பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

இந்தியாவுக்குள் சத்தமில்லாமல் ஓர் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 644 கிராமங்கள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளுக்குள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேடி 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் அலைந்து திரிகின்றனர். காடுகளை அழித்து விமானத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேட்டுக் கேள்வியில்லாத கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள்... அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’. சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத உள்நாட்டு யுத்தத்தின் கொடூர முகம் இதுதான்.



என்னதான் நடக்கிறது மத்திய இந்தியாவில்? ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது? ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரன்யா காட்டுப் பகுதிதான் பிரச்னையின் மையம். அடர் காடுகளும், மலைகளும் சூழ்ந்துள்ள இந்தப் பிராந்தியத்தில் பாக்சைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது என அற்புதமான தாதுப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக பெரு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் கூறுபோட்டுக் குத்தகைக்கு விட அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ‘வேதாந்தா’ என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு, 40 கி.மீ. நீளமுள்ள ஒரு மலையை குத்தகைக்கு விட்டிருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இதற்காக இந்திய அரசு பெற்றுக் கொள்ளவிருக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம்.

உலகச் சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் விலை போகும் ஒரு டன் இரும்புத் தாதுவை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 27 ரூபாய்க்குத் தருகிறது அரசு. இப்படி தண்டகாரன்யா வனப் பகுதியின் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக சுமார் 200 ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய மாநிலமான ஜார்கண்ட்டில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே அந்த மண்ணின் பூர்வீக குடிகளான பழங்குடி மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது வளங்கள் கொள்ளையிடப் படுகின்றன.



இவை அனைத்தையும் எதிர்த்துக் கேட்காமல் ‘சரிங்க எஜமான்’ என அடிபணிந்துப் போயிருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால் அந்த பழங்குடி மக்கள் வீரத்தோடு எதிர்த்துப் போரிடத் தொடங்கவே பிரச்னை பெரிதாகியது. மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகளும் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். உடனே அரசு பழங்குடியினர், மாவோயிஸ்ட்டுகள் இரு தரப்பையும் ஒரே தராசில் நிறுத்தியது. இருவரையும் ‘உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள்’ என்று வரையறுத்தது. அதன் பொருட்டே இப்போது தண்டகாரன்யாவின் காடுகளுக்குள் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

ஆப்கன் போரின்போது கூட 50 ஆயிரம் படையினரைதான் ஆப்கானிஸ்தானில் இறக்கியது அமெரிக்கா. ஆனால் இந்திய அரசு இப்போது மத்திய இந்திய மாநிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினரை இறக்கிவிட்டிருக்கிறது. சொந்த மக்களின் மீது நடத்தப்படும் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கு இந்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை 7,300 கோடி ரூபாய்.

‘உள்நாட்டுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இந்தப் போர் நடத்தப்பட்டாலும் உண்மையாக இந்த யுத்தம் யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், அவரது வாயாலேயே நாடாளுமன்றத்தில் சொன்னார். ‘நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது என்பது முதலீட்டுச் சூழலை பாதிக்கும்’ என்றார் பிரதமர். ஆக, மக்களின் எதிர்ப்பற்ற ஒரு முதலீட்டுச் சூழலை உருவாக்கித் தருவதறாக ராணுவத்தைக் கொண்டு அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பே பழங்குடி மக்களின் போராட்டங்களை நசுக்க ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரிலான கூலிப்படையை உருவாக்கியது சட்டீஸ்கர் அரசு. அதிகாரப்பூர்வமற்ற முறையில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கும் இவர்களும் பழங்குடி மக்கள்தான். ஆனால் அந்த மக்களுக்குள் இருக்கும் சாதி போன்ற இயல்பான பிரிவினைகளை அதிகப்படுத்தி அவர்களின் ஒரு பகுதியினரைப் பிரித்து 2004-ல் இந்த சல்வா ஜூடும் உருவாக்கப்பட்டது. மலையின் நுணுக்கங்களும், மக்களின் பழக்கங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இவர்களை வைத்தே பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டுகிறது ராணுவம். சல்வா ஜூடும் என்ற இந்த அரசக் கூலிப்படை நடத்தியத் தாக்குதலால் கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் மக்கள் பூர்வீக கிராமங்களில் இருந்து காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கின்றனர்.
வீடுகளும், வயல்களும் எரிக்கப்படுகின்றன. 3 வயது பிஞ்சுக் குழந்தையின் ஐந்து விரல்களையும் வெட்டியுள்ளனர். 70 வயது மூதாட்டி, மார்பகங்கள் அறுக்கப்பட்டு தெருவோரம் பிணமாகக் கிடக்கிறார்.




