12/2/07

காதலிக்க யாருமில்லை..'தேவதைகள் பூமிக்கு வருவதில்லை என்பதெல்லாம் காதலிக்காதவர்கள் சொல்லி வைத்த பொய்கள்..' என்று பனிக்கூழ் வார்த்தைகளில் உரு(க்)குகிறார் பழனிபாரதி. 'பெண் இல்லாத ஊரிலே கொடி பூ பூப்பதில்லை..' என மிகை வார்த்தைகளால் மிரட்டுகிறார் வைரமுத்து.

கேட்கும்போது சுகமாகத்தான் இருக்கிறது.உணரும்போதுதான் வருத்தமும், கழிவிரக்கமும் வந்துவிடுகிறது.நம்புங்கள் நண்பர்களே....காதலை சொந்த அனுபவத்தில் உணராத சபிக்கப்பட்ட இளைஞர்கள் எனைபோல் பெருங்கூட்டம் இங்குண்டு.உடனே, 'நல்லா யோசிச்சுப் பாரு...காதல்ல சிக்காதவன் எவனுமே இருக்க முடியாது.ஒண்ணு நீ காதலிச்சுருக்கனும்.இல்லை...உன்னை யாராவது காதலிச்சுருக்கனும்.ஆனா கட்டாயம் காதல் உன்னைக் கடந்துப் போயிருக்கும்..' என்று அறிவுரை வார்த்தைகளை கை நிறைய அள்ளி வீச தயாராக வேண்டாம்.

இந்த வார்த்தைகளை கேட்கும்போதுதான் ரொம்பவே கலக்கமாக இருக்கிறது. 'டீக்கடை முக்குல நின்னு,நாலு நாளு சிரிச்சு,சிரிச்சுப் பார்த்துச்சே...அந்தப் பிள்ளையா இருக்குமோ...? அந்த ராஜாளியார் வீட்டுபிள்ளை எப்பவும் எகனமொகனயா கிண்டல் பண்ணுமே..அதுவா..? 'உனக்கு வெள்ளை சட்டை நல்லாயிருக்கு..'ன்னு கருத்து சொன்னாளே..அவளா இருப்பாளோ...?' என்று என்னைக் காதலித்திருப்பார்களோ என்று நான் சந்தேகிப்பவர்களின் உத்தேசப் பட்டியல் முன்காலையின் நிழலென நீள்கிறது. ஆனால் யாரையும் நான் காதலிக்கவில்லை என்பதே உண்மை. 'அதுக உன்னைக் காதலிச்சிருந்தா..?' என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை.ஆனால் அப்படி 'ப்பதாக' யாரும் என்னிடம் சொல்லியதில்லை.

கால்கள் தரையில் படாமல்,எனக்கு மட்டும் தலைக்கு மேலே அறிவுக்கொம்புகள் முளைத்திருந்ததாய் நான் நம்பிய காலங்களில் எனைச்சுற்றி நிறைய பெண்கள் இருந்தனர்.அவர்களின் காதலுக்காய் என் அபத்த கவிதைகள் தூதுப்போயின. 'கேவலம்...என் கவிதைகளை நம்பி காதல் செய்யும் இவர்களில் ஒருத்தி என் காதலியாக இருக்க வாய்ப்பே இல்லை..' என்று திமிரோடு திரிந்தால் அப்புறம் எங்கிருந்து காதல் வரும்..?

காதலிக்கிறவர்களை வாழ்வின் யதார்த்தம் உணராத கற்பனைவாதிகளாக, வாழ்க்கையை வீணடிப்பவர்களாக மட்டுமே எண்ணிய என் பெருமூளை, 'உங்களுக்கெல்லாம் இருக்குடி ஆப்பு' என அடிக்கடி சொல்லிக்கொள்ளும்.அது எனக்கு நானே வைத்துக்கொண்ட ஆப்பு என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.இன்னொரு பக்கம், எனைபோன்று Personality இல்லாத ஜந்துகளை பெண்கள் காதலிப்பார்கள் என்ற மூட நம்பிக்கையெல்லாம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

கல்லூரி பருவம் முடிவுக்கு வந்த இறுதிக்கும் முந்தைய நாள், ஒரு இறுக்கமும்,துக்கமும்,வெறுமையும் மனதை அடைத்தது.யாவரின் கரங்களிலும் பூக்கள் இருக்க, என் கரங்களில் வெறும் முட்கள் மட்டுமே இருந்தன.என் கரங்களும் பூக்களுக்கு ஏங்கிய தருணத்தில் எந்தச் செடியிலும் பூக்கள் இல்லை...எல்லாம் கொய்யப்பட்டிருந்தன. பெண்கள் சூழ இருந்த பொழுதிலேயே முட்கள் கொய்யாதவன் முட்கள் சூழ்ந்த வெளியுலகில் பூக்களையா கொய்துவிடப் போகிறேன்..? இதுவரை ஒருமுறை கூட எனக்கு உலகம் அர்த்தப்படவில்லை;என் பிம்பம் விழுந்து கண்ணாடி உடையவில்லை.

