சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?
சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள். இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக...