பாண தீர்த்தம் அருவியும், கொக்கரை கருவியும்..!
பெய்து பொழிந்தாலும், வீழ்ந்து நிமிர்ந்தாலும், குவிந்து கிடந்தாலும், சீறி வந்தாலும் நீரின் வடிவங்கள் எப்போதும் பிரமிப்பூட்டுபவை. அருவியாக, மழையாக, சாரலாக, ஏரியாக, நதியாக, அணைக்கட்டாக, கடலாக, இலையில் தேங்கி நிற்கும் ஒரு துளியாக, மழையில் நனைந்த பறவை காற்றில் சிலுப்பிவிடும் திவலைகளாக.. தனக்கு சாத்தியமான எல்லா வடிவங்களிலும் வசீகரிக்கிறது நீர். அப்படி திசைகளெங்கும் நீரொழுகும் ஒரு நீர் நாளில் நீர் தரிசனத்துக்குப் போனேன்.
உண்மையாகவே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் பிறப்பிடம் அமைந்திருக்கும் பொதிகை மலை. திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் வழியாக டூ வீலரில் ஏறும்போதே குற்றாலச்சாரல் முகத்தில் அறைய ஆரம்பிக்கிறது. கூடவே, 'ஒரு girl friend பின்னால் அமர்ந்து வந்தால் எப்படியிருக்கும்..?' என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை (நீதி: சாத்தியமாயின் இணையோடு செல்லுங்கள்). பெரிய மலையேற்றமெல்லாம் இல்லை. மிக லேசான ஏற்றம்தான். இரண்டு, மூன்று வளைவுகள் தாண்டிய உடனேயே தூரத்தில் மலையை பிளந்துக்கொண்டு ஊற்றுகிறது அகத்தியர் அருவி. அருகிலேயே பாபநாசம் நீர் மின்சார திட்டத்திற்கான பிரமாண்ட குழாய்கள், இரும்பு மலைபாம்பென மலைச்சரிவுகளில் சரிந்து இறங்குகின்றன.
அகத்தியர் அருவி..
அங்கிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணைக்கட்டு. நுழைவாயிலில் சாலையோரத்தில் டெண்ட் அடித்து மீன் சாப்பாடு விற்கிறார்கள் பெரியம்மாக்கள். அணை மீன்கள் பிடிக்கப்பட்டு, ஆவிபறக்கும் சாப்பாட்டுடன் விற்கப்படுகிறது. வெறும் மீன் சாப்பாடு என்றால் சாதத்துக்கு ஊற்றும் குழம்புடன் ஒரு துண்டு மீன் கொடுக்கிறார்கள். 20 ரூபாய். அதற்கு மேல் வேண்டுமென்றால், பொரித்த மீன் துண்டு 10, 15 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. சாரல் வீசிக்கொண்டே இருக்க, மலை முகட்டில் அதாவது பள்ளத்தாக்கின் விளிம்பில் அமர்ந்து சுடச்சுட மீன் சாப்பிடும் அந்த அனுபவம் அலாதியானது. சாரல் இல்லையெனில் அனுபவத்தில் பாதியை இழந்துவிட நேரிடும்.
சாப்பிட்ட காரம் நாக்கில் மிச்சமிருக்க, எழுந்து நிமிர்ந்தால் பாபநாசம் அணைக்கட்டு நீண்டு விரிந்து கிடக்கிறது. பொதிகை மலையில் உருவாகும் நீர் முழுவதும் இந்த அணைக்கட்டில் சேகரமாகித்தான் தாமிரபரணி நதியாக வெளியேறுகிறது. 'இங்கதான் எங்கயோ பாண தீர்த்தம் அருவி இருக்குன்னு சொன்னாய்ங்க.. ஒண்ணுத்தயும் காங்கலை..' என்று விசாரணையைப் போட்டால், எங்கோ தூ...ரத்தில் தெரிந்த ஒரு மலையிடுக்கைக் காட்டி, 'படகுல ஏறி அணையைத் தாண்டி.. அந்தால தெரியுதுல்ல மலை இடுக்கு.. அதுக்குள்ளாரப்போயி இறங்கி, கொஞ்ச தூரம் நடக்கனும். அங்கதான் இருக்கு பாண தீர்த்தம் அருவி..' என்கிறார்கள் ஏதோ ஒரு ரகசியத்தை அவிழ்த்துவிட்ட பெருமிதத்தோடு. 'பாரேன்... இந்த இடுக்குல தண்ணி ஊத்துறதை ஏதோ ஒரு பயபுள்ள கண்டுபிடிச்சிருக்குறதை..' என வியந்தபடியே டிக்கெட் வாங்க நகர்ந்தால் அங்கு பெருங்கூட்டம் முண்டியடித்தது.
