நீயே பீ அள்ளு..

தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி..
நினைவுக்கு வரட்டும்
அவன் பிறப்பு..


-பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது 'கொஞ்சூண்டு..' என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் 'கொஞ்சூண்டு' என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது.

செண்ட் பூசிய பணக்கார பிணம்..
துர்நாற்றமடிக்கிறது
எரிக்கையில்..


உறக்கம் பிடிக்கவில்லை..
கனவிலும்
பீ துடைப்பம்..


நாத்தம் குடல புரட்டுது..
சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்..
மறுபடியும் அவிய்ங்க பேல.


கருவறை நுழைய அனுமதியில்லை..
கையில ஆயுதமிருந்தும்,
நிராயுதபாணியாய் எங்கள் குலசாமிகள்..


-என்று ஏராளமான கொதிப்போடு சொல்லும் அவர், உச்சகட்டமாக சொல்கிறார் இப்படி.

இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா...வந்து
நீயே பீ அள்ளு..


-அதிர்ந்து நிமிர்கையில் இடஒதுக்கீடுபற்றி மேலும் அறைகிறார் இப்படி.

வேகாததை
புரட்டிபோடு..
வெந்தது மேலே வரட்டும்..


-இட ஒதுக்கீட்டின் நியாயங்களை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.இப்படி அவரின் எல்லா கவிதைகளுமே நாட்டின் நடைமுறைக்குத் தேவையான அரசியலை முன்வைக்கின்றன.அழகியல் மட்டுமே கவிதைக்கான பாடுபொருள் இல்லை..நாட்டின் தேவை அதுவல்ல..இதை ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறார் தமிழ்பித்தன்.

ஒருமுறை பிய்ந்தது ஹை-ஹீல்ஸ்..
பின்னால் முட்டவில்லை,
ஆண்குறி..

நிலவல்ல, மலரல்ல,
நான் பெண்..
த்தூ...நீதான் ஆண்.

புலியை முரத்தால் அடித்தாள்..
சாதனையல்ல-அது
பெண் இயல்பு..

கள்ளிப்பாள் குடித்தும்
சிரித்தது குழந்தை..
அழுதாள் தாய்..

நீ இந்து.
நானுமா இந்து..?
வா கும்பிடுவோம் முனியப்பனை..

வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை..

பிறப்பு ஒரு முறைதான்
ஏன் சுமந்தாய் சிலுவையை
கழற்றி அடிக்காமல்..

சூழ்ச்சி சண்டை
பாபருக்கும்-ராமருக்கும்
எங்கள் மண்ணை பிடிக்க..

மரத்தினால்
நிழல்,மழை,கூடு-ஒரு
கோடறி..

நாயை விடு..
பூனையிடம் கற்றுக்கொள்..
தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு

நிழல் மறு
வெயில் காண்பி
வியர்வையை அறிமுகம் செய்..

மொத பார்வ..
பயங்காட்டுது
கடல்..

தெரியாமல் மிதித்தேன்
மிதித்ததும் கடித்தது
எறும்பு

கொஞ்சூண்டு மழை
துளிர்த்துகிடுச்சு
முள்ளுசெடி..

பன்றி பீ திண்ணும்.
முடிவுக்கு வராதே..
காய்கறி கொடுத்துப் பார்.

சுமைக்குள் உடல்
உயரத்தில் ஏறுகிறது
நத்தை..

பசியால் செத்த பிணம்
கல்லறை மீது
படையல்..

-மேலுள்ளவை எல்லாம் தமிழ்பித்தனின் கவிதைகள்.அவரோடு இணைந்து எழுதியிருக்கும் தயா கவிசிற்பியும் ஒன்றும் சளைத்தவரில்லை.அவரது கவிதைகளில் சில...

புனிதநூல்.
பக்கங்கள் புரட்டுகின்றன
எச்சில் விரல்கள்.

நாத்து நடாத
கதிர் அறுக்காத சாமிக்குப் பேரு
அன்னலட்சுமி..

