பாரதி தம்பி
23-2-13
தாய்ப்பூனை; தகப்பன் பூனை!
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். பைகளை எடுத்துக்கொண்டு அறைக் கதவை சாத்தும்போது உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம். கட்டிலுக்குக் கீழே ஒரு பூனை குட்டிப் போட்டிருந்தது. கண் திறக்காத நான்கு பூனைக் குட்டிகள். ஒன்று வெள்ளை; மற்ற மூன்றும் அழகிய கறுப்பு. அடைகாத்து படுத்திருந்த தாய்ப்பூனை எட்டிப் பார்த்த என்னை கடும் கோபத்தோடு முறைத்தது. சில நாட்களாகவே இந்த பூனை எங்கள் வீட்டுக்குள் அடிக்கடி வருவதும், போவதுமாக இருந்ததன் காரணம் அப்போதுதான் புரிந்தது.
பொதுவாகவே இந்த பூனை வளர்ப்பது, நாய் வளர்ப்பது இதில் எல்லாம் எனக்கு அனுபவமோ, ஆர்வமா இருந்தது இல்லை. மனைவிக்கும் அப்படியே. அதனால் இந்தப் பூனைக் குட்டிகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலுக்கு வேறு தாமதமாகிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி தாய்ப்பூனை வந்து செல்வதற்கு வசதியாக வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டுச் சென்றோம். (ஊருக்குப் போகும்போது ஜன்னல் கதவுகளை இறுக்க தாழிடுவதுதான் வழக்கம். அப்படி செய்திருந்தால் அந்த குட்டிகளின் நிலை என்னவாகியிருக்கும்? அய்யோ.. ).
ஊரில் பூனைக் குட்டிகளை நினைத்துப் பார்க்கவெல்லாம் நேரம் இல்லை. எட்டு நாட்களுக்குப் பிறகு வந்து வீட்டைத் திறந்து எட்டிப் பார்த்தால்... குட்டிகள் அழகாக கண் திறந்து பார்த்தன. தாயை காணவில்லை. "ஏங்க.. ஜன்னலை திறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்களா? ஒரு பூனை உள்ளே போயிட்டு, போயிட்டு வந்துச்சு. இன்னைக்குக் காலையிலக் கூட போச்சு" என்று அவசரமாக வந்து சொன்னார் எதிர்வீட்டுப் பெண்.
"தெரியும். அது குட்டிப் போட்டிருக்கு. நாலு குட்டி. இன்னும் கண் கூட முழிக்கலை. பாவமா இருந்துச்சு.. அதனால நாங்கதான் திறந்து வெச்சுட்டுப் போனோம்" என்றேன். அந்தப் பெண் சிரித்தார். "இந்த தடவை நீங்க சிக்கிட்டீங்களா?" என்றார். பிறகுதான் அந்த பூனை தனது ஒவ்வொரு கர்ப்ப காலத்துக்கும் எங்கள் அடுக்ககத்தின் ஒவ்வொரு வீடாக தேர்ந்தெடுத்து வருவது தெரிந்தது. இதற்கு முன்பு ஒன்பதாம் எண் வீட்டில் குட்டிகளை ஈன்ற அந்தப் பூனை இம்முறை எங்களை தேர்வு செய்திருக்கிறது.
என்னதான் பூனைகள் என்றாலும் பிரசவ காலத்தில் அதற்கும் கூடுதல் பசி இருக்கும்தானே? கொஞ்சம் பால் வைத்தோம். நாங்கள் பார்க்கும்வரையிலும் பால் பாத்திரத்தில்தான் இருந்தது. எப்போது குடித்ததென தெரியாது; ஒட்ட உறிஞ்சிவிட்டது. அதுவரையிலும் நாங்கள் இருக்கும்போது கிட்டவே வராத அந்தப் பூனை, 'பால் எல்லாம் வைக்கிறாய்ங்க. நல்லவய்ங்களா இருப்பாங்க போல' என்று நினைத்து மெதுவாக வெளியில் வர ஆரம்பித்தது. நாங்கள் அந்தப் பூனையை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டு வேறு ஏதோ வேலையில் கவனமாக இருப்பதுபோல் நடித்தோம். இத்தனைக்கும் அந்தப் பூனையையும், அதன் நான்கு குட்டிகளையும் வளர்க்கும் எண்ணம் துளியும் எங்களுக்கு இல்லை. கொஞ்சம் குட்டிகள் பெரிதானதும் தூக்கி வெளியில் விட்டுவிடலாம் என்றே நினைத்திருந்தோம். ஆனாலும் எங்களையும் அறியாமல், அந்தப் பூனையை சகஜ நிலைக்கு கொண்டுவந்து தயக்கத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். (ஒருமுறை வாழைப்பழம் வைத்தோம். சாப்பிடவே இல்லை). அலுவலகம் விட்டு வந்து கதவை திறக்கும்போது வீடு முழுக்க பூனைகளாக நிற்பது போன்ற கற்பனைதான் ஓடும்.
நான்கைந்து நாட்கள் சென்றபிறகு அந்தப் பூனைக்கு அச்சம் விலக ஆரம்பித்தது. இப்போது ஜன்னல் ஓரத்தில் நாங்கள் அமர்ந்திருந்தால் எதிரில் வந்து திமிராக நிற்கிறது. 'நகர்ந்துகொள். நான் வெளியேப் போக வேண்டும்' என்பது அதன் பொருள். நகர்ந்து அமர்ந்தால் தாவிக் குதித்து வெளியில் ஓடும். நகராமல் அமர்ந்திருந்தால் 'புஷ்ஷ்...புஷ்ஷ்' என்று உறுமும். சமையலறையில் உருட்டுவது, வீட்டை புரட்டுவது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடாதது ஆறுதல். ஒருநாள் கதவை திறந்தால் உள்ளே மொசுமொசுவென்று ஒரு வெள்ளைப் பூனை. எங்களை கண்டதும் தாவிக் குதித்து ஓடிவிட்டது. இது மட்டும் அப்படியே நிற்கிறது. அனேகமாக அந்த வெள்ளைதான் தகப்பன் பூனை என்று நினைக்கிறேன்.பிள்ளைகளை காட்ட அழைத்து வந்திருக்கும் போல. இது இத்தோடு முடியுமா, தன் மாமன், மச்சான், அக்கா, தங்கை என சுற்றம் சூழ குடிவருவார்களா... தெரியவில்லை. 'அவன் இத்தோட கடையை மூடிட்டு ஓடிட்டான்னா அவன் நமக்கு அடிமை.. இல்லேன்னா நாம அவனுக்கு அடிமை' என்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
'இந்தப் பூனை இங்கேயும், அங்கேயும் போயிட்டு வரும்போதே நினைச்சேன். இதான் உன் கதையா?' என்ற எதிர்வீட்டுப் பெண், 'எங்களுக்கு ஒரு குட்டி' என்று 'ஆர்டர்' கொடுத்திருக்கிறார். மீதமுள்ள மூன்றில் ஒன்று எங்களுக்கு. இன்னும் இரண்டு கறுப்பு பூனைகள் இருக்கின்றன. யாரேனும் கேட்பார்கள், கொடுக்கலாம். இல்லை எனில் வெளியில் விட்டால் அவை பிழைத்துக்கொள்ளும்; அதுவல்ல பிரச்னை. குட்டிகளை இப்படி ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டால் அந்தத் தாய்ப்பூனை சண்டைக்கு வராதா? இப்போதே கடுமையாக முறைக்கிறது. பார்ப்பதற்கு வேறு, பேய்ப் படங்களில் வரும் பூனையைப் போலவே டெரர் லுக்கில் மிரட்டுகிறது. நாளைக்கு ஏதேனும் வம்பு பண்ணுமோ?
'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'
எதுதான் உண்மை?‘காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை? அங்கு என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது... இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன.
ஊடகங்களும், அரசும் சேர்ந்து காஷ்மீர் பற்றிய உண்மைகளை மறைப்பதோடு தங்களின் மேலாதிக்கத்துக்குத் தோதான பொய்களையும் கட்டி எழுப்புகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்லுபடியாகவில்லை. அங்கு மிகப்பெரிய மக்கள் யுத்தம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. தங்களின் சுய நிர்ணய உரிமையை முடிவு செய்துகொள்ளும் பொருட்டு மக்கள் தன்னெழுச்சித் திரளாக போராடுகின்றனர். கடந்த நான்கு மாதங்களில் 70-க்கும் அதிகமானோர் துணை ராணுவப் படைகளின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியானபோதிலும் காஷ்மீரிகள் சோர்ந்துவிடவில்லை. முன்னெப்போதையும்விட வேகத்துடன் வீதிகளில் திரண்டுவந்து போராடுகின்றனர். அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை. வெடிகுண்டுகள் இல்லை. கண்ணிவெடிகள் இல்லை. ஆனால் அவர்கள் கைகளில் ஏந்தி நிற்கும் கற்கள், இவை அனைத்தையும் விட மிக வீரியமான விளைவுகளை உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள், அணு ஆயுதத்தை விட அதிகமாக இந்தியாவை அச்சுறுத்துகின்றன. அதன் விளைவுதான், கடந்த இருபது ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வை நம்பியிருந்த இந்தியா முதன்முறையாக அரசியல் தீர்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஆசிய பிராந்தியத்தின் நீண்டகால பதற்றப் பகுதியான காஷ்மீரில் தற்பொழுது நடைபெறும் போராட்டங்கள் எதனுடனும் ஒப்பிடக்கூடியதாக இல்லை. இந்திய அடக்குமுறை அரசின் கைகூலியாய் மாறிப்போயிருக்கும் காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா, ‘‘காஷ்மீர் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை வன்முறையில் ஈடுபடாதவாறு பத்திரமாக பாதுக்காக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிலைமை வேறானது. அவர் யாரை நோக்கி அந்த கோரிக்கையை வைத்தாரோ அந்தப் பெண்கள்தான் இப்போது போராட்டக் களத்தில் முன்னுக்கு நிற்கின்றனர். அவர்களுக்கு எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லை. ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான். ஒரு முஸ்லிம் பெண் கையில் கற்களை பொறுக்கி இளைஞர்களுக்குத் தருகிறார். ராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் வழங்குவதற்காக மக்களே ரத்ததான முகாம்கள் நடத்துகின்றனர். மக்களே உணவுக்கூடங்களை திறந்திருக்கின்றனர். காஷ்மீரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை.
‘‘துப்பாக்கி வேண்டாம். சுதந்திரம் வேண்டும்’’
மக்களின் தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை உலகமே வியப்புடன் பார்க்கிறது. ஒருபோதும் போராட்டங்களில் கலந்துகொள்ளாத மைசூன் என்ற பெண், தன் அன்பு மகன் உமர் ஃபாரூக்கை ராணுவம் கொலை செய்ததும் இன்று வீதிக்கு வந்திருக்கிறார். ‘‘காஷ்மீரிகள் எதற்கு சுதந்திரம் கேட்கிறார்கள் என்று எனக்கு ஒரு போதும் புரிந்தது இல்லை. ஆனால் இன்று எல்லாம் தெளிவாக புரிகிறது. எங்களுக்கு துப்பாக்கிகள் வேண்டாம், ராணுவம் வேண்டாம். சுதந்திரம்தான் வேண்டும்’’ என்கிறார் தெளிவாக.