‘‘நாங்கள் காடுகளுக்குள் மரங்களுடன், விலங்குகளுடன் வாழும் பழங்குடிகள். எங்களுக்கு ஆயுதமும் தெரியாது. அரசாங்கமும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அரசாங்கம் என்பது போலீஸ், ராணுவம், காண்ட்ராக்டர், ரியல் எஸ்டேட், கம்பெனிகள் இவை மட்டும்தான். எந்தவித அரசுத் திட்டங்களும் எங்களை சீண்டியதே இல்லை. ஆனால் இப்போது நாங்கள் தெய்வமாக வழிபடும் மலையை கற்பழித்து முதலாளிகளுக்கு விற்கிறார்கள். அதை எதிர்த்தால் எங்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. நாங்கள் அமைதியின் பிள்ளைகள்தான். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் மனைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் நிலம், உங்கள் காடு, உங்கள் நீர் அனைத்தும் உங்களிடம் இருந்து வன்முறையாகப் பிடுங்கப்படும்போது என்ன செய்வீர்கள்?’’ கோபமாகக் கேட்கிறார்கள் தண்டகாரன்யா மலைக்குள் பதுங்கி வாழும் பழங்குடி மக்கள்.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழ் மக்களைப் போல சட்டீஸ்கரில் பழங்குடி மக்கள் பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு முகாம்களில் குடி வைக்கப்பட்டுள்ளனர். தந்தேவாடா மாவட்டத்தில் மட்டும் மூன்று பெரிய முகாம்கள் இயங்குகின்றன. இவற்றை சல்வா ஜூடும் கண்காணிக்கிறது. சட்டீஸ்கர் மாநில டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ‘இலங்கை ராணுவத்தின் இறுதி வெற்றிதான் எங்கள் வழிகாட்டி’ என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் ஆயுதங்களின் முனையில் அடியோடு நசுக்குவது என்ற இலங்கை போர் வெற்றியின் ஃபார்முலாவை இங்கேயும் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையும், நாட்டின் இயற்கை வளமும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னைப்பற்றி பிரதான அரசியல் கட்சிகள் எவையும் வாய் திறக்கவில்லை. இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.



காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக அச்ச உளவியல் விதைக்கப்பட்டிருகிறது. அங்கு எப்போதும் பதற்றம் குடி கொண்டிருக்கிறது. அவற்றில் இருந்து எந்தவித பாடத்தையும் கற்றுக் கொள்ளாத இந்தியா இப்போது மறுபடியும் மத்திய இந்தியாவை பதற்றப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பிராந்தியத்தில் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் புகுத்தப்பட்டால் அதை எளிதில் நீக்கிக்கொள்ள முடியாது. நமது முந்தைய வரலாறுகள் இதையே நமக்குக் காட்டுகின்றன. ஆனாலும் அரசு அமைதியான ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்கித் தருவதற்காக தம் சொந்த மக்களுக்கு எதிராகவே இந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

‘அரசு, மாவோயிஸ்ட் தாக்கம் உள்ளப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தவே விரும்புகிறது. ஆனால் ஒரு சாலை அமைத்தால் உடனே அவற்றை குண்டு வைத்துத் தகர்த்துவிடுகிறார்கள். இப்படி செய்தால் எப்படி வளர்ச்சித் திட்டங்களை அமுல் படுத்த முடியும்?’ என்று கேகிறார் ப.சிதம்பரம். ஆனால், ‘அந்த சாலை மக்களுக்காக அல்லாமல் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டால் அதை அழிப்பதில் என்ன தவறு?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

அதேநேரம் மாவோயிஸ்ட்டுகளின் மனித உரிமை மீறல்களை நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களே கடுமையாக எதிர்க்கிறார்கள். லால்கர் பகுதியில் சுமார் 1000 சதுர கி.மீ. நிலப் பகுதியைக் கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள் அதை ‘விடுவிக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவித்த பிறகு மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்தது.

‘‘இது தவறு. அந்த மக்களின் குரலாக மாவோயிஸ்ட்டுகள் இருக்க விரும்பினால் முதலில் அவர்களின் அரசியல் அஜண்டா என்ன என்பதை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை அறிவித்துக்கொள்வதால் அரசப் படைகளின் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் சந்திக்கப்போவது சாதாரண மக்கள்தான். மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் வளம் மிக்க கற்பனையான எதிர்காலத்துக்காக சட்டீஸ்கரின் சாதாரண பழங்குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க முடியாது’’ என்று அப்போது கருத்துச் சொன்னார் மறைந்த மனித உரிமைப் போராளி பாலகோபால்.