பீ கூடையில்
சோத்துசட்டி..
விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ...மசுரு..


-இந்த புத்தகத்தை படித்து பல நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த வேளையில் சமீபத்தில ஒருநாள் திண்டுக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.தமிழ்பித்தனைப் பார்க்கப்போனேன்.'அவர்லேடி' பள்ளிகூடம் அருகில் தூரிகா என்ற பெயரில் ஓலைகுடிசையில் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறார்.கருப்பு நிறமும்,வெள்ளந்திப் பேச்சுமாக தமிழனுக்குரிய அடையாளங்கள் அனைத்தோடும் இருந்தார்.ஒரு டீயை குடித்துக்கொண்டே பேசினால், அவருக்குள் இருக்கும் ஆதங்கங்கள் அனைத்தும் வார்த்தைகளில் வெளிப்படுகின்றன.

"நெறைய மாறனும் தோழர்..இந்த புத்தகத்தை வெளியிடும்போது ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துச்சு.இருந்தாலும் சமாளிச்சு வெளியிட்டோம்.."என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே,"அது என்ன திண்டுக்கல் தமிழ்பித்தன்..?" என கேட்டேன்.அதற்காகவே காத்திருந்ததுபோல,"அது கொஞ்சம் அவசரப்பட்டு வச்சுகிட்ட பேர் தோழர்..அந்த பேருனால பலபேரு என் கவிதையை படிக்காமலேயே போயிடுறாங்க..ஒரு மாதிரியான மனத்தடை ஏற்பட்டுடுது..இப்ப 'முனி'ன்னு பேரை மாத்திட்டேன்.."என்றார்.புத்தகத்தின் பக்கங்களில் கவிதைக்குப் பொருத்தமாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் இவர் வரைந்ததுதான்..சமூகத்தின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து அல்லது மாற்றத்தை உண்டாக்கும் நோக்கோடு எழுதிக்கொண்டிருக்கும் இவரிடம் பேசவும்,புத்தகம் வாங்கவும் 9865994424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள்

கோவி.கண்ணன் [GK] இவ்வாறு கூறியுள்ளார்…
//நீ இந்து.
நானுமா இந்து..?
வா கும்பிடுவோம் முனியப்பனை..

வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை.. //

சரியான செருப்படி !
தருமி இவ்வாறு கூறியுள்ளார்…
மனச உலுக்கவே செய்யும் வார்த்தைகள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கோவி.கண்ணன்,

சரியாக சொன்னீர்கள்.வருகைக்கு நன்றி..இந்த கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி தருமி..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றிகள் இப்பதிவிற்கு

-பாலாஜி-பாரி
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அழகியல் இல்லா வரிகள்..
பீடிகை என்ன வேண்டி கிடக்கு?
உண்மையைச் சொல்ல!
சுந்தரவடிவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
நறுக்!
அவரைப்பற்றிய தகவல்களுக்கும் நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Brilliant writers...glad you introduced this book.
/*
வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை..

நாயை விடு..
பூனையிடம் கற்றுக்கொள்..
தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு
*/

Truly worded...
Hats off to the writers.

-KVD
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
//இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா...வந்து
நீயே பீ அள்ளு..//


முத்தான வரிகள். ஆழ்ந்த சிந்தனையின் கூற்று. நல்ல ஆயுதம். கூர்மையான கருத்து. திடகாத்திரமான எண்ணம். அஞ்சா நெஞ்சம். அறிவு.
படிக்கையில் உறைந்தது ரத்தம்.
வளர்க! தொடர்க!
நன்றி.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ஜான் பாஸ்கோ,சுந்தரவடிவேல்,மாசிலா..அனைவருக்கும் நன்றிகள்...
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
//பீ கூடையில்
சோத்துசட்டி..
விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ...மசுரு..//


வரிகளுக்கு உயிர்
உயிர்களுக்கு உணர்வு
உணர்வுகளை மயிராக்கி
பிணைத்து சாட்டையடி கொடுத்து
மதிகளங்கி மிதந்த என்னை
மடையா விழி என் கூறும் உம் வரிகள்
அருமை அருமை.

