தாய்ப்பூனை; தகப்பன் பூனை!

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். பைகளை எடுத்துக்கொண்டு அறைக் கதவை சாத்தும்போது உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம். கட்டிலுக்குக் கீழே ஒரு பூனை குட்டிப் போட்டிருந்தது. கண் திறக்காத நான்கு பூனைக் குட்டிகள். ஒன்று வெள்ளை; மற்ற மூன்றும் அழகிய கறுப்பு. அடைகாத்து படுத்திருந்த தாய்ப்பூனை எட்டிப் பார்த்த என்னை கடும் கோபத்தோடு முறைத்தது. சில நாட்களாகவே இந்த பூனை எங்கள் வீட்டுக்குள் அடிக்கடி வருவதும், போவதுமாக இருந்ததன் காரணம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாகவே இந்த பூனை வளர்ப்பது, நாய் வளர்ப்பது இதில் எல்லாம் எனக்கு அனுபவமோ, ஆர்வமா இருந்தது இல்லை. மனைவிக்கும் அப்படியே. அதனால் இந்தப் பூனைக் குட்டிகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலுக்கு வேறு தாமதமாகிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி தாய்ப்பூனை வந்து செல்வதற்கு வசதியாக வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டுச் சென்றோம். (ஊருக்குப் போகும்போது ஜன்னல் கதவுகளை இறுக்க தாழிடுவதுதான் வழக்கம். அப்படி செய்திருந்தால் அந்த குட்டிகளின் நிலை என்னவாகியிருக்கும்? அய்யோ.. ). ஊரில் பூனைக் குட்டிகளை நினைத்துப் பா...