நாடார்..வெள்ளாளர்..கிறிஸ்டின்..-பேரா.ஆ.சிவசுப்ரமணியனுடன் ஒரு சந்திப்பு..

'எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட,எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல்.கடந்த காலத்தைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பாத எந்த சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்..'

-ஆனந்த விகடனில் வெளிவந்த 'தமிழ்மண்ணே வணக்கம்..' தொடரில் பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன் சொன்ன வார்த்தைகள் இவை.

கே.ஆர்.விஜயாவையும்,டி.வி.சுந்தரம் அய்யங்காரையும் இன்ஷியலோடு தெரிந்து வைத்திருக்கும் நமக்கு நம் சொந்த தாத்தாவின் தந்தையார்/தாயார் பெயர் தெரிவதில்லை.இரண்டு தலைமுறைக்கு முன்பு, நகரங்களுக்கு குடிபெயர்ந்த குடும்பங்களின் இளைஞர்/யுவதிகளிடம், 'உங்களின் பூர்வீக ஊர் என்ன..?' என்று கேட்டால், 'தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம்..' என்பதுதான் பதிலாக இருக்கும்.பூர்வீக கிராமத்தில் சொத்துகள் இருந்தால் மட்டும்,கிராமத்தைப்பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்.இது யார் தவறு..?தன் சந்ததிக்கு குடும்ப வரலாற்றை உணர்த்தாத பெற்றோரின் தவறா..?அல்லது தன் பெற்றோரின் குடும்ப வழி வரலாற்றை தெரிந்து கொள்ளாதது பிள்ளைகளின் தவறா..?தன் முன்னோர்களின் வரலாறுபற்றி அக்கரை இல்லாத ஒருவர் தன் சந்ததியை சரியாக வழிநடத்துவார் என்று நம்புவதற்கில்லை.அதனால் அதிகபட்ச தவறு பெற்றோரையே சாரும்.

இப்படி நம் குடும்ப வரலாறு தொடங்கி நாம் வாழும் இந்த சமூகத்தின் வரலாறு வரைக்கும் அறிவதும்,உணர்வதும் அவசியமானது.தூத்துக்குடி வ.வு.சி. கல்லூரியின் தமிழ் துறையில் பணியாற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற பேரா.ஆ.சிவசுப்ரமணியன் நம் மண்ணின் மரபார்ந்த வரலாறுகள் அழிந்துபோகாமல் தொடர்ந்து போராடும் ஒரு களப்பணியாளர்.அதேநேரம் அழிக்கப்பட்ட வரலாறுகளின் மீட்பராகவும் இருக்கிறார். ஒரு முன்னிரவு நேரத்தில் அவரது தூத்துக்குடி இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் வாய்த்தது.அவரது பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தின் அடையாளங்களாக அறையெங்கும் இரைந்துகிடக்கின்றன புத்தகங்கள்.பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, 'இவருடன் உரையாடுவதற்கான தகுதி நமக்கில்லை..' என்பது புரிந்துவிடுகிறது.வார்த்தைக்கு இரண்டு வரலாறு சொல்கிறார்.

''தூத்துக்குடி,நாகர்கோயில்,திருநெல்வேலி மாவட்டங்களில் பைபிளில் வரும் வார்த்தைகளே,நிறைய ஊர்களுக்கு பெயராக இருக்கும்.நாசரேத்,பெத்லேகம்,ஜெருசேலம்,சமாரியா,சுவிசேஷபுரம்,டோனாவூர்....என்று இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.தமிழகத்தின் தென்கோடி மாவட்ட கிராமங்களுக்கு பைபிள் வார்த்தைகள் பெயராக இருப்பதற்குப் பின்னால் ஒரு நெடிய வரலாறே இருக்கிறது.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த சமயத்தில்,அதிகமான கிறிஸ்தவ மதமாற்றங்கள் நிகழ்ந்தது தென்பகுதியில்தான்.இதற்கான காரணங்களாக சாதியக் கொடுமைகள் பொருளாதார நசுக்கல்கள் என்று பலவற்றை சொல்லலாம்.கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொத்து,கொத்தாக மதம் மாறினார்கள்.அப்படி மதம் மாறியவர்களை மதம் மாறாத மற்றவர்கள் இகழ்ச்சியுடன் நடத்த ஆரம்பித்தார்கள்.மதம் மாறியவர்கள்,அவர்கள் நாடாராக இருந்தாலுமே,தாழ்த்தப்பட்டவர்களுக்கு இணையாகவே மதிக்கப்பட்டனர்.பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது,உயர் சாதியினரின் வீடுகளுக்குள் நுழையக்கூடாது,உயர் சாதியினரைத் தொட்டுப் பேசக்கூடாது...என்று தாழ்த்தப்பட்டவர்களிடம் காட்டப்பட்ட எல்லா அநீதிகளும்/பாரபட்சங்களும் மதம் மாறியவர்களுக்கும் நடந்தது-அவர்கள் உயர்சாதியினராகவே இருந்தாலும் கூட.கூடுதலாக, 'மதம் மாறியவர்களிடம் யாராவது கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிக்கொடுக்க வேண்டியதில்லை.அவர்களும் திரும்பக் கேட்கக்கூடாது..' என்ற அளவுக்கு மோசமாக நடத்தப்பட்டனர்.

