கற்றதனால் ஆன பயனென்ன..?
"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?" என்று இந்த தலைமுறை கல்வியை கரன்ஸியால் அளவிடுகிறது. கல்வி கற்பிப்பதே வணிகமாகிவிட்ட சூழலில் முதல் போட்டவர்கள் அதை வட்டியோடு திருப்பி எடுக்க நினைக்கின்றனர். இந்த சூழலில், தமிழின் சில எழுத்துக்களைப் பார்த்தால் உண்மையிலேயே 'இவற்றால் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லையே..' என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சின்ன வயதில் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும், சில நாட்களில் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமுமே என் முன்னால் அமர்ந்திருக்க, நான் 'கா..ஞா..சா..' என்று கால்சட்டையோடு நின்று கத்துவேன். எதிரில் உள்ள மாணவர்கள் உரத்த குரலில் அதை கோரஸாக எதிரொலிப்பார்கள். அப்படிப் படிக்கும்போதுதான் கீழ்கண்ட எழுத்துக்களையும் படித்திருப்பேன் போல.. ஆனால், இப்போது அனைத்துமே 'வெள்ளெழுத்துகளா'கத்தான் தெரிகின்றன.
'ஞ' வரிசையில் ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ஞௌ... போன்ற எழுத்துக்களைப் பார்த்தால் இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள்தானா என்று சந்தேகமே வருகிறது.
'ட' வரிசையில் 'டௌ' என்ற எழுத்து வருகிறது. சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதும்போது இந்த எழுத்துப் பயன்படலாமேயன்றி, இந்த எழுத்தைப் பயன்படுத்திய நேரடி தமிழ் வார்த்தைகள் எதுவும் நான் இதுவரைக்கும் படித்ததில்லை.
வாய்பாட்டில் மேலிருந்து கீழாக 'கௌ' வரிசையில் பல எழுத்துக்கள் படிக்கவே காமெடியாக இருக்கின்றன. ணௌ, தௌ, நெள, லௌ, வௌ, ழௌ, ளௌ, னௌ போன்றவற்றை தட்டச்சும்போதே புதியதாக தெரிகிறது. 'ழௌ'வும், இதன் நெடிலெழுத்தும் எந்த வார்த்தையிலாவது வருகிறதா..?
'ங' வரிசையில் ங-வையும், ங்-யையும் தவிர்த்த எழுத்துக்களைப் பயன்படுத்தி யாராவது ஒரு தமிழ் வார்த்தை சொல்லுங்களேன் பார்ப்போம். இந்த வரிசையில் இந்த இரண்டு எழுத்துக்களைத் தவிர ஏனைய எழுத்துக்களை தட்டச்சவே எ -கலப்பையில் வசதியில்லை. அந்த மென்பொருளை உருவாக்கியவர்களே, இந்த எழுத்துக்களின் பயன்பாடின்மையை உணர்ந்திருக்கிறார்கள் போல.. 'றவ்' என்ற உச்சரிப்புடன் கூடிய 'கௌ' வரிசை எழுத்தையும் எ-கலப்பையில் தட்டச்ச முடியவில்லை. ஆனால், இவற்றைதான் சின்ன வயதில் மெனக்கெட்டு 'நெட்டுரு' போட்டு படித்திருக்கிறோம்.
இந்த உண்மைகள் அனைத்தையும் பண்டிதர்கள் யாவரும் வாய் மூடி ஏற்றுக்கொண்டபோது; மொழியைக் குறை சொன்னால், திருத்தினால் நம்மை இன துரோகியாக்கிவிடுவார்களோ என்று மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தபோது, தன் பட்டறிவுகொண்டு தமிழை திருத்தி, வளப்படுத்தியவர் தந்தை பெரியார். முழுமையாக இல்லையென்றாலும் பகுதியளவிலாவது அவர் முன்வைத்த எழுத்து சீர்திருத்தம் இப்போது வரைக்கும் முழுமையாக நடைமுறைக்கு வராதது வருத்தமே.
மொழியை முழுதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை. அதை முழுதாக பயன்படுத்த வேண்டும்/ பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பயன்பட வேண்டும் இல்லையா..? இப்படி பயன்படாத எழுத்துக்கள், எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் புதிய நுட்பங்களுக்கு தமிழை பழக்க, நுட்பவியலாளர்கள் எத்தனை சிரமப்பட்டிப்பார்கள்...? இந்த சிரமத்தின் பொருட்டே பல இணைய/ கணிணி நுட்பங்கள் தமிழில் சாத்தியப்படாமல் போயிருக்கலாம் அல்லது தள்ளிப்போயிருக்கலாம்.