நீர் வெறும் கவிஞர் மட்டுமல்ல,
ஒரு கலைஞரும் கூட.
வரிகளால் சமுதாய அவலங்களை
செதுக்கி வடித்து கொடுத்திருக்கிறீர்!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்டமிட்ட நண்பர்களிடம் இந்த நூல் குறித்து பகிர்ந்து கொள்ள வேறொரு தகவலும் உண்டு.கவிஞர் அறிவுமதி 'தை' என்ற பெயரில் கவிதை இதழ் நடத்துவது அனைவரும் அறிந்ததே.அதன் முதலாவது இதழில் தமிழ்பித்தனின்,'இட ஒதுக்கீடு வேண்டாம்..வா..வந்து நீயே பீ அள்ளு..' என்ற கவிதையை எடுத்துப் போட்டிருந்தார்.அதில் என்ன விசேஷம் என்றால்,ஆனந்த விகடனின் சுஜாதா எ.பி.க.(எனக்குப் பிடித்த கவிதை)என்ற பெயரில் வாரம் ஒரு கவிதையை எடுத்து போடுகிறாரில்லையா..?அதன் அரசியலை வெளிக்கொண்டுவரும் விதமாக 'சு.ப.க.(சுஜாதா படிக்காத கவிதை)' என்று வெளியிட்டிருந்தார்.

அதேபோல தையில் தமிழ்பித்தனின் கவிதையை படித்த விழி.பா.இதயவேந்தன்('கொஞ்சூண்டு'க்கு அணிந்துரை வழங்கியிருப்பதும் இவர்தான்.),அவரிடம் 'தை பார்த்தேன்.அதில் என் தாயைப் பார்த்தேன்..' என சொல்ல,அருகில் நின்ற நான் அதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்டு நின்றேன்.இதயவேந்தனின் பின்புலம் பற்றி அறிந்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் புரியும்.
SathyaPriyan இவ்வாறு கூறியுள்ளார்…
//இட ஒதுக்கீடு வேண்டாம்.வா...வந்து நீயே பீ அள்ளு..//

:-( ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்துதான் கலையுனர்ச்சி பீறிட்டு எழும் என்பதற்கு நல்ல உதாரனம்.

தான் ஒன்பது வயதிலிருந்தே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் மீனா, தனது முதல் அனுபவத்தை நடுக்கத்தோடு விவரிக்கிறார்: "கூடை நிறைய மலத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தேன். அப்போது கால்கள் தடுமாறி கீழே விழுந்தேன். அழுது கொண்டிருந்த என்னைத் தூக்கிவிட யாரும் வரவில்லை. காரணம், கூடையிலிருந்த மொத்த மலமும் என் மேல் கொட்டியிருந்தது. இன்னொரு துப்புரவுப் பெண் வந்து தூக்கிவிடும் வரை நான் அழுதபடி அப்படியே கிடந்தேன். மொத்த உலகத்தில் மிகவும் துரதிர்ஷ்டமான பெண்ணாக என்னை அப்போது உணர்ந்தேன்."

மீனா போன்ற பல துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்.

பொய்யர்கள் ஆளும் பூமி: மீனாமயில்

மலம் அள்ளுவதை இயந்திர மயமாக்கினால் பல துப்புரவு தொழிலாளிகள் வேலை இழப்பார்கள் என்று கூறிக்கூறியே 59 ஆண்டுகள் அவர்களை மலம் அள்ள வைத்தாகி விட்டது. மனிதக் கழிவை மனிதன் சுத்தம் செய்யும் கேவலத்தை நமது தலைமுறையிலாவது மாற்றுவோம்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியபிரியன்...லிங்க் கொடுத்தமைக்கு நன்றி..
BadNewsIndia இவ்வாறு கூறியுள்ளார்…
முதல் வரி படித்ததும் மனதிர்க்குள் பகீர் என்ற உணர்வை தூண்டும் கவிதைகள்.
இதை எழுத தூண்டுதலாக இருந்தது என்ன என்று புரிகிறது.

ஆனால் இதை எழுதி என்ன கிடைக்கும் என்று எதிர் பார்த்தார் கவிஞர்?

பாரதியின் கவிதைகளிலும் இதே சூட்டோடுதான் பிரச்சனைகள் அலசப்பட்டிருக்கும். அதை படிக்கும்போது நிஜமான உந்துதல் வரும் படிப்பவனுக்கு. "தேடி சோறு நிதம் தின்று..." - இதை படித்து எவ்வளவோ பேருக்கு ஒரு துளியாவது சொரணை ஏற்பட்டிருக்கும். எனக்கு பல துளிகள் வந்தது.

ஆனால் தமிழ்பித்தன் கவிதையை படிக்க வேண்டியவன் படிக்க மாட்டானே. முகம் சுளித்து மூடியில்ல வச்சிடுவான்? 'வாரே வா' சொல்றது ஒடுக்கப்படுவதின் வேதனை உணர்ந்தவர்கள் மட்டும் தானே?

அவர்கள் படித்தால் மட்டும் போதாதே?
இன்னும் மனதளவில் தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைப்பவன் முழுதாக படிக்க வேண்டாமா? வாழைப்பழ ஊசி போல் ஏற்றினால்தான் அவனும் உணர்ந்து திருந்துவான்?

நடைவண்டி, தமிழ்பித்தன் இதை பத்தி என்ன நினைப்பார்?
அற்புதக் கவிஞன் அவன். நல்ல அறிவு அவனிடத்தில்.

மேன்மேலும் வளர, 'நாற்றம் இல்லாத' வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். reach நிறைய அப்பொழுதுதானே கிடைக்கும்?

Hats off to him!
சரண் இவ்வாறு கூறியுள்ளார்…
hello aazhiyuraan..unmai sudum enbaargal..ungaludaya blogla mudal pathivaai naan paarththa 'neeye pee allu!' nijaththilum nallathoru 'padayal amirtham! makkaa..thodarnthu mada saamykalukku padayungal..innum innum peeyil moikkum eekkalai naangal ungal blogil moippom!
சரண் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் ஆழியூரானுக்கு! உங்களுடைய சமீபத்திய பதிவான ''நீயே பீ அள்ளு"
உண்மையிலேயே வாசிக்கப்பட வேண்டிய அருமையான பதிவு! 'பீ" போன்ற படையல் அமிர்தங்கள் தான் தலித்திய சிந்தனையை கிளர்ந்தெழச் செய்யும்! இன்னும் காட்டமாக அதிகார வர்க்கத்தின் மூக்கைத் துளைக்கும் படைப்புகளை எங்களுக்கு காட்டுங்கள்! தேடிப் பிடித்து படையலிட்டதற்கு மீண்டும் என் நன்றி ஆழியூராரே!!
சரண் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் ஆழியூரானுக்கு! உங்களுடைய சமீபத்திய பதிவான ''நீயே பீ அள்ளு"
உண்மையிலேயே வாசிக்கப்பட வேண்டிய அருமையான பதிவு! 'பீ" போன்ற படையல் அமிர்தங்கள் தான் தலித்திய சிந்தனையை கிளர்ந்தெழச் செய்யும்! இன்னும் காட்டமாக அதிகார வர்க்கத்தின் மூக்கைத் துளைக்கும் படைப்புகளை எங்களுக்கு காட்டுங்கள்! தேடிப் பிடித்து படையலிட்டதற்கு மீண்டும் என் நன்றி ஆழியூராரே!!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
யெய்யா...சரோஜினி ரெயின்போ காலனியாரே..(என்ன பேர் இது..?)..

