தாய்ப்பூனை; தகப்பன் பூனை!


இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். பைகளை எடுத்துக்கொண்டு அறைக் கதவை சாத்தும்போது உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம். கட்டிலுக்குக் கீழே ஒரு பூனை குட்டிப் போட்டிருந்தது. கண் திறக்காத நான்கு பூனைக் குட்டிகள். ஒன்று வெள்ளை; மற்ற மூன்றும் அழகிய கறுப்பு. அடைகாத்து படுத்திருந்த தாய்ப்பூனை எட்டிப் பார்த்த என்னை கடும் கோபத்தோடு முறைத்தது. சில நாட்களாகவே இந்த பூனை எங்கள் வீட்டுக்குள் அடிக்கடி வருவதும், போவதுமாக இருந்ததன் காரணம் அப்போதுதான் புரிந்தது.

பொதுவாகவே இந்த பூனை வளர்ப்பது, நாய் வளர்ப்பது இதில் எல்லாம் எனக்கு அனுபவமோ, ஆர்வமா இருந்தது இல்லை. மனைவிக்கும் அப்படியே. அதனால் இந்தப் பூனைக் குட்டிகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலுக்கு வேறு தாமதமாகிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி தாய்ப்பூனை வந்து செல்வதற்கு வசதியாக வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டுச் சென்றோம். (ஊருக்குப் போகும்போது ஜன்னல் கதவுகளை இறுக்க தாழிடுவதுதான் வழக்கம். அப்படி செய்திருந்தால் அந்த குட்டிகளின் நிலை என்னவாகியிருக்கும்? அய்யோ.. ).

ஊரில் பூனைக் குட்டிகளை நினைத்துப் பார்க்கவெல்லாம் நேரம் இல்லை. எட்டு நாட்களுக்குப் பிறகு வந்து வீட்டைத் திறந்து எட்டிப் பார்த்தால்... குட்டிகள் அழகாக கண் திறந்து பார்த்தன. தாயை காணவில்லை. "ஏங்க.. ஜன்னலை திறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்களா? ஒரு பூனை உள்ளே போயிட்டு, போயிட்டு வந்துச்சு. இன்னைக்குக் காலையிலக் கூட போச்சு" என்று அவசரமாக வந்து சொன்னார் எதிர்வீட்டுப் பெண்.

"தெரியும். அது குட்டிப் போட்டிருக்கு. நாலு குட்டி. இன்னும் கண் கூட முழிக்கலை. பாவமா இருந்துச்சு.. அதனால நாங்கதான் திறந்து வெச்சுட்டுப் போனோம்" என்றேன். அந்தப் பெண் சிரித்தார். "இந்த தடவை நீங்க சிக்கிட்டீங்களா?" என்றார். பிறகுதான் அந்த பூனை தனது ஒவ்வொரு கர்ப்ப காலத்துக்கும் எங்கள் அடுக்ககத்தின் ஒவ்வொரு வீடாக தேர்ந்தெடுத்து வருவது தெரிந்தது. இதற்கு முன்பு ஒன்பதாம் எண் வீட்டில் குட்டிகளை ஈன்ற அந்தப் பூனை இம்முறை எங்களை தேர்வு செய்திருக்கிறது.

