'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..'
'நாடக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இனியேனும் ஆண்கள் அதை தீர்த்து வைப்பீர்கள்தானே..?' என்று கேட்டிருக்கிறார் சினேகிதி. இதோ என் பங்குக்கு என்னால் முடிந்தது.
பிரளயனின் வீதி நாடகக் குழுவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காமலேயே இருந்தது. மிக சமீபத்தில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய மாணவர் கலாசார கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நெல்லைக்கு வந்திருந்தது பிரளயனின் சென்னை வீதி நாடகக் குழு. பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் விழா. ச.தமிழ்செல்வன், கு.ஞானசம்பந்தன் போன்றோர் பேசி முடித்த பின்பு மேடையேறிய பிரளயன் குழுவினர் முதலில் நடத்திய நாடகம் 'பவுன்குஞ்சு'.
தலைப்பின் எளிமை அல்லது பிரளயன் குழுவைப்பற்றிய அறியாமை ஏதோவொன்றின் காரணமாகவோ ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒருவகையில் நாடகம் சொல்ல வந்த செய்தி, பார்வையாளர்களின் மனதில் முழுமையாக பதிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது மாதிரி, நடைமுறைக்கு ஒவ்வாத பாடத்திட்டங்களுக்கு கட்டாயமாக பழக்கப்படுத்தப்படுகின்றனர் நம் குழந்தைகள். சுய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத, மனப்பாட திறனை மட்டுமே வளர்க்கும் இந்த கல்வித்திட்டத்தால் மழலையிலேயே நம் மூலைகள் மழுங்குனிகளாக மாற்றப்படுகின்றன. இந்த திணிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பயிற்றுனர்களாக இருக்கும் ஆசிரியர்கள், ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மாறிப்போய்விட்டனர்.
குழந்தை பருவத்தில்தான், மனதெங்கும் மழைக்கால ஈசல்கள் போல புதிது, புதிதாக கேள்விகள் உற்பத்தியாகும். நோக்கமும், விளைவும் அறியாத அந்த பால்மனசின் கேள்விகள் எதையாவது நம் பாடசாலைகள் தீர்த்து வைத்திருக்கின்றனவா..? தீர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளின் வார்த்தைகளை யாரும் காதுகொடுத்துக் கேட்பதுக்கூட இல்லை. இந்த உணர்வின் உக்கிர தாக்கத்தை, 'ஆயிஷா' என்ற குறுநாவல் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் இரா.நடராஜன். இதைத்தழுவிய நாடக வடிவம்தான் 'பவுன்குஞ்ச'.(அண்மையில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணனின் 'கிறுகிறுவானம்' என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தில், பெரியவர்கள் தன் பேச்சைக் கேட்காததால், மரம், ஆடு, மாடு, அணில், நிழல் என்று யாவற்றுடனும் பேசித்திரியும் சிறுவனின் சித்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது).
படிப்பின் நிறம், மணம் அறியாத ஒரு கிராமத்து தகப்பன், கூலி வேலை பார்ப்பதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் மகன் பவுன்குஞ்சை பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கிறார். அவனை ஆசிரியர்கள் படாதபாடு படுத்தி எடுக்கின்றனர். கிராமத்து அப்பாவித்தனத்துடன் எதையாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் பவுன்குஞ்சுவை நோக்கி, 'உன் மனது பரிசுத்தம் அடையுமாக..உன் கலக எண்ணங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக.. கேள்வி சாத்தான்கள் உன்னைவிட்டு விலகுவதாக..' என்று மனதெங்கும் கடுப்பு பொங்கி வழிய பரிசுத்த ஆவியின் பெயராலே ஆசிர்வதிக்கிறார் ஆசிரியர்.