அரங்குகளில்,வீதிகளில் இளம் வயது இணைகளைப் பார்க்கும்போது இந்த கழிவிரக்கமும்,ஏக்கத்துயரும் மிகுதியாகிறது.இதற்காகவே நான் மெரினா கடற்கரைக்குப் போவதில்லை.அது பேச்சுலர்களை.. குறிப்பாக பேரிளம் வாலிபர்களை உசுப்பேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இடம்.மணலுக்கு வாயிருந்தால் கண்ணீருடன் சொல்லும்..தன் மீது டன் கணக்கில் குவிந்துகிடக்கும் பெருமூச்சுகளின் கதைகளை. அதிலும், 'இவனையெல்லாம் எவ காதலிக்கப் போறா.?' என்று நொட்டாங்கையால் ஒதுக்கித்தள்ளப்பட்ட நண்பர்கள், தேவதைகளோடு வீதிகளில் திரிவதைப் பார்த்தால் பெருமூச்சு பொத்துக்கொண்டு வரும்.

பைக்கில் பில்லியன் என்ற வஸ்து பொருத்தப்பட்டிருப்பதன் நோக்கத்தை பெண்கள்தான் நிறைவு செய்கின்றனர்.என்ன செய்ய...? பீர் தொந்தி தடியன்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என் போன்றவர்களின் பைக் பில்லியன்.இந்த இடத்தில் நண்பர் சுகுணா திவாகரின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

எத்தனைகாலம் பியர்போத்தல்களோடு பேசிக்கொண்டிருப்பது?

காதலற்றுக் கழிகிறது காலம்..
நண்பகல் வெறுமையைப் போல
மயான வெம்மையைப் போல..
ஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.
இந்த காலத்தை என்ன செய்வது?
கொலுசொலி, சிணுங்கல்,
பொய்க்கோபம், வாழ்த்தட்டைகள்,
சின்னச்சின்ன பரிசுகள்
பிரிவின் வாதை,
நெகிழ்வின் கண்ணீர்..
எதைக்கொண்டு நிரப்புவது
இந்த காலத்தை?
பதில்சொல்லுங்களேன் எவளாவது..?


-இந்த சுய புலம்பலின் உச்சத்தில், தன்னைக் கடந்து போன பெண்களில் ஒருத்தியை கற்பனைக் காதலியாக கட்டாயமாக நியமித்துக்கொண்டு நண்பர்களிடம் கதை சொல்ல வேண்டிய மனநோயும் வருகிறது.இல்லையெனில், அம்மண ஊரின் கோவணாண்டியாக மாறிப்போவோம்.ஆனால் எத்தனை காலம்தான் அம்மணமாக இருப்பதாகவே நடிப்பது...எதைக்கொண்டு நிரப்புவது இந்த காலத்தை...? தெரிந்தால் பதில் சொல்லுங்களேன் எவளாவது..?

(குறிப்பு: இந்தக் கட்டுரை பூங்கா(பிப்ரவரி 19/2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

7 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

உண்மையாகவே இப்படியொரு 'ஆண் தனிமை' இருப்பது எனக்கு ஆச்சரியமாகத்தானிருக்கிறது. ஏனெனில் அண்மைக்காலங்களில் இத்தகைய பேச்சுக்களை ஏனோ அதிகம் கேட்க நேரிடுகிறது. பாலகுமாரனின் ஒரு சிறுகதை 'சேவல் பண்ணை'என்று நினைக்கிறேன். அதில் இந்நிலையை அழகாகச் சொல்லியிருப்பார். கெளரவம் பார்ப்பவர்களை காதல் நெருங்காது நண்பரே! நீங்கள்,செந்தில்,சுகுணா திவாகரின் கவிதை நான் பேசிக்கொண்டிருக்கும் நான்கைந்து நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கொரு கதையைத் தந்திருக்கிறீர்கள். மிகவிரைவில் வலைப்பதிவில் எதிர்பாருங்கள். (யாரங்கே! பின்னணி இசை ஒன்றும் கிடையாதா...?)

ஆழியூரான். சொன்னது…

//கெளரவம் பார்ப்பவர்களை காதல் நெருங்காது நண்பரே!//

எந்த கௌரவுமும் பார்க்காமல் இதை ஒத்துக்கொள்ளும் மனநிலை அப்போதே வாய்த்திருக்கலாம்.இப்போது ஒத்துக்கொண்டு என்ன செய்ய...?

ஆனால் இப்படியான அனுபவமுள்ள ஆண்கள் இங்கு ஏராளம்பேர் உண்டு.இதைவைத்து கதை எழுதும்பட்சத்தில், இந்த ஆழியூரானுக்கு நான்கைந்து காதலிகள் இருக்குமாறு ஒரு வசனமாவது வைக்கும்படி, எந்த வெட்கமும் இல்லாமல் கேட்டுக்கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

காதல்ன்னா என்ன அர்த்தம்...?

பிரகாஷ்ராஜ் சொன்னது…

ம்........ஒரே அழுகாச்சியா வருது..

ஐ லவ் யூ செல்லம்..

ஆழியூரான். சொன்னது…

//காதல்ன்னா என்ன அர்த்தம்...?//

ம்...கட்டிங்ன்னு அர்த்தம்...அவன் அவன் சட்டிகாஞ்சு உட்கார்ந்திருக்கான்.அர்த்தம் வேணுமாம்ல...

ஆழியூரான். சொன்னது…

//ஒரே அழுகாச்சியா வருது..

ஐ லவ் யூ செல்லம்//

ரொம்ப டேங்ஸ்......நானும் ஐ லவ் யூ செல்லம்.

Prince Ennares Periyar.S சொன்னது…

'நல்லாருக்கு... ரொம்பன நல்லாருக்கு' என்று 'குரு' நானாஜி பாணியிலும் சொல்லலாம்.

'துணையெழுத்து' படிச்ச மாதிரி இருக்குன்னு என் பாயிலும் சொல்லலாம்.