கிறது.
இன்றைய கிராமத்துக் குளங்கள் அனைத்தும் வெறும் பணம் காய்ச்சி மரங்களாகவே நடத்தப்படுகின்றன. ‘உள்நாட்டு மீன் பிடிப்பு’ என்ற பெயரில் அரசாங்கம் கிராமத்து குளங்களில் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கிறது, மானியம் கொடுக்கிறது. இதில் அதிகமான லாபம் வருவதை உணர்ந்துகொண்ட உள்ளூர் பணக்காரர்கள் குளத்தை ஏலம் எடுக்க போட்டி போடுகின்றனர். பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன கிராமத்துக் குளங்களின் இன்றைய குத்தகைத் தொகை 50 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதிக பணத்தை குளத்தில் கொட்டும் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் குளத்துக்குள் கண்ட கருமாந்திரத்தையும் கொட்டுகின்றனர். யூரியா, மாட்டுச்சாணி, பன்றிக் கழிவு... இன்னும் பெயர் தெரியாத வேதிப்பொருட்கள் குளத்துக்குள் கொட்டப்படுகின்றன. இவை தரும் போஷாக்கில் மீன்கள் தளைத்து வளருகின்றன. நாம் ஐந்து நிமிடம் உள்ளே நின்றுவிட்டு ஏறினால் உடம்பெல்லாம் அரிக்கிறது. அதில் குளித்தால் அழுக்குப் போவதற்கு இன்னொருமுறை குளிக்க வேண்டியதிருக்கும். அந்த தண்ணீரை மாடுகளும் குடிப்பதில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக கிராமத்து குளங்களில் குளிப்பதை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். மனித நடமாட்டம் குறைந்துபோன குளங்களில் ஆண்கள் படித்துறையும் இல்லை, பெண்கள் படித்துறையும் இல்லை. எல்லா திசைகளிலும் கோரை மண்டிப்போய் கிடக்கிறது. மீன் வளர்ப்பின் லாப ருசி பார்த்தவர்கள் இப்போது தங்களின் சொந்த விவசாய நிலங்களையும் குளமாக்கத் தொடங்கியுள்ளனர்.
குளத்தின் மக்கள் பயன்பாட்டை இப்போது பதிலீடு செய்பவை போர்வெல்கள் எனப்படும் ஆழ்துளை கிணறுகள். பெரும்பான்மை மக்கள் குளிப்பதும், துவைப்பதும் இதில்தான். கிராமங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு விவசாயிகளின் நிலங்கள் எப்போதும்போல ஆற்றுப்பாசனத்தையும், மழையையுமே எதிர்பார்த்திருக்கின்றன. அதேநேரம் பெரும்பகுதி நிலங்களை வசமாக்கி வைத்திருக்கும் போர்வெல் முதலாளிகளின் நிலங்களிலும், அந்த நீரைக் காசுக்குப் பாய்ச்சுவதன் மூலம் அதைச் சுற்றியிருக்கும் நிலங்களிலும் எப்போதும் ஏதோ ஒரு விவசாயம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது குறைந்தது 10&க்கும் மேற்பட்ட போர்வெல்கள் இருக்கின்றன. இந்த போர்வெல்கள், மின்சாரம் இருக்கும் நேரமெல்லாம் நிலத்தடி நிரை உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன. 2006&ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் போர்வெல்கள் இருக்கின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு போர்வெல்கள் டெல்டா மாவட்டங்களில் ஓடுகின்றன. இதுபோக வருடம் ஒன்றுக்கு 40 ஆயிரம் புதிய போர்வெல் இணைப்புகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த போர்வெல்கள் அனைத்தும் நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சுவதன் நிலத்தடி பாதகங்கள் ஒரு பக்கம்... இன்னொரு புறம் இந்த நீரைப் பயன்படுத்தி கிராமத்து விவசாய நிலங்களை ஓய்வு, ஒழிச்சல் இல்லாத அசுரத்தனமான உழைப்புக்கு உட்படுத்துகிறார்கள். குருவை, சம்பா, தாழடி, வைகாசிப்பட்டம், ஆடிப்பட்டம்... ஒரு கருமமும் இப்போது கிடையாது. அறுப்பு முடிவதற்குள் நடவுக்கு தயார். நாற்று நடுவதற்கு நெற்பயிர் சுமார் முப்பது நாள் பயிறாக இருக்க வேண்டும். அதைப் பறித்துதான் நடவு நடுவார்கள். அந்த முப்பது நாளை கூட வீணாக்கக்கூடாது என்பதற்காக வேறொரு வயலில் நாற்றுவிட்டுத் தயாராக வைத்துக்கொள்கிறார்கள்.