'பீயை மொய்க்கு ஈக்களாய்' என்ற உங்களுடைய உமமையை ரொம்பவே ரசித்தேன்..ஆனால் பலபேர் இந்த வார்த்தையை படித்த மாத்திரத்திலேயே மூக்கை பொத்தியிருக்கக் கூடும்.

இந்தியாவிற்கான கெட்ட செய்தி சொன்னது போல நாகரீகமான வார்த்தைகளை அதாவது நாற்றமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் பரவலான கவனிப்பு கிடைக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.

பீ என்றால் நாறத்தான் செய்யும்.அதைப்பற்றி படிப்பதற்கே சிலருக்கு குடலைப் பிடுங்குகிறது அவனவன் பீயை அவனவன் அள்ளிப்பாருங்கள் ஒருநாள்...அதன்பிறகு பீ அள்ளுவது பற்றி நாற்றமில்லாமல் எப்படி எழுதவேண்டும் என்று சொல்லுங்கள்..
சரண் இவ்வாறு கூறியுள்ளார்…
யெய்யா..ஆழியூராரே! அது சரோஜினி ரெயின்போ காலனி இல்லை..சரண்ஜி ரெயின்போ காலனி! அப்பா அம்மா ஆசையா வச்ச பேர்ல மண்ணு அள்ளி போட்டுறாதீங்க..அப்புறம் 'நீயே பீ அள்ளு!'வை நான் வரவேற்க விசேஷ காரணங்கள் உண்டு. ஏன்னா நானே பீ அள்ளுற சாதிக்கார பயதான்..எந்தாத்தா முப்பாட்டன் எல்லோரும் அள்ளுறவங்கேதான்.!சும்மா சொல்லலை ஆழி! அந்தப் பதிவு பிடிச்சிருக்குன்னு சொல்றேன்..அதுக்கா இம்புட்டு கோபம். நான் ஆக்ஸிடென்டா ஆகி கிடந்தப்ப எம் பீயை பல மாசங்கள் அள்ளிக் கொட்டுன பயதான். வெடித்துக் கிளம்பும் குசுக்கள்தான் அதிகாரவர்க்கத்தின் பீடங்களை தகர்க்கும்னு நம்புறவன் நான்! சென்னைவாசியா ஆனப்புறம் வடபழனியில இருக்குற ஒரு மேன்ஷன்ல தங்கியிருந்தப்ப ஒரு பய நான் இல்லாதப்ப என்னோட ரூம் மேட் என்னைப் பத்தி ஒருத்தன்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை ரூமுக்கு வெளியே நின்னு கேட்க முடிஞ்சது.
''சக்கிலியப் பய மாப்ளே.சாக்ஸை துவைக்கவே மாட்டேங்கிறான்..நாத்தம் குடலைப் பொறட்டுது..இவனெல்லாம் என் ஜினீயருக்கு படிச்சிருக்கான் மாப்ளே..எல்லாம் கோட்டால்ல ஸீட்டு வாங்கிட்டு படிக்கப் போறானுங்க.. கோத்தா! நம்ம சோத்துல சூத்த வக்கிரானுங்கடா....."ன்னு பேசிட்டு இருந்ததை கேட்டுட்டுட்டேன். (அவன் பல வருஷமா வேலை தேடுறவன்.நான் காலையில போனா ராத்திரி 11 மணிக்கு வர்ற குவாலிட்டி கன்ட்ரோல் என் ஜினீயரா இருக்கேன்.ஊஉம் அதெல்ல்லாம் எதுக்கு இப்ப.. நண்பா எல்லாம் வலிகள்தான்! பார்க்கலாம்!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னிக்கவும் நண்பரே..உங்கள் பெயரை தவறாக புரிந்து கொண்டமைக்கு.
உங்கள் அனுபவம் மனதை என்னவோ செய்கிறது.வாய்ப்பிருப்பின் நாம் நிறைய பேசலாம்..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
saranji rainbow colony.. நீங்கள் குறிப்பிடும் எனது பதில் உங்கள் பின்னூட்டத்திற்கானது அல்ல.Bad news for india என்பவருக்கான பதில் அது..
நன்றி..
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழியூரான்,