என்னதான் பூனைகள் என்றாலும் பிரசவ காலத்தில் அதற்கும் கூடுதல் பசி இருக்கும்தானே? கொஞ்சம் பால் வைத்தோம். நாங்கள் பார்க்கும்வரையிலும் பால் பாத்திரத்தில்தான் இருந்தது. எப்போது குடித்ததென தெரியாது; ஒட்ட உறிஞ்சிவிட்டது. அதுவரையிலும் நாங்கள் இருக்கும்போது கிட்டவே வராத அந்தப் பூனை, 'பால் எல்லாம் வைக்கிறாய்ங்க. நல்லவய்ங்களா இருப்பாங்க போல' என்று நினைத்து மெதுவாக வெளியில் வர ஆரம்பித்தது. நாங்கள் அந்தப் பூனையை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டு வேறு ஏதோ வேலையில் கவனமாக இருப்பதுபோல் நடித்தோம். இத்தனைக்கும் அந்தப் பூனையையும், அதன் நான்கு குட்டிகளையும் வளர்க்கும் எண்ணம் துளியும் எங்களுக்கு இல்லை. கொஞ்சம் குட்டிகள் பெரிதானதும் தூக்கி வெளியில் விட்டுவிடலாம் என்றே நினைத்திருந்தோம். ஆனாலும் எங்களையும் அறியாமல், அந்தப் பூனையை சகஜ நிலைக்கு கொண்டுவந்து தயக்கத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். (ஒருமுறை வாழைப்பழம் வைத்தோம். சாப்பிடவே இல்லை). அலுவலகம் விட்டு வந்து கதவை திறக்கும்போது வீடு முழுக்க பூனைகளாக நிற்பது போன்ற கற்பனைதான் ஓடும்.

நான்கைந்து நாட்கள் சென்றபிறகு அந்தப்  பூனைக்கு அச்சம் விலக ஆரம்பித்தது. இப்போது ஜன்னல் ஓரத்தில் நாங்கள் அமர்ந்திருந்தால் எதிரில் வந்து திமிராக நிற்கிறது. 'நகர்ந்துகொள். நான் வெளியேப் போக வேண்டும்' என்பது அதன் பொருள். நகர்ந்து அமர்ந்தால் தாவிக் குதித்து வெளியில் ஓடும். நகராமல் அமர்ந்திருந்தால் 'புஷ்ஷ்...புஷ்ஷ்' என்று உறுமும். சமையலறையில் உருட்டுவது, வீட்டை புரட்டுவது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடாதது ஆறுதல். ஒருநாள் கதவை திறந்தால் உள்ளே மொசுமொசுவென்று ஒரு வெள்ளைப் பூனை. எங்களை கண்டதும் தாவிக் குதித்து ஓடிவிட்டது. இது மட்டும் அப்படியே நிற்கிறது. அனேகமாக அந்த வெள்ளைதான் தகப்பன் பூனை என்று நினைக்கிறேன்.பிள்ளைகளை காட்ட அழைத்து வந்திருக்கும் போல. இது இத்தோடு முடியுமா, தன் மாமன், மச்சான், அக்கா, தங்கை என சுற்றம் சூழ குடிவருவார்களா... தெரியவில்லை.  'அவன் இத்தோட கடையை மூடிட்டு ஓடிட்டான்னா அவன் நமக்கு அடிமை.. இல்லேன்னா நாம அவனுக்கு அடிமை' என்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

'இந்தப் பூனை இங்கேயும், அங்கேயும் போயிட்டு வரும்போதே நினைச்சேன். இதான் உன் கதையா?' என்ற எதிர்வீட்டுப் பெண், 'எங்களுக்கு ஒரு குட்டி' என்று 'ஆர்டர்' கொடுத்திருக்கிறார்.  மீதமுள்ள மூன்றில் ஒன்று எங்களுக்கு. இன்னும் இரண்டு கறுப்பு பூனைகள் இருக்கின்றன. யாரேனும் கேட்பார்கள், கொடுக்கலாம். இல்லை எனில் வெளியில் விட்டால் அவை பிழைத்துக்கொள்ளும்; அதுவல்ல பிரச்னை. குட்டிகளை இப்படி ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டால் அந்தத் தாய்ப்பூனை சண்டைக்கு வராதா? இப்போதே கடுமையாக முறைக்கிறது. பார்ப்பதற்கு வேறு, பேய்ப் படங்களில் வரும் பூனையைப் போலவே டெரர் லுக்கில் மிரட்டுகிறது.  நாளைக்கு ஏதேனும் வம்பு பண்ணுமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!