சென்னை: மிரள வைக்கும் வீட்டுவாட‌கை


சென்னை என்பது பணக்காரர்களுக்கான நகரமாக மாறி வெகு காலமாகிவிட்டது. அதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகச் சமீபத்தில் வாய்த்தது. தங்கியிருக்கும் மேன்ஷன் அறையிலிருந்து தப்பித்து மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு வீடு பார்க்கலாம் என முடிவு செய்து வீடு தேடத் தொடங்கினோம். சென்னையின் எழுதப்படாத விதிகளின்படி வாடகையைப்போல பத்து மடங்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்தபடியால் அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டுதான் வீடு பார்க்கும் படலமே ஆரம்பமானது.

நாங்கள் இப்போது தங்கியிருக்கும் மேன்ஷன் அறைக்கு ஆளுக்கு 1,000 ரூபாய் வீதம் 3,000 ரூபாய் வாடகைத் தருகிறோம். இதனுடன் மேற்கொண்டும் ஆயிரம் ரூபாய் சேர்த்து 4,000 ரூபாய் வாடகைக்கு வீடு பிடிக்கலாம் என முடிவுக்கு வந்தபோது, 'இவ்வளவு பெரிய தொகையை(?) வாடகையாகக் கொடுக்கப்போகிறோம். அதனால் நமக்கு சௌகர்யமான ஏரியாவில், ஓரளவுக்கு வசதியான வீடாகப் பார்க்கலாம்' என்பது எங்களின் முன்முடிவாக இருந்தது. அது எத்தனை முட்டாள்தனமானது என்பது முதல் வீட்டிலேயே புரிந்துவிட்டது.

சூளைமேட்டின் வளைந்து நெளிந்து செல்லும் சந்துகளில் புரோக்கரால் அழைத்துச்செல்லப்பட்டோ ம். அவர் இன்னும் சிலருக்கு செல்பேசினார். இறுதியில், "இன்னாப்பா நீ.. நாலாயிரத்துக்கு வீடு கேக்குற..? இப்ப எல்லா எடத்துலயும் வாடகையை ஏத்துட்டாங்கப்பா.. ஆறாயிரத்துக்கு இருக்குது ஒரு வீடு. ரெண்டாவது மாடி. டபுள் பெட்ரூம்.. அட்டாச்சுடு டாய்லெட், பாத்ரூம் எல்லாம் இருக்கு. வண்டி நிறுத்திக்கலாம். போறியா..?" என்றார். எங்கிருந்துப் போக..? ஆறாயிரம் தாங்காது. எங்களின் பின்வாங்கல் கண்டு, அந்த புரோக்கர் வடபழனி ராம் தியேட்டர் பக்கமாய் 4,500 ரூபாக்கு ஒரு வீடு இருப்பதாக சொன்னார். 'பரவாயில்லை. 500 ரூபாய் அதிகம் போனால் போகட்டும்' என முடிவெடுத்து ராம் தியேட்டர் வீட்டை பார்க்க அடுத்த நாள் காலையில் போனோம். அழகான தென்னை மரத்துடன் கூடிய வீட்டின் இரண்டாது தளத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போதே 'நேத்து சாயுங்காலம்தாம்பா முடிஞ்சுது..' என்று கைவிரித்தார் ஹவுஸ் ஓனர்.

மேன்ஷன் அமைந்திருக்கிற திருவல்லிக்கேணியிலேயே ஒரு வீட்டைப்பார்த்து பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டு நாளை காலையில் வந்து அட்வான்ஸ் தருவதாக சொல்லிவந்த நிலையில் அன்று மாலையிலேயே அது முடிந்துவிட்டிருந்தது. "இப்பல்லாம் பசங்க வர்றாங்க.. வீடு பிடிச்சிருக்குதா, ஒருத்தன் அங்கயே நின்னுக்குறான். இன்னொருத்தன் போயி ஏ.டி.எம்‍‍-ல பணத்தை எடுத்துட்டு வந்து கையோட முடிச்சுட்டு போயிடுறாங்க. டோ க்கன் அட்வான்ஸ் கொடுக்குற சோலியே இப்ப கிடையாது" என்றார் புரோக்கர்.