அன்று ஆங்கிலப் பாடம். ஒவ்வொரு மாணவராக வரச்சொல்லும் ஆசிரியர், எண்ணெயை பாட்டிலில் நிரப்புவதற்கு பயன்படுத்தும் புனலை மாணவரின் வாயில் வைத்து,'a,b,c,d,e,f...' என்று கடகடவென்று ஒப்பிக்கிறார். அடுத்த நாள் வகுப்பில் ஒவ்வொரு மாணவருக்கும் அருகில் செல்கிறார். மாணவர,் முழு வேகத்தில் அடி வயிற்றிலிருந்து குரலெழிப்பி வாந்தி எடுக்கிறார். வந்து விழும் வாந்தியைப் பார்த்து,'a,b,c,d,e,f.. அருமை..' என்று உச்சி முகர்ந்துப் பாராட்டுகிறார ஆசிரியர்். இப்படியே ஒவ்வொரு மாணவராக வாந்தியெடுக்கின்றனர். கணிதம், அறிவியல்..என்று அனைத்துப் பாடங்களுக்கும் இந்த புனல்,வாந்தி..பயிற்றுமுறை தொடர்கிறது. எல்லா பாடங்களையும் பவுன்குஞ்சால் மட்டும் வாந்தி எடுக்க முடியவில்லை. ஆசிரியர் அவனை திட்டுகிறார். அடிக்கிறார். ஆனால், பவுன்குஞ்சு தன் சுய புத்தியால் கேட்கும் கேள்விகள் ஒன்றுக்குக் கூட ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி மிக எளிமையாகக் காட்சிப்படுத்தப்பட்ட நாடகம், சொல்ல வந்த சேதியை பார்வையாளர்களின் மனதிற்குள் எளிதாகக் கொண்டுசேர்த்தது. 'பாடத்திட்டத்திலும், கற்பிக்கும் முறையிலும்தான் தவறு இருக்கிறதேயன்றி கற்றுக்கொள்ளும் எங்கள் புத்தியில் இல்லை' என்ற இறுதி முடிவோடு சுமார் ஐம்பது நிமிடங்கள் இசையும், பாடலுமாக நடந்து முடிந்தது.
புகைப்படத்தில் கை நீட்டியபடி பிரளயன்.....
அடுத்து இரவு 12.30 மணிக்கு 'பயணம்' என்ற இரண்டாவது நாடகத்தை தரையேற்றியது சென்னை வீதி நாடகக் குழு. அது வீதி நாடகத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிந்ததால், குழுவினர் அனைவரும் மேடைக்குக் கீழே வந்துவிட்டனர். அவர்களை சுற்றி நின்றதுபோக, பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் மேடைக்குச் சென்றுவிட்டனர். ஒலிபெருக்கியின்றி, வெறும் குரலுடனேயே நாடகம் நகர்ந்தது.
வறட்சி, வேலையின்மை என்று காலத்தின் கொடிய கரங்கள் துரத்துவதால் கிராம மக்கள், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கின்றனர். நகர்மயமாதலின் விளைவாக அனைத்துவிதமான வேலை வாய்ப்புகளும் நகரங்களுக்கே செல்கின்றன. இன்னொரு புறம் கிராமத்தின் சாதி கொடூரங்களிலிருந்து ஓரளவிற்கு விடுபட, கல்வி,வேலைவாய்ப்பு பெற்ற தலித்துகளின் இரண்டாம் தலைமுறையினர் நகரங்களுக்கு இடம் பெயர்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இப்படி சொந்த நாட்டின் அகதிகளாய், 'பொறக்குறது ஒரு ஊரு..பொழைக்கிறது ஒரு ஊரு' என்று புலம் பெயர்ந்து வருபவர்கள் அனைவருக்கும் நகரம் நேசக்கரம் நீட்டுவதில்லை. அதிலும் பகட்டின்றி, பவுடர் பூச்சின்றி பிழைக்க வரும் எளியவர்களை எல்லா திசைகளிலும் நகரம் துரத்தியடிக்கிறது.
சென்னை வீதிகளை நாளைக்கு நான்கு முறை கடந்து செல்லும் நம்மில் எத்தனை பேர் அந்த பிளாட்பார வாசிகளின் துயரங்களை உணர்கிறோம்..? கடந்த வருடம் அடித்துக்கொட்டிய பேய் மழையில் அவர்கள் எங்கே இருந்திருப்பார்கள்..? கொஞ்சம் நெருங்கிச்சென்று விசாரித்தால், அவர்களுக்கான பூர்வீகம் உங்கள் கிராமத்திற்கு அருகிலோ அல்லது உங்கள் கிராமமாகவோ இருக்கக்கூடும். இப்படி இடம் பெயர்ந்து வரும் சில கிராம வாசிகளை நகரத்தின் மைந்தர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் பயணத்தின் கதை. போலீஸ், அரசியல்வாதிகளின் கொடூர அதிகார முகங்கள்..தாதாக்களின் தர்பார்.. என்று சின்னாபின்னாப்படுகிறது் அவர்களின் வாழ்க்கை.