ஆனாலும் இந்திய அரசு தனது அடக்குமுறைகளை நிறுத்தியபாடில்லை. ஐந்து லட்சம் ராணுவத் துருப்புகள், பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படைகள், உள்ளூர் போலீஸ் என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு, கண்டதும் சுட உத்தரவு என அரசு முழுவீச்சுடன் இறங்கி இருக்கிறது. ஆனால் இத்தனை காலமும் தீவிரவாத இயக்கங்களைக் காரணம் காட்டி தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்த இந்தியாவால் இப்போதைய மக்கள் போராட்டங்களை எந்த வகையிலும் திசைதிருப்ப முடியவில்லை. ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்கியதாக சொல்லலாம். (அதில் பகுதி அளவுக்கு உண்மையும் இருக்கிறது). ஆனால் கற்களை பாகிஸ்தான் தருவதாக சொல்ல முடியாதே?! உடனே, ‘அந்த மக்கள் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திடமும், எதிர்கட்சியான, Jammu & Kashmir Peoples Demoratic Party -யிடமும் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக’ சொன்னது. துப்பாக்கிக்கு நெஞ்சுக் காட்டி நிற்கும் பத்து வயது சிறுவனின் வீரத்தின் முன்னால் அந்த பொய் அடிபட்டுப் போனது.
இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் 'Go India Go', 'Quit India' என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ரூபாய் நோட்டுகளில் இளைஞர்களால் இந்த வாசகங்கள் எழுதப்படுகின்றன. சமீபத்தில் இந்திய அரசு அனுப்பிய மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீருக்கு சென்றபோது அவர்களின் பயணப்பாதையில் இருந்த இத்தகைய வாசகங்களை கவனமாக அழித்திருந்தது உள்ளூர் நிர்வாகம். சுவர்களில் இருந்து வாசகங்களை அழிப்பதில் என்ன இருக்கிறது? காஷ்மீரிகளின் மனங்களில் அல்லவா விடுதலை உணர்வு அரும்பி இருக்கிறது. அதை எதைக்கொண்டு அழிப்பது? காஷ்மீரிகளின் விடுதலை உணர்வுகளை கொஞ்சமேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அந்த அழகிய பள்ளத்தாக்கின் வரலாறை சிறிது தெரிந்துகொள்ள வேண்டும்.
காஷ்மீரின் கதை.. நேருவின் துரோகம்!
காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்னையோ, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல. அதற்கு 400 ஆண்டுகால வரலாறு உண்டு. 1586-ல் காஷ்மீரை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தார் அக்பர். அதைத் தொடர்ந்து முகலாய, ஆப்கானிய, சீக்கிய மன்னர்களின் ஆளுகைக்குள்தான் காஷ்மீர் தொடர்ந்து இருந்து வந்தது. சீக்கிய மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்த, டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் (இந்து மதத்தை சேர்ந்தவர்), தனது விசுவாசத்தின் பரிசாக காஷ்மீரை பெற்றார். அதன்பிறகு ஆங்கிலேயர்களுக்கும், அவர்களுக்கு அடங்க மறுத்த சீக்கியர்களுக்கும் இடையே போர் வந்தபோது, முதல் ஆளாக சீக்கியர்களை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தான் குலாப்சிங் மன்னன். இந்த துரோகத்தின் பரிசாக ஆங்கிலேயர்கள் 75 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு காஷ்மீரை குலாப்சிங்குக்கே கொடுத்தார்கள். அந்த தொகையோடு ஓராண்டு குத்தகையாக 20 பாஸ்மினா ஆடுகள், மூன்று காஷ்மீர் சால்வைகள், ஒரு குதிரை ஆகியனவும் பிரிட்டீஷாருக்கு அளிக்கப்பட்டன. இப்படியாக காஷ்மீர் டோக்ரா மன்னர்களின் பிடிக்குள் வந்தது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது டோக்ரா வம்சத்தை சேர்ந்த ஹரி சிங் என்ற மன்னரின் ஆட்சிக்கு கீழ் காஷ்மீர் இருந்தது. அவர் இந்தியாவுடன் செல்வதா, பாகிஸ்தானுடன் செல்வதா என்ற குழப்பத்தில் இரு தரப்புடனும் சேர மறுத்தார். காஷ்மீரைப் போன்றே ஹைதராபாத் (ஆந்திரா), ஜூனாகத் (குஜராத்) ஆகிய பகுதிகளும் இந்தியாவுடன் சேர மறுத்தன. ஹைதராபாத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்குள் ஒரு தனித்தீவு போல அது இயங்க முடியாது என்பதாலும், அதன் பெரும்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் கொண்டிருந்ததாலும் ராணுவத்தின் மூலம் அதைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது இந்தியா. குஜராத்தின் ஓரப்பகுதியில்… பாகிஸ்தான் நிலப்பரப்புக்கு அருகில் இருக்கும் ஜூனாகத் நகரில் பெரும்பகுதி இந்து மக்கள் வசித்தாலும் அதை ஒரு முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். அவர் பிரிவினையின்போது ஜூனாகத்தை பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்வதாக அந்நாட்டுடன் ஒப்பந்தம் போட்டார். ஆனால் ஜூனாகத்தில் வசித்த பெரும்பகுதி மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைவதாக இருந்தது. உடனே இந்தியா தானாகவே முன்வந்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. முடிவு சாதகமாக வந்தவுடன் ஜூனாகத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
காஷ்மீரின் நிலைமை வேறு. அங்கு வசித்தது பெரும்பகுதி முஸ்லிம் மக்கள். ஆனால் ஆண்டுவந்த ஹரிசிங்கோ ஓர் இந்து. அவர் இரு நாடுகளுடனும் இணைய மறுத்தார். அந்த நிலையில் மன்னராட்சிக்கு எதிராக பூஞ்ச் பகுதியை சேர்ந்த சிலர் ஆயுத கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். பிரிவினையினால் நிகழ்ந்த கலவரங்களின் ஒரு பகுதியாக அது நடந்தது. அதே சமயத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது போர் தொடுத்து வந்தனர். கொலை, கொள்ளை, தீயிட்டு கொளுத்துதல், பாலியல் வல்லுறவு... என அவர்கள் எதிர்பட்ட அனைத்து மதத்தினரையும் (முஸ்லிம்கள் உள்பட) தாக்கினார்கள். இதை எதிர்கொள்ள முடியாத மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் ஓடோடி வந்தார். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நேரு அரசு ‘காஷ்மீர் இணைப்பு’ என்பதை நிபந்தணையாகக் கொண்டு ராணுவத்தை அனுப்பி பஸ்தூன் பழங்குடிகளை விரட்டி அடித்தது. ஆனாலும் கூட குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது. (அதுவரைக்கும், அதற்குப் பின்னர் சில வருடங்கள் வரையிலும் கூட, காஷ்மீருக்கு முதல்வரோ, ஆளுனரோ கிடையாது. பிரதமரும், ஜனாதிபதியும்தான் இருந்தார்கள்.)
அந்த ஒப்பந்தம் கூட காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவில்லை. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இந்திய அரசிடம் அளிக்கப்பட்டன. அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பது ‘காஷ்மீர மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்பதுதான். பிரதமராக இருந்த நேரு ‘காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று அப்போது வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிற்பாடு இந்தியா, தானாகவே முன்வந்து இந்தப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் சென்றபோது ஐ.நா. மன்றமும் வாக்கெடுப்பையே வலியுறுத்தியது. இந்தியாவும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் நேரு காலம் தொடங்கி இன்றுவரை அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஏன்? இதைப்பற்றி தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் 13 பேர் இணைந்து நடத்திய முக்கியத்துவம் வாய்ந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
‘‘அப்போது பிரதமராக இருந்த நேரு இந்த வாக்கெடுப்பை வெளிப்படையாக ஆதரித்தார். ஆனால் உண்மையில் அவர் அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்துவதை விரும்பவில்லை. நேரு, எழுதிய கடிதங்களில் ‘இந்தியாவின் நலனில் இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தர முடியாது. ஆனால் இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம்தான் முக்கியமானது. அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிவது என முடிவு எடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதை வாக்கெடுப்பின் மூலம் தீர்மாணிக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. காஷ்மீரத்தின் இன்றைய தலைமையைதான் நாம் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார். ஆக வாக்கெடுப்பு என்ற ஜனநாயக முழக்கத்தை சும்மாவேனும் சொல்லிக்கொண்டே, காஷ்மீரில் தன் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்துவதும், பிறகு அந்த தலைமையின் கருத்தையே காஷ்மீர மக்களின் கருத்தாக முன்வைத்து தொடர்ந்து இந்திய நலன்களை சாதித்துக்கொள்வதும்தான் நேருவின் நோக்கம்.’’ என்கிறது அந்த குழுவின் அறிக்கை.
இப்படி, நேரு பொதுவில் தனது ஜனநாயக முகத்தைக் காப்பாற்றிக்கொண்டு அடிமனதில் தேசியவெறியுடன் காஷ்மீரத்தை கையாண்டார். அதன் பின்வந்த யாருமே வாக்கெடுப்பு நடத்தவே இல்லை. காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி ‘சுதந்திர காஷ்மீர்’ கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள். 50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்தது. இந்த இடத்தில்தான் பாகிஸ்தானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் தொடங்குகிறது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான். அதன்பிறகு போராட்டமானது தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. காஷ்மீரில் விதம்விதமான பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. தாலிபான் வரைக்கும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியது. அந்த அழகியப் பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இதுதான். காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த பாகிஸ்தான் மெல்ல, மெல்ல அந்த போராட்டத்தின் முகத்தையே சிதைத்துவிட்டது.
காஷ்மீரில் வசிப்பது யார்?
புவியியல் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரை குறைந்தப்பட்சம் மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். 1. காஷ்மீர் பள்ளத்தாக்கு, 2. ஜம்மு, 3. லடாக் மலையகம். இவைத்தவிர ‘சுதந்திர காஷ்மீர் அல்லது ஆஸாதி காஷ்மீர்’ (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள கில்ஜித், பல்திஸ்தான் ஆகிய பகுதிகள். மத அடிப்படையில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் என நான்கு மதத்தினர் உள்ளனர் என்றபோதிலும் இஸ்லாமியரும், இந்துக்களுமே அதிகம். இவர்களுக்குள் எந்த காலத்திலும் மத ரீதியிலான பிளவுகள் வந்தது இல்லை. குறிப்பாக முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ‘‘காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முஸ்லிமுக்கும் என்னால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அவர்களின் கலாசாரம் கூட ஒன்றுபோலவே உள்ளது’’ என்று காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
அடிப்படையிலேயே காஷ்மீர் முஸ்லிம்கள் மென்மையான சூஃபி பிரிவை சேர்ந்தவர்கள். இப்போது இந்துக்கள் கொண்டாடிவரும் அமர்நாத் உருகும் பனி லிங்கத்தை கண்டுபிடித்தவரே ஒரு முஸ்லிம்தான். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ‘மாலிக்’ பிரிவை சேர்ந்த ஓர் இஸ்லாமியர் கண்டறிந்த அமர்நாத் பனிலிங்கம்தான் இப்போது இந்து வெறியின் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே காஷ்மீரிகள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். நேரு வாக்களித்தபடி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதைக் கூட அவர்கள் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. ஆனால் ‘சுயாட்சி’ வாக்குறுதி ஏமாற்றப்பட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூன்றே மூன்று துறைகளில் மட்டும்தான் காஷ்மீர் மீது இந்தியா மேலாதிக்கம் செய்ய முடியும் என்று தொடங்கிய சுயாட்சி உரிமையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மீதமுள்ள 135 சட்டப் பிரிவுகளை விட்டு வைத்ததற்கும் காரணம் இருக்கிறது. அவற்றை ஒத்த சட்டப் பிரிவுகள் ஏற்கெனவே மாநில அரசியல் சட்டத்திலும் உள்ளன என்பதால் அதை விட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு சுயாட்சி கோரிக்கை என்பது அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. 1992-ல் சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீரின் ஜமாத் தடை செய்யப்பட்டபோது சொல்லப்பட்ட காரணம், ‘இவர்கள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லிக் கேட்கிறார்கள்’ என்பது. நேரு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லிக் கேட்பதே சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகிறது.