இப்படி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், பட்டிணப்பாக்கம், மயிலாப்பூர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி என்று நாங்கள் வீடு தேடிய அத்தனை ஏரியாவிலும், எதுவுமே அமையவில்லை. இதில் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பாத்ரூம் சைஸ் ரூமை, 'வீடு' என்று மனசாட்சியற்று சொல்லி ஒரு ஆசாமி கடுப்பேற்றினான். ஆரம்பிப்பதற்குள் முடிந்துவிட்ட அந்த 'வீட்டு'க்கான வாடகை 3,000 ரூபாய்.

புரோக்கருக்கு ஒரு மாத வாடகையை கமிஷனாகக் கொடுப்பதற்குப் பதிலாக ஃப்ரீ ஆட்ஸ் பத்திரிக்கை வாங்கினால், நேரடியாக வீட்டு உரிமையாளரிடமே பேசி கமிஷன் காசை மிச்சப்படுத்தலாம் என யோசித்து அதையும் முயற்சித்தோம். அதில் பெரும்பாலும் மிக அதிக வாடகையுள்ள வீடுகள்தான் வருகின்றன. இல்லையென்றால் விலைபோகாத வீடுகளாக இருக்கின்றன. தப்பித்தவறி எங்களது பட்ஜெட் எல்லைக்குள் வரும் வீட்டுக்கு காலை எட்டு மணிக்குப் போன் பண்ணினால், 'அது ஆறு மணிக்கே முடிஞ்சுதுங்களே..' என்கிறது தொலைபேசி குரல். 'என்னங்கடா இது அநியாயமா இருக்கு..? நைட் எல்லாம் தூங்கவே மாட்டீங்களாடா..? நாங்க என்ன ஒசியிலயா வீடு கேட்டோம்..?' ஆத்திரம் வந்ததுதான்.. அதனால் என்ன செய்துவிட முடியும்.?

ஒன்று நமது பட்ஜெட்டுக்கு இந்த ஏரியாவில் நாம் எதிர்பார்க்கிற சைஸில் வீடு கிடைக்காது. நாம் எண்ணூர் அல்லது மடிப்பாக்கம் தாண்டி போக வேண்டும். இங்கேயே சுற்றினால் ஒன்றும் தேராது. இல்லையெனில் கிடைக்கும் சின்ன சைஸ் வீட்டில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு இருக்க வேண்டும். இரண்டும் முடியாது என்றால் பேசாமல் பொத்திக்கொண்டு மேன்ஷன் அறையிலேயே வெந்து சாகலாம் என்று மூன்று சாத்தியங்கள் முன்மொழியப்பட்டு, இறுதியில் மூன்றாவதையே தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

சென்னையில் சராசரியான ஒரு வீட்டில் வசிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 6.000 ரூபாய் வாடகைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இது சிங்கிள் பெட்ரூம் வீட்டுக்கு. இதுவே டபுள்பெட்ரூம் வீடு என்றால் குறைந்தது 8,000 ரூபாய் வருகிறது. 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கெல்லாம் வீடு இருக்கிறது என்று இதற்கு முன்பு யாரும் சொன்னால் நம்பியிருக்கமாட்டேன். ஆனால், நேரில் விசாரித்தப்பின்புதான் 20, 30 ஆயிரம் வாடகை எல்லாம் சாதாரணம் என்பது புரிகிறது. திருவான்மியூர், அடையார் போன்ற பணக்காரர்களின் பகுதிகளில் 50 ஆயிரம், 60 ஆயிரம் வாடகைக்குக் கூட வீடுகள் கிடைக்கின்றன. இவ்வளவுப் பெரிய தொகையை வாடகையாகத் தர வேண்டுமானால் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பிளாட்ஃபார்ம் ஓரங்களில் வாழ்நாளை கடக்கும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் இதே சென்னையில்தான் வாழ்கின்றன. மாதம் 5,000 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்குபோவது..? பத்தாயிரம் சம்பாதிப்பவன் வீடு என்று சொல்லத்தக்க ஒரு இடத்தில் வாழ முடியுமா..? இந்த பெருநகரத்தில் நல்ல வீட்டில் வாழ்வதகு ஒருவன் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும். நுகர்வு கலாசாரம் பெருகிவழிகிற இக்காலத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் நிச்சயம் போதுமானதாக இருக்காது.