இந்த விஷயம் இவர்களை மதம் மாற்றிய கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.'நம்மால்தான் இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.நாம்தான் இதற்கு தீர்வு கண்டாக வேண்டும்..' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.அப்போதுதான்,நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மொத்தமாக வாங்கி புதிது,புதிதான குடியிருப்புகளை ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.அப்படி உருவான புதியக் குடியிருப்புகளுக்கு பைபிளில் உள்ள வார்த்தைகளையே பெயராக வைத்தார்கள்.அப்படி உருவானவைதான் நான் மேற்சொன்ன ஊர்கள்..." - என்று பேராசிரியர் சொன்ன தகவல்கள் ஆச்சர்யமூட்டுபவையாக இருந்தன.

அவரே மேலும், '' 'விருதுபட்டி' என்பதுதான் தற்போதைய விருதுநகரின் ஆதிகால பெயர்.அது சிறிய ஊராக இருந்த சமயத்தில், 'பட்டி' என்பது அசிங்கமாக இருக்கிறது என்று 'நகர்' என்று மாற்றிவிட்டார்கள்.விருதுநகர் நோக்கி செல்லும் சாலையொன்றில் இப்போதும் 'விருதுபட்டி 8 KM ' என்ற மைல்கல் இருக்கிறது.நானே ஒருமுறை ஆய்வுக்காக அந்த மைல்கல்லை புகைப்படம் எடுத்திருக்கிறேன்.இப்போது அந்த மைல்கல்லுக்கு மாலைபோட்டு,அருகில் சூலாயுதம் நட்டு, 'மைல்கல் முனுசாமி' என்று கடவுளாக்கி விட்டார்கள். 'விருதுபட்டி' என்ற பெயர் மட்டும் அப்படியே இருக்கிறது.." என்ற அந்த கந்தக பூமியின் பெயர் வரலாறு சொன்னார்.

இவரைப்பற்றி நண்பர்கள் சொல்லும்போது, 'தினசரி ஏதாவது ஒரு கிராமத்துக்கு ஆய்வுக்கு கிளம்பிடுவார்.திடீர்னு பார்த்தோம்னா எங்கயாவது ஒரு கிராமத்துல டீ கடையில நின்னுகிட்டிருப்பார்..' என்றார்கள்.அவரது பேச்சில் அந்த களப்பணியின் சாறு தெரிக்கிறது.

''பணகுடி பக்கத்தில் வடக்கன்குளம் என்று ஒரு ஊர் இருக்கிறது.அங்கு வெள்ளாளர் கிறிஸ்தவர்கள்,நாடார் கிறிஸ்தவர்கள் இந்த இரண்டு பிரிவினரும் அதிகமாக வசிக்கின்றனர்.நூறு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் ஒரு பிரச்னை வந்தது.நாடார்களுடன் இணைந்து ஒரே சர்ச்சில் வழிபடுவதில் வெள்ளாளர்களுக்கு உடன்பாடு இல்லை.இதனால் சர்ச்சுக்குள் ஒரு சுவர் எழுப்பி,இரண்டாக பிரித்து ஆளுக்கொரு பக்கமாக வழிபட்டனர்.இதிலும் காலப்போக்கில் பிரச்னை வந்து பின்பு நீதிமன்றம் தலையிட்டுதான் அந்த சுவரை உடைக்கவேண்டி வந்தது.."என்று போன பேச்சு,தென்மாவட்ட கலவரம்பற்றி திரும்பியது.

"ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தேவர் இனத்தவர்கள் நிறையபேர் வசிக்கின்றனர்.மற்ற பகுதி தேவர்களைப் போலல்லாமல்,இவர்களில் அதிகபட்சம் பேர், வாழை விவசாயம் செய்து வந்தனர்.கலவரத்தில் இறங்கினால் எதிர் தரப்பில் ஒரு சிறுவன் கூட ஒரே இரவில் ஒரு வாழைத்தோப்பை வெட்டி சாய்த்துவிட முடியும்.லட்சங்களில் இழப்பு வரும்.இதனால்,தென் மாவட்ட கலவரம் நடந்தபோது,மற்ற பகுதியில் உள்ள தேவர் இனத்தவர்கள் பிரச்னைகளில் ஈடுபட்டாலும் ஸ்ரீவைகுண்டம் தேவர்கள் மட்டும் ஒதுங்கியே இருந்தனர்.." என்று தெரியாத பின்னணி ஒன்றையும் சொன்னார்.அரை மணி நேர சந்திப்பில் பேராசிரியர் சொன்ன வரலாறுகள் பிரமிப்புக்குள் தள்ளியது.

விடைபெற்று பேருந்துக்காக திரும்பியபோது, ஒன்றுமட்டும் விளங்கியது.நமது பள்ளிக்கூட பாடபுத்தக வரலாற்றை மட்டும் படித்தால்,ஒரு போதும் உண்மை வரலாறை தெரிந்துகொள்ள முடியாது.அதை எழுதியவர்களின் வரலாறை கிளற வேண்டும்.அப்போதுதான் நாம் எழுத வேண்டிய வரலாற்றை முடிவு செய்ய முடியும்.

கருத்துகள்

- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
//நமது பள்ளிக்கூட பாடபுத்தக வரலாற்றை மட்டும் படித்தால்,ஒரு போதும் உண்மை வரலாறை தெரிந்துகொள்ள முடியாது.அதை எழுதியவர்களின் வரலாறை கிளற வேண்டும்.அப்போதுதான் நாம் எழுத வேண்டிய வரலாற்றை முடிவு செய்ய முடியும்.//

முகத்திலறையும் உண்மை.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி யெஸ்பா.
PRABHU RAJADURAI இவ்வாறு கூறியுள்ளார்…
தகவல்களுக்கு நன்றி! வடக்கன்குளத்தில் இன்றும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உறவினர்களாக இருப்பதை பார்க்கலாம். சுவர் எழுப்பப்பட்டதால் சிலர் மீண்டும் இந்துக்களாக மாற...இன்று வரை இவர்களுக்குள் திருமண உறவு உண்டு. மனைவி கணவனின் மதத்தை ஏற்றுக் கொள்வதுண்டு!

வடக்கன்குளம் ஏன், பாளையங்கோட்டையிலேயே வெள்ளாளர்கள், நாடார்களுடன் கதீட்ரல் கோவிலில் அமர கூச்சப்பட்டு தனியே ஒரு சிறு கோவிலை அமைத்த வரலாறும் உண்டு!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//பாளையங்கோட்டையிலேயே வெள்ளாளர்கள், நாடார்களுடன் கதீட்ரல் கோவிலில் அமர கூச்சப்பட்டு தனியே ஒரு சிறு கோவிலை அமைத்த வரலாறும் உண்டு!//

இது புதிய செய்தியாக இருக்கிறது.கருத்துக்கு நன்றி நண்பரே..
வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

// நமது பள்ளிக்கூட பாடபுத்தக வரலாற்றை மட்டும் படித்தால்,ஒரு போதும் உண்மை வரலாறை தெரிந்துகொள்ள முடியாது.அதை எழுதியவர்களின் வரலாறை கிளற வேண்டும்.அப்போதுதான் நாம் எழுத வேண்டிய வரலாற்றை முடிவு செய்ய முடியும் //

அருமையான வரிகள். தகவலுக்கு நன்றி.