சிதைந்துபோன சிவில் வாழ்க்கை!
ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா அங்கு 1.65 லட்சம் படைகளை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் காஷ்மீரை தனது சொந்த நாடு என சொல்லும் இந்தியா காஷ்மீரில் நிறுத்தி வைத்திருக்கும் படையினரின் எண்ணிக்கை 6.67 லட்சம் பேர். இதில் மாநில காவல்துறை வராது. உலகிலேயே மிகக் குறுகிய நிலப்பரப்பில் இத்தனை அடர்த்தியான ராணுவ வீரர்கள் நிற்பது காஷ்மீரில்தான். இத்தனை லட்சம் பேர் எத்தனை தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காஷ்மீரில் இருக்கிறார்கள் தெரியுமா? சமீபத்திய இந்திய ராணுவத்தின் அறிவிப்புப்படி காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெறும் 660 பேர். இவர்களை பிடிப்பதன் பெயரால்தான் காஷ்மீரிகளின் உயிர் தினம், தினம் பலியிடப்படுகிறது. சமூகவியலாளர் பஷீர் அஹமது தப்லா 2008-ம் ஆண்டு காஷ்மீரில் மேற்கொண்ட ஆய்வின் படி, காஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் இருக்கிறார்கள்.
அங்கு தினசரி சிவில் வாழ்க்கை என்பது மிக கொடுமையானதாக இருக்கிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002 என காஷ்மீரில் ஏராளமான ஆள்பிடி சட்டங்கள் அமுலில் இருக்கின்றன. இவற்றில் மிக மோசமானது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம். இதன்படி எந்த ஒரு வீட்டுக்குள்ளும் ராணுவம் நுழையலாம். யாரையும் கைது செய்யலாம். விசாரணை என்ற பெயரில் கொலை செய்யலாம். அதை எதிர்த்து வழக்குப் போடும் உரிமைக் கூட மக்களுக்கு கிடையாது. மாதத்தின் பாதி நாட்கள் ஊரடங்கு உத்தரவில்தான் காஷ்மீரிகள் வாழ்கின்றனர். இரவு ஏழு மணிக்குப் பிறகான காஷ்மீர் வீதி எப்படி இருக்கும் என அவர்களுக்குத் தெரியாது. பத்து அடிக்கு ஒரு ராணுவ வீரர் துப்பாக்கியுடன் நிற்கிறார். காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல.... அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கும் விடுதலை என்பது தேவையான ஒன்று. சதாசர்வ காலமும் பதற்றம் மிகுந்த கொடுமையான பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் அவர்களின் மனங்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இது பொதுமக்கள் மீதான வன்முறையாகவும் வடிவம் கொள்கிறது. 2002 முதல் 2009-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலங்களில் மட்டும் 169 ராணுவத்தினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மரணப் பள்ளத்தாக்கு!
உலகின் அழகியப் பள்ளத்தாக்கான காஷ்மீர்தான் இன்று உலகின் மரணப் பள்ளத்தாக்காக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள்’ என்ற தனியொரு அமைப்பே செயல்படுகிறது. 2008-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி இந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் இருந்து 940 சடலங்கள் புதைகுழிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக’ பட்டியல் இட்டது. காஷ்மீரில் காணாமல் போவதன் அர்த்தம் கொலை செய்யப்படுவதுதான். கேட்டு கேள்வியற்ற வகையில் ‘தீவிரவாதி’ சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் சத்தமில்லாமல் கொலை செய்யப்படுகின்றனர்.
‘உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்’ அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் மரணப் படுகுழிகளைப் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் மிகக் கோரமானவை. பாரமுல்லா மாவட்டத்தில் 1,122 புதைகுழிகளும், குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில் 125 புதைகுழிகளும் இருக்கின்றன. இந்த மூன்று மாவட்டங்களின் கொத்துக் கொலைக்குழிகளில் இருந்து மட்டுமே 2,943 சடலங்கள் மீட்கப்பட்டன. இவை ஏதோ இறந்துபோய் புதைக்கப்பட்டவர்களின் சமாதிகளை தவறுதலாக கணக்கெடுத்து சொல்லப்பட்ட புள்ளிவிவரம் அல்ல. அனைத்தும் உண்மை. அந்த அளவுக்கு அங்கு கொலைகள் மலிந்து கிடக்கின்றன. பல புதைகுழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் தாங்கள் இதுவரை 230 சடலங்களை புதைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சிறு கிராமத்தில் மட்டும் மொத்தம் 165 மரணக் குழிகள் கண்டறியப்பட்டன.
இந்த சடலங்கள் திடீர், திடீரென ராணுவத்தால் கொண்டுவரப்பட்டு புதைக்கப்படும். பிணம் வருவதற்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு புதைகுழி தோண்டச்சொல்லி தகவல் வரும். ஏன், எதற்கு என கேட்காமல் தங்களின் சகோதரர்களை புதைப்பதற்கான புதைகுழிகளை அவர்களே தோண்ட வேண்டும். கேள்வி கேட்டால் நாளை வேறு எங்கேனும் தோண்டப்படும் குழிகளில் அவர்களும் சேர்த்து புதைக்கப்படுவார்கள். இந்த சடலங்களுக்கு ராணுவம் சொல்லும் ஒரே விளக்கம், ‘இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்பது மட்டும்தான். பிணங்கள் எழுந்து பேசவாப் போகின்றன? இப்படி புதைக்கப்படும் சடலங்களின் அடையாளங்களைக் கேள்விப்பட்டு தொலைதூரங்களில் இருந்து வரும் உறவினர்கள் பிறகு தோண்டி சடலங்களை மீட்டு எடுத்துச் சென்ற சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.
பண்டிட்டுகளுக்கு நடந்தது என்ன?
காஷ்மீர் பிரச்னைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்துத்துவ சக்திகள் ‘பண்டிட்டுகள் வெளியேற்றம்’ என்பதை மட்டுமே எதிர்வாதமாக முன்வைத்து வருகின்றன. உண்மை என்ன என்பதைப்பற்றி அறிய வேண்டுமானால் காஷ்மீரில் இரண்டு முறை ஆளுநராக இருந்த ஜக்மோகனைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும். 1990-ம் ஆண்டு காஷ்மீரில் இரண்டாவது முறையாக ஆளுநர் பொறுப்பேற்றுக்கொண்ட ஜக்மோகன், அந்த அழகிய பள்ளத்தாக்கில் வகுப்புவாத எண்ணங்களை கட்டற்று பரப்பினார். உலகம் காஷ்மீரத்தை ‘பூலோகத்து சொர்க்கம்’ என்று வர்ணித்து வந்த நிலையில், ஜக்மோகன் அதை ‘தேள்களின் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிட்டார். அவர் ஆளுநராக இருந்தபோதுதான் ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் தங்கு தடையின்றி இயங்கின. தொடர்ச்சியான இந்திய மேலாதிக்கம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, கொலைகள், நிம்மதியற்ற வாழ்க்கை, கண்காணிப்பு எல்லாம் சேர்ந்து காஷ்மீரிகளை சோர்வுற செய்திருந்த வேலையில் அவர்களை மத ரீதியாக பிரிக்கும் வேலையை ஜக்மோகன் திட்டமிட்டே செய்தார்.
90-களில் பள்ளத்தாக்கில் தலையெடுத்த சில ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் பண்டிட்டுகள் சிலரை கொலை செய்தது. ‘அவர்கள் அரசாங்கத்தின் கைகூலிகளாக இருந்தார்கள்’ என காரணம் சொல்லப்பட்டாலும் இதை ஏனைய ஜனநாயக சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பள்ளத்தாக்கில் சிறுபான்மையாக இருந்த பண்டிட்டுகளை இத்தகைய கொலைகள் அச்சுறுத்தின. சூழலை சரிசெய்து இயல்பு வாழ்க்கையை உறுதிபடுத்த வேண்டிய கடமை காஷ்மீரத்து அரசுக்கு இருந்தது. ஆனால் ஆளுநராக இருந்த ஜக்மோகனோ, ‘பண்டிட்டுகள் அனைவருக்கும் அரசால் பாதுகாப்புத் தர முடியாது. அவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறலாம்’ என்று அறிவுரை கூறினார். அரசே இப்படிப் பேசினால் பண்டிட்டுகள் என்ன செய்வார்கள்? பல்லாயிரக்கணக்கானோர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினார்கள்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு புலம் பெயர்வதை அரசு விரும்பியது, ஊக்குவித்தது. அப்படி வெளியேறியவர்களுக்கு தலைநகர் டெல்லியில் முக்கிய வணிகப் பகுதிகளில் கடைகளும், வீடுகளும் ஒதுக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு வேலையேப் பார்க்காத நிலையிலும் முழு ஊதியம் வழங்கப்பட்டது. வேறு எந்த உள்நாட்டு அகதிகளுக்கு வழங்கப்படுவதைக் காட்டிலும் மிக அதிகமான சலுகைகள் பண்டிட்டுகளுக்கு வழங்கப்பட்டன, வழங்கப்படுகின்றன. அகதி வாழ்க்கையின் துயரத்தை அளவிட பொருளாதாரம் மட்டுமே அளவுகோல் இல்லை. உறவுகளையும், மண்ணையும் விட்டு புலம்பெயர்ந்த அகதியின் துயரங்கள் பண்டிட்டுகளுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் நிலைமைக்கு இந்த அரசும் ஒரு வகையில் முக்கியக் காரணம். ஏனெனில் இந்திய அரசு அரசு முன்னெடுக்க விரும்பிய மதவாத அரசியலுக்கு பண்டிட்டுகளின் இடப்பெயர்வு பெரும் அளவுக்கு உதவியது. இந்தப் பின்னணியிலேயே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
காஷ்மீர் முஸ்லிம்களை பிரித்தது யார்?
இந்த கேள்விக்கு மிக நேரடியான பதில் ‘இந்துத்துவ சக்திகள்’ என்பதுதான். இதன் வேர் 1952-லேயே தொடங்கிவிட்டது. டோக்ரா மன்னரின் உதவியுடன் காஷ்மீரத்துக்குள் நுழைந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், ‘ஜம்மு பிரஜா பரிசத்’ என்ற மதவாத அமைப்பை உருவாக்கினார்கள். காஷ்மீரத்துக்கான 370-வது பிரிவு சிறப்புரிமைகள் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். வாக்கெடுப்பு நடத்துவதையும் கடுமையாக எதிர்த்தனர். இவர்களின் இத்தகைய திட்டமிட்டப் போராட்டம் பள்ளத்தாக்கின் முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்தியது. இதை அப்போது பிரதமராக இருந்த நேருவும் உணர்ந்திருந்தார். 1953 ஜூன் 29-ம் தேதியன்று மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய்க்கு நேரு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ‘‘காஷ்மீர் பிரச்னை முன் எப்போதையும் விட சிக்கலானதாக மாறியுள்ளது. ஜம்மு பிரஜா பரிசத் இயக்கம் தொடங்கப்பட்டப் பின்பு பள்ளத்தாக்கின் நிலை மோசமாகிவிட்டது. அங்கு பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் மக்கள் இந்த இயக்கத்தைக் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள். இந்தியாவுடன் இணைதல் என்ற அவர்களின் முந்தைய விருப்பம் இப்போது நசிந்து போயுள்ளது. பாகிஸ்தான் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனைகிறது. இந்து வகுப்புவாதிகள் ஜம்முவில் ஓர் இயக்கத்தைக் கட்ட முடியும் என்றால் இஸ்லாமிய வகுப்புவாதிகள் ஏன் காஷ்மீரில் இயங்கக்கூடாது? பிரஜா பரிசத் இயக்கத்தின் விளைவாக நாம் இன்று காஷ்மீரப் பள்ளத்தாக்கை இழக்கும் நிலையில் உள்ளோம். மக்கள் விரும்பாத நிலையில் நாம் கத்தி முனையில் காஷ்மீரை பிடித்து வைத்திருக்க முடியாது. இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்ற குரல்கள் முதன்முதலாக காஷ்மீரத்துக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன’’ என்று நேரு குறிப்பிடுகிறார். இதுதான் யதார்த்தம். நேரு காலத்திலேயே உள்ளே நுழைந்துவிட்ட இந்துத்துவ சக்திகள் இப்போது வரை காஷ்மீரத்து முஸ்லிம்களை தொடர்ந்து அந்நிய சக்திகள் போலவே சித்தரித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் அறிவுஜீவி மணிரத்னம், ‘இந்தியா பிடிக்கலேன்னா பாகிஸ்தானுக்குப் போக வேண்டியதானே?’ என்று ‘ரோஜா’வில் கேட்பது தனிப்பட்ட அவரது கேள்வி அல்ல. இந்திய இந்துத்துவ மனநிலையின் வெளிப்பாடு.
கார்கிலுக்கு மிக அருகில் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி உண்டர்மான் என்ற குடியிருப்பு உள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் அந்த இடம் பாகிஸ்தானுக்குப் போனது. இதனால் அவர்கள் பாகிஸ்தானியர்களாய் ஆனார்கள். 1971-ல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது இந்த குடியிருப்பை இந்தியப்படை கைப்பற்றியது. ஒரே இரவில் உண்டர்மான் கிராம மக்கள் இந்தியர்களாக மாறிப்போனார்கள். தேசம், தேசபக்தி என்பவை எல்லாம் எந்த அளவுக்கு கேலிக்கூத்தானவை என்பதற்கு இந்த எல்லையோரத்து கிராமம் ஓர் உதாரணம்.
இதற்கான விலை என்ன?
கார்கில் போருக்கு இந்தியா செலவிட்டத் தொகை 3,200 கோடி ரூபாய். போர்க்காலம் தவிர்த்த இதரக் காலங்களில் பனிமலை சிகரமான சியாச்சின் பகுதியில் சும்மா ராணுவத்தை நிறுத்தி வைப்பதற்கு தினந்தோறும் செலவிடப்படும் தொகை 6 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டுக்கும் சியாச்சினுக்கு மட்டும் 2,190 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கார்கிலில் தொடர்ந்து படையை நிறுத்தி வைக்க தினமும் 10 கோடி ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் தொகை 3,650 கோடி ரூபாய். ஆக மொத்தம் கட்டுப்பாட்டுக்கோட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது இந்திய அரசு. இதுபோக படைவீரர்களின் சம்பளம், ஓய்வூதியம் தனி. இவ்வளவு பணத்தைக் கொட்டி இந்தியா பற்ற வைக்கும் தேசிய வெறியில்தான் அதன் இருப்பு அடங்கியிருக்கிறது.
உண்மையில் காஷ்மீரைப் பொருத்தவரை கட்டுப்பாட்டுக்கோடு என்று ஒன்று இல்லவே இல்லை. போர் நிறுத்தக்கோட்டையே இரு நாடுகளும் கட்டுப்பாட்டுக் கோடாக கருதி வருகின்றன. ‘‘காஷ்மீர் பற்றிய பேச்சு வரும்போது எல்லாம் இந்தியர்கள் அனைவரும் தேசபக்தர்களாக இருக்க வேண்டும் எனக் கோரப்படுகிறது. தேசபக்தி என்ற சொல்லுக்கு ஒரு ஜனநாயக உள்ளடக்கம் இருக்கும் என்றால் அதற்கு நாம் செய்ய வேண்டியப் பணி, இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்னையை முன் வைக்கும் விதத்தையும், அதை கையாளும் முறையையும் மிக கடுமையாக எதிர்ப்பதாகவே இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிடுகிறது நாம் தொடக்கத்தில் பார்த்த 13 பேர் கொண்ட மனித உரிமையாளர்களின் ஆய்வறிக்கை. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கௌரவத்துடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த், அர்ஜுன் மாதிரியான மொக்கைகள் கூட ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று சொல்லிச் சொல்லி இந்திய தேசிய வெறிக்கு தூபம் போட்டு வந்துள்ளனர். தேசபக்தி தப்பில்லை. ஆனால் ‘இது எங்கள் தேசமே இல்லை. எங்களுக்கு சுதந்திர காஷ்மீர் வேண்டும்’ என அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க, அதன் பெயரால்தான் இந்திய தேசபக்தி வரும் என்றால் அது எத்தனை வஞ்சகமும், சூழ்ச்சியுமானது?
காஷ்மீர் மக்களின் விருப்பம் என்ன?
இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்’ என்று இந்தியா சொல்கிறது. கீழ் பகுதியில் இருக்கும் காஷ்மீரை ‘இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்’ என பாகிஸ்தான் சொல்கிறது. ‘ஆனால் உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்திருக்கின்றன’ என்பதே பூர்வீக காஷ்மீரிகளின் முழக்கம். பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைவதையும் விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் ‘சூஃபி’ வகையைச் சேர்ந்தவர்கள். தர்காவை வழிபடும் தனிவகையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். தங்களை தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகளின் பெரும்பான்மைப் பகுதியினர் ‘சுதந்திர காஷ்மீர்’ கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரிகளை பிரதிநிதிகளாகக் கூட அழைப்பது இல்லை.
2000-ல் ‘அவுட்லுக்’ இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு காஷ்மீரிகளின் மனநிலையை துல்லியமாக சொல்லியது. அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 74% மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர். 16% பேர் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்கின்றனர். 2% மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் 2% மனநிலையைதான் ஒட்டுமொத்த காஷ்மீரிகளின் மனநிலையாக தொடர்ந்து சித்தரிக்கிறது இந்தியா.
இது எங்குபோய் முடியும்?
தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்களானது எங்கு, எப்போது முடியும் என எவராலும் கணித்து சொல்ல முடியவில்லை. ஏனெனில் இந்தப் போராட்டங்கள் எந்த இயக்கத்தாலும் அறிவித்து நடத்தப்படுபவை அல்ல. இவை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள். இந்த அம்சம்தான் இந்திய அரசை அசைத்துப் பார்க்கிறது. ஆனாலும் தனது நயவஞ்சக நாடகத்தை வெவ்வேறு வடிவங்களில் அரங்கேற்றுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை. சமீபத்தில் காஷ்மீருக்கு மீண்டும் சுயாட்சி அந்தஸ்து வழங்குவதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சொன்னார். உடனே பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. அப்படியான ஓர் எதிர்ப்பை எதிர்பார்த்திருந்ததுபோலவே சுயாட்சி அறிவிப்பை கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்வது என்ற மையமான கோரிக்கைப்பற்றி இதுவரை இந்த அரசு பரிசீலிக்கவில்லை. ‘’எங்கள் பிள்ளைகள் சிறு வயதில் இருந்து வன்முறைகளையும், கொலைகளையும், துப்பாக்கிகளையும் பார்த்து பார்த்து வளருகின்றனர். இதனால் அவர்களின் மனங்களில் கொலை இயல்பானது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. வளர்ந்ததும் கொலையும், எதிர்கொலையும் சராசரி நடவடிக்கைகளில் ஒன்றென நினைக்கின்றனர். இந்த உளவியல் சீர்கேட்டை எதைக்கொண்டு சீர்செய்ய இயலும்?’ என கேட்கும் பாரமுல்லா மாவட்டப் பெரியவரின் கேள்விக்கு இந்த அரசாங்கம் என்ன பதில் வைத்திருக்கிறது?
இன்னொரு முக்கியமான விஷயம், காஷ்மீரில் வரலாற்றிலேயே லட்சக்கணக்கானவர்கள் போராட்டக் களத்தில் நிற்பது இதுவே முதல்முறை. அவர்களின் கைகளில் எல்லா காலத்திலும் கற்கள் மட்டுமே இருக்கும் என சொல்ல முடியாது. நாளை ஆயுதங்களும் வரலாம். இத்தனை லட்சம் பேரின் கைகளில் ஆயுதங்கள் வந்தால் அந்தப் பள்ளத்தாக்கு தாங்காது.
என்னதான் தீர்வு?
யாசின் மாலிக், சையது அலிஷா கிலானி, மிர்வேஸ் உமர் ஃபாருக் ஆகிய முக்கியமான மூன்று பிரிவினைவாத தலைவர்களும் ஆயுதம் தாங்கிய பாதையில் இருந்து அமைதிவழிப் போராட்டத்துக்கு வந்துள்ளனர். இது ஒரு நல்ல அம்சமாகவே தெரிகிறது. அரசு இத்தகைய ஆரோக்கியமான போக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர வேண்டும். காஷ்மீரைப் பொருத்தவரை வாக்கெடுப்பு ஒன்றுதான் என்றென்றைக்குமான தீர்வின் திறவுகோலாக இருக்க முடியும். ஆனால் பல பத்தாண்டுகளாக நிலங்களிலும், மனங்களிலும் வன்முறை அழுந்த விதைக்கப்பட்டிருக்கும் சூழலில் உடனடி வாக்கெடுப்பு என்பது வன்முறைக்கே வழிவகுக்கும். ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ராணுவத்தினரை சில மாத சீரான இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது, சுயாட்சி அந்தஸ்தை மறுபடியும் வழங்குவது, இதுவரை காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி வெளிப்படையான வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்பது, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது, பண்டிட்டுகள் உள்ளிட்ட துரத்தி அடிக்கப்பட்ட அனைவரையும் அவரவர் பிரதேசங்களில் மீள குடியமர்த்துவது, தவறிழைத்த ராணுவத்தினருக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தருவது…. என அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதற்கு செய்ய வேண்டியப் பணிகளே ஏராளம் இருக்கின்றன. இவற்றை செய்து முடித்தால்தான் காஷ்மீரில் வாக்கெடுப்புக்கு ஏதுவான சூழலே உருவாகும். அதற்கு முதலில் காஷ்மீர் பிரச்னை என்பது ஒரு அரசியல் பிரச்னை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். துப்பாக்கி முனையில் அமைதியை கொண்டு வர நினைத்தால் காஷ்மீரிகள் கைகளில் ஏந்தி நிற்கும் கற்களுக்கு முன்னால் துப்பாக்கிகள் மண்டியிடத்தான் வேண்டும்!
-பாரதி தம்பி
உதவிய நூல்கள்:
1.காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம்.
2. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
3. காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு- அ.முத்துகிருஷ்ணன். கீற்று.காம்
22-6-12
உழைப்பே உயர்வு: யாருக்கு?
- ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறீர்கள்?
- உங்களை சுற்றியிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் உழைக்கிறார்கள்?
- பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது உங்கள் ‘உழைக்கும் நேரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது?
நிச்சயம் பதில்களின் நிறம் ஒரே மாதிரிதான் இருக்கும். மனிதர்கள் முன்னெப்போதைவிட மிக அதிகமாக உழைக்கும் காலம் இது! இடைவிடாமல் இயந்திரத்தைப் போல எல்லோரும் உழைக்கிறோம். நவீன அறிவியல் நாள்தோறும் விதவிதமான கருவிகளைக் கண்டுபிடிக்கிறது. நியாயமாகப் பார்த்தால், அவை நம் உழைப்பைக் குறைத்து ஓய்வை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும், முதலாளிகளின் உற்பத்தியை அதிகரிக்கவே பயன்படுகின்றன.
காலை 9 மணிக்கு கிளம்பினால் வீடு வந்து சேர இரவு 8 மணி, 10 மணி ஆகிறது. உழைக்கும் நேரம் மட்டுமல்ல, உழைப்பின் அடர்த்தியும் அதிகரித்துள்ளது. அலுவலகம் செல்பவர்கள் முதல் கூலிவேலை செய்பவர்கள், சிறுதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். பசித்த மிருகம் இரை தேடி அலைவதைப் போல... பணம் ஈட்டும் புதிய வாய்ப்புகளை எல்லோரும் தேடுகிறோம். ஓய்வு நேரங்களை பணமாக மாற்றத் துடிக்கிறோம். இவை அனைத்தும் பணக்கார வாழ்வை வாழ்வதற்காக அல்ல. ஒரு மிடிள் கிளாஸ் வாழ்வை வாழத்தான் இத்தனைப் போராட்டங்களும்!
மனிதர்கள் யாரும் உழைக்க சலித்தவர்கள் அல்ல. காடும், பாறையுமான பூமியை சமன்படுத்தி இயற்கையுடன் போராடி நாம் வாழும் இவ்வாழ்வு கடும் உழைப்பால் வந்ததுதான். ‘மனித குரங்கு, மனிதனாய் மாறியதில் உழைப்பின் பாத்திரம்’ பற்றி நாம் அறியாததல்ல. ஆனால் தற்போதைய மனிதனின் உழைப்பு என்பது அவனது திறனுக்கு அப்பாற்பட்டது. ஒரு டாஸ்மாக் தொழிலாளி காலையில் வேலைக்கு வந்தால் வீடு சேர இரவு 12 மணியாகிறது. கட்டுமானப் பணி செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் வேலைதான். சென்னையின் குப்பைகளை அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு வேலைக்குப்போய் இரவு 8 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்புகின்றனர். நிலத்தை அடகு வைத்து லட்சங்களில் செலவழித்து வெளிநாடு போனவர்கள், உறவுகளற்ற, மொழி புரியாத நாடுகளில் இரவும், பகலுமாக உழைப்பதை எதைக்கொண்டு அளவிடுவது? மனிதர்களின் உடலும், மூளையும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறது.
ஏன் இப்படி? குறிபிட்ட நேரம் மட்டும் உழைத்தால் கிடைக்கும் பணம், வாழ்க்கையை ஓட்ட போதுமானதாக இல்லை. நமது வருமானம் உயரும் வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் விலைவாசி உயர்கிறது. சுமார் 5 ஆயிரம் ரூபாயாக இருந்த சிங்கில் பெட்ரூம் வீட்டின் வாடகை இப்போது சுமார் 8 ஆயிரமாகிவிட்டது. கடந்த மாதம் அரிசி 10 கிலோ பை 310 ரூபாய். இந்த மாதம் 350 ரூபாய். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 4 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த ஹவுஸ் ஓனர், மின்கட்டண உயர்வுக்குப் பிறகு 7 ரூபாயாக உயர்த்திவிட்டார். ஒரு பவுன் தங்கம் 23 ஆயிரம் ரூபாய் என்பதற்காக எந்த மாப்பிள்ளையும், ‘அஞ்சு பவுன் போதும்’ என்று சொல்வது இல்லை. இப்போது ஒரு லிட்டர் 70 ரூபாய் விற்கும் பெட்ரோல் கடந்த வருடம் 55 ரூபாய்தான். ஆனால் வருமானம்?
உங்களது சம்பள உயர்வு போன வருடம் 2,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு முழு வருடத்தில் கூடுதலாகக் கிடைத்தது 24,000 ரூபாய். இது எந்த மூலைக்கு? 2&ம் வகுப்பு மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவே போதாது. வாடகை, மளிகை, குழந்தைகளின் படிப்பு, மருத்துகள், டூ வீலர், இன்ஷூரன்ஸ் தவணைகள், செல்போன், பெட்ரோல், கேஸ், வாட்டர் கேன்... எத்தனை செலவுகள்? இவற்றுக்கு இடையில் எதிர்காலத்துக்கு வேறு சேமிக்க வேண்டும். ஒரு நீருறிஞ்சும் காகிதத்தைப் போல நமது வருமானத்தை உறிஞ்சுகிறது வாழ்க்கை. என்ன செய்யலாம்? ‘எக்ஸ்ட்ராவா ஒரு ஐயாயிரம், ஆறாயிரம் கிடைச்சா வீட்டு வாடகைக்காவது ஹெல்ப்பா இருக்கும். எதுனா இருந்தா சொல்லுங்களேன்’ என தானாகவே உபரி உழைப்பை தேடி ஓடுகிறது மனம்.
தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் மனைவி பெயரில் எல்.ஐ.சி. ஏஜன்ட்டாக இருக்கிறார். வெளிநாட்டு சாக்லெட்டுகளை மொத்தமாக வாங்கி வாரம் ஒருமுறை பெரிய கடைகளுக்குப் போடுவார். சேமிப்பில், ஒரு இண்டிகா கார் வாங்கி அதை ஃபாஸ்ட் டிராக்கில் வாடகைக்கு விட்டிருக்கிறார். ‘‘பயங்கர அலர்ட்டா இருக்கீங்களே?’’ என்று கேட்டால், ‘‘பின்ன, சம்பளத்தை மட்டும் நம்பியிருந்தா என்னத்துக்கு ஆக?’’ என திருப்பிக்கேட்டு திகைக்க வைக்கிறார். எல்லோரும் இப்படி சாமர்த்தியமாக இருப்பதில்லை; இருக்க முடிவது இல்லை. உண்மையில், இப்போது பலருக்குப் பிரச்னை கூடுதலாக உழைப்பதைப் பற்றியல்ல... அப்படி உழைப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுதான்.
இதன் இன்னொரு உண்மை, நவீன காலம் நம்மை ‘பொருட்களின் அடிமை’ ஆக்கியிருக்கிறது. சில பொருட்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. பல பொருட்கள் நம்மை பிடித்திருக்கின்றன. அதிலும் ஒரு பொருளின் நவீன மாடலை வாங்கவில்லை எனில், யதார்த்த உலகில் இருந்து பின்தங்கிவிட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம், செல்போன். ‘ஸ்மார்ட் போன் இல்லையா அங்கிள்?’ என 30 வயது இளைஞனை ‘அங்கிள்’ ஆக்குகின்றன விளம்பரங்கள். பழைய செல்போன்களை என்னென்ன வழிகளில் ஒழித்துக்கட்டலாம் என ஒரு நாளைக்கு நூறுமுறை விளம்பரங்கள் சொல்லித் தருகின்றன. ‘உங்க வீட்டுல ஏ.சி. இல்லையா?’ என்பது நகரத்து நடுத்தர வர்க்கத்தின் கௌரவத்தை சீண்டிப் பார்க்கும் கேள்வி. இதற்கு உரிய ‘விலை’ கொடுக்க பணம் வேண்டும். என்ன செய்வது? உழைப்பு, மேலும் உழைப்பு. எட்டு மணி ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர உழைப்பு... என்பது மனித இனம் போராடி பெற்ற உரிமை. இது உலகம் முழுக்க அமுலுக்கு வரும் முன்பே முடிவை நெருங்கிவிட்டது. இப்போது உழைக்கும் நேரம் என்பது 12 முதல் 16 மணி நேரமாக மாறியிருக்கிறது.
அண்மையில் வந்த ஒரு புள்ளி விவரத்தை நீங்களும் படித்திருக்கக்கூடும். ஓர் இந்தியனின் வாங்கும் திறன் ஆண்டுக்கு 3,700 அமெரிக்க டாலர்கள். இதை வைத்து அவன் மும்பையில் 1,076 சதுர அடியில் ஒரு வீடு வாங்க வேண்டுமானால் 308 ஆண்டுகள் இடைவிடாமல் உழைக்க வேண்டும். மும்பையை விடுவோம்... காட்டாங்கொளத்தூர் பக்கம் கால் கிரவுண்ட் வாங்கவே, ‘இ.எம்.ஐ. கிடையாதாங்க?’ என விசாரித்து அதற்கு 15 வருடங்கள் மாதத் தவணைக் கட்டுகிறோம். வாழ்வின் இளமை ததும்பும் காலங்கள் இ.எம்.ஐ. கட்டுவதிலேயே கழிந்துவிடுகின்றன. இதற்காக நாம் கொடுக்கும் விலை மிக அதிகம். அன்றாட வாழ்வின் மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும், சில அபூர்வ தருணங்களும் கண் மூடி திறப்பதற்குள் கடந்துவிடுகின்றன. மென் உணர்வுகள் மறைந்துப்போய் நம்மை அறியாமல் இறுகிப்போகிறோம். இவற்றுக்கு இடையில்தான் காதல், அன்பு, காமம்... என நம் உணர்வுகளையும் தக்க வைத்துக்கொண்டாக வேண்டும்.
புகழ்பெற்ற ஒரு கால்சென்டரின் என் நண்பன் ஒருவன் பணிபுரிகிறான். நைட் ஷிப்ட். அதே ஷிப்டில் உடன் பணிபுரிந்த பெண்ணை மூன்று வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். இப்போது அந்தப் பெண்ணை மட்டும் பகல் ஷிப்டுக்கு மாற்றிவிட்டார்கள். ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். ஒரே வீட்டில் குடியிருக்கின்றனர். ஆனால் வாரக்கடைசியில் மட்டுமே வாழ்க்கை சாத்தியம்.
தனி மனிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் சில ஆயிரம் ரூபாய்க்காக அதிகமாக உழைக்க, உழைக்க... முதலாளிகளின் கல்லாவில் கோடிகள் குவிகின்றன. நமக்கு சாண் ஏறினால் அவர்களுக்கு முழம் ஏறுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இப்போது இருக்கும் கையிருப்புத் தொகை 5 லட்சம் கோடி ரூபாய். இது யாருடையது? அனைத்தும் உலக நடுத்தர வர்க்கம் உழைத்துக் கொட்டியது. தொழிலாளர்களின் ஓய்வற்ற உழைப்பின் பலன், சில ஆயிரம் முதலாளிகளுக்கு மட்டுமே சென்று சேர, பல நூறு கோடி மக்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கின்றனர்.