ஒரு ரவுடி காசு வாங்கிக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில் குடிசைப் போட்டுக்கொள்ளச் சொல்கிறான். அவர்களும் நம்பி குடிசை அமைக்கின்றனர். இறுதியில் ஒரு அரசியல்வாதி வந்து எல்லாக் குடிசைகளையும் எரித்துவிடுகிறான். எரியும் குடிசைகளுக்கு பின்னணியில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது..'வேண்டுமம்மா ஒரு குடிசை...வேண்டுமம்மா ஒரு நிழல்..'. மொத்தக் கூட்டத்தையும் அந்தப் பெண்ணின் குரல் கட்டிப்போட்டது.(சென்னையின் பள்ளியொன்றில் இசை ஆசிரியையாக வேலைப் பார்ப்பதாக அறிமுகப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின்் பெயர் மறந்துவிட்டது). அந்த பின்னிரவில் ஒலிபெருக்கி் எதுவுமின்றி அவர் பாடிய பாடல்கள் பார்வையாளர்களை அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வு நிலைக்குக் கொண்டுசென்றன. 'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..' என்று தொடங்கி பெருஞ்சோகத்தை தன் குரலில் படரவிட்டார். நாடகம் முழுக்க இடையிடையே வந்த 'நகரதேவன்' என்ற பாத்திரம் உண்மையிலேயே சிறப்பு. திடீர், திடீரென ஓடிவந்து லாவணிக்கச்சேரிப் பாடல்கள் மாதிரி நகரத்தின் இயல்புகளை பாடல்களால் விளக்கிவிட்டப் போனார். நாடகம் முடிவுற்றபோது நேரம் பின்னிரவு 2.30 மணி. மொத்தக் கூட்டத்தினரும்் கனத்த மனதோடு கலைந்து சென்றனர்.
வீதி நாடகங்களுக்கான சரியான மாற்றை வேறு எதனாலும் தர முடியாது. தன் வீட்டு வாசலில் தன் பிரச்னையை ஒரு கலை பேசும்போது அதன் மீது அவனுக்கு ஈர்ப்பு வருவது இயல்பானது. இந்த வடிவத்தில் பார்வையாளன், பார்வையாளன் மட்டுமல்ல..பங்கேற்பாளனும் கூட. பாத்திரத்துக்கும், பார்வையாளனுக்குமான இடைவெளி என்பது வீதி நாடகங்களில் மிகக்குறைவு. 'என் வாழ்க்கையை, என் அரசியலை, என் மேன்மையை, என் அசிங்கத்தை பேசுவதற்கு யாருமே இல்லையா..?' என்று இங்கு லட்சக்கணக்கான எளியவர்களின் மனதிற்குள் தீராத கேள்வியொன்று வெகு நாட்களாய் கனன்றுகொண்டிருக்கிறது. அதை கேள்வியாக்கி மக்களிடம் எடுத்துச் செல்பவை வீதி நாடகங்களே. குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள், நான்கு சுவர்களுக்குள் நிகழ்த்தப்படும் கலைகளால் யாருக்கும் பயனில்லை.
தொடர்புடைய இடுகை: http://www.globalvoicesonline.org/2007/04/25/tamil-blogs-agriculture-street-threatre-and-children
குறிப்பு: இந்தக் கட்டுரை பூங்கா(ஏப்ரல் 23/2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
சத்தியமான வார்த்தைகள்...
தங்களால் இயலாத ஒன்றை திரைப்பட நாயகன் செய்து காட்டும்போது மக்கள் 2 மணி நேரம் நாயகனாகிறார்கள்.
அவர்களின் நிஜ வாழ்வை கண்முன்னால் நிகழ்த்திக்காட்டும்போது அதற்கு வெட்கப்படுகிறார்கள். அது தங்களின் வாழ்வென்பதறியாமல்..
விந்தை மனிதர்கள்.. :(
நல்ல பதிவு ஆழியூரான்.வீதி நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தேவையான நிலைப்பாடுகளை பற்றிய உங்கள் பார்வையோடு ஒரு பதிவையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் :)
நீங்களே சிரிப்பானும் போட்டுவிட்டீர்கள். அப்புறம் நான் என்ன சொல்ல..? வீதி நாடகங்களைப் பற்றிய சொந்த அனுபவங்கள் உண்டு. அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய காலங்களில் நாடகமும் பாட்டுமாகத்தான் கழிந்தது பொழுது. மற்றபடி பவுத்த அய்யனாரின் புத்தகம் ஒன்றில் படித்த கட்டுரை ஒன்றைத் தவிர வீதி நாடகங்கள் பற்றி பெரிய அளவுக்கு எனக்கு வாசிப்பு அனுபவங்கள் இல்லை. தோற்றம் வளர்ச்சி பற்றி எங்கேனும் படித்து, கேட்டுதான் எழுத வேண்டும்.
