சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!

"நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதில் பழக்க முடியாது"

-எங்கோ ப‌டித்த‌திலிருந்து..

'இன்னைக்கு காலையிலதான் மாமா வந்தேன்..', 'நேத்தே வந்துட்டன்டா..', 'இன்னைக்கு ராத்திரி கௌம்பணும்..' என்பதாக முடிந்துபோகிறது ஊருக்குப் போய்வருதல். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் சொந்த ஊரில் இருந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இனிமேலும் அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மீள வழியற்ற புதிர்வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டுவிட்டது போன்றிருக்கிறது.

எதைப் பெறுவதற்கு இப்படி ஓடுகிறோம் என நினைத்தால் வெறுமையாக இருக்கிறது. யாரோ இடும் கட்டளைக்கு பணிந்து, விசுவாசம் மிக்க அடிமையாக கால்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வாடிவாசல் திறக்கப்பட்டு சீறும் காளைகளைப்போல, பெருநகரச் சாலைகளில் வாகனங்களை முறுக்கிக்கொண்டு பறக்கிறோம். பசித்துக் குரைக்கும் நாய்க்கு சில ரொட்டித்துண்டுகள்.. மனிதனுக்கு ஏ.டி.எம். இயந்திரம் துப்பும் காகிதத்துண்டுகள். ஆனாலும் எதையும் துறந்துவிட முடிகிறதா.?

இந்நகர வீதிகளின் இயங்குத்தன்மைக்கு ஏற்ப கால்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டன என்றாலும், கண்ணுக்குத் தெரியாத சரடு ஒன்று, வீட்டு முற்றத்திலிருக்கும் வாதாமடக்கி மரத்துடன் இப்போதும் இணைக்கப்பட்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. கன்னமேட்டில் தேங்கியிருக்கும் குழந்தை கொடுத்த முத்தத்தின் ஈர மிச்சத்தைப்போல, மனதுக்குள் திப்பி திப்பியாய் அப்பிக் கிடக்கின்றன ஊர் பற்றிய நினைவுகள்.

'ஊருக்குப் போனா நெனப்புக் காட்டு.. வீட்டுக்கு பணம் குடுத்துவிடணும்' என்று புத்தகக் கடையொன்றில் வேலைபார்க்கும் நண்பன் சொன்னான். அவன் சொன்னதல்ல.. விஷயம். 'நெனப்புக் காட்டு' என்ற வார்த்தை, நினைவின் அடிநரம்புப்பற்றி புழுதி வெளிக்கு இட்டுச் சென்றது. இந்த பத்து வருடத்தில் இவ்வார்த்தையைக் கடப்பது இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும். அதே வாரத்தின் மற்றொரு தினத்தில், 'நீ 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிவிட்டதையே நான் இன்னம் கெட்டிபத்தரமா வச்சிருக்கேன்' என்றாள் சகோதரி. தூசிபடர்ந்த நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து தும்மி எழுந்தது அச்சொல்.

பால்யத்தை நிரப்பிய இச்சொற்களெல்லாம் என்னவாயின..? உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருந்த சொற்கள் களவாடப்பட்ட தினம் எதுவாக இருக்கும்..? பள்ளிக்கூட தேர்வுக்குப் பயன்படுத்தும் இரண்டு வெள்ளைத்தாள்கள் ஒட்டியமாதிரி இருக்கிற 'வொய்ட் ஷீட்'டை, 'கவட்டை பேப்பர்' என உச்சரித்தபோது, லதா டீச்சர் தலையில் கொட்டி 'திருத்திய' தினமாக இருக்கலாம். 'பூரா லைட்டையும் நிப்பாட்ரா..' என்றதும், சிரிப்புக்குப் பின்னால் 'பூரா'வுக்கு அர்த்தம் கேட்ட கல்லூரி விடுதி அறைத்தோழனாக இருக்கலாம். 'சும்மா செவுனியோன்னு இருக்கிறவனை ஏன் சார் இப்படி நோண்டுறீங்க..?' என்றதும், வெடித்து சிரித்த அருகாமை உயரதிகாரியாகவும் இருக்கலாம். வண்டல் மண்ணின் வார்த்தைகளை 'காவந்து' பண்ண முடியாத இயலாமை இவ்விதமாக நிகழ்ந்துவிட்டது. ஒரு நீருறிஞ்சும் காகிதத்தைப்போல பால்யத்தின் சொற்களை நகரம் உறிஞ்சிக்கொண்டுவிடுகிறது.