பாபநாசம் அணை..
ஒரு நபருக்கு 20 ரூபாய். ஆட்களை நிரப்பிக்கொண்டு வீறிட்டுக் கிளம்புகிறது விசைப்படகு. நீர் நிரம்பிய பெரிய பாத்திரமொன்றில் விழுந்து நீந்தும் எறுப்பைப்போல், நீரின் விஸ்வரூபத்தை விசையால் கடந்துகொண்டிருக்கிறது படகு. கீழே தேங்கி கிடக்கும் தண்ணீர் எத்தனை வருடங்களுக்கு முன்பு பெய்த மழையாக இருக்கும்...? என்ற யோசிக்கும்போதே மறுபடியும் பொழியத் தொடங்குகிறது மழை. கீழும், மேலும், சுற்றிலும் நீர் சூழ, ஒரு நகரும் மரத்தீவாக ஆனது படகு. மழைகண்டு முக்காடு போடும் சிலரையும், சிரிக்கும்/சிலிர்க்கும் சிலரையும், 'உங்களை மாதிரி கொள்ள பேரைப் பார்த்துட்டம்டே..' என்பது மாதிரி புன்னகையற்ற முகத்தோடு சலனமற்றப் பார்த்துக்கொண்டிருக்கிறார் படகோட்டி. திருப்பும் துடுப்பில் அவரது அனுபவம் தெரிந்தது. பத்து நிமிட பயணத்தில் அணைக்கட்டு நீரின் விளிம்புக்கு வருகிறது படகு. அங்கிருந்து பார்த்தால், வானத்திலிருந்து நீர் பத்தாயத்தை கவிழ்த்துவிட்டதைப் போல மிரட்டலாகக் கொட்டுகிறது பாண தீர்த்தம் அருவி.
பாண தீர்த்தம் அருவி..
படகிலிருந்து இறங்கி சில நூறு மீட்டர்கள் நடந்தால் அந்த நீர் பிரமாண்டத்தின் அருகில் செல்ல முடிகிறது. பொதிகை மலையின் பசுமை பரப்பில் சின்னச்சின்ன காட்டு நதிகளாக உற்பத்தியாகி ஓடிவந்து ஒன்று சேர்ந்து கொட்டுவதே இந்த பாண தீர்த்தம். மனிதர்களின் தீட்டு படாத ஸ்படிக துல்லியமும், சுத்தமும் இதன் தனித்துவம். குற்றால அருவிகளைப்போல ஆண்களும், பெண்களும் குளிக்க தனித்தனி தடுப்புகள் இங்கில்லை. ஏனெனில் அருவியின் ஒரு பக்கம் மட்டும்தான் குளிக்க இயலும். மற்றொரு பக்கம் செல்லவே முடியாது. ஆண்கள் பத்து நிமிடம்.. பெண்கள் பத்து நிமிடம். சண்டைக்காரன் உடம்பு பிடித்துவிட்டதைப்போல தடதடவென்று உடம்பில் கொட்டும் அருவி சுகத்திலிருந்து பத்து நிமிடத்தில் யார் வருவார்..? இதற்காகவே கையில் விசிலோடும், கம்போடும் நிற்கிறார் ஒரு போலீஸ்காரர். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை விசிலடித்து குளிப்பவர்களை வெளியேற்றி, காத்திருப்பவர்களை அனுமதிப்பதுதான் அவர் வேலை. மறுபடியும், மறுபடியும் வரிசையில் நின்று குளித்தாலும் விருப்பத்தோடு தன் நோக்கி இழுக்கிறது அருவி.
பாண தீர்த்தம் அருவி..
