எரியும் பனிக்காடு ( Red Tea )

தெ ருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..? கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத் தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. வளைந்து நெளிந்து செல்லும் அந்த பசுமை மலைச்சரிவுகளுக்கும் கீழ் ஏராளமான மனித உடல்கள் புதையுண்டிருக்கின்றன. வனத்தை அழித்து, ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களை உயிர் பலியிட்டு உருவாக்கப்பட்டவைதான் இப்போது நாம் காணும் தேயிலை தோட்டங்கள். நாம் உறிஞ்சும் ஒவ்வொரு துளி தேநீரிலும் ஒரு சொட்டு ரத்தமும் கலந்திருக்கிறது. வலி மிகுந்த அந்த வரலாற்றை ஒரு கதை வடிவில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது 'எரியும் பனிக்காடு' புத்தகம். பி.ஹெச்.டேனியலால் ஆங்கிலத்தில் Red Tea என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் இது. இரா. முருகவேளால் மொழிபெயர்க்கப்பட்டு கோவை விடியல் பதிப்பகத...