அதிகப்பணம் = அதிக உழைப்பு என்ற இந்த சமன்பாடு வாழ்க்கை நெருக்கடி காரணமாக திடீரென தோன்றியது அல்ல. சிறுவயதில் இருந்து நமக்கு இப்படித்தான் போதிக்கப்படுகிறது. ‘கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை’, ‘உழைப்பே உயர்வு’, ‘இன்று வேலை செய்தால் என்றோ ஒருநாள் பலன் நிச்சயம்’ என்று ‘உசுப்பேற்றி, உசுப்பேற்றியே’ நம்மை ‘பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்ய’ வைக்கின்றனர். இதனால்தான் நமது வாழ்க்கைப் பிரச்னைகளுக்கான தீர்வு, இன்னும், இன்னும் கடினமாக உழைப்பதில்தான் இருப்பதாக கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நம்புகிறோம். ஆனால் இது தனிநபர் உழைத்து முன்னேறி தீரக்கூடிய பிரச்னை அல்ல. முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படைப் பண்பே சுரண்டல்தான். இது ஒரு சமூக நோய். இதை தீர்க்க சரியான வழி என்ன? நோயை அண்டவிடாமல் விரட்டி அடிக்கலாம். இல்லையெனில் தன்னைத் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம். முன்னது நிரந்தரத் தீர்வுக்கானது. பின்னது தற்காலிகமானது. எனினும், அரசை விரட்டியடிக்கும் திராணி தமக்கு இல்லை என்று மக்கள் நம்புவதால் எல்லோரும் கடினமாக உழைத்துத் தன்னை தற்காத்துக்கொள்ள போராடுகின்றனர்.
இந்த ‘தற்காத்துக் கொள்வது’ என்பது கூழோ கஞ்சியோ குடித்துவிட்டு இருப்பதை வைத்து வாழ்வது அல்ல. அது So called மிடிள்கிளாஸ் வாழ்வின் பேராசைகளும், அற்பத்தனங்களும் நிறைந்தது. சந்தையில் அறிமுகமாகும் புதியப் புதியப் பொருட்களை வாங்கியாக வேண்டும். பிள்ளையை புகழ்பெற்ற பள்ளியில்/கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும். கண்ணை மூடுவதற்குள் அரை கிரண்ட் இடமாவது வாங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். இப்போது, ‘தற்காப்பு’ மெல்ல, மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து, பேராசைமிக்க சுயநலமாகிறது. அந்த சுயநலம், ஒரு கட்டத்தில் நேர்மையாக வாழ்வது, ஒழுக்கமாக இருப்பது, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது போன்ற வாழ்வியல் மதிப்பீடுகளை காவு கேட்கிறது. ‘ஊர்ல எவன்தான் யோக்கியமா இருக்கான்?’ என்றபடி சாதாரண பொதுமனம் இதைக் கடந்து செல்கிறது. இதுவே படைப்பாளிகளின் மனம் எனில், பிழைப்புவாதத்தை ‘புதிய வாழும் கலை’யாக பிரகடனப்படுத்துகிறது. அதற்கு கொள்கை சாயம் பூசுகின்றது. ‘வலியது வெல்லும்’ என்ற டார்வினிசத்தை பிரதி எடுக்க எதற்கு படைப்பு மனம்?
யதார்த்தத்தில் நாம் உழைப்புக்கு பழகிய மனிதர்கள். நம்மால் செயல்படாமல் இருக்க முடியாது. இந்த மனித இயல்புதான் உழைப்பை சுரண்டுபவர்களுக்கான அடிப்படை. ஆனால் மனிதர்கள் உழைக்க மட்டுமே பிறந்த இயந்திரங்கள் அல்ல. ஓய்வு என்பது நமது உரிமை, சலுகை அல்ல. நாம் ஓய்வை சலுகையாகவும், உழைப்பை உரிமையாகவும் கருதும் தலைகீழ் பார்வைக்கு பழக்கப்பட்டிருக்கிறோம்.
‘அதோ அந்த வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை’!
6-7-11
சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?
சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள்.
இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக்கிறது. இதை பலரும் ஆதரிக்கின்றனர். கல்வியில் இருக்கும் வித்தியாசம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை மத்திய தர வர்க்க மனநிலையும், பூணூல் பூச்சாண்டிகளும் விரும்புகின்றனர். அதை வெவ்வேறு வாதங்களின் மூலம் நியாயப்படுத்துகின்றனர்.
சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் ஊடகங்கள் பலவும், ஜெயலலிதாவை நோக்கி கோபமான ஒரு கேள்வியைதன்னும் முன்வைக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. தொண்டனைப் போல ‘அம்மா, நாங்கள் உங்களிடம் இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும்’ என்று அமுங்கிய குரலில் பேசுகின்றன. (குரல் ஓங்கினால் குரல்வலையிலேயே குத்துவிழும் என்பது அவர்களுக்குத் தெரியும்). அதேநேரம், சமச்சீர் கல்வியை அமுல்படுத்திய கருணாநிதியை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருப்பது போகட்டும்… மாறாக, ‘அவர் தப்பு, தப்பா புத்தகத்தை அச்சடிச்சதுனாலதான் இந்தம்மா வந்து சமச்சீர் கல்வியை நிறுத்திடுச்சு. இல்லேன்னா சர்ச்பார்க் கான்வெண்டுல கூட சமச்சீர் கல்வி வந்துடும்’ என்பது போல இதற்கான பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்துவதில் கவனமாக இருக்கின்றனர்.
சமச்சீர் கல்வி ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. சமமான கல்வியை முன்மொழியும் இந்த திட்டத்திலும் கூட கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் ‘சமம்’ என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த இடத்தில் எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ’நல்லி குப்புசாமி செட்டி’ எனப் பெயரிலேயே செட்டியார் என வருகிறது. ஆனால் அவர் கூட்டங்களில் பேசும்போது கவனித்தால் வலிந்து பார்ப்பன பாஷையைப் பேசுவார். வேறு சில பார்ப்பனர் அல்லாத முதலாளிகள் கூட இப்படி பார்ப்பன பாஷையில் பேச முயற்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். இதன் உளவியல் என்னவெனில், தனக்குக் கீழ் பணிபுரிபவனின் பேச்சுமொழியும், தனது பேச்சுமொழியும் ஒரேவிதமாக இருப்பதை இத்தகைய முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இயல்பாகவே அவர்களின் மனம் மேம்பட்ட பேச்சுமொழியாக பொதுவெளியில் பதிவாகியிருக்கும் பார்ப்பன பாஷையைத் தேர்ந்துகொள்கிறது.
பேசும் மொழியில் சமமாக இருப்பதை விரும்பாத இந்த மனநிலைதான் கல்வி சமமாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக மட்டுமே ஜெயலலிதா இந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை. மாறாக அவரது அடிமனதில் படிந்திருக்கும் இந்துத்துவ அஜண்டாவில் இருந்தே இத்தகைய செயல்கள் பிறக்கின்றன. அதனால் எல்லா பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்திவிட்டு சவுகர்யமாக நகர்ந்துகொள்வது சரியல்ல.
ரஜினி… ஒரு நடிகனின் கதை!
ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ரஜினியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விதவிதமாக வெளியானபடியே இருக்கின்றன. ‘இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன’ கல்லீரல் செயல் இழந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து’ என பலவாறு சொல்லப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை ஏதோ ஒரு விதத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ரஜினியின் உடல்நிலை எப்போது சீராகும், அவர் மீண்டு வந்து நடிப்பாரா, முடியுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அலசப்படுகின்றன. வேறு சிலரோ, ரஜினியுடனான தங்களது உறவு குறித்து அசைபோடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி என்ற மனிதரை நாம் சற்று விலகி நின்று பார்ப்போம்.
ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது? ரஜினிக்கு ஒன்று என்றால் மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதைப் போலவும் உருவாக்கப்பட்டிருக்கும் தோற்றம் பல பத்தாண்டுகளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிய மிகை பிம்பம். யதார்த்தத்தில் நிலைமை அவ்வாறு இல்லை.
சினிமா மட்டுமே மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாக இருந்த காலத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய மவுசு இருந்ததுதான். கடந்த 15 ஆண்டுகளாக தொலைகாட்சி மற்றும் இணையத்தின் ஆதிக்கம் வந்துவிட்ட பிறகு ரசிகர்களுக்கான ரசணைத் தேர்வுகள் அதிகரித்துவிட்டன. இதில் ரஜினி மட்டுமே போட்டியாளர் இல்லை. இதனால் நடைமுறையில் ரஜினிக்கு ரசிகர்களிடையே இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனால் அப்போதெல்லாம் ரஜினி, அவருடையக் கட்டுப்பாட்டில் இருந்து வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்த பிரமாண்ட சினிமா சந்தைக்கு ரஜினி என்ற பெரிய இரை தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. உண்மையில் ரஜினியே நினைத்தாலும் அவரது செல்வாக்கை குறைக்க முடியாது. ஏனெனில் அவரது செல்வாக்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் ரஜினியிடம் இல்லை.
பொதுவாகவே உலகமயமாக்கல் சூழலில் எதையும் வேகமாக உறிஞ்சி முழு பலனையும் அனுபவித்துவிட்டு சக்கையாக்கிவிடுவது அதன் இயல்பு. பிளாச்சிமடா தொடங்கி மைக்கேல் ஜாக்சன் வரை பல உதாரணங்கள் வழியே இதை நாம் அறிய முடியும். போட்டி முதலாளித்துவ உலகில் நாள்தோறும் புதிய ஸ்டார்கள் கொண்டுவரப் படுகிறார்கள். அவர்களுக்கான சந்தை மதிப்பு காலாவதியாகும் வரை அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். பிறகு புதிய இன்னொரு ஸ்டார் வருவார். ரஜினியை பொருத்தவரை அவர் நீடித்து உழைக்கும் ஒரு தரமான பொருள். மற்றொரு புதிய நடிகரை புதிதாக பில்-டப் செய்து மேலேற்றுவதைக் காட்டிலும் ரஜினியைக் காட்டி வித்தைக் காட்டுவது கூடுதல் லாபம் தரக்கூடியது. அதைத்தான் பலகாலமாக ஊடக மற்றும் அரசியல் அரங்கில் செய்து வருகிறார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளாக, ஒவ்வொரு ரஜினி படம் ரிலீஸ் ஆகும் தினத்தன்றும் தமிழகத்தில் திருவிழா நடப்பதை போல மாற்றியிருக்கின்றனர். உண்மையில் இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அதற்கு முன்பிருந்தே தொடங்கிவிடுகின்றன. ரஜினி படம் அறிவிப்பு வந்த உடனேயே அந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஒவ்வொரு பத்திரிகையும் தங்களது கற்பனை சக்தியின் எல்லை வரை ஒரு கதை தீட்டுகின்றன. பிறகு அதில் ரஜினியின் கெட்-அப் என்ன, ஹீரோயின் யார், இசை அமைப்பது யார், இயக்குநர் யார் என ஒவ்வொன்றையும் உளவறிந்து சொல்லி, தங்களது விற்பனையைப் பெருக்குகின்றன. படப்பிடிப்பில் ரஜினி இன்று மூன்று முறை தும்மினார், நான்குமுறை கக்கூஸ் போனார் என்பது வரை கூச்சமின்றி எழுதுகின்றனர். ரஜினி ஒரு நடிகன். ஆனால் அவரை கடவுளின் அவதாரம் போல சித்தரித்து, ரசிகர்களை பக்தர்களாக்கிய முழு பொறுப்பும் தமிழக ஊடகங்களுக்குதான் உண்டு. இப்படி ரசிகர்களை, பக்தர்களாக்கும் இவர்கள், அவ்வப்போது ‘ரஜினிக்கு ஒரு கடிதம்’ என்ற பெயரில் ‘தலைவா, விஜயகாந்த் வந்துட்டாரு. நீ இன்னும் வரலையே’ என உசுப்பேற்றவும் செய்வார்கள்.