எனக்குத் தெரிந்து எங்கள் வயலில் நடந்த வழமையான விவசாயம் இப்போது கிடையாது. இருக்கும் முக்கால் ஏக்கர் வயல் நான்காக பிரிக்கப்பட்டிருக்கும். நிலத்தின் வரப்புகளில் துவரை, வெண்டை போன்றவற்றை நட்டு வைப்போம். அறுப்பு வரைக்கும் வெண்டைக்காய் வீட்டுக்கு உதவும். அறுப்பு முடிந்த சில நாட்களில் வயலில் ஈரம் காய்ந்தபின்பு ஒரு ஓட்டு ஓட்டி உளுந்து, எள்ளு இவற்றுடன் கொஞ்சம் தட்டைப்பயிறு, பாசிப்பயிறு இவற்றையும் சேர்த்து விதைப்போம். முன்பே விதைத்த துவரைப்பயிர்கள் வரப்புகளில் கூடாரம்போல் வளர்ந்து நின்று இந்த தானியப்பயிர்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். இன்று எதுவுமில்லை. பென்சிலால் வரையப்பட்டதுபோல வரப்புகள் சுருக்கப்பட்டு அந்த இடத்தில் கூட நாலு நெல் விளையவைத்து காசாக்க முனைகிறார்கள்.
ஒரு விவசாயி காசு கொடுத்து அரிசு வாங்குவதை அவமானமாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. விதைநெல் வாங்கவே காசில்லாத வறிய நிலையில் இருக்கும் சில விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியாவது வெள்ளாமை செய்வார்கள். ‘வெள்ளாமுடாம தரிசா போட்டிருந்தா அப்புறம் ஊருக்குள்ள காறித் துப்பமாட்டான்..’ என்ற வார்த்தைகளில் விவசாயம் என்பது அவர்களின் உணர்வில் கலந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று அதிகவிலைக்குப் போகும் நெல் ரகத்தை பயிட்டு விற்றுவிட்டு, டவுனில் இருந்து பொன்னி அரிசி கிலோ 35 ரூபாய்க்கு வாங்கிவருகிறார்கள். இப்படி பணம் காய்ச்சி மரமாக நிலத்தை மாற்றினால் பாவம் அந்த நிலம்தான் என்ன செய்யும்?
யுகம், யுகமாக ஆதி கரங்கள் உழைத்த இந்த பூமியை அதிஉயர் உழைப்புக்கு உட்படுத்துவதன் எதிர் விளைவாக, இதுவரைக்கும் நிலம்சார்ந்த வாழ்வின் ஆதாரமாக இருந்த கால்நடைகள் விவசாயிகளின் வீடுகளை விட்டு துரத்தப்பட்டுவிட்டன. கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த மாட்டுக் கொட்டகைகள் 75 விழுக்காடு இப்போது இல்லை. அந்த மாடுகளின் சாணங்களை அள்ளிக்கொட்டிய எருக்குழிகளும், அந்த எருவை அள்ளி வயலில் கொட்டிய பாரம்பரிய விவசாயமும் இல்லை. ‘ஏர் கலப்பை உழவு முடிந்துவிட்டது, இயந்திரங்கள் வந்துவிட்டன’ என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போய்விட்டது முக்கியக் காரணங்களில் ஒன்று. தரிசு நிலம் என பெரும்பாலும் இருப்பதில்லை. போர்வெல் தண்ணீர் பாய்ச்ச முடியாத தூரத்தில் இருக்கும் நிலங்கள் மட்டுமே தரிசு நிலங்கள். ஏனைய வயல்களில் எங்கும், எப்போதும் பசுமையே நிறைந்திருக்கிறது. இது வேறு பலவற்றை விழுங்கி செரித்த ஆபத்தான பசுமை. கொத்த வரும் சர்ப்பத்தின் மினுமினுப்பு போன்றது. ஆகப் பெரும்பான்மையான இடங்களில் எப்போதும் விவசாயம் என்றால் அப்புறம் மாடுகளை எங்கேப்போய் மேய்ப்பது? மாடுகளை விற்றுவிடு... பாக்கெட் பால் வாங்கு... காபி வை... முடிந்தது சோலி.
