காதல் கடும்புனல்.!

"வேண்டாம் பாஸு.. வெளியிலேர்ந்து பார்க்கத்தான் இது கலர்ஃபுல்லா தெரியும். ஆனா பயங்கர பெயின்ஃபுல்லான விஷயம். நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா..? இதுல சிக்கனும்னு ஆசைப்படாதீங்க"
-தபூசங்கரின் கவிதையை தன் கவிதையென்று சொல்லி காதலியிடம் கொடுப்பதற்காக அகால இரவொன்றில் பிரதி எடுத்துக்கொண்டிருக்கும் அறை நண்பன் சொல்கிறான், காதல் குறித்த தன் வரைவிலக்கணத்தை. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே பெண்ணை நான்கு மாதங்களாக காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலை அவனுக்கு.!
இன்று வரை எனக்கு கைகூடாத ஒரு கலையாகவே இருக்கிறது காதல். அது எப்படி எவ்விதம் சாத்தியப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. காதலிக்க அலையும் மனசும், யதார்த்தம் அதற்கு எதிர்மாறாகவும் இருக்கும்போது, காதலிப்பவர்கள் அனைவரும் சாகசக்காரர்களாகவே படுகிறார்கள். என் சாமர்த்தியங்களாக சுற்றம் சொல்லும் யாவும், காதலிப்பவன் முன்னால் கால்தூசு என்றால் நீங்கள் சிரிக்கக்கூடும். அடைய முடியாததன் ஏக்கத்துயர், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வார்த்தைகள் அவை.
உலகம் காதலால் நிறைந்திருக்கிறது; காதலிக்கும் நிமிடங்கள் அனைத்தும் தேவகணங்கள் என்கிறார்கள். அச்சு, காட்சி, ஒலி ஊடகங்கள் அனைத்தும் காதலை போற்றுகின்றன. எத்திசையிலும் காதலின் இசை பெருகி வழிகிறது. வாழ்த்தட்டைகளும், முத்தங்களும், குறுஞ்செய்திகளும் காதலின் வாசத்துடன் காற்றில் அலைகின்றன. சமயத்தில் துக்கம் விசாரிக்கவும் செய்கிறார்கள். பெருமூச்சின் வெம்மையில், காதல் பொசுங்கும் வாசத்தை அவர்கள் அறிவதில்லை.
ஒரு பெண்ணுடனான தொடர்பேச்சு எந்த கணத்தில் காதலாக உருமாறுகிறது..? அதை உணர்வது எங்ஙனம்..? காதலி(லு)க்கான வார்த்தைகள் எவை..? அவற்றை எவ்விதம் உச்சரிக்க..? 'நீங்கள்', 'நீ'யாக மாற்றமடைவது எப்படி..? எதுவும் தெரியவில்லை. வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பிக்கும்போதெல்லாம் தனிமையின் துயர் படிந்த நாட்கள், நீண்டு கணக்கின்றன. போதாக்குறைக்கு காதலர் தினத்தின் காலையிலேயே, "Never search your happiness in others, as it will make you feel alone, search it in yourself. Then you will feel happy even when you are left alone. -First Anti-valentine day SMS. Proud to be single" என்று குறுஞ்செய்தி அனுப்பி கடுப்பேற்றுகிறார் பாலபாரதி.
காதலிக்காமல் இருப்பதனால் என்ன இப்போ கெட்டுப்போச்சு என்று யோசிக்கத் தொடங்குகிறேன். எதுவும் கெட்டுப்போகவில்லை.. எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என்று திரும்பினால், என் ஆதுரத்தில் முளைத்திருக்கும் பூஞ்சைக்காளான்கள் பரிகசிக்கின்றன.
கருத்துகள்
I like this SMS
சரவணன், உங்களுக்கு என்னோட அன்பு Anti-Valentines Day வாழ்த்துக்கள் :-D
பெரிய காதல் மன்னனா இருப்பிங்கன்னு நெனைச்சேன் ... நம்ம கேஸ் தானா . அன்னக்கிளி எல்லாம் நம்ம வாழ்க்கைல வரமாட்டா.
நீங்க வேற ஏன் நண்பா சாபம் விடுற மாதிரி சொல்றீங்க.. அதுசரி.. என்னை எப்படி காதல் மன்னன்னு நினைச்சீங்க..? உலகம் இன்னமுமா நம்மளை இப்படியெல்லாம் நம்புது..:)