பேச்சுலராக இருந்து வீடுபார்க்கும்போது இத்தனை பாடு.. இதில் திருமணம் வேறு ஆகிவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா.. என்பதுதான் நாங்கள் மூவரும் வீடு தேடும்போது மனதில் நிழலாடியக் கேள்வி. முழுக்க, முழுக்க பெரும்பணக்காரர்களுக்கான வசிப்பிடமாக மாறிவிட்ட சென்னையில் இனி வலியவன் பிழைப்பான், எளியவன்..? ஆழிவாய்க்கால் பக்கம் போய்விட வேண்டியதுதான்.. வேறுவழி.?!

கருத்துகள்

வால்பையன் இவ்வாறு கூறியுள்ளார்…
தினமும் செங்கல்பட்டிலிருந்தும் ,காஞ்சிபுரத்திலிருந்தும்
சென்னைக்கு வேலைக்கு வரும் நண்பர்களை மின்சார ரயிலில் பார்க்கலாம்,
ஸ்ரீபெரும்புதூரும் இந்த லிஸ்டில் சேர்வதாக தகவல்
அங்கேயும் 6000 த்துக்கு கம்மியாக வீடு இல்லை

வால்பையன்
puduvaisiva இவ்வாறு கூறியுள்ளார்…
'அது ஆறு மணிக்கே முடிஞ்சுதுங்களே..' என்கிறது தொலைபேசி குரல். 'என்னங்கடா இது அநியாயமா இருக்கு..? நைட் எல்லாம் தூங்கவே மாட்டீங்களாடா..?

:-)))

Best up luck next time my Friend.

puduvai siva
Subbiah Veerappan இவ்வாறு கூறியுள்ளார்…
////இவ்வளவுப் பெரிய தொகையை வாடகையாகத் தர வேண்டுமானால் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ////

உண்மை!உண்மை!உண்மை!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//பேச்சுலராக இருந்து வீடுபார்க்கும்போது இத்தனை பாடு.. இதில் திருமணம் வேறு ஆகிவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா.. என்பதுதான் நாங்கள் மூவரும் வீடு தேடும்போது மனதில் நிழலாடியக் கேள்வி//

உண்மை. நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் வேளச்சேரியில் 2600 ரூபாய் வாடகையில் குடியிருந்த வீடு இப்போது ரூ. 10,000.

ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் என் தம்பி குடும்பத்துடன் அம்பத்தூர் பக்கமாகச் சென்று விட்டான். அங்கும் இப்போது ஹெச்.சி.எல் கம்பெனிகளின் வரவால் தொல்லையாம். விரட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர் சாதாரண மக்கள் :(
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னையில் வீட்டு வாடகை உயர்ந்திருப்பது உண்மைதான்.ஆனால் கொஞ்சம் முயன்றால் அதிகமில்லாத (குறைந்த என்று சொல்ல முடியாது) வாடகைக்கு வீடு கிடைக்கும்.

வேளச்சேரியில் இரண்டு படுக்கையறை (ஒன்றை ஸ்டோர் ரூமாகத்தான் பயன்படுத்த முடியும்) கொண்ட வீட்டுக்கு 4500 ரூபாய் வாடகையில் என் அண்ணன் அண்மையில் தான் குடிமாறியிருந்தான்.
டி.அருள் எழிலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாடகைதான் மாதா மாதம் ஏறுது.சம்பளம் மாதா மாதம் குறையுது..கடந்த நான்காண்டுகளில் சென்னை பணக்காரர்களுக்கான நகரமாக மாற்றப்பட்டு விட்டது.நான் எர்ணாவூரில் இருக்கிறேன் நாக்ருக்குள் வந்து விட கடந்த ஐந்து மாதமாக வீடு தேடுகிறேன்.கட்டுப்படியாகிற வாடகையில் வீடில்லை.பணக்காரனுக்குத்தான் வாடகைக்கு வீடு,செல்வாக்குள்ளவனுக்குத்தான் அரசு(அரசுக்கு ஜால்ரா அடிக்கிற பத்திரிகையாளர்களுக்கும் வீடு உண்டு)

சரி படிக்காலம்ணு போனா உனக்கெல்லாம் சீட் கிடையாதுங்க்றான்.இந்த நாசமாப் போன பலுயகளை என்னதான் செய்யலாம்.சூழந்து வரும் நெருக்கடி சமூகத்தை நக்சல்பாரி புரட்சியாளர்களின் பாதையில் திருப்ப நேரிடும் நானும் அதை வரவேற்கிறேன்.
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்பவே யோசிக்க வச்சுட்டீங்களே......