இதன் ஒரே நல்லவிளைவு, தரிசாகக் கிடக்கும் நிலங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தரிசு நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவதால் வேறு வழியில்லாமல் இப்போது கிராமங்களில் கழிப்பறைகள் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
பழமை, பாரம்பரியம், பண்பாடு என்றெல்லாம் சொல்லி பின்னோக்கி போவதை ஆதரிப்பதில்லை மேற்கண்ட எழுத்தின் அர்த்தம். நவீன வசதிகள் என்னும் முன்னோக்கியப் பாய்ச்சலில் நாம் பெற்றிருக்கும் தீதுகள் அளவுக்கு அதிகமாகப் போய்விட்டன. சாதி காப்பதாக இருக்கும் நம் கிராமத்துப் பண்பாட்டு, பாரம்பரியத்தின் கூறுகள் தொடர்ந்தபடியே இருக்க, பற்றித் தொடர வேண்டிய பலவற்றை உலகமயத்தின் நாவுகள் தின்று செரித்துவிட்டன. இதே கட்டுரையின் தொடக்கத்தில் வரும் குளம் பற்றிய பகுதியில், அந்தக் குளத்தில் குளிக்க முடியாத ஒரு தலித்தின் மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை பார்ப்பது அவசியமானதும், முக்கியமானதும் ஆகும். குளத்தில் மீன் பிடிக்கும்போது அதை தண்டோரா போட்டு ஊருக்கு அறிவிக்கும் ஒரு தலித்தால், அந்த குளத்தில் கால் நனைக்க முடியாது என்பதே யதார்த்தம். அதேபோலதான் ஒரு நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளியின் மனநிலையில் இருந்தும் இந்த விவசாய நிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அணுக வேண்டும்.
ஆனால் உலகமயத்தின் கரங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயங்களுடன் இந்த அடையாள அழிப்பை நிகழ்த்தவில்லை. மாறாக பிராந்திய தேவைகளை புறமொதுக்கி, எல்லோரது அடையாளத்தையும் அழித்து தன்னுடைய வண்ணத்தைப் பூசிவிடுகிறது. இன்றைய தமிழக விவசாய கிராமங்களின் மீது உலகமயம் துப்பிய எச்சில் படிந்திருக்கிறது. அதைத் துடைப்பதற்கு நம் கரங்களை ஒன்று சேர்ப்போம். யாவற்றையும் ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமேப் பார்க்கும் உலகமய மாயையிலிருந்து விடுபட்டு நம் வாழ்வாதாரங்களின் தனித்துவங்களை மீட்டெடுப்போம்.
கருத்துகள்
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அவலங்கள் காட்சிகளாக விரிகின்றன. அப்சர்வேஷன் மலைக்க வைக்கிறது. அதேநேரம் நிஜம் முகத்தில் காறி உமிழ்கிறது.
தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த பிரதிகளையும் எழூதுங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
மு.குருமூர்த்தி
அருமை ஆழி!
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
எனது கிராமத்து வயல்களின் நிலையை இங்கு பதிந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
http://mrishansharif.blogspot.com/2009/06/blog-post.html
தமிழகத்தில் மட்டுமல்ல எங்கள் வன்னி மட்டக்களப்பு என்று எல்லா இடமும்தான் ஆனால் நாங்கள் கையாகாதவர்களாக இருக்கிறோம் எல்லாம் பணம் வீசுகிறார்கள் காதகர்கள்
"தரிசு நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவதால் வேறு வழியில்லாமல் இப்போது கிராமங்களில் கழிப்பறைகள் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்."
அப்படியாவது கட்டுகிறார்களே... நகரங்களில் எங்கு பார்த்தாலும் சுவரை இடிப்பதைத் தயக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.:)
நன்றி
கண்டதைப் போட்டு வளர்த்த மீன்களை உண்பதால் கெடுதிதானே வரும்.. ? :(