சரி, தவறுகளைத் தாண்டி தங்களுடன் களத்தில் நின்பவர்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான பிடிப்பு அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பசுமை வேட்டை தொடங்கும்போது மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரம் பேர்தான். ஆனால் இப்போது காடுகளுக்குள் மறைந்து வாழும் மக்கள் தாங்களாகவே முன்வந்து ‘மக்கள் போர்ப்படை’ என்றும், ‘மாவோயிஸ்ட்டுகள்’ என்றும் தங்களை அறிவித்துக்கொள்வதால் போராளிகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நடப்பவை தனிநாடு கேட்கும் போராட்டங்கள். ஆனால் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் தங்களின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள். வெள்ளையர்களை எதிர்த்து நடத்தப்பட்டதற்கு பெயர் சுதந்திரப்போர் என்றால் இந்த கொள்ளையர்களை எதிர்த்து நடைபெறும் போருக்கும் சுதந்திரப் போர் என்றே பெயரிடலாம்.

கருத்துகள்

பனித்துளி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
மனிதர்கள் மிருகங்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்களோ !
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சார்
இந்த நாட்டு அதிகார வர்க்கம் திருந்தாது சார்.... பார்ப்பனர்களும், ஒடுக்கு முறையாளர்களும் இருக்கும் வரை இந்தியா உருப்படாது!

ரோஷம், சூடும் சுரணை, தன்மானம் பற்றி பேசினால் உடனே தீவிரவாதி என்று தூற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது.

அப்படி கூறுபவர்களின் தங்கைகளையோ, தாயையோ, மனைவியோ, குழந்தைகளையோ நடு வீதியில் வைத்து கற்பழிக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும்....... அப்போது அஹிம்சை, சாந்தம் என்று எப்படி கூறுவான்கள் என்று பார்ப்போம்...

பன்னாடை பசங்க.......

மானம் கெட்டவனுக்கு பெயர் தான் அஹிம்சைவாதி (மிதவாதி).........

இவண்
தமிழன்
திருவாரூர் சரவணா இவ்வாறு கூறியுள்ளார்…
சினிமாக்களில்தான் பணக்காரர் ஹோட்டல் கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் குடிசைகளை போலீசார் பணம் வாங்கிக் கொண்டு அப்புறப்படுத்துவதாக காட்டுவார்கள். ஆனால் இங்கே நமது அரசாங்கமே இப்படி சொந்த நாட்டு மக்களையே விரட்டி அடிக்கும் நிலைக்கு சென்றதற்கு பணம் மட்டுமே முக்கிய காரணம் என்று எண்ணும்போது நாளை நமக்கும் ஈழத்தமிழர் கதிதானோ என்று நினைக்கிறேன்.
மக்கள் சட்டம் இவ்வாறு கூறியுள்ளார்…
துண்டறிக்கையாக அச்சிட்டு மக்களிடம் விநியோகிக்க வேண்டிய பதிவு!
Uma இவ்வாறு கூறியுள்ளார்…
செறிவான விவரங்கள் அடங்கிய கட்டுரைக்கு நன்றி.
பதி இவ்வாறு கூறியுள்ளார்…
'இந்தி'ய அரசின் எளிய மக்களின் மீதான அடக்குமுறையையும் அது சார்ந்துள்ள நோக்கத்தினையும் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்குகிறது உங்களுடைய இந்த சிறப்பான கட்டுரை.

நானும், நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
gana இவ்வாறு கூறியுள்ளார்…
Very nice article. Lots of unknown information. Thanks
.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்திய அரசு மேற்கதிய நாடுகளுக்கு broker ஆகி ரொம்ப நாள் ஆச்சு . சுதந்திரம்கிர பெயரில் home administration நம்ம கிட்ட குத்துட்டு globalisation பெயரில் மறுபடியும் மறைமுகமா colonisation ஆக்கிட்டு இருகாஙக. அப்போ east india company இப்போ _______(p)ltd. சட்ட பூர்வமான கொள்ளை. மச்சா ஒருதன் சிக்கிருக்கான் எவ்வளவு அடிச்சாலும் தாங்கரான்டா ரொம்ப நல்லவன் டா. என்ன வளம் இல்லை நம் நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்