நேரம் கடந்து கொண்டிருந்தது..வழிந்தோடும் நீர் திவலைகளோடு எங்களை ஏற்றிக்கொண்டு, கரைநோக்கி நகரத் தொடங்கியது படகு. அப்போதும், தன் நீண்ட வெண்கரங்கள் நீட்டி ப்ரியத்துடன் அழைத்தபடியே இருந்தது பாண தீர்த்தம். ஒரு வேளை திரும்பி சென்றிருந்தால் தன் தீராத தீர்த்த ரகசியத்தை சொல்லியிருக்குமோ..!
கொக்கரை:
அகஸ்தியர் அருவிக்கும், பாண தீர்த்தம் அருவிக்கும் இடையே இருக்கிறது அந்த மலை மண்ணின் பூர்வ குடிகளான காணிக்காரர்களின் குடியிருப்பு. 183 குடும்பங்கள் இருக்கின்றன இங்கு. உலக இயல்புகள் அனைத்தும் இங்கு வந்துவிட்டன என்றாலும் இன்னும் சில பிரத்யேக பழக்கங்கள் இவர்களிடையே புழங்குகிறது. கிராமத்தின் மூத்த பெரியவரான ராமன்காணி வெற்றிலை சாறு தெறிக்க அத்தனை ஆர்வமாக பேசுகிறார்.
"பேய் பிடிக்கிறது, காய்ச்சல் அடிக்கிரது மாதிரி சின்னச்சின்ன உடம்பு சரியில்லாம போறதுக்கெல்லாம் நாங்க மருந்து மாத்திரை சாப்பிட மாட்டோம். சாத்துப்பாட்டு பாடியே எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம். சாத்துப்பாட்டுன்னா, எங்க வன தேவதையை வேண்டி நாங்க பாடுற பாட்டு. அப்படி பாட்டுபாடும்போது இந்தா இருக்குப் பாருங்க இதை அடிப்போம். இதுக்கு பேரு கொக்கரை. சாத்து வைக்கிறதுன்னு முடிவானுச்சுன்னா, அன்னைக்கு ராத்திரி யாரும் தூங்க மாட்டோம். பாட்டைப் பாடி, கொக்கரையை அடிச்சு ரா முழுக்க நடத்துனா எந்த பேயும், 'நான் போறேன்'னுட்டு ஓடிடும்..முன்னயெல்லாம் எல்லாத்துக்கும் சாத்து வைப்போம். இப்பவெல்லாம் எப்பயாவதுதான் வைக்கிறோம். மித்தபடி எல்லாம் டவுணு மருந்துக்கு மாறிட்டாக. இந்தா இந்த கொக்கரை கூட துருப்பிடிச்சுக் கிடக்குப் பாருங்க.." என்கிறார் அந்தப் பெரியவர்.
இதே மேற்கு தொடர்ச்சி மலையின் வேறு சில பகுதிகளில் காணி இனத்தவர்கள் வசிக்கின்றனர். அவர்களுடன் மட்டுமே இவர்கள் கொள்வினை, கொடுப்பினன வைத்துக் கொள்கிறார்கள். ஊர் கட்டுப்பாடுகளை மீறினால் ஊர் விலக்கு செய்வது போன்ற கட்டுப்பாடுகள் இப்போதும் உண்டு.
குறிப்பு: நான் பாண தீர்த்தம் சென்றபோது கேமராவை உபயோகிக்க முடியாத அளவுக்கு மழை கொட்டியது. இதனால், கேமராவை கரையிலேயே வைத்துவிட்டு படகேற வேண்டியதாகிவிட்டது. இல்லையெனில் அந்த நீர் எழுச்சியின் உண்மையான வடிவத்தை உங்களுக்குக் காட்டியிருக்கலாம். இங்கு இருப்பவையும் பாண தீர்த்தம் அருவியின் புகைப்படங்கள்தான். இவை, சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் மிகக்குறைவாகக் கொட்டிய சமயத்தில் எடுக்கப்பட்டவை.

கருத்துகள்
பார்ரா!!! ஆழியூரான் உங்களுக்கு வார்த்தைகளும் அருவி போல் கொட்டுகிறதே!!! வாழ்த்துக்கள்..
- அது!!!!!
எங்கூரப் பத்தி நல்லாவே எழுதியிருக்கீங்க :)) சில்லுன்னு குளிச்ச மாதிரி இருக்கு :)
http://kalavaani.blogspot.com/2007/
07/blog-post.html
____________
romba naalla puthu posting onnum kaanum- velaip palu athihamo.
- ranjith