கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28

மொ ட்ட வெயிலு அடிச்சு ஊத்துது. காலுக்கும் கீழ கங்கைக் காய்ச்சி ஊத்துனமாறி இருக்கு. ''அரிசி வாங்கப் போவனும். கூப்பன்காரன் மூடிபுட்டுப் போயிடுவான். வாடா சீக்கிரம்.."னு மேலண்ட பக்கம் ஒதியமர நிழல்ல ஒதுங்கி நின்னு எங்க அம்மா கூப்பிடுது. காதுல வாங்கனுமே...ம் ஹூம். நாலஞ்சு தடவைக் கூப்பிட்ட பிறகு, ''பொறும்மா.. இந்த ஓவர் முடியட்டும்"ங்குறேன். எங்க அம்மாவுக்கா எரிச்சலுன்னா எரிச்சல். வந்து முதுகுலயே படார், படார்னு அடிச்சு, ''ஓவராவுது...கீவராவுது. இங்க என்ன வேப்பமர நெழலா விரிஞ்சுக் கெடக்கு..?" என்று திட்டியபடியே இழுத்துப் போனாள். அது ஒரு அழகிய வெயில் காலம். வெயில், மழை ஒரு மண்ணும் தெரியாது. எப்போதும், பேட்டும் பந்துமாகத்தான் திரிவோம். எவனாவது ரெண்டு பேர் சந்தித்தால், 'கிரவுண்ட்ல யார் இருக்கா..?' என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஊர் உலகம் போலவே என் பால்யமும் கிரிக்கெட்டால் சூழப்பட்டிருந்தது. ஒரத்தநாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான கிராமங்களில் 'த்ரிரோசஸ் கிரிக்கெட் க்ளப், வின்ஸ்டார் கிரிக்கெட் க்ளப், ப்ளாக் ஸ்டார் கிரிக்கெட் க்ளப்' என்ற...