Bad news india -

//ஆனால் இதை எழுதி என்ன கிடைக்கும் என்று எதிர் பார்த்தார் கவிஞர்?
//
//முதல் வரி படித்ததும் மனதிர்க்குள் பகீர் என்ற உணர்வை தூண்டும் கவிதைகள்.
//
- உங்களுக்கு இந்த ஹைக்கூக்களும் உணர்வைத் தூண்டியிருப்பது இங்கேயே தெரிகிறது. இது போல் பலர் இருப்பார்கள், உருவாக்கப் படுவார்கள். பீ மாதிரியான சொற்களுக்காக இந்தக் கவிதைகளைத் தொட விரும்பாதவர்களும் சீக்கிரமே தொடத் ஆரம்பிப்பார்கள்..
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
//மனச உலுக்கவே செய்யும் வார்த்தைகள்.//
ஆமாம் சார்.

ஆனால், எனகென்னவோ வார்த்தைகள் ரொம்ப வலியதாக இருக்கிறது. எழுதியவரின் நிலைமை புரிந்து கொள்ள முடிந்தாலும், இதனை மற்றவருக்கு formard பன்ன முடியுமா யோசியுங்கள்?
மடல்காரன்_MadalKaran இவ்வாறு கூறியுள்ளார்…
'பீ' என்பதைகூட வாயால் தான் சொல்லமுடியும்.
மலம் அள்ளுபவர் வாழ்வில் ஏற்றம் கண்டால்தான்
தொழில் நுட்ப புரட்சிக்கு ஓர் அர்த்தம் உண்டு..
ஒவ்வொரு வரியும் உளியால் செதுக்கப்பட்ட கவிதைகள்
உங்கள் பதிவு அதன் வலியை உணர்த்துகிறது
இதற்கு ஜாதி சாயம் புசுவது அதைவிட கொடுமை.
மனிதர் உணர்வை மனிதர் புரிந்து கொள்ளும் காலம் வரும் என நம்புவோம்.
விஜயன் இவ்வாறு கூறியுள்ளார்…
'பொறி' பறக்குது எழுத்தில்
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
முகத்தில் அடித்தது போல் உள்ளது.
பகிர்ந்தமைக்கு நன்றி!
அருள் குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆனால் தமிழ்பித்தன் கவிதையை படிக்க வேண்டியவன் படிக்க மாட்டானே. முகம் சுளித்து மூடியில்ல வச்சிடுவான்? 'வாரே வா' சொல்றது ஒடுக்கப்படுவதின் வேதனை உணர்ந்தவர்கள் மட்டும் தானே? //

நீங்கள் நினைக்கிற 'படிக்க வேண்டியவன்' படித்துத் திருந்தத் தேவையில்லை. இவை ஒன்றும் அறியாதவனல்ல அவன். இதைப் படிக்க வேண்டியவன் 'ஒடுக்கப்படுவதின் வேதனை உணராதவன்' தான்! இதுதான் தனக்காக விதிக்கப்பட்டது என்றெண்ணி எதிர்க்காமல் இருப்பவனுக்கான கவிதைகள் தாம் இவை என நான் நினைக்கிறேன்.

மற்ற கவிதைகளில் நேரடியக சொல்லாவிட்டாலும்,

//தெரியாமல் மிதித்தேன்
மிதித்ததும் கடித்தது
எறும்பு//

போன்ற கவிதைகளில் இதைத்தான் கவிஞர் சொல்லியிருப்பதாய்ப் படுகிறது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
vaathaikal neruppu dundangal

saattai adiyaai

ippadi oru kavithaiyaiyum, kavinjanaiyum.. arimugapaduthiya thunichalaga unkalai eppadi paaraattuvathu..
நான் தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
Saattai...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!