நடைபாதைக் குடும்பங்கள்.....

அரசு எதாவது செஞ்சாத்தான் உண்டு.

ஆனால் அரசு செய்யும் ஏற்பாட்டுக்கு இவுங்க சம்மதிக்கணுமே.....

எதுக்கும் சாலிகிராமம் பக்கத்தில் தேடிப்பாருங்க.

திருவல்லிக்கேணி என்னதான் ஜனநெருக்கமுன்னு சொன்னாலும் கடற்கரைக் காற்று போனஸ்தானே?
TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னையிலும்மா...பெங்களூரூவில் தான் அப்படி என்று நினைத்தேன்.

கொடுமை...
SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
ஹ்ம். ரொம்பக் கொடுமை.

நல்ல வேளை எங்க நைனா சொந்த வூடு கட்டி வச்சிருக்காரு. :)
ஜ்யோவ்ராம் சுந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்று - நான்கு ஆண்டுகளில் வாடகை கண்டபடி உயர்ந்ததற்கு ஐடி கம்பெனிகளின் பெருக்கமும் ஒரு முக்கிய காரணம்.

வாடகை கொடுக்க இயலாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்துக்கு வெளியே, இன்னும் வெளியே சென்று கொண்டே இருக்க வேண்டியது தான்.

இது இப்போதைக்குச் சரியாகுமெனத் தோன்றவில்லை -((
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வால்பையன், புதுவை சிவா, சுப்பையா வாத்தியார், சேவியர்,அருட்பெருங்கோ, அருள் எழிலன், துளசிகோபால், டிபிசிடி, சர்வேசன்.. கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு அனைவருக்கும் நன்றி. இதை எழுதும்போது கற்றது தமிழ் திரைப்படம்தான் மனதில் வந்துபோனது. இந்த நிலை தொடர்ந்தால் இறுதியாக‌ சென்னையில் இரண்டே இரண்டு சமூகங்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஒன்று, பெரும்பணக்காரர்கள்.. அடுத்தது, அவர்களுக்கு தேவையான உடல் உழைப்பை செய்வதற்கான அடித்தட்டு வர்க்கம். இடையில் உள்ளவர்களெல்லாம் எங்கிட்டாவது திண்டிவனம் பக்கம் குடிசைப் போட்டுக்கொண்டு ஓடிவிட வேண்டியதுதான்.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
//நாம் எதிர்பார்க்கிற சைஸில் வீடு கிடைக்காது. நாம் எண்ணூர் அல்லது மடிப்பாக்கம் தாண்டி போக வேண்டும். //

அதென்ன மடிப்பாக்கம்னா அவ்வளவு எளப்பம்?

மடிப்பாக்கத்தில் வீடு வேணும்னா கையிலே காசிருந்தா மட்டும் பத்தாது தம்பி. வேற சில தகுதிகளும் வேணும் தெரியுதா? குறிப்பா நான்-வெஜிட்டேரியனா இருக்கணுமாம்.
செல்வநாயகி இவ்வாறு கூறியுள்ளார்…
பெரும்பான்மை மக்கள்தொகையான நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரக்கனவுகள் பல்வேறுவிதங்களிலும் நசுக்கப்படுவதும், அடித்தட்டு மக்கள் அப்படியே பிறந்து, வாழ்ந்து, சாக விதிக்கப்படுவதும் அடுத்த நூற்றாண்டை நோக்கிய நமது ஆரோக்கியமான வளர்ச்சியாகத் தெரியவில்லை.
முரளிகண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
\\இதில் திருமணம் வேறு ஆகிவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா.. என்பதுதான் நாங்கள் மூவரும் வீடு தேடும்போது மனதில் நிழலாடியக் கேள்வி. முழுக்க, முழுக்க பெரும்பணக்காரர்களுக்கான வசிப்பிடமாக மாறிவிட்ட சென்னையில் இனி வலியவன் பிழைப்பான், எளியவன்..? \\

1000% நிதர்சன உண்மை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னை மட்டுமல்ல. இந்திய பெரு நகரங்கள் அனைத்திலும் இப்போது இது தான் நிலை.