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் சென்னை பெருநகருக்கு வருகின்றனர். நான்கைந்து இரைப்பைகளை நிரப்ப வேண்டிய செயல்திட்டம் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. ஆட்டம் எதுவாக இருந்தாலும் இடப்பட்ட வட்டத்தின் எல்லைக்கோடுகளுக்கு மிகாமல் ஆடுபவனே சிறந்த ஆட்டக்காரன் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். எனில் எதற்கு முன்னுரிமை.. சொற்களுக்கா.. இரைப்பைக்கா..? சொற்கள் சாம்பாலாவது இங்ஙனமாகத்தான் இருக்கக்கூடும். நகரம், தன் அகன்ற நாவால் சொற்களை தின்று செரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் பசி ஒருபோதும் அடங்குவதேயில்லை. சுய கழிவிரக்கத்தை உருவாக்கி, தானாகவே சொற்களை கைவிடும்படி நிர்பந்திக்கும் தந்திரத்தை அறிந்திருப்பதுதான் அதன் சிறப்பு. நகரத்தின் பாதாளத்தில் சொற்களை தொலைப்பவர்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டே போகின்றனர்.

எல்லோரிடமுமிருந்து அபரித்துக்கொண்ட வார்த்தைகளுக்கு பதிலீடாக வேறு சிலவற்றை வழங்குகிறது நகரம். அது வெண்ணெய் எடுக்கப்பட்ட பிறகான தயிர்போல, அடையாளம் நீக்கப்பட்ட தட்டையான வடிவத்திலிருக்கிறது. விருப்ப எல்லைகளுக்கப்பால், அவற்றை நீங்கள் தரித்துக்கொண்டேயாக வேண்டும். இல்லையெனில் இல்லாதொழிந்தாக வேண்டும். 'உன்னுடையதைப்போல அவை இவ்விடத்தின் சொற்கள்.' என்ற தர்க்கத்தையும் வந்தடைய முடியவில்லை. உள்ளூர் அடையாளங்களையும் அழித்தொழித்து நகர்வெளி உருவாக்கியிருக்கும் கொச்சையும், தட்டையுமான மொழியில், யாருக்கான அடையாள மிச்சமும் காணக்கிடைக்கவில்லை. யாவற்றையும் நிரவி, பகட்டின் சாயலில் எல்லோருக்கும் ஒரே வண்ணமடிக்கும் செயலொன்றே அதன் இயல்பாயிருக்கிறது.

அவ்வப்போதைய தொலைபேசி உரையாடல்கள் நீரூற்றுகின்றன என்றாலும், ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் நாம் பின்னோக்கி வந்துகொண்டிருப்பதை உணரமுடிகிறது. நகரத்தில் குடியேறி இரு தசம ஆண்டுகளைக் கடந்த பின்னும் பூர்வ சொற்களை பூச்சு கெடாமல் பாதுகாத்து வைத்திருப்பவர்கள் வியப்பூட்டுகின்றனர். எந்த ஒளிவெள்ளத்திலும் தன் சொந்த நிறத்தை கொண்டாடத் தெரிந்த அவர்களின் முன்னால், நாம் வந்தடைந்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் 'நாகரீகம்' அம்மணாகிக் கூசிப்போகிறது.

'ஊர்ல பேசற மாதிரியே இங்கயும் பேச வேண்டாம்னு எவன்டா சொன்னான்..?'

'நக்கல் பண்ணுவாய்ங்கல்ல..'

'மயிறைப் பண்றான். நீ பாட்டுக்கும் பேசிட்டு உன் சோலியைப் பார்த்துகிட்டு போய்கிட்டேயிரு. எவன் எதைச் சொன்னா உனக்கு என்ன..?'

‍எனக்கென்ன என்று இருந்துவிட முடிகிறதா..? உள்ளங்கையில் அள்ளிய நீர், விரலிடுக்குகளின் வழி வழிந்தோடுவதை தடுக்க இயலாத கையாலாகாதத்தனம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. வழி தெரிந்தால், 'பாக்கி' சொற்களையாவது காப்பாற்றலாம்.

கருத்துகள்

முரளிகண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
கொன்னூட்டீங்க
ஜ்யோவ்ராம் சுந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லா இருக்குங்க உங்க மொழி நடை.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
எப்பவும் போல, நல்லா எழுதியிருக்கீங்க. என் அனுபவமும் கூட; உங்க நடையிலியோ, மொழியிலியோ என்னால இதைச் சொல்லவே முடியாது.