தேவையான நிலைபாடுகள்பற்றி கேட்டுள்ளீர்கள். பணத் தேவைகள் பெருகிவிட்ட சூழலில் வீதி நாடக வடிவம் பெரிய அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்படுமா என்பது கேள்விக்குறியே.. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். பேசுகிறேன்..ஆதங்கப்படுகிறேன்.. என்பதற்காக உடனே நாடகம் நடத்த வீதிக்கு கிளம்பிவிட முடியாது. இந்த நிலைமை ஆர்வம் உள்ள பலருக்கு இருக்கலாம். அப்படியான ஒத்த கருத்துள்ள நண்பர்கள் ஒருங்கிணைந்து சீரான இடைவெளியில், தங்களால் இயன்ற பொருளாதாரத்தில் வீதி நாடகங்களை நடத்தலாம்.
வீதி நாடகத்திற்க்கு மாற்றாக திரைப்பட இயக்கங்களை சொல்லலாம்( வீதி நாடகங்களின் நடைமுறை சிக்கல்களால்)
ஓசூரில் நண்பர் ஆதவன் தீட்சண்யா இன்ன பிற நண்பர்கள் சேர்ந்து குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி என்ற ஒரு இயக்கம் மூலமாய் ஞாயிற்றுக் கிழமை சாயந்திரங்களில் எங்காவது ஒரு இடத்தில் கூடி உலகத்திரைப்படங்களை திரையிட்டு வருகிறார்கள்.நான் சினிமா என்பது இன்னொரு கலைவடிவம் என தெரிந்து கொண்டதே அங்குதான்..
ஜான் ஆப்ரஹாமின் திரைப்பட இயக்கமும்,லெனினின் திரைப்பட இயக்கமும் மற்றொரு வடிவில் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்ல முனைந்த நல்ல முயற்சிகள்
கேள்விப்பட்டிருக்கிறேன். திருநெல்வேலியில் காஞ்சனை திரைப்பட இயக்கம் சார்பாக நண்பர் மணியும், யாதுமாகி திரைக்களம் சார்பாக நண்பர் லெனா.குமாரும் ஆதவன் தீட்சண்யா செய்யும் அதே பணியை செய்து வருகின்றனர். நீங்கள் சொன்னதுபோல சினிமா ஒரு மாற்று ஊடகம் என்பது சரியே...அதை எண்ணிக்கையில் அதிக்கப்படுத்தி, வடிவத்தில் எளிமைப்படுத்துவதன் மூலம் சினிமா மீதான அந்நியத்தன்மையைக் குறைக்கலாம்.
gnanabalan
அவர் ஆண்கள் நடிப்பில் இப்படியான மேடை நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்றுதான் சொன்னார்.பார்வையாளர்களாகப் பல ஆண்கள் வந்திருந்தார்கள்.
பவுன்குஞ்சு என்ற சொல்லு நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.கிராமத்தாக்கள் "என்ர பவுன்குஞ்சல்லோ" என்று கொஞ்சுவார்கள்:-))
அந்தக்கதையில் சொன்ன கருத்தைப்பற்றி நானும் பலமுறை யோசித்ததுண்டு.அதை வெளியில சொன்னா "ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்ற" கதை என்று நக்கலடிப்பினம்.
ஒரு பரீட்சைக்குப் போகும்போது என்னதான் நாம confident a போனாலும் MCQ போன்ற வினாக்களில் குழப்பமான விடைகளைப் பார்த்து பிழையான விடையைத் தெரிவு செய்துபோட்டு சான எப்pபடித்தான் கஸ்டப்பட்டுப்படிச்சாலும் ஏன் நல்ல மார்க்ஸ் வராதாம் என்று யோசிப்பதுண்டு.
கருத்தை நானும் தவறாக புரிந்துகொள்ளவில்லை. நாடகம் பார்த்தேன..எழுதுவதற்கு நேரம் தள்ளிப்போய்கொண்டிருந்தது. உங்கள் கட்டுரையைப் படித்ததும், இப்போதாவது எழுதுவோமே என தோன்றியது. உங்களை சாக்காக வைத்து எழுதிவிட்டேன்..அம்புட்டுதேன்.
//அவர் ஆண்கள் நடிப்பில் இப்படியான மேடை நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்றுதான் சொன்னார்.பார்வையாளர்களாகப் பல ஆண்கள் வந்திருந்தார்கள்.//
இங்கத்தைய நிலைமை வேறு. தெருக்கூத்துகள் நன்றாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலும் சரி...அருகி வருகிற இன்றையக் காலகட்டத்திலும் சரி..ஆண்கள்தான் பெண் வேடத்தையும் ஏற்று நடிக்க வேண்டியிருக்கிறது.(அதிகபட்சம்).
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..