ரஜினி ரசிகர்களின் பிற்போக்குத் தனங்களை எள்ளி நகையாடி, விமர்சித்து அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் அவர்களோ, எரியும் நெருப்பை அணைக்காமல் எவ்வளவு தூரம் தூண்டிவிட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி விடுகின்றனர். பாபா’ பட அறிவிப்பு வெளியான உடனேயே அதில் ரஜினியின் பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கலாம் என வாசகர்களுக்குப் போட்டி நடத்தியது ஒரு பத்திரிகை. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது பஞ்ச் டயலாக்குகளை எழுதி அனுப்பி, அதில் ’சிறந்தவற்றை’ தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். இப்படி ரசிகர்களின் முட்டாள்தனங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளும் இவர்களுக்கு ‘ரஜினி, தமிழர்களை ஏமாற்றுகிறார், நாடகமாடுகிறார், கர்நாடகாவில் சொத்து வாங்கிவிட்டார்’ என்றெல்லாம் ‘ஆவேச’ கூச்சலிட ஏதேனும் அருகதை இருக்கிறதா?
இப்படி ரஜினியின் திரை நடிப்பு, யதார்த்த நடிப்பு என இரண்டையும் வெவ்வேறு முகங்களுடன் எழுதி விற்பனை செய்த ஊடகங்கள், தற்போது மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை வைத்து தங்களின் அடுத்தக்கட்ட வர்த்தகத்தை நடத்துகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக ஓர் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கிறார் ரஜினி. கடைசியாக ரஜினியை வைத்து ‘எந்திரன்’ என்ற சினிமா எடுத்து இதுவரை இல்லாத வகையில் 150 கோடி ரூபாய் கல்லா கட்டியது சன் டி.வி. இந்த நுகர்வு வெறி தின்று துப்பிய சக்கையாகவும் ரஜினியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மற்ற நடிகர்களின் ரசிகர்களைக் காட்டிலும் ரஜினி ரசிகர்கள் கூடுதலான ஈடுபாடு கொண்டவர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்பது போன்றவற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. ரஜினி ரசிகர் மன்றத்தின் செல்வாக்கு உண்மையில் அவ்வளவு பெரிதானது இல்லை. அதில் இருப்பவர்களின் பெரும் சதவிகிதத்தினர், ‘ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார், நாமும் ஏதேனும் ஒரு பதவிக்கு வந்துவிடலாம்’ என நம்புகிற காரியவாத ரசிகர்கள்தான். ஆனால் அரசியலுக்கு வருவதாக சொல்வதெல்லாம் வெறும் நாடக டயலாக் என்பது புரிந்த பின்னர் அவர்கள் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டனர். விஜயகாந்த், கட்சித் தொடங்கியபோது இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் சொன்னார்கள். ‘நேத்து வந்து மன்றம் ஆரம்பிச்சவன்லாம் இன்னைக்கு மாவட்டச் செயலாளர்னு அலையுறான். நாங்க இத்தனை வருஷம் உங்களையே நம்பியிருக்கோம். ஒரு நல்லவழியை காட்ட மாட்டேங்குறியே தலைவா’ என பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். இப்போது ரஜினியின் ரசிகர் மன்ற கூடாரத்தில் மிச்சம் இருப்பவர்கள் சந்தையில் விலைபோகாதவர்களும், ‘பிழைக்கத் தெரியாத’ பக்தர்களுமே!
ஆனாலும் ரஜினியின் செல்வாக்கு இம்மியும் குறையவில்லை என்பதுபோல் ஒரு சித்திரம் இருக்கிறதே… அது எப்படி? ’ஊடகங்கள் ஊதிப் பெருக்குவது’ ஒரு பக்கம் இருக்கட்டும். படம் ஓடுகிறதே… அதில் ஒன்றும் பாதகம் இல்லையே… ஏனெனில் புதிது, புதிதான ரஜினி ரசிகர்கள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றனர். விஜய், சிம்பு என பலருக்கு அடுத்த ரஜினியாகும் கனவு இருக்கிறது. அந்தக் கனவு இல்லாத நடிகர்களும் கூட, ரஜினியின் ‘மார்க்கெட்டையும், அவரது பக்தர்களான வாடிக்கையாளர்களையும்’ தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். அதனால் இன்று ரஜினி ரசிகர்களாக இருப்பவர்கள், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல. போட்டியில் இருக்கும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ரஜினி ரசிகர்கள்தான். அப்புறம் தேர்தல் சமயத்தில் வடிவேலு பேசினாலும், ஜெயலலிதா பேசினாலும், விஜயகாந்த் பேசினாலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவதைப் பார்த்தோம். அதை வைத்து அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் எக்கச்சக்கமான செல்வாக்கு இருப்பதாக கணக்கிடுவது எப்படித் தவறானதோ, அதுபோலதான் ரஜினிக்கு சேரும் கூட்டத்தையும் மதிப்பிடுவது தவறானது.
ரஜினிக்காக நாம் பாவப்பட வேண்டுமா என்றால் ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும், ஒரு கலைஞன் என்ற அடிப்படையிலும் ரஜினிக்காக நாம் பரிதாபப்படலாம். ஆனால், நடைமுறையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளோடு பலகோடி மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்தும், பல்வேறு நிறுவனங்களில் உடல் மற்றும் மூளை உழைப்பைக் கொடுத்தும் பணிபுரியும் சாதாரண மக்களின் உழைப்பில்தான் ரஜினி என்ற பிரமாண்ட பிம்பம் உயிர் வாழ்கிறது. இன்றும் மூன்று வேளை நிம்மதியான உணவுக்கு வழியற்ற கோடிக்கணக்கானோர் நம்மிடையே வாழ்கின்றனர். காய்ச்சலுக்கு மருந்து வாங்க வசதியற்றவர்களும், நோய்களை தீர்த்துக்கொள்ளும் திராணியற்றவர்களும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்படுவது? ரஜினி இசபெல்லா மருத்துவமனையில் இருந்தார், பிறகு ராமச்சந்திராவில் இருந்தார், இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார், அவர் விரும்பினால் சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கும் போகலாம். ஆனால் மக்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபமாக இருக்கிறது. நாம் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, ரஜினிக்கா? மக்களுக்கா?
இப்படிப் பேசுவதை ‘வறட்டுவாதம்’ என வரையறுப்பதோ, ‘நெகிழ்ச்சித்தன்மையற்றதாக’ புரிந்துகொள்வதோ சுலபமானது. ஆனால் அழகியல் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்டதல்ல. இப்படி எல்லாம் தோண்டித் துருவி பார்க்காமல் ரஜினியைப் பார்த்தோமா, விசில் அடித்து ரசித்தோமா என கடந்து சென்றால் பிரச்னை இல்லை. ஆனால் அந்த ’வெகுமக்கள் மனநிலை” உண்மையானது இல்லை என்பதே இங்கு சொல்ல வருவதன் சாரம். இது பொய்களால் கட்டப்பட்டது. அதனால்தான் ரஜினியே நடித்திருந்தும் கூட ‘பாபா’, ‘குசேலன்’ போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. இன்னொரு பிரிவினர், ‘உழைக்கும் தொழிலாளிகளை தனது நடிப்பின் மூலம் ஆசுவாசப்படுத்தினார்’ என ரஜினியைப் பற்றி சொல்கின்றனர். ’உழைப்பாளிகள் ரிலாக்ஸ் ஆக ரஜினி படங்கள் உதவின’ என்பது அவர்களின் ஆய்வு முடிவு. இந்த தர்க்கத்தின்படி ’மயக்க மருந்துகள் நோயைத் தீர்க்கும்’ என்ற முடிவுக்கே நாம் வர முடியும்.
இதைத்தாண்டி ரஜினிக்கு ஒரு பிரமாண்ட சித்திரம் உருவானதில் அவரது ’எளிமை’ ஒரு பாத்திரம் வகிக்கிறது. வாராத தலை, கலைந்த ஆடை, தாடி நிறைந்த முகம்… என்பது அவரது புறத்தோற்றம். இதை வைத்து சாதாரண எளிய ரசிகர்களும் கூட, ‘எவ்வளவுப் பெரிய ஆளு. எவ்வளவு எளிமையா இருக்காரு’ என்றே எண்ணுகின்றனர். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்களின் பெயர் வந்துவிட்டதைக் கண்டு டீ கடையில் அமர்ந்து மகிழ்ச்சியடைவதற்கும், ரஜினி எளிமையாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஓர் இந்தியன் உலக கோடீஸ்வரனாய் ஆனதால் டீ கடை தமிழனுக்கு என்ன லாபம்? ரஜினி எளிமையாய் இருப்பதால் சலூன் கடை தமிழனுக்கு என்ன பயன்? புறத்தோற்றத்தில் எளிமையைப் பின்பற்றும் ரஜினி தனது ஒவ்வொரு படத்துக்கும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேப் போகிறார். ’ராணா’வில் ரஜினிக்கான சம்பளம் 35 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, ரஜினி, ரஜினி என வெறியூட்டப்பட்ட ரசிக வெறியோடு அலறத் தேவையில்லை. ஏனெனில் உங்கள் ரசணை இயல்பானதில்லை. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!
மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.
’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?
ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக்கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!
இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?
சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.
ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?
’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.
போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.
நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.
நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!
சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”
சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!
பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.
’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.
நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!
அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.
இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.
இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.
இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.
இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.
உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.
சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.
இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.
அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.
சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’
இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!
11-4-11
அன்னா ஹசாரே: இந்தியாவின் டிராஃபிக் ராமசாமி
எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை கடந்த ஒரு மாத காலமாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். திருச்சியில் 5 கோடி, திண்டிவனத்தில் 2 ஒரு கோடி, கூடுவாஞ்சேரியில் 1 கோடி என தினசரி தலைப்பு செய்திகளை தேர்தல் ஆணையமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கறார்த்தனத்துக்கு மிடிள்கிளாஸ் மக்களிடையேயும், ஊடகங்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு. ’இப்படில்லாம் பண்ணாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க’ என மத்திய வர்க்க மனநிலைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வடிகாலாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஆக்ஷன் காட்சிகளால் விளைந்த பலன் என்ன?
ஒரு செயல் அதன் பரபரப்புகளுக்காக அல்லாமல் நோக்கம் மற்றும் விளைவுகளைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். ’தேர்தலில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்துவது. இதன்மூலம் ஊழலை ஒழித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது’. அதாவது எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பது ஆணையத்தின் நோக்கம். அதனால்தான் பண பரிவர்தனையை மாய்ந்து, மாய்ந்து கட்டுப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சட்டப்பூர்வமற்ற வகையில் பணம் பரிமாறப்படுவதை தேர்தல் ஆணையம் எதிர்க்கிறதேயன்றி, வாக்காளர்களை ஊழல்படுத்தும் இந்த சிஸ்டத்தை எதிர்க்கவில்லை. ’இருக்கும் நிர்வாக அமைப்பு சிறந்தததுதான், அதில் சில ஓட்டை, உடைசல்கள் இருக்கின்றன. அதை சரிசெய்துவிட்டால் வண்டி நன்றாக ஓடும்’ என முட்டுக்கொடுக்கவே முயற்சிக்கிறது.