என் பிறப்பிலிருந்து நான் பேசி வந்த மொழி (அப்பிடி இப்பிடி இல்ல, பின்னாலியே வந்து ரெண்டு வருடம் நக்கல்) ஒம்பாதவது, பத்தாவது படிக்கும்போது கேலி செஞ்சாங்கன்னு சபதம் எடுத்தேன்: அப்படித்தான் இனிமே சாவும் வரை பேசுவேன்னு.

//உள்ளூர் அடையாளங்களையும் அழித்தொழித்து நகர்வெளி உருவாக்கியிருக்கும் கொச்சையும், தட்டையுமான மொழியில், யாருக்கான அடையாள மிச்சமும் காணக்கிடைக்கவில்லை// நல்ல வேளையோ கெட்ட வேளையோ, நான் தமிழ் நகரவெளிகளில் பலநாள் இல்லை, மொழியே மாறிய ஊரில் இப்பொழுது:-( வலையில் மொழி அறுவடை.
இது கேக்கவே கிராமப் பக்கம் பஸ்ல பிரயாணம் போயிட்டே இருக்க‌ ஆசை.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான்.

ஆனா ஊரு பக்கம் போனா நாலு பேருகிட்ட பேச ஆரம்பிச்சதும் பழைய பேச்சு வந்துருமே.

இருக்கற எடத்துக்கு தகுந்த மாதிரி பேச்சு தானா அமஞ்சிருமோ?
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தப் பக்கம் வந்து நாளாச்சு.. ஏதோ தொலைஞ்சு போய் திரும்ப கிடைச்ச மாதிரி படிச்சு முடிச்சதும் சந்தோசமா இருக்கு..
வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

எப்படி சொல்வதென்று தெரியவில்லை. நகரம் வந்து தொலைத்தவைகளின் பட்டியலில் பழகிய சொற்கள் மீண்டும் கேட்கும் போதெல்லாம் தேன்றும் உணர்வை நல்ல நடையில் சொல்லி உள்ளீர்கள். கெக்கேபிக்குணி சொன்ன‌து போல‌

// எப்பவும் போல, நல்லா எழுதியிருக்கீங்க. என் அனுபவமும் கூட; உங்க நடையிலியோ, மொழியிலியோ என்னால இதைச் சொல்லவே முடியாது. //

வ‌ழிமொழிகிறேன்.

ந‌ன்றி
வ‌ச‌ந்த்
- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் தம்பி, விடுடே.. இதுக்கு போய்யா.. இம்புட்டு பொளம்புற.. அப்படியே இருக்குறதுல தான் சொகமே!:)
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யா புலம்பல் திலகமே!

முன்னாடியெல்லாம் காதலி கிடைக்கலேன்னு புலம்பல், இப்போ அம்மாவை பார்க்கணும்னு புலம்பலா? ஜாலியா பாலா அண்ணா மாதிரி எப்போ கும்மியெல்லாம் அடிக்கப் போறீங்க?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பரே,

நெடுநாளைக்கு பின் மிகவும் அருமையான பதிவு. நானும் தட்டை மொழிக்காரன் தான் இப்போது.

ஊர்மொழிக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது என்ன செய்ய?
நாடோடி இலக்கியன் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நேரமா யோசிச்சு பார்த்தேன்,என்ன எழுதுறதுன்னு தெரியல,
ஆனால் இந்தப் பதிவைப் பற்றி நீண்ட நேரம் யோசிக்கவைத்ததே உங்கள் எழுத்தின் வெற்றி.
அருமையான நடை!.
இன்னும் நிறைய எழுதுங்கள்.
siva gnanamji(#18100882083107547329) இவ்வாறு கூறியுள்ளார்…
இழப்பதை மீட்போமா?
இருப்பதைக் காப்போமா?
தறுதலை இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
நந்தா இவ்வாறு கூறியுள்ளார்…
கொன்னுட்டீங்க தலைவரே....

கலக்கல்..

//இந்தப் பக்கம் வந்து நாளாச்சு.. ஏதோ தொலைஞ்சு போய் திரும்ப கிடைச்ச மாதிரி படிச்சு முடிச்சதும் சந்தோசமா இருக்கு..//

அடிக்கடி இதே மாதிரி எழுதுமய்யா...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!