ஆனால், அவசியமில்லாமலா அந்த எழுத்துக்களை தோற்றுவித்திருப்பார்கள்..? இருவேறு எழுத்துக்களின் நுணுக்கமான ஒலி வடிவ வேறுபாட்டுக்குள், வெவ்வேறு அர்த்தங்களை ஒழித்து வைத்திருக்கிற தமிழ்மொழிக்குள், இந்த எழுத்துக்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருந்திருக்க வேண்டும். பயன்பாடில்லாத எழுத்துக்களை தோற்றுவித்திருக்க முடியாது. எனில் இந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருந்த இலக்கியங்கள் என்னவாயின..? அந்த எழுத்துக்கள் கொடுத்த வார்த்தைகள், அவை சொன்ன அர்த்தங்கள், சுட்டிய பொருள்கள், செயல்கள் எல்லாம் எங்கே..?
பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்று சொல்கிற அளவுக்கான அறிவு எனக்கில்லை. இதை எழுதிய பிறகு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற சில எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளையாவது உங்களில் சிலர் அறியத்தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் தட்டச்சுகிறேன். அப்படி
அறிந்தவர்கள் சொன்னால், என்னைப் போல நினைக்கிற மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.
கருத்துகள்
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி
http://www.desipundit.com/2007/06/18/nje/
முன்பொருமுறை குமுதத்தில், 'ங வரிசையில் மற்ற எழுத்துக்கள் எதுவும் பயன்படுவதில்லையே..?' என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, அரசு பதிலில், நீங்கள் சொன்ன இதே வார்த்தைகள்தான் பதிலாக வந்தன.
ஙே......
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறுத்தி முழுமையாக அறியேன். அவர் இந்த எழுத்துக்கைளையும் ஒதுக்கச் சொன்னாரா என்று தெளிவுபடுத்தினால் நலம். மாற்று எழுத்துக்களை முன்வைத்தாரா?
ஒலி-பேச்சுக்கு அடுத்து தான் எழுத்து வடிவம் எந்த மொழியிலும் வரும் என்று நினைக்கிறேன். எனவே, தேவையில்லாத எழுத்துக்களை உருவாக்கிவிட்டு அவற்றை ஒலிக்காமலும் இருக்கிறார்கள் என்பது தவறான புரிதலாக இருக்கலாம். அந்தக் காலத்தில் இந்த ஒலிகள் வழக்கில் இருந்து எழுத்துக்கு வந்திருக்கலாம். எந்தச் சூழ்நிலைகளில் இந்த ஒலிகள், எழுத்துக்கள் பயன்பட்டன என்று அறிந்தவர் தான் சொல்ல வேண்டும்.
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.. எனக்கு அவ்வளவாக தொழில்நுட்ப அறிவில்லை. நான் பயன்படுத்துவது எ- கலப்பையின் எந்தப் பதிப்பு என்று என்னால் தற்போது சொல்ல முடியவில்லை. நண்பர்கள் உதவியுடன் விரைவில் சொல்கிறேன்.
'அண்ணா' என்று இப்போது எழுதுகிறோம். இதில் உள்ள 'ணா' என்ற எழுத்தை பின்புறமாக சுழித்து எழுதும் வழக்கம் முன்பிருந்தது. இதே போன லை,ளை, னை, ணை போன்ற எழுத்துக்களைம் மேற்புறமாக சுழித்து எழுதும் முறை வழக்கிலிருந்ததை அறிந்திருப்பீர்கள். இது நடைமுறைக்கும், அச்சுக்கும் பெரும் சிரமமாக இருக்கிறது என்பதை உணர்ந்து அவற்றை சீர்திருத்தியவர் பெரியார்தான். இதை எழுதும்போது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களைப் புரட்டினேன். அவற்றில் அதுபற்றி இல்லை. விரைவில் கேட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
ஒரு சாமானியனின் பார்வையில் அந்த எழுத்துக்கள் தொங்கு சதைபோல, 'ஆட்டுக்குத் தாடி' என்று அண்ணா சொன்னதைப்போல, தேவையில்லாமல் உருத்திக்கொண்டிருக்கின்றனவோ என்று எனக்கு எழுந்த சந்தேகத்தையே எழுதினேன். யாரேனும் நிவர்த்தி செய்தால் தெரிந்துகொள்வேன்.
இதேமாதிரிதான் தேற்றம், ஸைன் டிட்டா, காஸ் டிட்டா, லாக் புக்னு படிக்கும்போது டார்ச்சர் பண்ணினானுங்கோ.... பைசா பிரயோசனமில்ல...
//எப்படி இருந்தாலும் குழந்தைகள் ஞ, ங போன்ற எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். உயிர் மெயர் எழுத்துக்களை தனித்தனியாக மனனம் செய்ய வேண்டிய சுமை இல்லாத வரை, ஒரு ஒழுங்குடன் இவை இருந்து விட்டுப் போகட்டுமே?//
என்ற உங்கள் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள தக்கவையே. ஆனாலும் இவை சந்தேகத்திற்கான நேரடி விளக்கமாக இல்லை.
நான் இன்னும் அறிவொளி இயக்கத்துல கொடுத்த புத்தகத்தையே படிச்சு முடிக்கலைங்கோ::))