அப்படியானால் ’சட்டப்பூர்வமாக’ நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்கு என்ன வழி? தேர்தலை ஒரு பகடைக் காயாக மாற்றி ‘எங்களுக்கு ஓட்டுப்போட்டால் உங்களுக்கு மிக்ஸி தருவோம்’ என ஆஃபர் தருவதும், ‘எங்களுக்கு வாக்களித்தால் லேப்டாப் தருவோம்’ என பேரம் பேசுவதும்… மக்கள் நலனின் பெயரால் சட்டப்பூர்வமாக நடக்கிறது என்பதால் ஊழல் இல்லை என்றாகிவிடுமா? இவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா என்பதல்ல இங்கு பிரச்னை. அதன் செயல்பாடுகள் சட்டப்பூர்வமற்ற ஊழல்களை மட்டுமே ‘ஊழல்’ என மதிப்பிடுகிறது. இதையே பொதுப்புத்தியாக நிறுவுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பூர்வீக பழங்குடிகளுக்கு சொந்தமான 1,10,000 ஏக்கர் நிலம் வன்முறையாக பிடுங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இது ஊழலா, இல்லையா? அதே மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் இரும்புத் தாது உலக சந்தையில் ஒரு டன் 7000 ரூபாய் விலைபோகிறது. இதை ஒரு டன் வெறும் 27 ரூபாய்க்கு ரெட்டி சகோதரர்களுக்கு விற்கிறது அரசு. இது ஊழலா, இல்லையா? ‘இவை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரவில்லை. ஆணையம் அதன் எல்லைக்குள் என்ன செய்ய இயலுமோ அதைத்தான செய்கிறது’ என இதற்கு பதில் வரும். ஆனால் நடைமுறையில் இது இந்த அளவுகோலில் புரிந்துகொள்ளப்படவில்லை. தேர்தல் ஆணையம் ஊழலை ஒழிக்க வந்த ரட்சகனாகவே மதிப்பிடப்படுகிறது. அவர்களும் அவ்வாறுதான் தங்களை கருதுகின்றனர் என்பது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.
ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் விளைந்த விளைவுகள் என்ன?
பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது நிற்கவில்லை. அரசியல்வாதிகளிடம் பதுங்கிக் கிடக்கும் பணம், இம்மாதிரியான தேர்தல் சமயத்தில்தான் கொஞ்சமாவது வெளியே வரும். ஒலி-ஒளி அமைப்பாளர்கள், மேடை அமைப்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள், கலைக் கூத்தாடிகள், இசைக் கலைஞர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், அச்சக உரிமையாளர்கள், பந்தல் பணியாளர்கள் என பெருந்தொகையிலான தொழிலாளர்கள் தேர்தல் காலத்தில்தான் கொஞ்சம் பணம் பார்ப்பார்கள். அவர்கள் அத்தனைப் பேருக்கும் இப்போது எந்த வேலையும் இல்லை. அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தபோது எல்லாம் கண்டுகொள்ளாது, கொள்ளையடித்தப் பணத்தை செலவு செய்யும்போது ஓடிவந்து தடுக்கிறார்கள். இதன்மூலம் மறைமுகமாக ஊழல்வாதிகளுக்கு காப்பரண்களாகவும் திகழ்கிறது தேர்தல் ஆணையம்.
இதுநாள் வரை மக்கள் ஓட்டரசியல்வாதிகளின் ஊழல் அரசியலில் சிக்கித் திளைத்து மக்கள் சலிப்புறும் சமயத்தில் கொஞ்ச நேரம் கௌரவ கதாபாத்திரத்தில் கதாநாயகத்தனம் செய்துகொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். மிடிள் கிளாஸ் மனநிலைக்கு தீனி போடும் இந்த நடவடிக்கைகள் கொஞ்ச நாட்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக ஓடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலின் அளவு இன்னும் பல்கிப் பெருகவே செய்யும். அப்போது அதைத் தடுக்க எந்த ஆணையம் வரும்? அன்னா ஹசாரே வருவாரா?
ஊழலுக்கு எதிரான மசோதாவை சட்டமாக்கிவிட்டால் நாட்டில் ஊழலே ஒழிக்கப்பட்டுவிடும் என அன்னா சாமியாடுவதைப் பார்த்தால் காமெடியாக இருக்கிறது. ஏற்கெனவே இங்கு ஊழல் செய்வது சட்டப்படி சரியானது என்று இருக்கிறதா என்ன? இந்த கோயிந்து கோரிக்கைக்கு நாடு முழுக்க ஆதரவு அலைப் பெருகியது தற்செயலான ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்டது.
முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியால் உலகம் முழுவதும் உருவாகி வரும் மக்கள் புரட்சி யூகிக்க முடியாத திசைகளிலும் தன் செல்வாக்கை நிலைநிறுத்திவருகிறது. இதைக்கண்டு உலகின் பல நாடுகள் அஞ்சுகின்றன. இந்தியாவில் இப்படி ஓர் புரட்சி தற்போது சாத்தியமில்லை என்றாலும், ஆளும் வர்க்கங்களுக்கு மக்கள் மனங்களில் உருவாகியிருக்கும் கூட்டு எதிர்ப்பு மனநிலையை உடனடியாக வடிய வைக்க வேண்டும். பசித்து குரைக்கிற நாய்க்கு ஒரு பொறைத்துண்டு வீசுவது போல, பொருளாதார நெருக்கடியால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் மத்திய கிழக்கின் எழுச்சி ஆகியவற்றினால் இந்திய மனங்களில் உருவாகிவரும் எதிர்ப்புணர்வை நோக்கி இந்த அரசு வீசியெறிந்த பொறைதான் அன்னா ஹசாரே.
இப்போது மட்டுமல்ல… மக்களின் எதிர்ப்புணர்வை வடிய வைக்க அரசே அவ்வப்போது இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். அந்த எல்லைக்குள் ’திறம்பட கோபப்பட்டால்’ நீங்கள் மிடிள்கிளாஸ் ஹீரோவாகலாம். எதிர்ப்புணர்வை ஓர் எல்லையில் நிறுத்தி வைத்து மழுங்கடிக்கும் வேலையை ஹசாரே திறம்படவே செய்து தந்தார். மற்றபடி ’ஆண்டி கரப்ஷன் ஃபோர்ஸ்’ நடத்த அன்னா ஹசாரே என்ன ரமணா விஜயகாந்த்தா?
ஹசாரேவும் இந்த சிஸ்டத்தின் ஓட்டை, உடைசலை சரிசெய்து இதற்குள் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை கண்டடைந்துவிடலாம் எனவும், ஊழல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நடப்பு ஜனநாயக அமைப்புக்குள்ளேயே தீர்வு உண்டு எனவும் நம்புகிறவர்தான். இந்திய அளவிலான டிராஃபிக் ராமசாமி என இவரை வரையறுப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு வழக்குப் போடும் டிராஃபிக் ராமசாமி மயிலாப்பூர் கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் சென்று வரும் உரிமைக்கு ஆதரவாக வழக்குப் போட மாட்டார். அதேபோல்தான் அன்னா ஹசாரே ஓட்டரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவாரேத் தவிர, கார்பொரேட் கொள்ளைகளைக் கண்டுகொள்ள மாட்டார்.
’ஊழலை ஒழிக்க வேண்டும்’ என மொன்னையாக பேசும் அவர், ‘தொலைதொடர்புத் துறையில் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி 2,500 கோடி ரூபாய் கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை விசாரிக்க வேண்டும்’ என்றோ, ‘ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் 2 ஜி அலைவரிசையைக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்த நிறுவனங்களை அரசு முடக்க வேண்டும்’ என்றோ கோரிக்கை வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான கோரிக்கைகள்.
நாடு முழுக்கவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வந்து நாட்டை மறுகாலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியுள்ளனர். தாமிரபரணி தொடங்கி பிளாச்சிமடா வரை நாட்டின் நீர்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன. கடல்வளத்தை கடற்கரையோர மேலான்மை சட்டம் என்ற பெயரால் குத்தகைக்கு விடுகின்றனர். எல்லையோர இனங்களுக்கு அனுதினமும் துன்ப, துயரம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது. இவற்றை வெளிப்படையாகப் பேசி மக்களை அணி திரட்டும் வேலையை அன்னா ஹசாரே செய்வாரா? மாட்டார். அவரது பிரச்னை எல்லாம் ‘ஏம்ப்பா இல்லீகலா ஊழல் பண்றிங்க. சட்டப்படி ஊழல் பண்ணீங்கன்னா யார் உங்களைக் கேட்கப்போறா?’ என்பதுதான். இதற்காகத்தான் அவர் சட்டம் இயற்றச் சொல்லி போராடுகிறார்.
ஊழல் எதிர்ப்பு என்கிறார். அந்த ஊழலை உற்பத்தி செய்யும் இந்த அரசு என்னும் நிறுவனத்தை கேள்வி கேட்கமாட்டார். அதனால்தான் அவருக்கு பத்மபூஷன் தொடங்கி, பத்மஸ்ரீ வரை சகல அரச விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் உச்சமாக 2008-ம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்காக அன்னா ஹசாரேவுக்கு உலக வங்கி விருது வழங்கி கௌரவித்தது. உலக வங்கியால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவதும், அதை இந்திய மிடிள்கிளாஸ் மனநிலைக் கொண்டாடுவதும் எத்தனை நகைமுரண்?
இதை எல்லாம் தாண்டி உண்ணாவிரதம், தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வது… போன்றவற்றுக்கு எல்லாம் நடப்பு சூழலில் எந்தப் பொருளும் இல்லை. ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்ற கோடிக்கணக்கானவர்கள் வாழும் நாட்டில் உண்ணாமல் இருப்பதை ஒரு போராட்டமாக செய்வது, அவர்களை நோக்கி கிண்டல் செய்வது போலதான். இதையும் தாண்டி, விதர்பா விவசாயிகள் தற்கொலை, காஷ்மீரிலும், மத்திய இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவக் கூலிப்படை நிகழ்த்திவரும் கொலைகள் என உயிர்களை பலியெடுப்பதை பெருவிருப்புடன் செய்து வருகிறது இந்த அரசு. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு எதிரான சக்தி ஒன்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு மடிந்துப்போகிறது என்றால் அதற்காக இந்த அரசு மகிழ்ச்சி அடையத்தான் செய்யும்.
வடகிழக்கில் பத்து வருடங்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் Armed Forces Special Powers Act (AFSPA) சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இரோம் சர்மிளா ஜானு உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் கேரளா முத்தங்கா காடுகளில் தங்கள் பூர்வீக நில உரிமையை ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டம் மூலம் வென்றடைந்தார் சி.கே.ஜானு. இப்போது நமக்குத் தேவை சர்மிளா ஜானுவா, சி.கே.ஜானுவா என்ற கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டும்.
மறுபடியும் ஹசாரேவுக்கு வருவோம். அவர் வரையறுக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரைபடம் முதலாளிகளால் வரையப்பட்டது. பாதுகாப்பான உடலுறவுக்கு காண்டம் அணியச் சொல்லி வலியுறுத்தப்படுவதைப் போல, பாதுகாப்பான ஊழலை உத்தரவாதப்படுத்த லோக்பால் மசோதாவை சட்டமாக்கச் சொல்கிறார் ஹசாரே. இந்த உண்மைகளை மறைத்து ஊடகங்கள் இவரை Romanticise செய்கின்றன. ஏனெனில் இந்திய மத்திய தர வர்க்கம்தான் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை. அந்த மத்திய தர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஹசாரே பிரதிபலிக்கிறார்.