//பேச்சுலராக இருந்து வீடுபார்க்கும்போது இத்தனை பாடு.. இதில் திருமணம் வேறு ஆகிவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா //

ரொம்ப கஷ்டம் ........
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
அதே இங்கு துபாயிலும் அதே பிரச்சினை!

வீட்டு வாடகை, விலைவாசி என்று பல பிரச்சினை:((
Bee'morgan இவ்வாறு கூறியுள்ளார்…
அட இங்க, பெங்களுர்லையும் இதேதாங்க.. :(
வெங்கட்ராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
முழுக்க, முழுக்க பெரும்பணக்காரர்களுக்கான வசிப்பிடமாக மாறிவிட்ட சென்னையில் இனி வலியவன் பிழைப்பான், எளியவன்..? ஆழிவாய்க்கால் பக்கம் போய்விட வேண்டியதுதான்.. வேறுவழி.?!

மறுக்க முடியாத உண்மை. . . .
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
The same thing happening in singapore also. Two years ago, I paid 800-1000 S$ for three room flat. and 1000-1200 to four room flat. Today 1400-1800 and 2000-2500 respectively, Most of the engineers who are earning about 4000 S$ sent their family or migrated to india ( and did this to you in india.. I am sorry about it).

I am planning to send my family back to my village.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
என்னங்க, ஆழியூரான், நானும் இப்போ வீடு தேடிகிட்டு இருக்கேன். வயித்துல புளியக் கரைக்கிறீங்களே? சீக்கிரம் நல்ல வீடு அமைய வாழ்த்துக்கள்!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சில வீடுகளில் வீட்டு உரிமையாளரே கமிசனுக்காக புரோக்கராகின்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் 80% வீட்டு வாடகை உயர்ந்துள்ளது. நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் ஒரு வீட்டை...யும்...

நன்றி தோழரே...

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I Agree. If the cost of living goes high, at one point of time suchnobody can afford,so the growth will be stopped. This growth will move to other cities like Thiruchy,Madurai and etc.

Its good for ecnomics and good for country.

Thoughts are welcome!!!
கிரி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையா எழுதி இருக்கீங்க. இன்னும் சில நாட்கள் சென்றால் நடுத்தர மக்கள் எல்லாம் எங்கே தங்குவார்கள் என்பது என் சந்தேகம் !!

இது குறித்து நானும் ஒரு பதிவிட்டேன், உங்கள் கருத்தோடு ஒத்து போகிறது.

http://girirajnet.blogspot.com/2008/03/blog-post_30.html
ரமணா இவ்வாறு கூறியுள்ளார்…
கொஞ்சம் பொறு தலைவா!

ஏறிவரும் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 200 டாலராகும் போது அவனவன் துண்டக் காணேம் துணியைகானோம் என சென்னைஐ விட்டு ஓடிவிடுவார்கள்.

அப்போ நம்மை போன்றோர் !

எல்லாம் தனியார் மயம்,தாராள மயம் உலக மயம்
எனும் முவருக்கே வெளிச்சம்
ரமணா இவ்வாறு கூறியுள்ளார்…
வீட்டு வாடகையின் இந்த அபரீத உயர்வுக்கு புண்னியம் கட்டியவர்கள் மென்துறை வல்லுனர்களும் ஒரு காரணம்.

ஏதாவது அதிசயம் நடந்தால் தான் நடுத்திரவர்க்கம் வாழ்முடியும்.
லிவிங் ஸ்மைல் இவ்வாறு கூறியுள்ளார்…
பசங்களுக்கே இந்த கதின்னா, பொண்ணுங்க நிலமய நெனச்சுப்பாருங்க.. சென்னை வந்த ஒரு வருசமா இன்னும் சுயம் தொண்டு நிறுவனத்துல தான் விருந்தாளியா ஒட்டிகிட்டு இருக்கேன்...


நான் ஆணையிட்டால்...

டட டட்ட டட்டட்டட் டன்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I very much would like to talk to you. [url=http://cgi3.ebay.fr/eBayISAPI.dll?ViewUserPage&userid=acheter_levitra_ici_1euro&achat-levitra]achat levitra[/url] I apologise, but, in my opinion, you commit an error. Write to me in PM, we will discuss.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்