என்கணிப்பின்படி மிகப்பெரிய வெற்றிகரமான அணுகுமுறை அது. மேடையில் ஒலிவாங்கி, ஒலிபெருக்கித் துணையோடு நடத்தப்படும் நாடகத்தைவிட அவையெதுவுமற்ற நேரடி அணுகுமுறை பன்மடங்கு தாக்கத்தைப் பார்வையாளரிடம் ஏற்படுத்தும்.
ஈழத்தின் வன்னியில் தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் வீதிநாடகங்கள் மிகப்பெரும் எழுச்சியைக் கண்டிருந்தன. (2002 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட கையோடு அது காணாமற்போய்விட்டது. இப்போது மீண்டும் எழுச்சி பெற்றிருக்குமென்று நம்புகிறேன்) விடுதலைப்புலிகளின் முக்கியமான பரப்புரை ஊடகம் வீதிநாடகங்கள்தாம். தொடக்கத்தில் அவை மின்சாதனங்களின் பயன்பாட்டோடுதான் தொடங்கப்பட்டன. சிறிது காலத்திலேயே மாறத்தொடங்கின. எந்தவிதமான மின்சாதனங்களுமின்றித்தான் அனைத்து வீதிநாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. இதற்கு பொருளாதாரமும் வளப்பற்றாக்குறையும் முக்கியகாரணமென்றாலும், பெறுபேறு சாதகமாவே இருந்தது. பார்வையாளருக்கு கருத்தை ஊட்ட மிகச்சிறந்த முறையாக இந்நேரடி அரங்காற்றுகை முறை இனங்காணப்பட்டது.
இன்னொரு வகையில் பார்த்தால், ஒலிவாங்கி பயன்படுத்தப்படாமை, அரங்கச் செயற்பாட்டாளருக்குரிய சுதந்திரத்தை அளிக்கிறது. ஒலிவாங்கியை மையமாக வைத்து தமது நகர்வுகளை நிகழ்த்தும் தன்மை (ஒலிவாங்கியிலிருந்து குறிப்பிட்ட தூரத்துள் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் உட்பட) இல்லாமற் போகிறது.
ஈழத்து நாடகத்தின் தன்மைகள்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உங்கள் வார்த்தைகள் அதை உணர்த்தும் அதேநேரம், ஈழத்தின் சூழலில் நிகழ்த்தப்படும் மக்கள் கலைகள், எத்தகையை கருப்பொருளைக் கொண்டவையாக இருக்க முடியும் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. நன்றி...
/
உண்மைதான், ஆழியூரான்!
அருமையான பதிவு!!
மிக மிக அருமையான இடுகை. வீதி நாடகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், நேரடி அனுபவங்கள் இல்லை. உங்களின் பதிவு + புகைப்படம் வாயிலாக என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.
உங்களுடைய இந்த இடுகையைப்பற்றி Global Voice Onlineஇல் எழுதியிருக்கிறேன்.
சுட்டி:
http://www.globalvoicesonline.org/2007/04/25/tamil-blogs-agriculture-street-threatre-and-children
-மதி
மதி...... நான் எழுதியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதைப் பார்த்தேன். அடிநாக்கில் ஆங்கிலம் பேசும்் என் புலமைக்கு, படித்து புரிந்துகொள்வது மட்டுமே இப்போதைக்கு சாத்தியம். எழுதுவது சிரமம். ஆகவே, ரொம்ப டேங்ஸ்..........:)
***
மக்கள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இத்தகைய நாடகங்களை ஒளிபரப்ப வேண்டும். செய்திப் பத்திரிக்கையிலும் இதுகுறித்த விமர்சனங்கள் வெளிவர வேண்டும். அதுவே வெகுஜனமக்களை சேரவும், விழிப்புணர்வு பெறவும் உதவும்
இப்போதுதான் கவனித்தேன். என் கட்டுரையின் புகைப்படத்தில், பிரளயன் கையில் ஒலிபெருக்கியோடு நிற்கிறார். நான், ஒலிபெருக்கியின்றி நாடகம் நடந்ததாக எழுதியிருப்பதையும், புகைப்படத்தையும் பார்த்துவிட்டு, பொய்யாக மிகைப்படுத்தி எழுதியிருப்பதாக யாரேனும் எண்ணக்கூடும். மொத்த நாடகமும் ஒலிபெருக்கி இல்லாமல்தான் நடந்தது எனினும், அவசியமான மிகச்சில காட்சிகளில் மட்டும் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் புகைப்படத்தில், பிரளயன் கையில் ஒலிபெருக்கியோடு நிற்கிற காட்சியும்.