சிறிது நாள் கழித்து வந்து பார்த்தால் பிளாக் புதிதாக ஜொலிக்கின்றது. நீங்களும் படிக்கலாம் பட்டியலில் பலவும் குறைகிறதே. எனக்கு மிதக்கும் வெளி போன்ற அருமையான பிளாக்குகளை அறிமுகம் செய்து வைத்த பட்டியல் அது.

நன்றி
வசந்த்
வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

// நமது பள்ளிக்கூட பாடபுத்தக வரலாற்றை மட்டும் படித்தால்,ஒரு போதும் உண்மை வரலாறை தெரிந்துகொள்ள முடியாது.அதை எழுதியவர்களின் வரலாறை கிளற வேண்டும்.அப்போதுதான் நாம் எழுத வேண்டிய வரலாற்றை முடிவு செய்ய முடியும் //

அருமையான வரிகள். தகவலுக்கு நன்றி.

சிறிது நாள் கழித்து வந்து பார்த்தால் பிளாக் புதிதாக ஜொலிக்கின்றது. நீங்களும் படிக்கலாம் பட்டியலில் பலவும் குறைகிறதே. எனக்கு மிதக்கும் வெளி போன்ற அருமையான பிளாக்குகளை அறிமுகம் செய்து வைத்த பட்டியல் அது.

நன்றி
வசந்த்
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//சிறிது நாள் கழித்து வந்து பார்த்தால் பிளாக் புதிதாக ஜொலிக்கின்றது. நீங்களும் படிக்கலாம் பட்டியலில் பலவும் குறைகிறதே. எனக்கு மிதக்கும் வெளி போன்ற அருமையான பிளாக்குகளை அறிமுகம் செய்து வைத்த பட்டியல் அது.//

டெம்ப்ளேட் மாற்றியபோது பழைய டெம்ப்ளேட்டை சேமிக்க மறந்துவிட்டேன்.அதனால் எல்லா நண்பர்களின் URL-ம் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.விரைவில் மாற்றிவைக்கிறேன் வசந்த்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழியூரான்... நல்ல சந்திப்பு..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//நல்ல பதிவு ஆழியூரான்... நல்ல சந்திப்பு..//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பொன்ஸ்.
எனக்கு இந்த கட்டுரையில் சில சந்தேகங்கள் உண்டு.அதாவது சுவிசேஷபுரம்,ஜெருசேலம் போன்ற ஊர்களுக்கெல்லாம் பெயர் காரணம் சொல்கிறார் பேராசிரியர்.அதே ஏரியாவில் சாத்தான்குளம்,பேய்குளம் என்ற பெயர்களிலும் ஊர்கள் இருக்கின்றன.இந்த ஊர்களின் பெயர்,அதற்கான பெயர் காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கின்றன.ஆனால் இதைப்பற்றி பேராசிரியரிடம் கேட்க மறந்துவிட்டேன்.தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.
மரைக்காயர் இவ்வாறு கூறியுள்ளார்…
//நமது பள்ளிக்கூட பாடபுத்தக வரலாற்றை மட்டும் படித்தால்,ஒரு போதும் உண்மை வரலாறை தெரிந்துகொள்ள முடியாது.அதை எழுதியவர்களின் வரலாறை கிளற வேண்டும்.அப்போதுதான் நாம் எழுத வேண்டிய வரலாற்றை முடிவு செய்ய முடியும்.//

சிந்திக்க வேண்டிய வரிகள். நன்றி ஆழியூரான்.

பேராசிரியர் அவர்களின் ஆனந்த விகடன் கட்டுரையை எனது பதிவில் இட்டிருக்கிறேன்.
தமிழ் மண்ணே வணக்கம்! - பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
kothandam இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா கண்ணியாகுமரியில் 200ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறியவர்கள் சில நூறு பேர் தான் இருந்திருப்பார்கள். திருவிதாங்கூர் மகாராஜா அவர்கள் அனைவரையும் மதம் மாறியவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் வடக்கன்குளத்தில் கொண்டு போய் குடியுருத்தி உள்ளார்கள் அதணால் தான் ஆங்கு வெள்ளாளர்கள் நாடார்கள் செட்டியார்கள் என்று அனைத்து ஜாதியினரும் இருந்தார்கள் வடக்கன்குளம் ஒன்றும் நகரம் அல்ல. அது ஒரு தண்ணியில்லாத பாலைவணம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்